ஆரூடம் - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6954
8
இரவு.
சமையலறையையொட்டி இருக்கும் சாப்பிடும் அறை.
உண்ணி சாப்பிட்டு முடித்து விட்டான். வெளியே அவனின் கையைக் கழுவிவிட்டு, வேலைக்காரி நாணியம்மா உண்ணியைக் கொண்டு வருகிறாள் - அந்த இடத்திற்கு.
வர்மாவும் இந்திராவும் சாப்பிடுவதை கோபாலன் நாயரும், அவரின் மனைவியும் பார்க்கிறார்கள். கோபாலன் நாயரின் மனைவி சமையலறை வாசலில் நின்றிருக்கிறாள்.
கோபாலன் நாயர்: எல்லாம் அவசரத்துல தயார் பண்ணினது. சாப்பாடு நல்லா இருக்குதோ என்னமோ!
இந்திரா: நாங்க ராத்திரி நேரத்துல சாதம் சாப்பிடுறது இல்ல. எப்பவும் சப்பாத்திதான். (கணவனை நினைத்து) பொதுவா அரிசியைக் குறைச்சுக்கங்க.
கோபாலன் நாயர்: சப்பாத்தி தயாரிக்குறதுல என்ன கஷ்டம் இருக்கு? (வேலைக்காரியிடம்) அரிசி இருக்குல்ல? (மனைவியிடம்) நீ நாளைக்கு நாணியம்மாவுக்கு சொல்லிக் கொடு.
இந்திரா: இங்கே சப்பாத்தி போட யாருக்கும் தெரியாதுன்னா. நான் போடுறேன்.
உண்ணி தயங்கி நிற்பதைப் பார்த்து-
வர்மா: உண்ணி, போய்ப் படு. (வேலைக்காரியிடம்) எனக்கு ராத்திரி கொஞ்சம் கஞ்சி இருந்தா போதும். (மனைவியிடம்) உண்ணி நம்ம ரூம்லயே படுக்கட்டும். இதுக்கு முன்னாடி பழக்கமில்லாத இடமில்லையா?
இந்திரா: வேண்டாம். பிறகு அதுவே பழக்கமாயிடும். (வேலைக்காரியை மனதில் வைத்து) லெட் ஹெர்ஸ்லீப் அவுட்ஸைட் தி ரூம்.
வர்மா மவுனமாக இருக்கிறாள்.
இந்திராவின் பாத்திரத்தில் கோபாலன் நாயர் பரிமாற முயலும் போது-
இந்திரா: நோ...(எழுந்தபடி) இப்படி ரெண்டு நேரம் சாதத்தை வெட்டி முழுங்கினா- எனக்குக் கூட தொப்பை வந்திடும்.
உண்ணி அங்கேயே நின்றிருப்பதைப் பார்த்து- மகனிடம்:
"கோ டு யுவர் ரூம்" (கோபாலன் நாயரிடம்) எலக்ட்ரீஷியன் வரலியா?
கோபாலன் நாயர்: (சிரித்தவாறு) நாளைக்கு அந்தப் பெரிய மனுஷனைக் கண்டுபிடிக்கணும்... (மனதிற்குள்) இப்போ அந்தப் பையன் எந்தச் சீமையில இருக்கானோ? (இந்திராவிடம்) நாளைக்கு எப்படியும் அவனைப் பிடிச்சிர்றேன்.
உண்ணி கோபாலன் நாயரையே பார்க்கிறான். வாசலில் உண்ணி நின்றிருப்பதைப் பார்த்து-
இந்திரா: கோ டூ யுவர் ரூம்.
இந்திரா கை கழுவ வெளியே போகிறாள்.
உண்ணி உள்ளே செல்கிறான்.
9
உண்ணிக்காக தயார் பண்ணிய அறை. அதற்குப் பக்கத்தில் வர்மா, இந்திரா ஆகியோரின் அறை. அங்கே பேசுவதை உண்ணி கேட்கலாம்.
குரல்கள்.
வர்மா: நடிப்பு ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆஸ்கார் பரிசு கட்டாயம் தரணும்.
இந்திரா: மனசுல இருக்கறதை அப்படியே சொல்லுறதா இருந்தா உங்களுக்குத்தான் அவமானம். உங்களைச் சுற்றி... இங்கே... ஒரு... என்ன சொல்றது?
வர்மா: வேஷம்... அதுதானே நீ சொல்ல வர்றது?
உண்ணி அதைக் கேட்டவாறு படுத்திருக்கிறான்.
10
படுக்கையறை.
படுக்கையில் இருந்த விரிப்புகளை மாற்றிவிட்டு, நகரத்தில் இருந்து கொண்டு வந்த விரிப்புகளை விரிக்கிறாள் இந்திரா.
வர்மா நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்.
வர்மா: ப்ளீஸ்... நான் கொஞ்சம் அமைதியா சில நாட்கள் இங்கே இருக்கணும். ஏதாவது படிக்கணும். முடிஞ்சா ஏதாவது எழுதணும். அந்தப் பழக்கத்தையெல்லாம் எப்பவோ நிறுத்தியாச்சு. இருந்தாலும்... மனசுல ஒரு விருப்பம்...
இந்திரா: இந்த விஷயங்களை பாம்பேல இருந்துகூட செய்யலாமே! அங்கே இதையெல்லாம் யாரும் செய்றது இல்லன்னு நினைப்பா?
வர்மா பேசாமல் இருக்கிறான்.
இந்திரா: அய்யாயிரம் ரூபாய் வாடகைக்கு அப்படிப்பட்ட ஒரு ஃப்ளாட் யாருக்குமே கிடைக்காதுன்னு எல்லாருமே சொன்னாங்க. வாட் எ ஒண்டர்ஃபுல் வ்யூ!
வர்மா: அன்ட் வாட் எ மிஸரபில் லைஃப்!
இந்திரா: வேலையை விடுறதுன்றது அவங்கவங்க விருப்பம். ஆனா, என்னையும் ராஜேஷையும் பாதிக்கிற மாதிரியான முடிவுகளை இனி எடுக்குறப்போ...
வர்மா பேசாமல் இருக்கிறான்.
இந்திரா: எர்ணாகுளத்துல இருக்குற இடத்தைப் பாகம் பிரிச்சிருந்தா... ரொம்ப நல்லதா இருந்திருக்கும். நல்ல ஊரு அது. தேவைப்படுற எல்லா வசதிகளும் கிடைக்கக்கூடிய அருமையான சிட்டி! இங்கே... ராஜேஷோட படிப்புக்கு என்ன செய்றது?
வர்மா பேசாமல் இருக்கிறான்.
இந்திரா: உடம்புக்கு சவுகரியம் இல்லாமப் போனா இங்கே ஒரு நல்ல டாக்டர் இருக்காங்களா? ஒரு டெலிஃபோன் இருக்கா? ஒரு நல்ல பாத்ரூம் தான் இருக்கா?
வர்மா பேசாமல் இருக்கிறான்.
இந்திரா: இந்த ஸைக்காலஜி எனக்குத் தெரியும். என்னை நீங்க பலமா தண்டிக்கிறீங்க. இந்த விஷயம் யாருக்குமே தெரியாது. அவங்கவங்களுக்கு இருக்கிற எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்களை நிறைவேத்துறதுக்கு நகரத்தைவிட இந்த இடம் வசதியா இருக்கலாம். தொடர்புகள் நிறைய இருக்கும்ல?
பதில் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைக்கும் வர்மா அமைதியாக இருக்கிறான்.
இந்திரா: உங்களை துதி பாடிக்கிட்டு இருக்குற கொஞ்சம் ஆண்களும் பெண்களும் போதும்ல! ஆஃபீஸ்ல வேஷம் போட்டு வேலை செய்றதும், அங்கே நடிக்கிறதும் இதோட ஒப்பிடுறப்போ ஒரு பெரிய விஷயமா என்ன? இதுதான் மிகப் பெரிய நடிப்பு! ஆஸ்கார் என்ன டபுள் ஆஸ்காரே இதுக்கு கொடுக்கலாம்.
வர்மா பேசாமல் இருக்கிறான்.
இந்திரா: செய்ய முடியாத ஒண்ணையும் நான் செய்யச் சொல்லல. டோண்ட் ஒர்ரி. நான் வேணும்னா தாங்கிக்கிறேன். ஆனா, என் பிள்ளையை கஷ்டப்படுத்தாதீங்க...
அவள் உணர்ச்சிவசப்பட்டு நிற்கிறாள்.
உண்ணியின் அறை:
"என் பிள்ளையை கஷ்டப்படுத்தாதீங்க. அது போதும்."
தொடர்ந்து எதையோ இழுத்து அடைக்கும் சத்தம்-
வர்மாவின் குரல்: ஏர்கண்டிஷன், கார்- இது எதுவுமே இல்லைன்னா மிஸரபில் ஆகத் தோணுற ஒரு வயசு ஒண்ணுமில்லையே உண்ணிக்கு? ஹீவில் அட்ஜஸ்ட்...
இந்திராவின் குரல்: யூ ஆர் மேட்!
வர்மா: மனநோய் ஆரம்ப கட்டத்துல இருக்குறப்போ மத்தவங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்குற மாதிரி தெரியும். இட் இஸ் எ சிம்ட்டம்...
ஏதோ ஒன்று உடையும் சத்தம். உண்ணி நடுங்குகிறான். பிறகு அடுத்த அறையில் ஒரே அமைதி.
உண்ணி எழுந்து வாசலினருகில் செல்கிறான். அப்போது நாணியம்மாவும் அங்கே காதுகளைத் தீட்டிக் கொண்டிருக்கிறாள். பாய் விரிப்பதற்கிடையில்-
நாணியம்மா: பயப்பட வேண்டாம். பரண்ல எலி, பெருச்சாளி எல்லாம் இருக்கு. ஆள் நடமாட்டம் இருக்குறது தெரிஞ்சா எல்லாம் ஓடிடும்.
நாணியம்மா படுக்கிறாள்.
உண்ணிக்கு உறக்கம் வரவில்லை. அவன் ஜன்னலுக்கு அருகில் போய் நின்று என்னவோ யோசித்தவாறு நின்றிருக்கிறான்.
தூரத்தில் துடி சத்தம் கேட்கிறது.
அவன் வெளியே பார்க்கிறான்.