ஆரூடம் - Page 5
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6954
11
உண்ணி இருண்டு கிடக்கும் வராந்தாவில் நின்றிருக்கிறான். வராந்தாவின் ஒரு மூலையில் வர்மா நின்று கொண்டிருப்பதை உண்ணி பார்க்கிறான்.
தயக்கத்துடன் அவன் மெதுவாக நடந்து வர்மாவுக்கு அருகில் வருகிறான். தனக்கு மிகவும் அருகில் வந்து நிற்கும் உண்ணியைப் பார்த்து வர்மா புன்னகைக்கிறான்.
தூரத்தில் துடி சத்தம் கேட்கிறது. நாடோடிப் பாட்டின் வரிகள் காற்றில் மிதந்து வருகின்றன. உண்ணி அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
வர்மா: தனியா படுத்துக்க பயமா இருக்கா?
உண்ணி: ம்... ம்...(காதுகளைத் தீட்டிக் கொண்டு): வாட்ஸ் தேட்?
வர்மா: புலையர்களோட ஏதாவது விசேஷமா இருக்கும்.
உண்ணி: புலையர்னா?
வர்மா: வயல்ல வேலை செய்றவங்க...
உண்ணி: சின்ன பிள்ளைங்ககூட செண்டை அடிக்கவும், பாடவும் செய்வாங்களா என்ன?
வர்மா: யெஸ்... அஃப்கோர்ஸ்...
உண்ணி: (ஒருவகை நடிப்புடன்) பிக் பிக் ட்ரம்ஸ்...
வர்மா: பெரியது சின்னது எல்லாமே இருக்கு.
உண்ணி: (சந்தேகத்துடன்) அப்பா, எனக்கு ஒரு சின்ன ட்ரம் வாங்கித் தருவீங்களா?
வர்மா: பார்க்கலாம்.
வர்மா அவளின் தலையைத் தடவியவாறு:
சரி... போய் படு. நேரம் அதிகமாயிடுச்சு...
உண்ணி திரும்ப நடந்து செல்கிறான். வராந்தாவினூடே நாம் அவனைப் பின் தொடர்ந்து செல்கிறோம். தன்னுடைய அறையை அடைந்ததும், உண்ணி திரும்பிப் பார்க்கிறான்.
அவனின் தந்தை வராந்தாவிற்கு வெளியே இருட்டைப் பார்த்தவாறு, கிராமத்தின் இதயத் துடிப்பாக இருக்கும் துடியோசையைக் கேட்டவாறு நின்று கொண்டிருக்கிறான்.
கடந்த கால சம்பவம் எதையோ நினைத்து நின்று கொண்டிருக்கும் வர்மாவின் முகம்-
12
காலை நேரம்.
வீட்டின் உள்பகுதி.
இரண்டு பெரிய பெட்டிகளைத் திறந்து வைத்துக் கொண்டு அதில் இருக்கும் ஆடைகளை - குறிப்பாக புடவைகளை எடுத்து ஒரு பழைய ஷெல்ஃபில் அடுக்கி வைக்கிறாள் இந்திரா. வாசலில் வந்து நிற்கும் தேவகியம்மாவை அவள் பார்க்காதது மாதிரி, தன் வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறாள்.
தேவகி: கரையான் இருக்கும்.
இந்திரா: கரையான்... எலி... எல்லாத் தொந்தரவுமே இங்கே இருக்கு.
உண்ணி: (உள்ளே ஓடிவந்து) என் பேட் எந்தப் பெட்டியில இருக்கு?
இந்திரா: (அதை கவனிக்காமல்) அயர்ன் பண்ணுறதுக்கு ஒரு ப்ளக் இல்லை...
உண்ணி: என் பேட் எங்கே மம்மி?
இந்திரா: நான் பார்க்கலை. லாரியில வர்ற லக்கேஜ்ல இருக்கும்.
தேவகி: ஏதாவது தேவைப்படுமோன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக நான் இங்கே ஓடி வந்தேன். வீட்ல ரெண்டாவது பொண்ணுக்கு இது பத்தாவது மாசம். அவளை தனியா விட்டுட்டு-
இந்திரா: ஒண்ணும் தேவையில்ல. நீங்க போகலாம்.
தேவகி: கணக்குப் பிள்ளையோட பொண்டாட்டி நான். எங்களை அன்னிய ஆளுங்களா நினைக்கக்கூடாது. ஐயா சின்ன வயசுல எங்கே வீட்லதான் எப்பப் பார்த்தாலும் இருப்பாரு. சொல்லப் போனா அவர் என்னோட சொந்த மகன் மாதிரி.
இந்திரா: (அதைச் சிறிதும் விரும்பாத மாதிரி) சில விஷயங்கள் எனக்கும் தெரியும். அங்கே விளையாடுறதுக்கு ஆம்பளை பசங்க யாரும் இல்லையே! உங்களுக்கு இருக்குறதே பொம்பளை பசங்கதானே!
தேவகி: (விகற்பமில்லாமல்) எதுக்கு ஆம்பளை பசங்க? மூத்த மக குஞ்ஞிலட்சுமி போதாதா? குளத்தைத் தாண்டுறது, திருவாதிரைக் களி, ஆட்டம், பாட்டம்... சொல்லவே வேண்டாம். ஐயாவும் அவளும் ஒண்ணு சேர்ந்தாங்கன்னா... அவ்வளவுதான்... ஒரே ரகளைதான். எல்லாம் நேத்து நடந்த மாதிரி இருக்கு.
இந்திராவின் முகம் இறுக்கமாகிறது.
உண்ணி: என்னோட பேட்...
இந்திரா: (கோபத்துடன்) ராஜேஷ், யூ கெட் அவுட். தேவகியம்மா, நீங்க போகலாம். உங்களுக்கு வேலை இருக்குல்ல?
உண்ணி ஏமாற்றத்துடன், பிறகு என்ன நினைத்தானோ தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு வெளியே செல்கிறான்.
13
உண்ணி முற்றத்தில் நின்றிருக்கிறான். சற்று தூரத்தில் மரத்தின் உச்சியிலிருந்து ஒரு கிளியின் சத்தம் கேட்கிறது. உண்ணி கிளியைப் போலவே குரல் தருகிறான். செடியில் ஒரு பட்டாம்பூச்சி. அதைப் பிடிப்பதற்காக அவன் ஒளிந்து ஒளிந்து போகிறான். ஆனால், அந்த முயற்சியில் அவன் தோல்வியடைகிறான். வேலியையொட்டி நடந்து வீட்டை நோக்கி அவன் போகும்போது, வேலிக்கு அப்பால் அவன் ஒரு குடிசையைப் பார்க்கிறான். அதை அவன் பெரிதாக எடுக்கவில்லை. வேலி மேல் ஒரு மஞ்சள் பூ இருக்கிறது. அதைப் பறிக்க அவன் முயலும்போது, ஒரு பெண் குரல்:
"வேண்டாம்... கொடுத்தூவ பூ... கை அரிக்கும்..."
உண்ணி கையைப் பின்னால் எடுக்கிறான்.
வேலிக்கு அப்பால் முப்பது வயதை நெருங்கியிருக்கும்- அதே நேரத்தில்- இளமை தாண்டவமாடும் ஒரு பெண் சிரித்தவாறு நின்றிருக்கிறாள். அவள் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி இருக்கிறது.
அவளைப் பார்த்து வியந்து நிற்கும் உண்ணி. தூவையின் இலையைப் பறித்தவாறு அந்தப் பெண்-
"இதைப் பார்த்திங்களா? மேலே இது பட்டுச்சுன்னா, உடம்பு அரிக்கும்."
பிறகு அவள் பூவைப் பறித்து அவனிடம் நீட்டுகிறாள்.
உண்ணி முதலில் தயங்கி நிற்கிறான். பிறகு பக்கத்தில் நெருங்கி வருகிறான். அவர்களுக்கிடையே சாய்ந்து கிடக்கும் வேலி.
நீலி: தம்புரான், உங்க பேரு என்ன?
உண்ணி பேசாமல் நிற்கிறான். அவளின் வித்தியாசமான தோற்றம், நகை, புன்னகை- எல்லாவற்றையும் பார்க்கிறான். அவள் பூவை நீட்டுகிறாள். உண்ணி தயங்கிக் கொண்டே, அதை வாங்குகிறான். அதை அவன் மூக்கிற்கு அருகில் வைத்து முகர்ந்து பார்க்கிறான். அப்போது நீலி:
"இதுக்கு மணம் இருக்காது. நல்ல மணம் இருக்குற பூவா நான் கொண்டு வந்து தர்றேன். ஆமா... உங்க பேரு என்ன?"
உண்ணி: ராஜேஷ் பி.வர்மா.
நீலி: (இலேசாக சிரித்தவாறு) அய்யோ... அப்படி யாருக்காவது கூப்பிட நாக்கு வருமா? அப்பாவும் அம்மாவும் உங்களை எப்படி கூப்பிடுவாங்க?
உண்ணி: உண்ணின்னு...
நீலி: பேரு நல்லாதான் இருக்கு. எங்கே... உங்களை நல்லா நான் ஒரு தடவை பார்த்துக்குறேன்(சாய்ந்து கிடக்கும் வேலியைச் சற்று ஒதுக்கி வழி உண்டாக்கியவாறு)... இப்படியே இந்தப் பக்கம் வாங்க. நீங்க முதல் தடவையா இங்கு வர்றீங்க, உங்களுக்கு கொடுக்க என்கிட்ட எதுவும் இல்ல... இந்த நீலியோட குடிசையில...
உண்ணி வேலியைக் கடந்து வருகிறான்.
நீலி: வறுத்த முந்திரிப் பருப்பு சாப்பிடுவீங்களா?
உண்ணி எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறான்.
நீலி: "பிடிக்குமா?"
நீலி குடிசையின் வெளிப்புறத்தில் கிடந்த ஒரு பழைய ஸ்டூலைக் கீழே போட்டு, அதிலிருந்த தூசியைத் தட்டியவாறு-
"உட்காருங்க... இதுல உட்காருங்க..."