ஆரூடம் - Page 6
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6954
உண்ணிக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைத்தது மாதிரி மனதிற்குள் சந்தோஷம். பெரியவர்கள் உட்காருவதைப் போல கால் மேல் கால் போட்டவாறு அவன் அமர்ந்திருப்பதை நீலி ரசித்து பார்க்கிறாள்.
அவள் வறுத்த முந்திரிப் பருப்பை கொஞ்சம் எடுத்து அம்மிக்கல்லில் வைத்து சிறு சிறு துண்டுகளாக ஆக்குகிறாள். உண்ணி அவள் செய்வதையே ஆர்வத்துடன் பார்க்கிறான். தோல்களை நீக்கி மூன்று நான்கு முந்திரிப் பருப்புகளை அவன் கையில் தருகிறாள்.
அவன் அதைத் தின்ன ஆரம்பிக்கிறான்.
நீலி மீதி இருந்த முந்திரிப் பருப்பின் தோலை நீக்கிக் கொண்டே-
நிலி: நல்லா இருக்கா?
உண்ணி: ம்...
நீலி: கொஞ்ச நாள் இங்கே தங்கி இருப்பீங்களா? இல்லாட்டி உடனே ஊருக்குப் போயிடுவீங்களா?
உண்ணி: இனி ஊருக்குப் போறதா இல்ல. அப்பா கம்பெனியை விட்டுட்டாரு...
நீலி: (வியப்புடன்) ஏன்?
உண்ணி: ஏன்னு தெரியாது. அதுனால அம்மாவும் அப்பாவும் எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க.
நீலி: (ஏதோ யோசித்தவாறு) அப்படியா? கேட்க மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.
உண்ணி: காட்டு மூலையில கொண்டு வந்து விட்டுட்டதா அம்மா சொல்றாங்க. ஆமா... இங்கே காடு எங்கே இருக்கு?
நீலி: (ஏதோ சிந்தித்தவாறு) அப்படி காடுன்னு எதுவும் இல்ல. பெரிய பட்டணத்துல காலம் காலமா இருந்தவங்களுக்கு இந்த இடத்தைப் பார்த்தா... (பேச்சை நிறுத்தி) சில நேரங்கள்ல அப்படித் தோணலாம்.
உண்ணி: அப்பாவுக்குப் பைத்தியமெல்லாம் கிடையாது. அம்மா சும்மா சொல்றாங்க.
நீலி: (பதைபதைப்புடன்- ஒன்றுமே புரியாமல்) பைத்தியமா?
உண்ணி: பைத்தியம் பிடிச்சவங்கதான் பார்க்குற வேலையை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டு வருவாங்கன்னு அம்மா தாமஸ் அங்கிள்கிட்டயும் ஆன்டிக்கிட்டயும் சொன்னாங்க.
நீலி: (விஷயத்தை மாற்றுவதற்காக) அம்மா சும்மா விளையாட்டுக்காகச் சொல்லியிருப்பாங்க. அப்போ உண்ணி தம்புரான், உங்களை எப்பவும் இங்கே பார்க்கலாம். அப்படித்தானே? முந்திரிப் பருப்பு முழுவதையும் இப்போ தின்ன வேண்டாம். கொஞ்சம் பாக்கெட்ல போட்டுக்கங்க.
35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் சிவப்பு வர்ணத்தில் பனியனும் கைலியும் அணிந்தவாறு குடிசையின் பின் பக்கத்திலிருந்து வந்து-"நீலி... உன்னோட கொடுவாளைக் கொஞ்சம் எடுத்துக்கட்டுமா?"
நீலி: எனக்கு அது தேவைப்படுதே!
இளைஞன்: இந்தப் பையன் யாரு?
பக்கத்து வீட்டை நோக்கி முகத்தைக் காட்டியவாறு:
"அங்கே..."
இளைஞன்: மேஸ்திரி பாலக்காட்டுக்கு வரச் சொல்றாரு. வருஷம் முழுக்க வேலை இருக்காம். போயிட்டு வரட்டுமா?
நீலி: (ஆர்வமே இல்லாமல்) என்கிட்ட ஏன் அதைக் கேட்குறே? தயங்கி நின்றிருந்த அந்த இளைஞன் உண்ணியையே பார்க்கிறான். உண்ணி புன்னகை செய்கிறான். நீலியை விரும்பக் கூடிய ஒரு இளைஞன் அவன்.
இளைஞன்: (தயங்கியவாறு) சாயங்காலம் பாலக்குளம் சந்தைக்கு போறதா இருக்கேன். ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?
நீலி: எனக்கு எதுவுமே வேண்டாம். இப்போ நீ இடத்தை காலி பண்ணு.
அந்த இளைஞன் வந்த வழியே திரும்பிச் சென்றவுடன், ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்த நீலி திடீரென்று உண்ணியின் ஞாபகம் வந்து, புன்னகை செய்தபடி-
"நான் இந்த வீட்ல தனியா இருக்கேன்ல? அதுனாலதான் ஒவ்வொருத்தனும் இங்கே எனக்கு உதவி செய்றேன்னு வர்ரானுங்க. பார்த்தீங்களா?"
உண்ணி: ராத்திரியில தனியாவா இருக்கே?
நீலி: ஆமா...
உண்ணி: பயமா இல்லியா?
நீலி: (சிரித்தவாறு) எதுக்கு பயப்படணும்? கடவுளுக்குத்தான் நாம பயப்படணும்! வேற யாருக்கு பயப்படணும்?
உண்ணியின் தாயின் குரல்:
ராஜேஷ்! ராஜேஷ்!
உண்ணி மீதியிருந்த முந்திரிப் பருப்பை பாக்கெட்டிற்குள் போட்டவாறு, எழுந்து நிற்கிறான்.
அப்போது வேலியின் அந்தப் பக்கத்தில் நின்றிருக்கும் வேலைக்காரி நாணியம்மா:
"இங்கேயா இருக்கீங்க? அம்மா உங்களைத் தேடிக்கிட்டு இருக்காங்க."
நீலியிடம் மெதுவாக:
"தொட்டதுக்கெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. பேசுறது எல்லாமே இங்கிலீசு தான்..."
உண்ணி வேலியை நோக்கி நடக்கிறான். நீலியும் அவனுடன் சேர்ந்து நடக்கிறாள். நீலியைத் திரும்பிப் பார்த்தவாறு உண்ணி வேலியைக் கடந்து நாணியுடன் சேர்ந்து நடக்கிறான். நீலி வேலிக்கு அருகில் நின்றிருக்கிறாள். வீட்டுக்கு முன்னால் நின்றிருக்கும் இந்திராவை அவள் ஆர்வத்துடன் பார்க்கிறாள்.
14
நாணியுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் உண்ணியை விட்டு இந்திராவின் பார்வை நீலியை நோக்கி செல்கிறது. அவள் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்கள். நீலி புன்னகை செய்ய, இந்திரா முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்கிறாள். பக்கத்தில் வந்த உண்ணியைப் பார்த்து இந்திரா உரத்த குரலில்:
“கோ அண்ட் ஈட் யுவர் ப்ரேக்ஃபாஸ்ட். எவ்வளவு நேரமா உன்னைக் கூப்பிட்டுக்கிட்டு இருக்குறது?
உண்ணி மெதுவாக வீட்டிற்குள் செல்கிறான்.
இந்திரா: அது யாரோட இடம்?
நாணியம்மா: நம்ம இடம்தான். செத்துப்போன கண்டங்கோரனோட மகள் அங்கே குடியிருக்கா.
இந்திரா: அந்த ஆளு இங்கே வேலை பார்த்தவனா?
நாணியம்மா: கண்டங்கோரன மாதிரி ஒரு வேலைக்காரனை இப்போ எங்கே பார்க்குறது? அவன் நட்டு வளர்த்த பலாவும் மாமரமும்தான் இப்போ நாம இங்கே பார்த்துக்கிட்டு இருக்குறது.
இந்திரா: இவளுக்கு புருஷன் இல்லையா?
அம்மியில் எதையோ அரைத்துக் கொண்டிருக்கும் நாணியம்மா:
“இன்னும் அவளுக்குக் கல்யாணம் ஆகல. அவளுக்கு ஏதோ உடம்புக்கு ஆகல. அப்பப்போ தலை சுத்தல் வரும். மயக்கம் வரும். அவங்க அப்பா உயிரோடு இருந்த காலத்திலேயே தெளிவா சொல்லிட்டா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு.”
இந்திரா: சுகமில்லையா? சுகமில்லாமத்தான் இந்த ஊர்வசி ஆட்டிக்கிட்டு நடந்து திரியிறாளா...?
நாணியம்மா: நோயைக் குணப்படுத்துறதுக்கு வசதி இல்லாததால் நோயோடயே அலைஞ்சு திரியிறா...
இந்திரா: இவ தனியாவா இருக்குறா?
நாணியம்மா: தனியாத்தான் இருக்கா. நாலு கூடை பின்னி கொடுத்தா, அவளோட செலவுக்குப் போதும். செத்துப்போன தம்புராட்டித்தான் சொல்லுவாங்க. தாழ்ந்த ஜாதிக்காரியா இருந்தா என்ன... என்ன சுத்தம், அழகு, களையோட இருக்கான்னு...
அதைக்கேட்டு இந்திராவின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்கள்.
“தம்புராட்டிக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. எதுவா இருந்தாலும் சுத்தமா இருக்கணும். நீங்க அவங்களைப் பார்த்தது இல்லையே! ஆமாம்மா... கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க இந்த உலகத்தை விட்டு போயிட்டாங்களே!”
இந்திரா: நான் அவுங்களைப் பார்த்தது இல்ல. ஆனா, அவுங்களைப் பத்தி மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நிறையவே சொல்லியிருக்காங்க. அவுங்க ஆஸ்பத்திரியில இருந்தப்போ, உதவிக்கு ஒரு பொண்ணுகூட இருந்தான்னு கேள்விப்பட்டிருக்கேன்...
15
சாப்பிடும் அறையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உண்ணி அதைக் கேட்கிறான்.
நாணியம்மா: அது இந்த நீலிதான். அவளோட தலையெழுத்து இப்படி ஆகிப்போச்சு. பாவம்.
இந்திராவின் குரல்: