ஆரூடம் - Page 9
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6954
அந்தச் சிறுவன் அவர்களைக் கடந்து செல்லும்போது உண்ணியை ஆச்சரியத்துடன் பார்க்கிறான்.
உண்ணி: இதெல்லாம் எங்கே போகுது?
வர்மா: பலரோட வீட்டுக்கும். வயல்ல வேலை முடிஞ்சு ஆத்துல குளிப்பாட்டிட்டு கொண்டு போறாங்க.
உண்ணி: அப்போ இந்த மாடுங்க சாணத்தை தண்ணியில போடும்ல? அதுலயா நாம குளிக்கிறோம்?
வர்மா: (சிரித்துக் கொண்டே) ஆறுதான் ஓடிக்கிட்டே இருக்கே! அது அசுத்தம் ஆகியிருக்காது.
அவர்கள் நடக்கிறார்கள். வழியில் இருந்த புதரைப் பார்த்த உண்ணி:
"இந்தப் புதர்ல பாம்பு இருக்காதா?"
வர்மா: சில வேளைகள்ல இருக்கும்.
அப்போது எதிரில் வந்து கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதைக் கொண்ட மனிதனும், அழகான ஒரு நடுத்தர வயது பெண்ணும் அவர்களையே உற்று பார்க்கிறார்கள். பக்கத்தில் வந்ததும் அவர்கள் நிற்கிறார்கள். வர்மாவும் சிரித்தவாறே நிற்கிறான்.
கிராமத்து மனிதர்களில் அந்த மனிதன் முக்கிய மனிதனாக இருக்க வேண்டும். நெற்றியில் சந்தனக்குறி இருக்கிறது. தலையில் கோவிலில் கொடுக்கப்பட்ட தெச்சிப்பூ இருக்கிறது. பெண்ணின் கையில் தட்டும், தாம்பாளமும் இருக்கின்றன.
கிராமத்து ஆள்: நீங்க வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். அப்பாவும் பிள்ளையும் எங்கே போறீங்க?
வர்மா: சும்மா நடந்து வரலாம்னு கிளம்பினோம்.
பெண்: (செல்லமாக உண்ணியைப் பார்த்து) இந்த ஒரு குழந்தைதானா?
வர்மா: ஆமா...
சிரித்தவாறு அந்தப் பெண் கையிலிருந்த பாத்திரத்தைத் திறந்து உண்ணியிடம் நீட்டுகிறாள்:
"எடுத்துக்க பிரசாதம்."
உண்ணி தயங்குகிறான். தன் தந்தையைப் பார்க்கிறான்.
பெண்: எடுத்துக்க... (வர்மாவிடம்) கோயில்ல தந்த அப்பம்...
வர்மா: எடுத்துக்கோ உண்ணி...
உண்ணி முதலில் ஒன்றை எடுக்கிறான். பிறகு இன்னொன்றை.
பெண்: அம்மாவையும் அழைச்சிக்கிட்டு எங்க வீட்டுக்கு வரணும். அங்கே விளையாடுறதுக்கு ஆள் இருக்கு. (வர்மாவிடம்) உங்க மிஸ்ஸஸ்ஸை ஒருநாள் வந்து பார்க்குறேன்.
வர்மா: வா...
கிராமத்து ஆள்: பாம்பேயிலயும் கல்கத்தாவுலயும் இருந்தவங்களுக்கு இங்கே இருக்குறது ரொம்பவும் கஷ்டமான ஒரு விஷயம். பேசுறதுக்காகவாவது ஆள் வேண்டாமா? வேலைக்கு இனிமேல் போறதா இல்லைன்னு கேள்விப்பட்டேன்.
வர்மா: கேள்விப்பட்டது சரிதான். பத்து பதினெட்டு வருஷமா வெளியூர்ல இருந்தாச்சே! இது போதும்னு நினைக்கிறேன்.
பெண்: இங்கே எப்படி உங்களுக்கு நேரம் போகும்?
வர்மா: நீங்க எல்லாம் இங்க வாழலியா என்ன?
பெண் : (சிரித்தவாறு) எங்களைப் போலவா? தம்புரான்... நீங்க வேணும்னா எங்களை மாதிரி இருந்துடலாம். உங்க மிஸ்ஸஸ்ஸுக்கும் மகனுக்கும்... என்ன மகனே?
உண்ணி பதிலெதுவும் கூறாமல் நின்றிருக்கிறான்.
கிராமத்து ஆள்: நீங்க ஒவ்வொரு இடத்துலயும் பெரிய பதவியில இருக்கீங்கன்னு நாலுபேரு சொல்றப்போ எங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கும் தெரியுமா?
பெண்: கொஞ்ச நாள் கழிச்சு இங்கே இருக்க முடியலைன்னா, போனாலும் போயிடுவீங்க.
உண்ணி ஒரு அப்பத்தைத் தின்னுகிறான். இன்னொரு அப்பத்தை பாக்கெட்டில் இடுகிறான்.
பெண்: என் பிள்ளைங்களைப் பார்க்கல இல்லே? ஒரு நாள் அங்கே வரணும்.
நடக்கத் தொடங்கிய வர்மா:
"வர்றேன்"
பெண்: மகனும் வரணும். தெரியுதா? மகன்கூட விளையாடுறதுக்கு அக்காமாருங்க இருக்காங்க. ஊஞ்சல் இருக்கு.
உண்ணி 'வருகிறேன்' என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டுகிறான்.
சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு உண்ணி.
"அது யாரு அப்பா?"
வர்மா: ஒரு- ஒரு... ஆன்ட்டி!
21
ஆற்றில் வீசப்பட்ட ஒரு வலை இழுக்கப்படுகிறது. வயதான ஹரிஜன் கிழவன் ஒருவன் வலையை வீசி இருக்கிறான். வலை தரைக்கு வருகிறபோது, அதில் இருக்கும் சிறு மீன்கள் துடிக்கின்றன.
ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் பாரு வலையில் இருக்கும் மீன்களை எடுத்து கூடையில் போடுகிறாள்.
நடந்து அங்கு வந்து சேரும் வர்மாவையும் உண்ணியையும் பார்த்து கிழவன் சிரிக்கிறான்.
கிழவன்: வீட்ல அம்மா மீன் சமைப்பாங்களா இல்லையா தெரியாது. இதுல ஒரு பிடி பரல் மீன் இருக்கு.
வர்மா: வீட்ல சமைக்கிறது இல்ல. ஆனா, தனிப்பட்ட முறையில இவனும் நானும் சாப்பிடுவோம்.
கிழவன்: இந்தத் தம்புரானை நான் பார்த்ததே இல்லையே!
குனிந்து உண்ணியை உற்று பார்க்கிறான். பாருவும் உண்ணியைப் பார்க்கிறாள். உண்ணியின் பார்வை முழுவதும் துடித்துக் கொண்டிருக்கும் மீன்கள் மீது இருக்கிறது.
வர்மா: வயல் வேலைக்கு இப்பவும் போறது உண்டா சாத்தா?
கிழவன்: இல்ல... போறது இல்ல. சும்மா இருக்குறப்போ வலையை எடுத்துட்டு வந்து நாலு தடவை வீசுவேன். பையன் கூட செத்துப் போயிட்டான்...
வர்மா: ம்... கோபாலன் நாயர் கடிதத்துல எழுதியிருந்தாரு.
கிழவன்: அவனோட பொண்ணுதான் இது(பாருவைக் காட்டி) மகனை அழைச்சிக்கிட்ட கடவுள் இந்த கிழவனை இன்னும் கூப்பிடாம இருக்கார்.
உண்ணி அவர்களிடமிருந்து விலகி நிற்கிறான். பாரு மீன்களை எடுத்து கூடையில் போடுவதைப் பார்த்தவாறு, அவன் கூடைக்கருகில் அமர்கிறான். பாருவின் கை வேகமாக வலைக்குள் இருக்கும் மீன்களை எடுத்துக் கொண்டிருப்பதையே வைத்த கண் எடுக்காது பார்க்கிறான்.
துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மீனை வெளியே எடுத்து உள்ளங்கையில் வைத்தவாறு பாரு நீட்டுகிறாள். சிரித்தவாறு அவன் அதை வாங்குவதற்கு கையை நீட்டினாலும், பிறகு என்ன நினைத்தானோ கையை இழுத்துக் கொள்கிறான். பின்புலத்தில் கிழவன் சாத்தனும் வர்மாவும் பேசிக் கொண்டிருப்பது நம் காதில் விழவில்லை.
பாரு: வேணும்னா எடுத்துக்கோ.
உண்ணி 'வேண்டாம்' என்று கையால் சைகை செய்தவாறு எழுந்து தன்னுடைய தந்தையின் அருகில் செல்கிறான். அப்போது கிழவன் சொல்கிறான்:
"சொன்னா நீலி கேக்கணும்ல! ஒண்ணுமே செய்ய முடியாம படுத்த படுக்கையா ஆகுறப்போ துணைக்கு யாராவது வேண்டாமா? அவளுக்கு அப்படியொரு நிலைமை வரவேண்டாம்."
வர்மா பேசாமல் இருக்கிறான். நடக்கிறான். அவனுடன் சேர்ந்து உண்ணியும்.
22
ஆற்றின் இன்னொரு இடத்தில் வர்மா இறங்கி தன் கால்களைக் கழுவுகிறான்.
கரையில் நின்றிருக்கும் உண்ணி தண்ணீரில் சிறிய கற்களைப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது பாரு அவனுக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிகிறது. அவள் கடல் ஆமணக்கின் இலையையும் தண்டையும் நீக்கி நடுப்பகுதியை ஒடித்து அதை வைத்து ஊதுகிறாள். உண்ணியும் அதைச் செய்து பார்க்கிறான்.
அவன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த அப்பத்தை எடுத்தவாறு என்னவோ சிந்திக்கிறான்.
"நீ கையைக் கழுவு"
பாரு: ஏன்?
உண்ணி: மீன் நாத்தம் எடுக்கும்ல?
பாரு: கழுவிட்டேன்.