நாயுடன் வந்த பெண்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6450
கடற்கரைக்கு புதிதாக ஒரு ஆள் வந்திருப்பதாக பிறர் கூறி கேள்விப்பட்டான். ஒரு நாய்க் குட்டியுடன் நடந்துகொண்டிருந்த ஒரு இளம் பெண். இரண்டு வார வாழ்க்கையிலேயே யால்ட்டாவை தன்னுடைய சொந்த ஊரைப்போல விருப்பப்பட்ட த்மித்ரி த்மித்ரிச் குரோவிற்கு புதிதாக வருபவர்களைப் பற்றி மிகுந்த ஆர்வம் உண்டாகத் தொடங்கியிருந்தது.
"வேர்னீஸ் பவிலியன்' என்ற இனிப்புக் கடையில் உட்கார்ந்திருந்தபோது, இளம் நிறத்திலிருந்த கூந்தலையும் சராசரி உயரத்தையும் கொண்ட ஒரு இளம்பெண் வட்டமான தொப்பியை அணிந்துகொண்டு கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருப்பதை அவன் பார்த்தான். வெள்ளை நிறத்தில் ஒரு பாமரேனியன் நாய் அவளுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தது.
அதற்குப் பிறகு தினமும் பலமுறை பல இடங்களிலும் அவன் அவளைப் பார்த்தான். பூந்தோட்டங்களிலும், பொது இடங்களிலும்கூட. அவள் மட்டும் தனியே நடந்து கொண்டிருந்தாள். அதே வட்ட வடிவ தொப்பியை அணிந்து கொண்டு, அதே நாயுடன் சேர்ந்து. அவள் யார் என்ற விஷயம் யாருக்குமே தெரியவில்லை. அவளைப் பற்றி கூறியவர்களெல்லாம் "நாயுடன் வந்த பெண்' என்றே குறிப்பிட்டார்கள்.
"கணவனோ நண்பர்களோ யாரும் இல்லாமல் தனியாக இருக்கும்பட்சம், அவளிடம் சற்று அறிமுகமாகிக் கொள்வது வீணாகாது.' குரோவ் சிந்தித்தான்.
அவனுக்கு நாற்பதிற்கும் கீழேதான் வயது இருக்கும். ஆனால், பன்னிரண்டு வயதைக் கொண்ட மகளும் பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்தார்கள். மிகவும் இளம் வயதிலேயே- கல்லூரியில் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்தபோதே அவனுக்குத் திருமணமாகி விட்டது. அவனுடைய மனைவியைப் பார்த்தால், அவனுடைய பாதி வயது அதிகமாகத் தோன்றும். நல்ல உயரத்தையும், நிமிர்ந்த சரீரத்தையும், கறுத்த புருவங்களையும் கொண்ட அழகான பெண்... பிறகு... அவள் தன்னைத் தானே சிறப்பித்துக் கூறிக்கொள்வதைப்போல அறிவாளியான பெண்... நிறைய வாசிப்பாள். எழுத்துகளை உச்சரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பாள். தன் கணவனை அவள் அழைப்பது த்மித்ரி என்றல்ல. திமித்ரி என்றுதான் அழைப்பாள். அவன் அவளை அறிவற்றவளாகவும் ஒடுங்கிப்போன மனதைக் கொண்டவளாகவும் ஈர்க்கத்தக்க தோற்றமில்லாதவளாகவும் நினைத்தான். அவளைப் பார்த்து அவன் பயந்தான். வீட்டில் இருப்பது அவன் வெறுக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. நீண்டகாலமாகவே அவன் அவள்மீது நம்பிக்கையற்றவனாக இருந்தான். பெரும்பாலும் அவன் அப்படித்தான் இருந்தான். ஒருவேளை அதன் விளைவாகத்தான் இருக்க வேண்டும்- அவன் எப்போதும் பெண்களைப் பற்றி மிகவும் மோசமாக பேசிக்கொண்டும், அவர்களை "கேடு கெட்ட இனம்' என்று குறிப்பிட்டுக் கொண்டும் இருந்தான்.
மோசமான அனுபவங்களின் வெளிச்சத்தில், அவர்களைப் பற்றி தான் எப்படி வேண்டுமென்றாலும் கூறலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, தொடர்ந்து இரண்டு நாட்கள்கூட "கேடு கெட்ட இனம்' இல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை. ஆண்களின் நட்பு அவனுக்கு குழப்பத்தையும், வெறுப்பையும் மட்டுமே பரிசாக அளித்தன. ஏற்றுக்கொள்ள முடியாத- உயிரோட்டமே இல்லாத உறவுகள்தான் அவர்களின் மூலம் கிடைத்தது. ஆனால், பெண்கள் இருக்கும்போது த்மித்ரி அளவற்ற சுதந்திரத்தையும் மன அமைதியையும் உணர்ந்தான். அவர்களிடம் என்ன கூறவேண்டும்., எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம்
அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. பேசாமல் இருந்தபோதுகூட, அவர்களுடைய இனிமையை அவன் உணர்ந்தான். தோற்றத்திலும் நடவடிக்கைகளிலும் குணத்திலும் பெண்களை ஈர்க்கக்கூடிய ஏதோவொன்று அவனிடம் இருந்தது. ஏதோ ஒரு சக்தி பெண்களை நோக்கி அவனையும் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது.
நன்கு படித்த மனிதர்களுடன் கொண்டிருக்கும் உறவு- உயிரோட்டமற்றவர்களாகவும் முடிவுகள் எடுக்காதவர்களுமான மாஸ்கோவில் வாழும் மனிதர்களுக்கு மத்தியில், குறிப்பாக- ஆரம்பத்தில் ஈர்ப்பும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் தோன்றினாலும், தேவையற்ற குழப்பங்கள் நிறைந்த பிரச்சினைகளாக மாறி, இறுதியில் மனதில் அமைதியைக் கெடுக்கக்கூடியதாக மாறும் கசப்பான ஏராளமான அனுபவங்களை அவனுக்கு கற்றுத் தந்திருக்கின்றன. எனினும், அழகான பெண்களைப் பார்க்கும்போது, அந்த அனுபவங்கள் அனைத்தும் நினைவிலிருந்து இல்லாமற்போய் விடும். வாழ்வின்மீது கொண்டிருக்கும் வெறி மனம் முழுவதும் வந்து நிறையும்... எல்லா விஷயங்களும் இனிமையானவையாகவும், ஈர்க்கக்கூடியவையாகவும் மாறும்.
ஒரு சாயங்கால வேளையில் தோட்டத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வட்டமான தொப்பி அணிந்த ஒரு இளம்பெண் மெதுவாக வந்து, பக்கத்து மேஜையில் உட்கார்ந்தாள். தோற்றத்தையும், ஆடைகளையும், நடையையும், தலைமுடியை வாரிக் கட்டியிருந்த விதத்தையும் பார்த்தபோதே தெரிந்தது- அவள் ஒரு உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதும், திருமணம் ஆனவள் என்பதும், யால்ட்டாவிற்கு முதல் முறையாக வந்திருக்கிறாள் என்பதும், தனியாக வந்திருக்கிறாள் என்பதும், தாங்க முடியாத வெறுப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும்... யால்ட்டாவைப் போன்ற இடங்களில் பிறரைப் பற்றி உலவிக் கொண்டிருக்கும் கதைகள் அனைத்தும் பெரும்பாலும் பொய்யான கதைகள் என்ற விஷயம் அவனுக்கு நன்றாகத் தெரியும். முடியுமானால், நூறு எண்ணங்களுடன் பாவச் செயல்களைச் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் மனங்கள்தான் அந்த மனிதர்களுக்குப் பின்னால் பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கிறது. எனினும், மூன்று எட்டுகள் மட்டுமே வைக்கக்கூடிய தூரத்தில் அவள் வந்து உட்கார்ந்தபோது, மலைச் சரிவுகளின் வழியாகச் செல்லக்கூடிய பயணங்களும், கைக்குள் கொண்டுவரும் சம்பவங்கள் நிறைந்த கதைகளும் மனதில் வலம் வந்து கொண்டிருந்தன. பெயர்கூட தெரியாத ஒரு பெண்ணுடன் சிறிது நேரம் மட்டுமே நீடித்திருக்கக் கூடிய காதலின் இனிமை மனதை ஆட்கொண்டது.
அவன் பாமரேனியனை அழைத்தான். அது அருகில் வந்தபோது, அதைப் பார்த்து விரலை ஆட்டினான். நாய் நெளிந்தது. அவன் மீண்டும் விரலை ஆட்டினான்.
அந்த இளம் பெண் அவனையே பார்த்தவாறு, வெகுசீக்கிரம் தன் கண்களை கீழ்நோக்கித் திருப்பிக் கொண்டாள்.
“அவன் கடிக்க மாட்டான்.'' கூறியபோது அவளுடைய முகமெங்கும் சிவந்தது. “அவனுக்கு நான் எலும்புத் துண்டைத் தரட்டுமா?'' அவள் தலையாட்டியபோது,
அவன் மரியாதை நிமித்தமாகக் கேட்டான்: “யால்ட்டாவிற்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவா?''
“ஐந்து நாட்கள்...''
“நான் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.''
ஒரே அமைதி.
“நேரம் சீக்கிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், மிகவும் போர் அடிக்கிறது.'' அவனைப் பார்க்காமல் அவள் கூறினாள்.
“போரடிக்கிறது என்று கூறுவது இப்போது ஒரு ஃபேஷனாகி விட்டது. பெல்யேவிலோ ஷீத்ராவிலோ... எந்தவொரு போர் அடித்தலும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமப் பகுதியைச் சேர்ந்த மனிதன் இங்கு வரும்போது கூறுவான்- "என்ன ஒரு போர்! என்ன ஒரு தூசி!' என்று. அந்தச் சமயத்தில் அவன் க்ரனேடாவிலிருந்து வந்திருப்பதைப்போல தோன்றும்.''
அவள் சிரித்தாள். உணவு சாப்பிட்டு முடிக்கும்வரை அவர்கள் பேசவே இல்லை.