நாயுடன் வந்த பெண் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6453
“என்னைப் புரிந்துகொள்ள முயற்சி செய்...''
அவள் பயந்துகொண்டே, கெஞ்சுவதைப்போல முழுமையான அன்புடன் அவனையே பார்த்தாள். கூர்ந்து பார்த்தாள்- அந்த உருவத்தையே மேலும் ஆழமாக தன் மனதிற்குள் பதிய வைப்பதைப்போல.
“நான் எந்த அளவிற்கு கவலையில் இருக்கிறேன் தெரியுமா?'' அவனுக்கு செவியைக் கொடுக்காமல் அவள் சொன்னாள்: “இவ்வளவு நாட்களும் உங்களைத் தவிர நான் வேறு எதைப் பற்றியும் நினைத்ததே இல்லை. உங்களைப் பற்றிய நினைவுகளில்தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனினும், நான் உங்களை மறக்கவேண்டும் என்று நினைக் கிறேன். மறப்பதற்கு முயற்சி செய்தேன்... நீங்கள் எதற்கு... நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?''
படிகளுக்கு மேலே இருந்த தளத்தில் இரண்டு மாணவர்கள் அவர்களையே பார்த்தவாறு, புகை பிடித்துக்கொண்டிருந் தார்கள். அதைப் பொருட்படுத்தாமல் குரோவ், அன்னா ஸெர்ஜியேவ்னாவைப் பிடித்து இழுத்து அருகில் கொண்டு வந்து அவளுடைய முகத்திலும் கன்னங்களிலும் கைகளிலும் முத்தமிட்டான்.
“நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ன இது?'' பயத்துடன் கூறியவாறு அவள் அவனைத் தள்ளி விலக்கினாள். “உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இப்போது திரும்பிச் செல்லுங்கள். சீக்கிரமாகப் போங்கள். எல்லா புனிதர்களின் பெயரையும் கூறி நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்... இங்கே ஆட்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்!''
யாரோ படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தார்கள்.
“நீங்கள் இப்போது போயே ஆகவேண்டும்...'' அன்னா ஸெர்ஜியேவ்னா மெதுவான குரலில் கூறினாள்: “த்மித்ரி த்மித்ரிச், கேட்கிறீர்களா? நான் மாஸ்கோவிற்கு வருகிறேன். சந்தோஷம் என்ன என்பதை நான் அறிந்ததே இல்லை. இப்போது என்னுடைய நிலை மிகவும் பரிதாபமானது.
எனக்கு எந்தச் சமயத்திலும் சந்தோஷம் என்ற ஒன்று கிடைக்கப்போவதே இல்லை. என்னுடைய பொறுமையைச் சோதிக்காதீர்கள். மாஸ்கோவிற்கு வருகிறேன் என்று நான் உறுதிமொழி தந்தேன். இப்போது நாம் பிரிவோம். என் தங்கமான அன்பரே! இப்போது பிரிந்தே ஆகவேண்டும்!''
அவனுடைய கைகளை அழுத்திவிட்டு, அவள் அடுத்த நிமிடம் படிகளில் இறங்கிக் கீழே சென்றாள். இடையில் அவ்வப்போது திரும்பிப் பார்த்தபோது, அந்தக் கண்களில் இருந்த கவலையை அவனால் மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. குரோவ் மேலும் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். ஆசைகள் முழுவதும் அடங்கிய பிறகு, கோட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
4
அன்னா ஸெர்ஜியேவ்னா மாஸ்கோவிற்கு வந்து அவனைக் காண ஆரம்பித்தாள். மேலும் இரண்டோ மூன்றோ மாதங்கள் ஆகும்போது, டாக்டரைப் பார்க்கப் போவதாகக் கூறிவிட்டு அவள் எஸ்...ஸை விட்டுப் புறப்படுவாள். அவளுடைய கணவர் அவள் வார்த்தைகளை நம்பினார்.
இல்லாவிட்டால்... நம்பவில்லையா?
மாஸ்கோவில் ஸ்லாவியன்ஸ்கி பஜார் ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு, அவள் ஒரு சிவப்பு நிற தொப்பியணிந்த மனிதனை குரோவிடம் அனுப்பி வைப்பாள். அவன் வருவான். மாஸ்கோவில் யாருமே இந்த சந்திப்பைப்பற்றி தெரிந்திருக்கவில்லை.
இப்படியொரு குளிர்கால புலர்காலைப் பொழுதில் அவன் அவளைப் பார்ப்பதற்காக புறப்பட்டான். (முதல் நாள் இரவில் அவன் வீட்டில் இல்லாத வேளையில் அவனைத் தேடி ஆள் வந்திருந்தான்). அவனுடைய மகளும் அப்போது அவனுடன் இருந்தாள். போகும் வழியில் அவளை பள்ளிக்கூடத்தில் விடவேண்டும். பெரிய பெரிய துண்டுகளாக பனி பொழிந்து கொண்டிருந்தது.
“பனி விழுந்து கொண்டிருப்பதைவிட மூன்று டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனினும், பனி பெய்து கொண்டிருக்கிறது.''' அவன் தன் மகளிடம் கூறினான்: “பூமிப் பரப்பில் மட்டுமே வெப்பம் இருக்கிறது. காற்றின் மேல் தட்டுகளில் தட்ப வெட்பநிலை வேறு மாதிரி இருக்கும்!''
“குளிர்காலத்தில் ஏன் கடுமையான காற்று இல்லாமல் இருக்கிறது அப்பா?''
அதற்கான காரணத்தையும் அவன் விளக்கிச் சொன்னான்.
இதற்கிடையில் அவன் நினைத்துப் பார்த்தான். அவளைப் பார்க்கப் போகிறோம். ஒரு ஆளுக்குக்கூட தெரியாமல்... சொல்லப் போனால் எந்தச் சமயத்திலும் யாருக்கும் தெரியாது. இரண்டு வாழ்க்கைகள் இப்போது. ஒன்று, வெளிப்படையாகத் திறந்திருக்கும் வாழ்க்கை.. அக்கறை உள்ளவர்கள் எல்லாருக்கும் தெரிந்தது அது. வெளிப்படையான உண்மைகளும் திருட்டுத்தனங்களும் நிறைந்தது. மற்ற நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வாழ்க்கையைப் போன்றதுதான் அதுவும். இன்னொரு வாழ்க்கை மிகவும் ரகசியமானது. உள்மனங்களின் உந்துதலின் மூலம் நடைபெறும் எதிர்பாராத செயல்கள்... மனதின் விளையாட்டு என்று கூறுவதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்? ஆத்ம வஞ்சனை செய்வதை வெளிக்காட்டாமல், அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட, ஈடுபாடும் ஆர்வமும் உள்ள வாழ்வின் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் மற்றவர்களிடமிருந்து மறைந்திருக்கின்றன. திருட்டுத்தனங்கள் முழுவதும் உண்மையை மறைத்து வைப்பதற்கான தளங்களாக இருக்கின்றன- வங்கியில் பணி, க்ளப்பில் உரையாடல்கள், "கேடு கெட்ட இனம்' தத்துவம், கொண்டாட்டங்களில் மனைவியுடன் சேர்ந்திருக்கும் பங்குபெறல்- அனைத்தும் முழுமையாகத் திறந்திருக்கின்றன. அவன் தன்னுடைய நிலைமைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களையும் அளந்து பார்த்தான். வெளியே பார்த்தது எதையும் நம்பாமல், எல்லா மனிதர்களின் உண்மையான முகம்- அதாவது அவர்கள் விருப்பப்படும் விஷயங்கள் ரகசியத்தின் மூடிக்குள்ளும் இரவின் மறைவிலும்தான் இருக்கின்றன என்று அவன் நினைத்தான். தனி மனிதர்களின் வாழ்க்கைகள் அனைத்தும் ரகசியங்கள் நிறைந்தனவே. ஒருவேளை அந்தக் காரணத்தால்தான் இருக்கவேண்டும்- உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதன் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி அந்த அளவிற்கு பதைபதைப்பு கொண்டவனாக இருக்கிறான்.
தன் மகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, குரோவ் ஸ்லாவியன்ஸ்கி பஜாருக்குச் சென்றான். கீழே இருந்தபோதே உரோமத்தாலான ஆடையைக் கழற்றிவிட்டு மேல் தளத்திற்குச் சென்று கதவை மெதுவாகத் தட்டினான் பயணம் மற்றும் எதிர்பார்த்துக் காத்திருந்தது ஆகியவற்றின் காரணமாக வெறுத்துப் போயிருந்த அன்னா ஸெர்ஜியேவ்னா, அவனுக்கு மிகவும் பிடித்த ஊதா நிற ஆடையை அணிந்து முந்தைய நாள் சாயங்காலத்திலிருந்து எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் மொத்தத்தில் வெளிறிப்போய் காணப்பட்டாள். நேராகப் பார்த்து சற்று சிரிக்கக்கூட செய்யாமல், அறைக்குள் நுழைந்தவுடன், அவள் அவனுடைய நெஞ்சின் மீது சாய்ந்தாள். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு சந்திப்ப தைப்போல, உணர்ச்சிவசப்பட்டு, வெறியுடன் அவர்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டார்கள்.
“நீ அங்கு எப்படி வாழ்கிறாய்?'' அவன் கேட்டான்: “அங்கு என்ன விசேஷம்?''
“நான் எல்லாவற்றையும் கூறுகிறேன். என்னால் பேச முடியவில்லை.'' அவள் அழுதாள். எதுவும் பேச இயலவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு, துவாலையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"பாவம்... எவ்வளவு நேரம் அழத் தோன்றுகிறதோ, அவ்வளவு நேரம் அழட்டும். நான் காத்திருக்கிறேன்' என்று மனதில் நினைத்த குரோவ், நாற்காலியில் போய் உட்கார்ந்தான். ஒரு தேநீர் கொண்டு வரும்படிக் கூறினான்.