நாயுடன் வந்த பெண் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6453
அவர்கள் நகரத்திற்குத் திரும்பினார்கள். தொடர்ந்து எல்லா நாட்களிலும் பன்னிரண்டு மணிக்கு அவர்கள் கடலின் அருகில் வந்து ஒருவரையொருவர் சந்திப்பார்கள். மதிய உணவையும் இரவு உணவையும் பங்கிட்டுச் சாப்பிடுவார்கள். ஒன்றாகச் சேர்ந்து நடந்தார்கள். கடலின் அழகை ரசித்தார்கள். முடியாமல் தூக்கத்தில் மூழ்கி விடுவதையும், இதயம் அதிகமாகத் துடிப்பதையும் பற்றி அவள் குறை கூறினாள். அவனுக்கு அவள்மீது அந்த அளவிற்கு மதிப்பு இல்லை என்ற பயமும் பதைப்பதைப்பும் இருந்ததன் காரணமாக, ஒரே கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேயிருந்தாள். ஓய்வெடுக்கும் இடங்களிலும் பூந்தோட்டங்களிலும் வேறு யாருமே இல்லாதபோது, திடீரென்று அவளைப் பிடித்திழுத்து அருகில் வரச்செய்து அவன் வெறிபிடித்தவனைப்போல முத்தமிட்டான். கவலைகளே இல்லாத அலட்சிய சூழ்நிலை... யாராவது பார்த்துவிடுவார்களா என்ற பதைபதைப்புடன் பகல் வெளிச்சத்தில் தரும் வெப்பமான முத்தங்கள்... உஷ்ணம்... கடலின் வாசனை.... அழகாக ஆடைகள் அணிந்து முன்னோக்கி இங்குமங்குமாக நடந்துபோய்க் கொண்டிருக்கும் பளபளப்பான மனிதர்கள்... எல்லாம் சேர்ந்து அவனை புதிய மனிதனாக ஆக்கிவிட்டிருந்தன. அன்னா ஸெர்ஜியேவ்னா பேரழகு படைத்தவளாகவும் ஈர்க்கக் கூடியவளாகவும் இருக்கிறாள் என்று அவன் அவளிடம் கூறினான். அவளை விட்டு ஒரு அடிகூட நகரமுடியாத அளவிற்கு அவன் ஆழமான காதலில் மூழ்கிவிட்டிருந்தான். அவளோ சிந்தனை வயப்பட்டிருந்தாள். "அவனுக்கு அவள்மீது சிறிதும் மதிப்பும் இல்லை. குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால் அன்புகூட இல்லை. ஒரு சாதாரண பெண் என்பதைத் தாண்டி மதிப்பும் இல்லை' என்றெல்லாம் சிந்தித்து, அதை மனதைத் திறந்து சொல்வதற்காக இடையில் அவ்வப்போது கூறியதையே திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தாள். பெரும்பாலான நாட்களில் நேரம் மிகவும் அதிகமான பிறகே அவர்கள் நகரத்தைவிட்டு தூர இடத்திற்குப் பயணம் செய்வார்கள். ஓரியான்டாவிற்கோ... நீர் வீழ்ச்சிக்கோ. ஒவ்வொரு முயற்சியும் மிகப்பெரிய வெற்றியாகவே அமைந்தன.
அருமையான காட்சிகள் அவர்களை மிகுந்த சந்தோஷத்திற்குள்ளாக்கின.
அவளுடைய கணவர் வருவார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவருடைய கடிதம்தான் வந்தது. கண்ணுக்கு நலமில்லையென்றும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவள் திரும்பி வரவேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அன்னா ஸெர்ஜியேவ்னா திரும்பிச் செல்லும் பயணத்திற்காக ஆயத்தங்களைச் செய்தாள்.
“நான் போவது நல்ல விஷயம்... இது விதியின் தீர்மானம்...'' அவள் கூறினாள்.
அவனும் அவளுடன் சென்றான். எக்ஸ்பிரஸின் கம்பார்ட்மென்டிற்குள் ஏறி, இரண்டாவது மணி அடித்த போது அவள் சொன்னாள்: “நான் உங்களை இன்னொரு முறை பார்த்துக்கொள்ளட்டுமா? இன்னொருமுறை அவள் அழவில்லை. ஆனால், கவலையின் காரணமாக, தாங்க முடியாமல் முகம் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது.
“நான் எப்போதும் உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டே இருப்பேன். கடவுளின் ஆசீர்வாதம் இருக்கட்டும். சந்தோஷமாக இருக்கவேண்டும். என்னைப் பற்றி மோசமாக எதுவும் நினைக்கக் கூடாது. நாம் நிரந்தரமாகப் பிரிகிறோம். அது அப்படித்தான் நடக்கும்... நாம் எந்தச் சமயத்திலும் சந்திக்கவே கூடாதுதெய்வம் உடன் இருக்கட்டும்...''
ரயில் வேகமாகப் பாய்ந்து சென்று அதன் வெளிச்சம் பார்வையிலிருந்து மறைந்தது. ஒரு நிமிடம் ஆவதற்கு முன்பே சத்தமும் இல்லாமல் போனது. இனிமையான அந்த சம்பவங்கள் எவ்வளவு சீக்கிரம் முடிவிற்கு வரவேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவிற்கு வர அனைத்தும் சேர்ந்து நடத்திய சதி வேலையைப்போல அது தோன்றியது. விட்டில் பூச்சிகளின் அழுகைச் சத்தத்தையும் டெலிக்ராஃப் நிறுவனங்களின் ஓசைகளையும் கேட்டவாறு, இருட்டைப் பார்த்துக்கொண்டே குரோவ் தான் மட்டும் தனியாக ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்தான். வாழ்வில் இன்னொரு சாகசம் நிறைந்த அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. இனி எஞ்சி நின்று கொண்டிருப்பவை நினைவுகள் மட்டும். எங்கேயோ கவலை நிறைந்த ஒரு சிந்தனை இருப்பதை அவன் அடையாளம் தெரிந்து கொண்டான்... இனி எந்தச் சமயத்திலும் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லாத அந்த இளம்பெண் தன்னுடன் இருந்த நாட்களில் சந்தோஷம் நிறைந்தவளாக இல்லை. முழுமையான அர்த்தத்தில் பாசத்தையும் அன்பையும் அளித்தும், நடவடிக்கைகளிலும் மாறுபட்ட உரையாடல்களிலும் கொஞ்சல்களிலும் ஏதோ இனம்புரியாத வேறுபாடுகள் நிறைந்திருந்தன. அவளைவிட இன்னொரு மடங்கு வயதைக் கொண்ட- சந்தோஷம் நிறைந்த ஒரு மனிதனின் போலித்தனமான பணிவையும் பார்த்து... நல்ல மனம் கொண்ட மனிதர், அன்பானவர் என்றுதான் அவள் எப்போதும் அவனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறாள். உண்மையை விட்டு மிகவும் விலகிப்போயிருக்கும் ஏதோ ஒன்றாகத்தான் அவள் அவனைப் புரிந்து கொண்டிருந்தாள். அந்த அளவிற்கு அவன் அவளை உண்மையாகவே ஏமாற்றினான்... மனப்பூர்வமாக இல்லையென்றாலும்கூட...
ஸ்டேஷனில் இளவேனில் காலத்தின் வாசனை... நல்ல குளிர்ச்சியான சாயங்கால வேளை.... "நான் வடக்கு திசை நோக்கிப் போவதற்கான நேரமாகி விட்டது...' ப்ளாட்ஃபாரத்தை விட்டுக் கிளம்பும்போது குரோவ் நினைத்தான்: "நேரம் அதிகமாகி விட்டது...'
3
மாஸ்கோவில் அனைத்தும், குளிர்காலத்தில் எப்போதும் நடப்பதைப்போல நடந்துகொண்டிருந்தன. கணப்புகள் எரிந்து கொண்டிருந்தன. குழந்தைகள் காலை உணவை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திற்குச் செல்ல ஆரம்பிக்கும்போதுகூட இருள் இன்னும் விலகாமலே இருந்தது.
பணிப்பெண் சிறிது நேரத்திற்கு விளக்கை எரிய வைப்பாள் பனி பொழிய ஆரம்பித்திருந்தது. முதல் பனி விழுந்தபோது, பணி வண்டியில் பயணம் செய்வது சுவாரசியமான ஒன்றாக இருந்தது. வெண்மை நிறத்தில் பூமி, வெள்ளை நிற மேற்கூரைகள், மென்மையான ஈர்க்கக்கூடிய காற்று... இளமைக்காலம் திரும்பவும் கிடைத்ததைப்போல தோன்றும். வெண்பனி மூடிய பிர்ச் மரங்களும் ஆரஞ்ச் மரங்களும் பிரகாசமாக நின்று கொண்டிருக்கும். ஸைப்ரஸ் மரங்களையும் பனைமரங்களையும்விட இதயத்துடன் ஒன்றி நின்று கொண்டிருப்பவை அவைதாம்... அவற்றின் அருகில் இருக்கும்போது கடல், மலைகள் எதைப் பற்றியும் நினைக்க வேண்டிய அவசியமே இல்லை.
குரோவ், மாஸ்கோவில் பிறந்த மனிதன். பயணம் முடிந்து, பனி ஏராளமாக நிறைந்திருந்த ஒரு நாளன்று அவன் திரும்பி வந்தான். உரோமத்தாலான ஆடை அணிந்து, கைகளில் உறைகள் அணிந்து, பெட்ரோவ்ஸ்காவின் வழியாக நடந்துகொண்டே, சனிக்கிழமை சாயங்கால நேரத்தின் மணிச் சத்தத்தைக் கேட்டபோது, தான் செய்த பயணங்கள் மற்றும் சென்று பார்த்த இடங்கள் ஆகியவற்றின் வசீகரங்களெல்லாம் மறைந்து போய்விட்டன. படிப்படியாக அவன் மாஸ்கோவின் வாழ்வில் இரண்டறக் கரைந்து விட்டான். தினந்தோறும் மூன்று நாளிதழ்களை ஆர்வத்துடன் வாசித்து முடித்துக் கொண்டிருந்தான். ரெஸ்ட்டாரென்ட்களிலும் க்ளப்களிலும் விருந்துகளிலும் பங்குபெறுவதற்கு ஆர்வம் உண்டாக ஆரம்பித்தது. பெயர் பெற்ற வழக்கறிஞர்களையும் கலைஞர்களையும் உபசரிப்பதிலும், டாக்டர்ஸ் க்ளப்பில் ஒரு பேராசிரியருடன் சேர்ந்து சீட்டு விளையாடுவதிலும் அவன் மகிழ்ச்சி அடைந்தான்.