நாயுடன் வந்த பெண் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6453
ஒரு மாதத்திற்குள் அன்னா ஸெர்ஜியேவ்னா, மற்றவர்களைப்போல ஞாபகக் கிடங்கில் பனியால் மூடப்பட்டுக் கிடப்பாள். எப்போதாவது ஒரு முறை மட்டும் புன்னகையுடன் கனவுகளைத் தட்டி எழுப்புவாள்- அவன் சிந்தித்தான். ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடந்து சென்றுவிட்டது. முழுமையான குளிர்காலம் வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகும் எல்லா விஷயங்களும் நினைவில் பசுமையாக நின்றுகொண்டிருந்தன. அன்னா ஸெர்ஜியேவ்னாவை விட்டு நேற்றுதான் பிரிந்து வந்தோம் என்று தோன்றுவதைப்போல நினைவுகள் மேலும் தெளிவாக இருந்தன. சாயங்கால அமைதியில் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளின் சத்தம் காதில் விழுந்தபோது, ரெஸ்ட்டாரென்டின் இசையைக் கேட்கும்போது, அடுப்பில் காற்று வந்து மோதும்போது, அந்த நினைவுகள் எழுந்து மேலே வந்தன. கப்பலைப் பார்ப்பதற்காகச் சென்றபோது நடைபெற்ற சம்பவம், பனி நிறைந்த புலர்காலைப் பொழுதில் மலைச் சரிவிற்குச் சென்றது, தியடோஷ்யாவிலிருந்து வந்த கப்பல், முத்தங்கள்... அவை எல்லாவற்றையும் மனதில் நினைத்துக் கொண்டே ஒரு புன்சிரிப்புடன் நீண்ட நேரம் அறைக்குள் இங்குமங்குமாக அவன் நடந்து கொண்டிருந்தான். தொடர்ந்து நினைவுகள்,
கனவுகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கும். கடந்து சென்றவற்றிலிருந்து மனம் வர இருக்கும் விஷயங்களை நோக்கிப் பயணிக்கும். அன்னா ஸெர்ஜியேவ்னா அவனுடைய கனவுகளில் வரவில்லை. ஆனால், அவன் சென்ற இடங்களுக்கெல்லாம் நிழலைப்போல அவனுடன் சேர்ந்து அவள் நடந்தாள். கண்களை மூடியிருக்கும்போது உயிருடன் வருவதைப்போல அவள், மேலும் பேரழகியாக, மேலும் இளமை ததும்ப, மேலும் வசீகரிக்கக் கூடியவளாகத் தோன்றினாள். யால்ட்டாவில் இருந்ததைவிட தானும் இப்போது அழகன்தான் என்று அவன் தன் மனதில் நினைத்தான். சாயங்கால வேளைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷெல்ஃப்களிலும் கணப்புகளிலும் அறைகளின் மூலைகளிலும் அவள் மறைந்துகொண்டு பார்த்தாள். அவளுடைய மூச்சுவிடும் சத்தம் கேட்டது. ஆடைகளின் மென்மையான சத்தமும்... தெருக்களில் அவளைப்போல யாராவது இருக்கிறார்களா என்று கண்களால் அவன் தேடிப்பார்த்தான்.
நினைவுகளை நம்பிக்கைக்குரிய யாருடனாவது பங்குபோட வேண்டும் என்று குரோவ் ஆசைப்பட்டான். வீட்டில் காதலைப் பற்றிப் பேசுவது என்பது நடக்காத விஷயம். வெளியிலோ கூறத்தக்க அளவிற்கு யாருமில்லை. பணியாட்களிடமோ, வங்கியில் தன்னுடன் பணியாற்றக் கூடியவர்களிடமோ எதையும் கூறமுடியாது. அப்படியே இல்லையென்றாலும் என்ன கூறுவது? உண்மையிலேயே காதல் என்ற ஒன்று இருக்கிறதா? அழகு, காவியத்தன்மை, கடமை என்று கூறக்கூடிய அளவிற்கு... குறைந்தபட்சம் சுவாரசியமான விஷயங்கள் என்ற அளவிலாவது சிறப்பித்துக் கூறுவதற்கு அன்னா ஸெர்ஜியேவ்னாவுடன் கொண்டிருந்த உறவில் என்ன இருக்கிறது? மொத்தத்தில்- செய்ய முடிவது- காதல் மற்றும் பெண்களைப் பற்றி வெறுமனே பொதுவாக ஏதாவது கூறலாம். அவ்வளவுதான். அவனுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. மனைவியின் கறுத்த புருவங்கள் மட்டும் சுருங்கின. அவள் சொன்னாள்.
“திமித்ரி, உங்களுக்கு அழகிய உல்லாசி வேடம் சிறிதும் பொருத்தமாக இருக்காது.''
ஒரு சாயங்கால வேளையில், டாக்டர்ஸ் க்ளப்பிலிருந்து ஒரு அதிகாரியுடன் சேர்ந்து சீட்டு விளையாடி முடித்துவிட்டு வெளியே வந்தபோது அவன் கூறினான்:
“யால்ட்டாவில் எனக்கு அறிமுகமான இளம்பெண் எந்த அளவிற்கு ஈர்க்கக் கூடியவள் தெரியுமா?''
அந்த அதிகாரி பனி வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு செல்வதற்கு மத்தியில் திடீரென்று திரும்பி அழைத்தான்:
“த்மித்ரி த்மித்ரிச்!”
“என்ன?''
“நீங்கள் சாயங்காலம் கூறியது உண்மைதான். இன்றைய மீன் சற்று பருமனாக இருந்தது.''
அலட்சியமாகக் கூறப்பட்ட அந்த வார்த்தைகள் தரம் தாழ்ந்தவை என்பதையும், கிண்டல் பண்ணக் கூடியவை என்பதையும் உணர்ந்த குரோவிற்கு கோபம் உண்டானது.
எந்த அளவிற்கு நாகரீகமற்ற போக்குகள்! என்ன வகையான மனிதர்கள்! அர்த்தமற்ற இரவுகள், வெறுப்பைத் தந்த பகல்கள்! சீட்டு விளையாட்டு, சாப்பாடு, மது அருந்துவது,
இப்படியும் அப்படியுமாக திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருந்த உரையாடல்கள்... ஏதோ ஒரே விஷயத்திற்காக பிரயோஜனமே இல்லாமல் செய்த கடுமையான முயற்சிகளும் பேச்சுகளும் நேரம், உடல் நலம் ஆகியவற்றின் பெரும்பகுதியை ஆட்கொண்டிருந்தது... எஞ்சியிருந்தது குறைபாடுகள் நிறைந்த, ஒதுக்கப்பட்ட, ஒரு சாதாரண வாழ்க்கை. அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சிறை அறைக்குள்ளோ மனநிலை பாதிக்கப்பட்டிருப்போர் இருக்கக்கூடிய அறைக்குள்ளோ சிக்கிக்கொண்டு விட்டதைப்போல இருந்தது.
அன்று இரவு முழுவதும் குரோவ் மிகுந்த கோபம் உண்டாகி, தூங்க முடியாமல் இருந்தான். மறுநாள் முழுவதும் ஒரே தலைவலியாக இருந்தது. அதற்கு அடுத்த நாளும் உறக்கம் வரவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்து, சிந்தனையில் மூழ்கினான். இல்லாவிட்டால் அறைக்குள் இங்குமங்குமாக நடந்துகொண்டிருந்தான். குழந்தைகள், வங்கி- அனைத்தும் அவனுக்கு வெறுப்பை உண்டாக்கக்கூடிய விஷயங்களாக இருந்தன. எங்காவது போக வேண்டும் என்றோ, ஏதாவது பேசவேண்டும் என்றோ எந்தவொரு ஆர்வமும் அவனுக்கு உண்டாகவில்லை.
டிசம்பரில் விடுமுறை நாட்களில் அவன் ஒரு பயணத்திற்குத் தயாரானான். பீட்டர்ஸ்பர்க்கில் நண்பர் ஒருவருக்கு உதவி செய்யப்போகிறேன் என்று தன் மனைவியிடம் அவன் கூறினான். பிறகு எஸ்...... க்குப் புறப் பட்டான். எதற்கு? அவனுக்கே தெரியவில்லை. அன்னா ஸெர்ஜியேவ்னாவைப் பார்க்க வேண்டும்- முடிந்தால், ஒரு உரையாடலை ஏற்படுத்த வேண்டும்.
காலையில் எஸ்... ஐ அடைந்தான். ஹோட்டலில் இருப்பதிலேயே மிகவும் நல்ல அறையை எடுத்தான். தரையில் பட்டாளத் துணி விரிக்கப்பட்டிருந்தது. மேஜை யில் மை புட்டி வைக்கக்கூடிய ஒரு ஸ்டாண்ட். தூசி படிந்திருந்த அதில், குதிரைமீது அமர்ந்திருந்திருந்த மனிதனின் கையில் தொப்பி... தலை இல்லாமலிருந்து. ஹோட்டலின் சுமைதூக்கும் பணிசெய்யும் மனிதன் அவனுக்குத் தேவையான தகவல்களை கூறினான். பழைய கான்ட்சார்னி தெருவில் இருக்கும் சொந்த வீட்டில் வான் திதெரிட்ஸ் வசிக்கிறார். அந்த வீடு மிகவும் அருகிலேயே இருக்கிறது. நல்ல வகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வசதி படைத்த மனிதர் அவர். சொந்தத்தில் குதிரைகள் இருக்கின்றன. நகரத்தில் எல்லாருக்கும் அவரைத் தெரியும். அந்த பணியாள் த்ரிதிரிட்ஸ் என்று அந்தப் பெயரை உச்சரித்தான்.
அதிகம் தாமதிக்காமல் குரோவ், பழைய கான்ட்சார்னி தெருவிற்குச் சென்று அந்த வீட்டைக் கண்டுபிடித்தான். வீட்டிற்கு நேராக எதிர்பக்கத்தில் முள்ளாலான வேலி போடப்பட்டிருந்தது.
"இப்படிப்பட்ட ஒரு வேலிக்குள்ளிருந்து யாராக இருந்தாலும் ஓடிப் போகத்தான் செய்வார்கள்! வேலியையும் வீட்டின் சாளரங்களையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே குரோவ் சிந்தித்தான்: "இன்று விடுமுறை நாள். பெரும்பாலும் அவளுடைய கணவர் வீட்டில் இருப்பார். வீட்டிற்குள் நுழைந்து அவளை குழப்பத்திற்குள்ளாக்குவது அறிவுப்பூர்வமான விஷயமாக இருக்காது. ஒரு குறிப்பை எழுதி அனுப்பி வைக்கலாமென்றால், ஒருவேளை அது அவளுடைய கணவரின் கையில் போய் கிடைத்து விட்டால், எல்லா விஷயங்களும் பாழாகிவிடும்.