
அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து, காத்திருப்பதுதான் மிகவும் நல்ல காரியமாக இருக்கும். குரோவ், வேலிக்கு அருகில் இங்கு மங்குமாக நடந்து கொண்டிருந்தான். ஒரு பிச்சைக்காரன் உள்ளே செல்வதையும் நாய்கள் அவனை நோக்கிப் பாய்ந்து வருவதையும் "குரோவ் பார்த்தான். ஒரு மணி நேரம் தாண்டியதும், பியானோவின் மெல்லிய சத்தம் தூரத்தில் கேட்டது. பெரும்பாலும் அன்னா ஸெர்ஜியேவ்னாதான் பியானோவை இசைத்திருக்க வேண்டும். திடீரென்று வாசல் கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான பெண் வெளியே வந்தாள். அவளுக்கு மிகவும் பின்னால் அவனுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த அந்த பாமரேனியன்... குரோவ் நாயை அழைக்க நினைத்தான். ஆனால், அதிக சந்தோஷத்தில் அதன் பெயர் ஞாபகத்தில் வரவில்லை. நடையைத் தொடரத் தொடர, அமைக்கப்பட்டிருந்த அந்த வேலியின்மீது அவனுக்கு வெறுப்பு உண்டாக ஆரம்பித்தது. இவ்வளவு நாட்களில் அன்னா ஸெர்ஜியேவ்னா தன்னை மறந்துவிட்டு, வேறு யாருடனாவது சேர்ந்து சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருப்பாள் என்றும் அவன் சிந்தித்தான். நாசம் பிடித்த ஒரு வேலியையே பொழுது புலரும் நேரத்திலிருந்து இரவு வரை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் எந்தவொரு இளம்பெண்ணுக்கும் இயற்கையாகவே நடக்கக்கூடியதுதான் அது. அவன் திரும்பவும் ஹோட்டலுக்குச் சென்றான். என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல், நீண்ட நேரம் ஸோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். அதற்குப் பிறகு உணவு சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்கினான்.
"என்ன ஒரு முட்டாள்தனம்! எந்த அளவிற்கு கஷ்டத்தைத் தரும் விஷயம் இது!' தூக்கம் கலைந்து சாளரத்தைப் பார்த்தபோது அவன் நினைத்தான். சாயங்கால நேரம் ஆகிவிட்டிருந்தது. "எது எப்படி இருந்தாலும், நல்ல ஒரு உறக்கம் நடந்துவிட்டது. இனி இரவில் என்ன செய்வது?'
மருத்துவமனைகளில் பார்ப்பதைப் போன்ற விலை குறைவான விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் உட்கார்ந்து, அவன் தன்னைத்தானே குற்றம் சுமத்திக்கொண் டான். "நாயுடன் வந்த பெண்... உன்னுடைய ஒரு சாகசச் செயல்... நன்றாக நடந்தது...'
காலையில் வந்து இறங்கியபோது, ஸ்டேஷனில் பெரிய எழுத்துகளில் பார்த்த சுவரொட்டி நினைவில் வந்தது. "கெய்ஷெ' என்ற ஆப்பராவின் முதல் இசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. நேராக அரங்கத்திற்குச் சென்றான். "முதல் நிகழ்ச்சிக்கு அவளும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது...'
அவன் மனதிற்குள் கூறிக் கொண்டான்.
அரங்கம் நிறைந்திருந்தது. கிராமப் பகுதிகளில் இருக்கும் அரங்குகளில் உள்ளதைப்போல தொங்கிக்கொண்டிருந்த விளக்குகளைச் சுற்றி மூடுபனி சூழ்ந்திருந்தது. காலரிகளில் பெரிய அளவில் ஆரவாரம் இருந்தது. முன் வரிசையில் ஊரிலிருக்கும் வாலிபர்களின் சத்தங்கள்... கவர்னரின் பாக்ஸில் முன் வரிசையில் கவர்னரின் மகள்... கவர்னர் திரைச்சீலைக்குப் பின்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தார். வெளியே கைகள் மட்டும் தெரிந்தன. நீண்ட நேரமாக ஆர்க்கெஸ்ட்ரா முழங்கிக் கொண்டிருந்தது. திரைச்சீலை விலகியது. இவ்வளவு நேரமும் பார்வையாளர்கள் வந்து கொண்டேயிருந்தனர். குரோவ் ஆர்வத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்னா ஸெர்ஜியேவ்னாவும் வந்திருந்தாள். மூன்றாவது வரிசையில் அவள் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தபோது அவனுக்குத் தோன்றியது- "எனக்கு இந்த அளவிற்கு விருப்பமான, இந்த அளவிற்கு அதிக விலைமதிப்புள்ள வேறு எதுவுமே இல்லை. ஒரு கிராமப் பகுதியில் இருக்கும் பெண்களில் ஒருத்தியாக, பார்க்கவே சகிக்காத கண்ணாடியை மாட்டிக்கொண்டு, கூறிக்கொள்கிற அளவிற்கு சிறப்புத் தன்மைகள் எதுவும் இல்லாத இந்தப் பெண் என்னுடைய வாழ்க்கையில் நிறைந்து நின்று கொண்டிருக்கிறாள். நான் விருப்பப்படும் ஒரே ஒரு சந்தோஷமாக...' நன்றாக இருக்கிறது என்று கூறமுடியாத அளவிற்கு இருந்த ஆர்க்கெஸ்ட்ராவும், தரித்திரம் பிடித்த வயலின் சத்தமும் சேர்ந்து ஒலித்தபோதுகூட அவள் எந்த அளவிற்கு அழகாக இருக்கிறாள் என்பதை அவன் கனவு கண்டான்.
நல்ல உயரத்தைக் கொண்ட, குனிந்துகொண்டு நடக்கும், மீசை வளர்ந்திருக்கும் ஒரு மனிதர் அன்னா ஸெர்ஜியேவ்னாவின் அருகில் வந்து அமர்ந்தார். ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் அவர் தன் தலையை குனிந்தார். யால்ட்டாவிலேயே "கேடு கெட்ட மனிதன்' என்று அவள் சிறப்பித்துக் கூறிய அவளுடைய கணவர் ஒருவேளை அந்த ஆளாக இருக்கவேண்டும். அந்த மனிதரின் உயரமான தோற்றமும் வளைந்த மீசையும் சிறிய வழுக்கையும் "கேடுகெட்ட மனித'னின் கேடு கெட்ட விஷயங்களை வெளியே காட்டின.
அந்த மனிதனின் சிரிப்பு இனியதாக இருந்தது. பொத்தான்களை மாட்டும் ஓட்டைகளில், வெயிட்டர்களின் எண்களைப்போல வைத்திருந்த ஏதோ குறிப்பிட்ட பேட்ஜ்...
முதல் இடைவேளையின்போது அவளுடைய கணவர் புகை பிடிப்பதற்காக வெளியே சென்றார். அவள் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். குரோவ் அருகில் சென்று சிரமப்பட்டு மலரச் செய்த சிரிப்புடன், நடுங்கிக் கொண்டிருக்கும் குரலில் கூறினான்: “குட் ஈவ்னிங்...''
திரும்பிப் பார்த்த அவள் வெளிறிப் போய்விட்டாள். நம்பிக்கை வராமல், பயத்துடன் மீண்டும் பார்த்தாள். கையிலிருந்த விசிறியையும் கண்ணாடியையும் இறுகப் பிடித்துக்கொண்டு அவை கீழே விழாமல் பார்த்துக் கொண்டாள். இருவரும் மிகவும் அமைதியாக இருந்தனர்.
அவள் அமர்ந்திருக்கிறாள். அவன் நின்று கொண்டிருக்கிறான்.
அவளுடைய பதைபதைப்பைப் பார்த்து அவனுக்கு அருகில்போய் உட்கார தைரியம் வரவில்லை. வயலினும் புல்லாங்குழலும் ஒலிக்க ஆரம்பித்தன. அவளுக்கு பெரிய அளவில் பயம் உண்டானது. அரங்கிற்குள் எல்லாரும் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவள் திடீரென்று எழுந்து கதவை நோக்கி நடந்தாள். அவன் அவளைப் பின்பற்றி நடந்தான். சுய உணர்வற்ற நிலையில் நடப்பதைப்போல இருவரும் இடையிலிருந்த படிகளின் வழியாக நடந்தார்கள். பலவகையான சீருடைகள் அணிந்து பலதரப்பட்ட மனிதர்கள்- எல்லாரும் பேட்ஜ் அணிந்திருந்தார்கள்- கண்களுக்கு முன்னால் தோன்றி மறைந்தார்கள். அழகான பெண்களையும், கம்பிகளில் தொங்கவிடப்பட்டிருந்த உரோம ஆடைகளையும் மின்னலைப்போல அவன் பார்த்தான். நன்கு தெரிந்த புகையிலையின் வாசனை நிறைந் திருந்த காற்று முகத்தில் வந்து மோதியது! பலமாக இதயம் அடித்தபோது, குரோவ் நினைத்தான்:
"ஹோ! இந்த மனிதர்களும் ஆர்க்கெஸ்ட்ராவும் இங்கு இப்போது எதற்காக?'
எல்லாம் முடிந்துவிட்டது. இனி எந்தச் சமயத்திலும் தாங்கள் ஒருவரையொருவர் பார்க்கப் போவதில்லை என்று ஸ்டேஷனில் அன்னா ஸெர்ஜியேவ்னா விடைபெறும் நிமிடத்தில் நினைத்தது திடீரென்று மனதில் வலம் வந்தது. இறுதி என்பது இன்னும் எவ்வளவு தூரத்தில்?
"தியேட்டருக்கு...' என்று எழுதப்பட்டிருந்த படியில் அவள் நின்றாள்.
“என்னை பயமுறுத்தி விட்டீர்கள்...'' அதிர்ச்சி விலகாமல், வெளிறிப்போன முகத்துடன், மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டு அவள் கூறினாள்: “நான் மிகவும் பயந்து போய்விட்டேன். பாதி செத்தே போய்விட்டேன். ஏன் இங்கு வந்தீர்கள்?''
“ஆனால், அன்னா... என்னைப் புரிந்துகொள்.'' குரலைத் தாழ்த்திக் கொண்டு அவன் வேகமாகக் கூறினான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook