நாயுடன் வந்த பெண் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6453
அதற்குப் பிறகு எங்கு போகிறோம் என்பதைப் பற்றியோ, என்ன கூறுகிறோம் என்பதைப் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாமல், முழு சுதந்திரம் கொண்டவர்களைப்போல சிறிய சிறிய விஷயங்களைப் பற்றி பேசியவாறு, தோள்களை உரசிக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். நடந்துகொண்டிருப்பதற்கு மத்தியில், கடலில் தெரிந்த வினோதமான வெளிச்சத்தைப் பற்றி அவள் பேசினாள். கடலுக்கு கடுமையான நீல நிறம் இருந்தது, அதன்மீது நிலவு பொன் நிறத்தில் கீற்றுகளைச் சிதறிவிட்டுக் கொண்டிருந்தது. வெப்பம் நிறைந்த ஒரு நாளின் இறுதி, எந்த அளவிற்கு மூச்சுவிட முடியாத அளவிற்கு இருக்கும் என்பதைப் பற்றி அவள் கூறினாள். "மாஸ்கோவில் இருந்து வருகிறேன்... ஆர்ட்ஸில் பட்டம் பெற்றிருக்கிறேன். எனினும், வங்கியில் பணிபுரிகிறேன். ஆப்பரா பாடகனாக பயிற்சி பெற்றிருக்கிறேன். ஆனால், அது வேண்டாமென்று வந்து விட்டேன். மாஸ்கோவில் இரண்டு வீடுகள் இருக்கின்றன' போன்ற தகவல்களை அவன் அவளிடம் கூறினான். "பீட்டர்ஸ்பர்க்கில் வளர்ந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்ததிலிருந்து எஸ்.......ஸில் வசிக்கிறேன். ஒரு மாதகாலம் யால்ட்டாவில் இருப்பேன். விடுமுறைக்காக காத்திருக்கும் கணவர் ஒருவேளை வந்து அழைத்துக்கொண்டு செல்வார்' என்பதைப் போன்ற தகவல்களை அவளிடமிருந்து அவன் தெரிந்து கொண்டான்.
தன் கணவர் பணிபுரிவது க்ரவுன் டிபார்ட்மெண்டிலா அல்லது ப்ராவின்ஷ்யல் கவுன்சிலின் கீழா என்று அவளுக்கு தெளிவாகத் தெரியவில்லை. தான் அதைப் பற்றித் தெரியாமல் இருப்பதைக் கூறி, அவளே ரசித்துக்கொண்டாள். அவளுடைய பெயர் அன்னா ஸெர்ஜியேவ்னா என்பதை குரோவ் தெரிந்து கொண்டான்.
அதற்குப் பிறகு ஹோட்டலில் இருந்தபோதும் அவன் அவளைப் பற்றி சிந்தித்தான். மறுநாளும் தாங்கள் ஒருவரையொருவர் கட்டாயம் பார்ப்போம் என்பதை நினைத்தான். சமீபகாலம் வரை அவளும் ஒரு சிறிய பள்ளிக்கூடம் செல்லும் சிறுமியாகத்தானே இருந்திருக்கிறாள்- தன்னுடைய மகளைப்போல என்பதை படுக்கையில் சாய்ந்தபோது அவன் நினைத்தான். இதற்கு முன்பு அறிமுகமில்லாத ஒரு மனிதனுடன் உரையாடும்போது பேச்சிலும் சிரிப்பிலும் வெளிப்பட்ட தவிப்பையும் தயக்கத்தையும் அவன் நினைத்துப் பார்த்தான். வெளிப்படையாகத் தெரிந்த தீவிர நோக்கங்கள் நிறைந்த உரையாடல்களும் பார்வைகளும் பின்தொடர்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில், தனியாக நின்று கொண்டிருப்பது என்பது அவளுடைய வாழ்வில் முதல்முறையாக இருக்கவேண்டும். அவளுடைய மென்மையான கழுத்தும் சாம்பல் நிற கண்களும் அவனுடைய நினைவில் வந்தன.
"இரக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் அவளிடம் என்னவோ சில விஷயங்கள் இருக்கின்றன!' சிந்தித்துக் கொண்டே அவன் உறங்கிவிட்டான்.
2
அறிமுகமாகிவிட்ட பிறகு, ஒரு வாரம் கடந்து சென்று விட்டது. ஒரு விடுமுறை நாள். உள்ளுக்குள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வெப்பம். வெளியிலோ தூசி முழுவதையும் சுழற்றியடிக்கும் அளவிற்கு வீசிக் கொண்டி ருந்த காற்று, ஆட்களின் தொப்பிகளைப் பறக்கச் செய்து கொண்டிருந்தது. தாகம் நிறைந்த நாளாக அது இருந்தது. குரோவ் இடையில் அவ்வப்போது "பெவிலிய'னுக்குச் சென்று, ஏதாவது குளிர்ச்சியாகப் பருகும்படி அன்னாஸெர் ஜியேவ்னாவை வற்புறுத்திக் கொண்டிருந்தான். என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை...
சாயங்காலம் காற்று சற்று அடங்கியபோது, கப்பல் வருவதைப் பார்ப்பதற்காக அவர்கள் சென்றார்கள். யாரையோ வரவேற்பதற்காக தயார்படுத்திக்கொண்டு கையில் பூங்கொத்துக்களுடன் ஆட்கள் கூட்டமாக துறைமுகத்தில் இருந்தார்கள். யால்ட்டாவில் நாகரீகமாக ஆடைகள் அணிந்த ஆட்களின் கூட்டத்தில், இரண்டு விஷயங்கள் கவனத்தை ஈர்த்தன. வயதான பெண்கள் இளம்பெண்களைப்போல ஆடைகளணிந்து காட்சியளித்தார்கள். இன்னொரு பக்கம் ஏராளமான ஜெனரல்கள் இருந்தார்கள்.
கடல் கொந்தளிப்பில் இருந்ததால், கப்பல் மிகவும் தாமதமாகவே வந்தது. சூரியன் மறைந்த பிறகுதான் அது வந்துசேர்ந்தது. தெரிந்தவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல, அன்னா கண்ணாடியின் வழியாக கப்பலில் பயணம் செய்து வந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குரோவின் பக்கம் திரும்பியபோது, அவளுடைய கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவள் நிறைய பேசினாள்... ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கேள்விகளைக் கேட்டாள்... என்ன கேட்டோம் என்பதை அடுத்த நிமிடமே மறந்தாள்... அந்த மனிதர்களின் கூட்டத்தில் கண்ணாடி கீழே விழுந்துவிட்டது. மக்கள் கூட்டம் கலைந்து சென்றது. யாருடைய முகத்தையும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு இருட்டாக இருந்தது. காற்று முழுமையாக அடங்கி விட்டிருந்தது. எனினும், குரோவும் அன்னா ஸெர்ஜியேவ்னாவும் கப்பலிலிருந்து யாரோ வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல அங்கேயே நின்றிருந்தார்கள். அன்னா ஸெர்ஜியேவ்னா மிகவும் அமைதியாக குரோவின் பக்கம் பார்க்காமல் மலர்களை வாசனை பிடித்தவாறு நின்றிருந்தாள்.
“காலநிலை கொஞ்சம் சுமாராக இருக்கிறது...'' அவன் சொன்னான்: “நாம் எங்கே போகவேண்டும்? ஒரு பயணம் போனால் என்ன?''
அவள் பதிலெதுவும் பேசவில்லை.
அவன் அவளைப் பார்த்துக் கொண்டே, திடீரென்று வளைத்துப் பிடித்து, உதடுகளில் முத்தமிட்டு, மலர்களின் வாசனையையும் ஈரத்தையும் சுவாசத்தில் ஒற்றியெடுத்தான். திடுக்கிட்டுத் திரும்பி, சுற்றிலும் பார்த்தான். யாராவது பார்த்திருப்பார்களா?
“நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் செல்வோம்...'' அவன் மெதுவான குரலில் சொன்னான். இருவரும் வேகமாக நடந்தார்கள். மூடப்பட்டிருந்த அறையில் ஜப்பானிய கடையிலிருந்து வாங்கப்பட்ட தைலத்தின் வாசனை. அவளைப் பார்த்துக்கொண்டே குரோவ் சிந்தித்தான்: "எந்த அளவிற்கு வித்தியாசமான மனிதர்களையெல்லாம் உலகத்தில் சந்திக்கிறோம்!' நினைவுகளில் எவ்வளவு பெண்கள்! மனப்பூர்வமாகக் காதலித்து, சிறிது காலத்திற்காவது செலுத்திய அன்பிற்கு நன்றியுடன் நடந்த அலட்சிய குணம் கொண்டவர்கள்! அர்ப்பணிப்பு உணர்வே இல்லாமல் குறும்புத் தனங்களுடனும் அர்த்தமற்ற சொற்களுடனும், அன்புப் பிரவாகமல்ல- அதைவிட பெரிய ஏதோவென்றுதான் தாங்கள் எதிர்பார்ப்பது என்று நடந்து கொள்ளும் மனைவியைப் போன்றவர்கள்! வாழ்விற்கு அளிப்பதைவிட, அதிகமாகப் பெற வேண்டும் என்ற வெறியுடன் நடந்து திரியும் பேரழகிகளான இரண்டு மூன்று பேர்- அதிகார குணம் கொண்ட, சிந்தனை சக்தி இல்லாத சபல மனம் கொண்டவர்கள்! இளம் வயதுகளைத் தாண்டியவர்கள்! வெறி அடங்கியபோது, குரோவிற்கு அவர்களுடைய அழகு வெறுப்பை உண்டாக்கியது. அவர்களுடைய ஆடைகளில் தொங்கிக் கொண்டிருந்த கலை வேலைப்பாடு கொண்ட பகுதிகள் மீனின் செதில்களைப்போல அவனுக்குத் தோன்றியது.
அவளுடைய விஷயத்தில், இப்போதுகூட இளம் வயதிற்கே உரிய கள்ளங்கபடமற்ற தன்மையும் கூச்சமும் எஞ்சி நின்றுகொண்டிருந்தன. யாரோ வாசற்கதவைத் தட்டுகிறார்கள் என்ற தோணல் திடீரென்று ஒரு பதைபதைப்பை உண்டாக்கியது.
நடந்து முடிந்த சம்பவத்தின்மீது அன்னா ஸெர்ஜியேவ்னாவின்- நாயுடன் நடந்து கொண்டிருக்கும் பெண்ணின் எதிர்வினை வித்தியாசமாக இருந்தது. அது தன்னுடைய வீழ்ச்சியாக இருந்தது என்பதைப் போன்ற உறுதியான எண்ணமும் புலம்பலும் அந்த முகத்தில் தெரிந்தது. முகம் மிகவும் வெளிறிப்போய் காணப்பட்டது. இரு பக்கங்களிலும் அவிழ்த்து விடப்பட்டிருந்த தலைமுடிகள் விழுந்து கிடந்தன.