நாயுடன் வந்த பெண் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6453
மொத்தத்தில் அவள் "பாவம் செய்த பெண்'ணின் பழையகால ஓவியத்தைப்போல இருந்தாள்.
“நடந்தது தப்பாகி விட்டது.'' அவள் சொன்னாள்: “நீங்கள்தான் முதலில் என்னை வெறுப்பீர்கள்.''
மேஜையின்மீது ஒரு நீர்ப்பூசணி இருந்தது. குரோவ் ஒரு துண்டை அறுத்தெடுத்து மெதுவாக சாப்பிட்டான். அரைமணிநேரம் மிகவும் அமைதியாக கடந்து சென்றது.
அன்னா ஒரு பரிதாபமான நிலையில் உட்கார்ந்திருந்தாள். வாழ்வை அதிகமாகப் பார்த்திராத ஒரு அப்பாவி இளம் பெண்ணின் கள்ளங்கபடமற்ற தன்மையுடன் அவள் இருந்தாள். மேஜையின்மீது எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி அவளுடைய முகத்தில் மெல்லிய வெளிச்சத்தைப் பரவச் செய்துகொண்டிருந்தது. அவளுடைய உள்மனதில் இருந்த சந்தோஷத்தை எளிதில் உணரமுடிந்தது.
“என்னால் உன்னை எப்படி வெறுக்க முடியும்?'' குரோவ் கேட்டான்: “என்ன கூறுகிறோம் என்பதே உனக்குத் தெரியவில்லை.''
“கடவுள் என்னை மன்னிக்கட்டும்...'' அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்து விட்டன. “என்ன பயங்கரம்!''
“ நீ பாவ மன்னிப்பு கேட்பதைப்போல இருக்கிறதே?'' அவன் கேட்டான்.
“பாவ மன்னிப்பா? இல்லை... நான் கெட்டுப் போனவள். நானே என்னை வெறுக்கிறேன். என்னுடைய தவறுக்கு நியாயம் கூறமுடியாது. கணவரை அல்ல... என்னையே நான் ஏமாற்றியிருக்கிறேன். இப்போது முதல் முறையாக அல்ல. நீண்டகாலமாக நான் என்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கணவர் உண்மையானவராகவும், நல்லவராகவும் இருக்கலாம். ஆனால், அந்த ஆள் எந்தவொரு திறமையும் இல்லாதவர். அவருடைய வேலை என்ன என்பதே எனக்குத் தெரியாது. எப்படிப் பார்த்தாலும் அந்த ஆள் ஒரு கேடுகெட்ட மனிதர்தான். எனக்கு இருபது வயது நடக்கும்போது எங்களுடைய திருமணம் நடந்தது. பதைபதைப்புடன் நான் போராடி வாழ்ந்துகொண்டிருந்தேன். இன்னும் கொஞ்சம் நல்ல வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கலாம். வித்தியாசமான ஒரு வாழ்க்கை வேண்டும்... நான் வாழவேண்டும்... நான் வாழவேண்டும்... கவலைப்பட்டுக் கொண்டு என்னால் இருக்க முடியாத நிலை உண்டாகிவிட்டது. அது உங்களுக்குப் புரியாது. தெய்வத்தை சாட்சி வைத்துக்கொண்டு நான் கூறுகிறேன். என்னை என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்கு என்னவோ நடந்துவிட்டது. என்னை கட்டுப்படுத்தி நிறுத்தி வைக்க முடியவில்லை. உடல் நலமில்லை என்று என் கணவரிடம் கூறிவிட்டு, நான் இங்கு வந்தேன். இங்கு நான் பைத்தியம் பிடித்த பெண்ணைப்போல நடந்து திரிந்து கொண்டிருந்தேன்... இப்போது யாரும் வெறுக்கக்கூடிய மோசமான பெண்ணாகி விட்டிருக்கிறேன்.''
அதைக் கேட்டுக்கொண்டிருந்த குரோவிற்கு "போர்' அடித்தது. எதிர்பாராததாகவும் சூழ்நிலைக்கேற்றதாக இல்லாததாகவும் இருந்த அந்த கவலை நிறைந்த வார்த்தைகளும், கள்ளங்கபடமற்ற குரலும் வெறுப்பை உண்டாக்கக்கூடியவையாக இருந்தன. கண்களில் கண்ணீர் நிறையாமல் இருந்திருந்தால், அது அவளுடைய தந்திரச் செயல் என்று மட்டுமே அவன் நினைத்திருப்பான்.
“என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உனக்கு என்ன வேண்டும்?'' அவன் கேட்டான். அவனுடைய மார்பின்மீது தன் தலையைச் சேர்ந்து வைத்து, அவள் மேலும் நெருக்கமாக உட்கார்ந்தாள். “சொல்வதை நம்புவதற்கு முயற்சி செய்யுங்கள். நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நேர்மையான, புனிதமான வாழ்க்கையை வாழவே நான் விரும்புகிறேன். பாவம் என்பது வெறுக்கப்படக்கூடாது. நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதர்கள் "மோசமான சக்தி ஈர்த்து வைத்திருக்கிறது' என்று கூறுவார்கள். என்னைப் பற்றியும் அவ்வாறு கூறக்கூடிய சூழ்நிலை உண்டாகியிருக்கிறது.'' அவள் கூறினாள்.
“ஸ்... ஸ்... ஸ்...'' அவன் சத்தம் உண்டாக்கினான். அவளுடைய பயந்துபோன கண்களையே பார்த்தவாறு அவன் அவளை முத்தமிட்டான். மெதுவான குரலில் பாசத்துடன் பேசினான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஆறுதல் அடைந்து, பழைய சந்தோஷத்தை மீண்டும் பெற்றாள். இருவரும் சிரித்துக்கொண்டே விளையாட ஆரம்பித்தனர்.
அங்கிருந்து வெளியே வந்தபோது கடல்பகுதியில் ஒரு ஆள்கூட இல்லை. ஸைப்ரஸ் மரங்கள் நிறைந்த நகரத்திற்கு மரணத்தின் சாயல் உண்டாகிவிட்டிருந்தது. ஆனால், கடல் மிகவும் சத்தமாக, கரையை வேகத்துடன் மோதிக்கொண்டிருந்தது. ஒரே ஒரு படகு மட்டும் கடலில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. அதில் ஒரு விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.
அவர்கள் ஒரு வண்டியில் ஏறி ஓரியான்டாவிற்குச் சென்றார்கள். “ஹாலில் இருந்த அறிவிப்புப் பலகையில் நான் உன்னுடைய இரண்டாவது பெயரை கூர்ந்து கவனித்தேன்- வான் திதெரிட்ஸ்... உன்னுடைய கணவர் ஜெர்மனியைச் சேர்ந்தவரா?''
“இல்லை... தாத்தா ஜெர்மன்காரராக இருந்தார் என்று தோன்றுகிறது. ஆனால், அந்த ஆள் ரஷ்யன் ஆர்த்தோடக்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்.''
ஓரியான்டாவின் தேவாலயத்திலிருந்து மிகவும் அதிக தூரத்தில் இல்லாமல் இருவரும் உட்கார்ந்து, எதுவும் பேசாமல் அமைதியாக கடலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிகாலைப் பொழுதின் மூடுபனிக்கு மத்தியில் யால்ட்டா மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்தது. மலைச் சிகரங்களில் வெள்ளை நிறத்தில் மேகங்கள் எந்தவித அசைவும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தன. மரங்களில் இலைகள் அசையாமல் இருந்தன. விட்டில் பூச்சிகள் ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. கீழேயிருந்து மேலே வந்துகொண்டிருந்த கடலின் முழக்கம் நிரந்தரமாக நிலவிக்கொண்டிருந்த தூக்கத்தின் அமைதியை விரட்டியடித்துக் கொண்டிருந்தது. யால்ட்டாவோ ஓரியான்டாவோ உருவாவதற்கு முன்பும் அது இப்படித்தான் சத்தத்தை உண்டாக்கிக்கொண்டு இருந்திருக்கும். இப்போதும் அதே சத்தம்தான்... நாம் யாரும் இங்கு இல்லாதபோதும் இதே கள்ளங்கபடமற்ற தன்மையுடன் உரத்து இந்த சத்தம் இங்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கும். நம் ஒவ்வொருவரின் வாழ்வு, மரணம் ஆகியவை நிறைந்த இந்த கள்ளங்கபடமற்ற தன்மைக்குள், இந்த பேரமைதிக்குள் ஒருவேளை... நம்முடைய நிரந்தரமான தப்பித்தலின், பூமியின் எல்லையற்ற அசைவுகளின், முழுமையை நோக்கி உள்ள முடிவற்ற பயணத்தின் வாக்குறுதிகள் மறைந்து கொண்டிருக்கலாம். கடலும் மலைகளும் மேகங்களும் பரந்து கிடக்கும் ஆகாயமும் சேர்ந்து உண்டாக்கிய மந்திரத்தன்மை நிறைந்த சூழ்நிலையில், மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்த அழகான பெண்ணின் அருகில் இருந்து கொண்டு குரோவ் சிந்தித்தான். "சற்று நினைத்துப் பார்த்தால், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுமே எவ்வளவு அழகாக இருக்கின்றன! மனதின் செயல்களையும் வாழ்வின் மிகவும் உயர்வான இலட்சியங்களையும் மறந்த சிந்தனைக்குரிய செய்திகளைத் தவிர மற்றவை அனைத்தும்...'
ஒரு ஆள் அருகில் வந்தார்- காவலாளியாக இருக்க வேண்டும். அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு கடந்து சென்றார்.
அதுவும் மிகவும் அழகான விஷயமாகத் தோன்றியது. தியடோஷ்யாவிலிருந்து ஒரு கப்பல் வந்தது. அதிகாலைப் பொழுதின் வெளிச்சத்தில் அதன் விளக்குகள் மங்கலாக காட்சியளித்தன.
“புல்லில் பனித்துளிகள் இருக்கின்றன...'' மிகவும் நீளமான ஒரு பேரமைதிக்குப் பிறகு அன்னா ஸெர்ஜியேவ்னா கூறினாள்.
“ம்... வீட்டிற்குச் செல்வதற்கு நேரமாகி விட்டது.''