நாயுடன் வந்த பெண் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6453
குரோவ் தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது, அவள் சாளரத்தின் அருகில் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தாள். வாழ்க்கை இந்த அளவிற்கு கடினமாக இருக்கிறதே என்பதை நினைத்து அவள் அழுது கொண்டிருந்தாள். திருடர்களைப்போல மனிதர்களிடமிருந்து மறைந்துகொண்டு ரகசியமாகத்தான் பார்க்க வேண்டும்!'' வாழ்க்கை துயரமாகிவிட்டதே!
“ம்... போதும்!'' குரோவ் கூறினான்.
இந்த உறவு உடனடியாக முடிந்துவிடப் போவதில்லை என்று உறுதியாக அவனுக்குத் தெரிந்திருந்தது. அன்னா ஸெர்ஜியேவ்னா அவனுடன் மேலும் மேலும் நெருங்கிவந்தாள். வழிபடுகிறாள். என்றாவதொருநாள் இவை எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவளிடம் கூறுவது இயலாத ஒன்றாகத் தோன்றியது. கூறினாலும், அவள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாள்.
எதையாவது கூறி சந்தோஷப்படுத்தலாம் என்று எண்ணி மெதுவாக அருகில் வந்து அவளுடைய தோளில் கையை வைத்து அவளை அவன் சுற்றி அணைத்தான். அந்த நிமிடம் நீலநிறக் கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தை அவன் கூர்ந்து கவனித்தான்.
தலைமுடி நரைக்க ஆரம்பித்திருந்தது. கடந்த சில வருடங்களில் அவன் கிழவனாக ஆகிவிட்டிருக்கிறான்.
அவனுடைய கைகளுக்குக் கீழே சதைப்பிடிப்பான தோள்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த வாழ்க்கையுடன் அவனுக்கு இனம்புரியாத ஈர்ப்பு உண்டானது. இப்போதும் அழகானதாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் அது இருந்தது. ஆனால், அதுவும் வெகுசீக்கிரமே தன்னுடைய வாழ்க்கையைப்போல மங்கலாக ஆரம்பிக்கும் என்று அவனுக்குத் தெரியும். என்ன காரணத்திற்காக அவள் இப்படி அன்பு வைத்திருக்கிறாள்? அவன் எப்படி இருக்கிறானோ, அப்படி அல்ல பெண்கள் அவனைப் புரிந்துகொண்டிருப்பது. அவர்கள் காதலித்தது அவனை அல்ல. அவர்களுடைய மனதில் கற்பனை செய்து வைத்திருக்கும் மனிதனை... வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டிருந்த ஒருவனை... பிறகு அந்த தவறைப் புரிந்து கொண்டபோது... அப்போதும் அந்தக் காதல் அதே மாதிரிதான் இருக்கிறது. ஒருத்திகூட அவனுடன் இருந்தபோது சந்தோஷமடைந்ததில்லை. காலம் கடந்து போய்விட்டது. அவர்கள் பலருடனும் பழக்கமானான், நெருங்கினான், பிரிந்தான். ஆனால், எந்தச் சமயத்திலும் அவன் ஒருமுறைகூட காதலித்தது இல்லை. வேறு என்ன பெயர் கூறி குறிப்பிட்டாலும், அவனுடையது காதலாக இல்லை.
முடி நரைத்தபிறகு, இப்போதுதான் அவன் வாழ்க்கையில் முதல் முறையாக உண்மையான காதலில் கால்வைக்கிறான்.
அன்னா ஸெர்ஜியேவ்னாவும் குரோவும் கணவன்- மனைவி யைப்போல, உயிர் நண்பர்களைப்போல ஒருவரையொருவர் காதலித்தார்கள். ஒருவரையொருவர் காதலிப்பதற்காக என்றே விதி தனி கவனம் செலுத்தி அவர்களைப் படைத் திருக்கிறது என்பதைப்போல அவர்களுக்குத் தோன்றியது. கடந்த காலத்தில் வெட்கப்படத்தக்கவை என்று நினைத்த அனைத்தையும் அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது இருப்பவை அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்தக் காதல் தங்களை முழுமை யாக மாற்றிவிட்டிருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
முன்பு கவலை தோன்றும்போது, அவனுடைய மனம் ஒவ்வொரு காரணமாகக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது அவன் காரணங்களைப் பற்றி நினைப்பதில்லை. ஆழமான காதல்... இரக்கம்... இனிமேலும் திருட்டுத்தனங்கள் தேவையில்லை...
“அழுதது போதும், குழந்தை...'' அவன் சொன்னான்: “ஒரு ஆயுளுக்குத் தேவையான அளவுக்கு நீ அழுதுவிட்டாய். இனி போதும்... நாம் சிறிது பேசுவோம். ஏதாவதொரு வழியை யோசிப்போம்...''
அவர்கள் ஆலோசனைகளில் மூழ்கினார்கள். இந்த வஞ்சனைக்கும், ரகசியத்திற்கும் ஒரு முடிவு கண்டுபிடிக்க வேண்டும். நீண்ட நாட்கள் ஒருவரையொருவர் சந்திக்காமல், இரண்டு நகரங்களில் தனித்தனியாக வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முடிவு உண்டாக்க வேண்டும். தாங்கிக்கொள்ள முடியாத அந்த உறவுகளிலிருந்து எப்படி விடுதலை பெறுவது?
“என்ன வழி?'' தலையில் கைகளை அழுத்தி வைத்துக்கொண்டு தாங்கமுடியாத நிலையில் அவன் கூறினான்: “என்ன செய்வது?''
எல்லா விஷயங்களுக்கும் மேலும் தெளிவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிறிது நேரத்திற்குள் ஏதாவதொரு வழி கிடைக்கும்... மிகவும் அழகான ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பமாகும்... இனி... முன்னால் இருப்பது நீண்ட நெடிய பாதை. அதன் ஆபத்தான கட்டம் இப்போது ஆரம்பமாகப் போகிறது. அவ்வளவுதான்...