ஆரூடம் - Page 13
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6956
அதைக்கேட்டு உண்ணி உரத்த குரலில் விழுந்து விழுந்து சிரிக்கிறான். சிரிப்பின் முடிவில் உண்ணி:
“நாஸியா ஹஸனைத் தெரியாதா? நீ நிச்சயமா முட்டாள்தான்!”
நீலியும் சிரிக்கிறாள்.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு நீலி மெதுவான குரலில் உண்ணிக்காக ஒரு பாட்டைப் பாடுகிறாள்.
அது ஒரு நாடோடிப் பாடல். எந்தவித இசைக்கருவிகளும் இல்லாத எளிமையான பாடல் அது.
பாடலின் முடிவில் நீலிக்கு மிகவும் தளர்ச்சியாக இருக்கிறது. திடீரென்று தலையைச் சுற்றிக் கொண்டு வரவே, அப்படியே உட்கார்ந்து விடுகிறாள் நீலி. அவளின் நிலையைப் பார்த்து பதைபதைத்துப் போகிறான் உண்ணி.
உண்ணி: தலை வலிக்குதா?
நீலி பேசாமல் இருக்கிறாள். பயந்து, ஒருவித சந்தேகத்துடன் அவன் அவளின் தோளில் கையை வைத்து பார்க்கிறான். கஷ்டப்பட்டு இயல்பாக இருக்க முயலும் நீலி சிரிக்க முயற்சி செய்தவாறு:
“ஒண்ணுமில்ல... எனக்கு அப்பப்போ இந்த மாதிரி வரும். உடம்பு படபடன்னு நடுங்க ஆரம்பிச்சிடும். (விஷயத்தை மாற்றி) பரவாயில்ல... உண்ணி தம்புரான், நீங்க போங்க.”
தயங்கி நிற்கிறான் உண்ணி.
நீலி: நடங்க.
உண்ணி மெதுவாக நடக்கிறான். சிறிது தூரம் சென்ற பிறகு பின்னால் திரும்பிப் பார்க்கிறான். நீலி நெற்றியில் கை வைத்தவாறு அதே இடத்தில் அமர்ந்திருக்கிறாள். அவள் மேல் இனம் புரியாத ஒரு பரிதாப உணர்ச்சி உண்ணியின் மனதில் உண்டாகிறது.
32
நீலியின் குடிசைப் பகுதி.
ஆவேசத்துடன் வாசலில் நின்றிருக்கிறாள் நீலி. அவளின் கையில் வெட்டரிவாள் இருக்கிறது.
நீலி: என்ன விளையாடுறீங்களா? ஆள் யார்ன்னெல்லாம் நான் பார்க்க மாட்டேன். இதுக்கு மேல ஏதாவது வாயைத் திறந்தா நடக்குறதே வேற.
மெலிந்துபோன, என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் ஒரு போலீஸ்காரர், கோபாலன் நாயர், அவருக்கு உதவியாக இரண்டு ஆட்கள்.
கோபாலன் நாயர்: ஒரு புகார் வந்தா, அவங்க வந்து விசாரிக்கத்தானே செய்வாங்க, நீலி?
நீலி: விசாரணை... (போலீஸ்காரரிடம்) கண்ணையும் முரட்டுத்தனத்தையும் வச்சு என்னை பயமுறுத்தலாம்னா கொஞ்சமும் நடக்காது.
கோபாலன் நாயருடன் வந்த ஆள்:
ஸ்டேஷன்ல பல பேரு புகார் செய்திருக்காங்க. இந்த வீட்டுல கள்ளச்சாராயம் விக்கிறதாகவும், ராத்திரி நேரங்கள்ல கண்ட கண்ட ஆளுங்கள்லாம் இங்கே வந்து போறதாவும்...
நீலி: ப்பூ...! இதுக்கு மேல ஏதாவது பேசினா துண்டு துண்டா வெட்டி போட்டுருவேன். இதெல்லாம் யாரோட வேலைன்னு எனக்குத் தெரியும்!
கோபாலன் நாயர்: (மெதுவான குரலில்) சத்தம் போட்டு பேசாத... தேவையில்லாம கத்தாம இந்த விஷயத்தைப் பேச முடியாதா நீலி?
நீலி: (தன் மீது குற்றம் சொன்ன ஆளைப் பார்த்து) இந்த ஆளு கூடத்தான் எத்தனையோ ராத்திரி உடம்புக்கு முடியலைன்னு மருந்து கேட்டு வந்திருக்கான். அப்போ இவனுக்கு சயரோகம். முக்கிக்கிட்டே இருந்தான். முனகுறதும் துப்புறதுமா இருந்தான். ராத்திரி நேரத்துல எதுக்காக வந்தான்னு பார்க்காம...
போலீஸ்காரன்: பெரிய மனிதர்களுக்கு அது தொந்தரவா இருக்குன்னு தெரியிறப்போ...
நீலி: கண்டதைச் சாப்பிடறவ இல்ல நான். எனக்கு வேலை நிறைய இருக்கு. தேவையில்லாம அதைக் கெடுக்காதீங்க. உடனே எல்லாரும் வெளியே போங்கடா.
33
வீட்டின் முன்னால் நின்றவாறு இந்திரா நடக்கும் நிகழ்ச்சி முழுவதையும் பார்க்கிறாள். மறைந்து நின்றிருக்கும் தன்னுடைய தாயையும், அரிவாளைக் கையில் வைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக நின்றிருக்கும் நீலியையும் உண்ணி கவனிக்கிறான்.
உண்ணியின் காதில் விழும் நீலியின் குரல்:
“இந்த வீட்டு வாசல்ல யாராவது கால் வச்சா, காலை நான் வெட்டிருவேன். யாரா இருந்தாலும், வெட்டிப் போட்டுட்டுத்தான் மறு வேலையைப் பார்ப்பேன்!”
கோபாலன் நாயரும், அவருடன் சென்றவர்களும் முகத்தைத் தொங்கப் போட்டவாறு திரும்பி வருவதை இந்திரா பார்க்கிறாள். எல்லா ஆர்ப்பாட்டமும் முடிந்து, நீலி பெரிய வீட்டை நோக்கி திரும்பிகிறபோது, இந்திரா வீட்டின் பின்பக்கம் போகிறாள்.
உண்ணி தன் தாய் தன்னைக் கவனிக்கவில்லை என்ற தைரியத்துடன் வேலியை நோக்கி மெதுவாக நடந்து செல்கிறான். உண்ணியைப் பார்த்ததும், நீலியின் முகத்தில் அதுவரை இருந்த கடுமைத்தனம் மறைந்து, சாந்தநிலை வந்து ஒட்டிக் கொள்கிறது. உண்ணி நீலியைப் பார்த்து புன்னகைக்கிறான். நீலியும் புன்சிரிப்பைத் தவழ விடுகிறாள். அவள் மிகவும் தளர்ந்து போய் திண்ணையில் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு அமர்கிறாள். தனக்கு முதுகுப் பக்கத்தைக் காட்டியவாறு அமர்ந்திருக்கும் உண்ணியின் தோள் குலுங்குவதை வைத்து அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறான் உண்ணி.
34
மறுநாள் காலை.
வெளியே வாசலில் கூடி நின்றிருந்த மக்களின் பேச்சு சத்தத்தையும் கோபாலன் நாயரின் உரத்த ஆணையிடும் குரலையும் கேட்டவாறு உண்ணி கண் திறக்கிறான்.
கோபாலன் நாயரின் குரல்:
"படிக்கு வெளியே நின்னு பேசின நீங்க, இப்போ அதே இடத்துல நின்னுக்கிட்டு என்ன பேசுறீங்கன்றதை ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க!"
யாரோ ஒருவரின் குரல்:
"அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போயிடுச்சு நாயரே. முதல்ல உங்க தம்புரானை இங்கே கூப்பிடுங்க."
உண்ணி கண்களைக் கசக்கியவாறு வெளியே வருகிறான்.
வாசலில் பெருக்கிக் கொண்டிருந்த நாணியம்மா அதை முழுமையாக நிறுத்திவிட்டு விளக்குமாறைக் கையில் வைத்தவாறு மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
வெளியே வந்த உண்ணி நாணியம்மாவிடம்:
"யாரு வந்திருக்காங்க, நாணியம்மா?"
நாணியம்மா மீண்டும் சுத்தம் செய்யத் தொடங்குகிறாள்.
"யாரோ?"
உண்ணி படியை நோக்கி நகர்கிறான்.
35
வாசலில் பத்து பன்னிரெண்டு ஆட்கள் நின்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரிஜனங்கள் என்பது தெரிகிறது. அவர்கள் வெவ்வேறு வயதைக் கொண்டவர்கள். அந்தக் கூட்டத்தில் கிழவனான சாத்தனும் இருக்கிறான்.
திண்ணையைத் தாண்டி கோபாலன் நாயர் நின்றிருக்கிறார். என்னவோ கலவரம் நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்து பயந்து அவர் அழைத்திருந்த மூன்று நான்கு ஆட்கள் அவருக்குப் பக்கத்தில் நின்றிருக்கிறார்கள்.
வாசலில் வர்மா ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். அவனிடம் ஒரு பதட்டம் தெரிகிறது. வேகமாக அங்கு வந்த உண்ணி நடக்கும் காட்சியைப் பார்த்து, தனக்குப் பொருத்தமான ஒரு காட்சியல்ல அது என்று அவனுடைய மனதிற்குப் பட்டதாலோ என்னவோ, மிகவும் அருகில் நெருங்கிப் போகாமல் ஒரு தூணுக்குப் பக்கத்திலேயே அவன் நின்று கொள்கிறான்.
ஆட்கள் ஒரே நேரத்தில் கூறுகிறார்கள்:
"போலீஸைக் கூப்பிட்டு பாவ்லா காட்டினா பயந்து ஓடிடுவோம்ன்ற நினைப்பா?"
"அப்படி வீட்டை விட்டு விரட்டுற பெரியவங்க யாருன்னு நாங்களும் பார்க்க வேண்டாமா?"