Lekha Books

A+ A A-

ஆரூடம் - Page 17

aaruudam

நீலி திடீரென்று பயங்கரமான கோபத்துடன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய வாளை எடுக்கிறாள். அதைப் பார்த்து அலறியவாறு எழுகிறான் உண்ணி.

கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்திருக்கும் உண்ணிக்குப் பக்கத்தில் நாணியம்மா. உண்ணியை நாணியம்மா தடவியவாறு

“கனவு கண்டு பயந்துட்டிங்களா? அந்த நாயரு இப்படி கண்டதையெல்லாம் சொல்லி பிள்ளையை பயமுறுத்துறதா?

உண்ணி படுக்கிறான். வாசலுக்கு வெளியே மங்கலான வெளிச்சத்தில் வர்மா நின்றிருக்கிறான்.

வர்மா:    என்ன? என்ன உண்ணி?

நாணியம்மா:    கனவு கண்டிருக்காப்ல...

மீண்டும் உண்ணி உறங்கிவிட்டான் என்று எண்ணிய நாணியம்மா வெளியே போய் பாயில் படுக்கிறாள்.

வர்மா திரும்பிப் போகிறான்.

மங்கலான இருட்டில் உண்ணி கண்களைத் திறந்தவாறு படுத்திருக்கிறான்.

அந்த முகத்திலிருந்து மேளத்தின் ஒலி மெதுவாக ஆரம்பிக்கிறது.

43

மேளச் சத்தம். கோவில் குடைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

உண்ணியும் இந்திராவும் கோபாலன் நாயரின் மனைவியும் கிராமத்தின் கோவிலுக்கு அருகில் நின்றிருக்கிறார்கள். உண்ணியின் நெற்றியில் திருநீறு இருக்கிறது. மக்கள் கூடி நிற்கிறார்கள். கோவிலில் அன்று திருவிழா.

திருவிழா படு அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோபாலன் நாயர் அருகில் வந்து:

“இனி எங்க வீட்டுக்குப் போயி சாப்பிட்டுட்டு, தீபாராதனை நடக்குற நேரத்துக்குத் திரும்பி வருவோம்.”

இந்திரா:   வேண்டாம். இப்பவே கிளம்பவேண்டியதுதான்.

தேவகி:    அய்யய்யோ... நீங்க வருவீங்கன்னு வீட்டுல நிறைய ஏற்பாடுகள் பண்ணி வச்சிருக்கு.

கோபாலன் நாயர்:    என் மகளுக்கு குழந்தை பிறந்து இருபத்தெட்டு நாளாச்சு. வெளியே இருந்த யாரையம் வீட்டுக்கு கூப்பிடல. நீங்க வீட்டுக்கு வர்றீங்கன்றதுனால, நாணியம்மாக்கிட்ட அங்கே சமையல் எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லியாச்சு. தாசப்பன்கூட உங்களைக் கட்டாயம் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகச் சொன்னாரு.

இந்திரா என்னவோ யோசிக்கிறாள்.

தேவகியம்மா:   நீங்க வர்ற அளவுக்கு உள்ள இடம் இல்லைன்னாலும் பிள்ளைங்க நீங்க வந்தா ரொம்பவும் சந்தோஷப்படுவாங்க!

கோபாலன் நாயர்:    இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? (மனைவியிடம்) நீ முன்னாடி நட.

இந்திராவும் உண்ணியும் கோபாலன் நாயரும் பின்னால் நடக்கிறார்கள். முன்னால் தேவகியம்மா நடந்து போகிறாள். அப்போது கோபாலன் நாயர்:

“ஒவ்வொரு மகர மாசத்திலும் இந்தத் திருவிழா நடக்கும். பெரிய தம்புரான் உயிரோட இருந்த காலத்துல கூட திருவிழா விமரிசையா நடக்கும். கோவிலுக்கு வந்துட்டா, சாப்பாடும் காப்பியும் நம்ம வீட்ல இருந்துதான் வரும். பெரிய தம்புரான் ஒரு வார்த்தை சொன்னா, அதைச் செய்ய நாங்க தயாரா இருப்போம்!”

உண்ணியின் பார்வை ஆலமரத்தின் கிளையில் பறந்து கொண்டிருக்கும் கோவில் கொடி மீது இருக்கிறது.

44

கோபாலன் நாயரின் வீடு. உட்பகுதி. பெண்கள் கூடியிருக்கிறார்கள். வீடு நன்றாகவே இருக்கிறது.

உள்ளே குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கிறது. மூத்த மகள் கருப்பாக... அப்படியொன்றும் அழகில்லை- அவள் நீட்டிய தட்டில் இருந்து வெற்றிலையை எடுத்துப் போடுகிறாள் இந்திரா. தேவகியம்மா, வேறு இரண்டு பெண்கள்.

இந்திரா:   (பெண்ணிடம்) குஞ்ஞிலட்சுமி, கோயிலுக்கு வரலியா? நீ தம்புரானோட ஃப்ரெண்ட் ஆச்சே!

குஞ்ஞிலட்சுமி:  ஒவ்வொரு வருஷமும் அங்கே என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும். அதுனால பேசாம இருந்துட்டேன். வினோதினி வந்திருந்தாளே!

ஒரு புதிய பெயரைக் கேட்ட எண்ணத்தில் இந்திரா.

குஞ்ஞிலட்சுமி:  இந்தி டீச்சரா இருக்கா வினோதினி. படிக்குற காலத்துல நல்லா கதை பிரசங்கம் பண்ணுவா. தம்புரான்தான் எல்லாத்தையும் எழுதித் தருவாரு.

இந்திரா:   (சலித்தவாறு) படிக்குற காலத்துல அவரோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே பெண்கள்தான் போல இருக்கே!

குஞ்ஞிலட்சுமி:  தம்புரான் இங்கே இருந்தப்போ திருவாதிரைக்கு பெண் பிள்ளைகளை மட்டும் வச்சு நாடகம் நடத்துவாரு. (நாணத்துடன்) நான்கூட அதுல நடிச்சிருக்கேன்.

ஒரு பெண்:     அம்மிணியோட புருஷனோட வேலை சம்பந்தமா சொல்லணும்னு நினைச்சேன். பார்த்துக்கிட்டு இருந்த வேலை போயிட்டதால...

இந்திரா:   ராஜேஷ்... குழந்தையை தூரத்துல எங்கேயும் கொண்டு போக வேண்டாம்னு சொல்லுங்க.,

தேவகியம்மா:   (உரத்த குரலில்) மாளுகுட்டி!

இந்திரா:   (ரசிப்பதைப்போல்) காலேஜுக்குப் போன பிறகு நாடகங்கள் இல்லியா?

தேவகியம்மா வாசலை நோக்கி நடந்து வெளியே தலையை நீட்டியவாறு:

“மாளு குட்டி!”

45

வெளியே வைக்கோல் புதருக்கு அருகில் நின்றிருக்கும் உண்ணியும், மாளுகுட்டியும்.

மாளுகுட்டி:     (உரத்த குரலில்) நான் பார்த்துக்குறேன்மா.

உண்ணியும் மாளுகுட்டியும்.

உண்ணி:  இது என்ன?

மாளுகுட்டி:     வைக்கோல். ஆடு, மாடு, கன்னுக்குட்டி எல்லாம் இதைத்தான் தின்னும்.

அவர்கள் வைக்கோல் புதர்களுக்கு நடுவில் நின்றிருக்கிறார்கள். அந்தப் பக்கத்தில் இருக்கும் வயலில் இருந்து வரும் ஒரு இளைஞன் மாளு குட்டியின் அருகில் வந்து நிற்கிறான்.

அவன்:    காலையில் உன்னை கோயில்ல பார்க்கலியே!

மாளுகுட்டி:     இன்னைக்கு இருபத்தெட்டாம் நாளாச்சே! பிறகு... வீட்டுக்கு (உண்ணியைக் காட்டி) இவங்கள்லாம் வந்திருக்காங்க.

இளைஞன்:     சாயங்காலம் எல்லாரும் கோயிலுக்கு வர்றப்போ...

பிறகு அவன் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, என்னவோ சொல்கிறான்.

உண்ணிக்கு ஒன்றுமே புரியவில்லை. மாளுவும் அந்த இளைஞனும் மெதுவான குரலில் என்னவோ பேசுவதைப் பார்த்து, வெறுத்துப்போன உண்ணி நடக்கிறான்.

இடத்தைவிட்டு நகர்ந்த உண்ணியைப் பார்த்து, நிம்மதியடைந்த மாளுகுட்டி:

“அங்கே விளையாடு. தூரத்துல எங்கேயும் போக வேண்டாம். (பிறகு மெதுவான குரலில்) அய்யோ... அதெல்லாம் வேண்டாம்...”

உண்ணி நடக்கிறான்.

46

கோவிலின் அருகில் இருந்த நிலத்தில் அரிஜன குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு உண்ணி நின்றிருக்கிறான்.

சிலர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சில பெண்களும் குழந்தைகளும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பார்த்து நின்றிருப்போர் கூட்டத்தில் நல்ல ஆடையொன்றை அணிந்து பாரு நின்றிருக்கிறாள். நீலியும்தான்.

பாரு அவனை அழைக்கிறாள். அதைப் பார்த்து நீலி அவனை நோக்கி வருகிறாள்.

நீலி தன்னை நோக்கி வருவதைப் பார்த்து உண்ணி திரும்பி நடக்கிறான்.

உண்ணியை நெருங்குகிறாள் நீலி. வேகமாக நடந்ததால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க-

நீலி: உண்ணி தம்புரான், உங்களுக்கு என்மேல கோபமா?

உண்ணி பேசாமல் இருக்கிறான். அவன் மனதில் பலவித சந்தேகங்கள் அலைமோதுகின்றன.

நீலி: என்ன... பேசாம இருக்கீங்க?

உண்ணி:  (முதலில் சந்தேகப்பட்டாலும் பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு) ராத்திரியில ஆடுகளையும், குழந்தைகளையும் ஒடிச்சு நீ கொல்லுவேல்ல?

அவன் முகத்தில் பயம் தெரிகிறது. அதைப் பார்த்து நீலிக்கு விஷயம் புரிகிறது. அவள் மெதுவாக சிரித்தவாறு:

"என்னால ஒரு ஆளைக்கூட கொல்ல முடியாது. ஆனா... யார் இப்படியெல்லாம் உங்களுக்குச் சொன்னது?"

உண்ணி பேசாமல் இருக்கிறான்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel