ஆரூடம் - Page 20
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6956
தந்தையும், மகனும் மட்டும் நின்றிருக்கிறார்கள். உண்ணியைத் திட்டுவதா, அவன் மீது பாசத்தைக் காட்டுவதா என்று தெரியாமல் தர்மசங்கடமான நிலையில் நின்றிருக்கிறான் வர்மா. பிறகு அமைதியை வரவழைத்துக் கொண்டு வர்மா:
"என்னடா செஞ்சே?"
உண்ணி: மம்மி திட்டினப்போ பாரு மருந்தை எடுக்காம ஓடிட்டா. நான்...
வர்மா: ம்...
உண்ணி: நீலிக்கிட்ட மருந்தைக் கொண்டு போய் கொடுத்தேன்.
உண்மையைச் சொன்ன தன்னுடைய மகனையே வைத்த கண் எடுக்காது பார்க்கிறான் வர்மா.
வர்மாவின் முகத்தில் இனம் புரியாத ஒரு பரவசம்.
53
இரவு.
வர்மாவின் படுக்கையறை.
இரட்டைக் கட்டிலில் இந்திரா கண்களை மூடி படுத்திருக்கிறாள். அவள் உறங்குவதைப் போல தோன்றுகிறது.
வர்மா படிப்பதை நிறுத்திவிட்டு விளக்கை அணைத்துவிட்டு எந்தவித ஓசையும் உண்டாக்காமல் இன்னொரு பக்கம் கட்டிலில் படுக்க தொடங்கும்போது, இந்திரா கண்களைத் திறக்கிறாள். பின்னர் எழுந்து உட்காருகிறாள். வர்மாவும் படுத்த இடத்தை விட்டு எழுந்து உட்காருகிறான்.
இந்திரா: எப்போ நாம போறோம்?
வர்மா: ஃப்ளாட்டைத்தான் வித்துட்டோமே! எங்கே போறது?
இந்திரா: நான் கேட்டது லவ்டேல் ஸ்கூல் விஷயத்தை. வேலை எதுவும் இல்லாம பெங்களூர்ல போய் இருக்கணும்னு சொல்ற அளவுக்கு நான் ஒண்ணும் ஸ்டுப்பிட் இல்ல.
வர்மா: போகலாம். ஊட்டிக்கோ குன்னூருக்கோ எங்கே வேணும்னாலும் போகலாம்.
இந்திரா: இதுக்கு மேல இந்த விஷயத்தை இழுத்துக்கிட்டு இருக்குறது அவ்வளவு நல்லதா இருக்காது.
வர்மா: சரி...
இந்திரா: எப்போ?
வர்மா பேசாமல் இருக்கிறான்.
இந்திரா: இது உங்களுக்கு சர்வ சாதாரணமான ஒரு விஷயம்.
உண்ணியின் அறையில் உண்ணி. தாயும் தந்தையும் பேசிக் கொண்டிருப்பதை அவன் கேட்கிறான்.
தாயின் குரல்:
"இங்கே இருக்குற ஆண்கள் அத்தனைப் பேரும் தான்தோன்றித்தனமாகத்தான் வளரணும்னு ஏதாவது சட்டம் இருக்குதா என்ன?"
ஒரே அமைதி.
மீண்டும் இந்திராவின் குரல்.
"என்ன பதில் சொல்லாம இருக்கீங்க?"
தன் தந்தை என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை ஒருவித பயத்துடன் எதிர்பார்த்து இருக்கிறான் உண்ணி.
ஒரே அமைதி.
உண்ணி மெதுவாக கட்டிலை விட்டு இறங்கி வெளியே செல்கிறான்
வெளியே வராந்தாவில் வேலைக்காரி நாணியம்மா உள்ளே நடக்கும் உரையாடலைக் கேட்டவாறு அமர்ந்திருக்கிறாள். அவள் எப்போதும் விடும் குறட்டையை விடவில்லை.
நாணியம்மா பரிதாபம் மேலோங்க உண்ணியைப் பார்க்கிறாள். உண்ணி அவளைப் பார்க்கிறான்.
உண்ணி நாணியம்மாவைக் கடந்து போகிறான்.
உண்ணியின் பார்வையில் - தூரத்தில் வராந்தாவில் இருந்தவாறு வெளியே இருட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் வர்மா.
அவன் மெதுவாக நடந்து சென்று வர்மாவின் அருகில் வருகிறான்.
வர்மா உண்ணியைப் பார்க்கிறான்.
உண்ணி தலை குனிகிறான்.
வர்மா: நீ போய் படு...
உண்ணி தயக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறான்.
வர்மா: போய் படு. குட் நைட்.
உண்ணி: (தாழ்ந்த குரலில்) குட்நைட்.
உண்ணி திரும்பி நடக்கிறான், வெளியே- இருட்டில் மூழ்கிக் கடக்கும் கிராமம். அதைப் பார்த்தவாறு நின்றிருக்கிறான் வர்மா.
54
அருள் தரும் அன்னை மேரியின் சிலை.
குன்னூரிலோ ஊட்டியிலோ இருக்கம் ஒரு புகழ் பெற்ற போர்டிங் ஸ்கூலின் அலுவலகம் அது.
ப்ரின்ஸிபால்: மே ரெண்டாம் தேதி கொண்டு வந்து சேர்த்துடுங்க.
எதிரில் வர்மா, இந்திரா, உண்ணி மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். குளிர்ச்சியான சூழ்நிலைக்கு ஏற்றபடி அவர்கள் ஆடைகள் அணிந்திருக்கிறார்கள். பேப்பர்களை வர்மாவின் முன்னால் நீக்கி வைத்த ப்ரின்ஸிபால் இந்திராவிடம்:
"டோண்ட் ஒர்ரி... வீ வில் டேக் கேர்."
ப்ரின்ஸிபால் இருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கிறார்.
வர்மாவிற்கு கை கொடுக்கிறார். இந்திரா தொழுகிறாள்.
இந்திரா: தாங்க்யூ.
அட்மிஷன் ஃபாரத்தையும், மற்ற பேப்பர்களையும் இந்திரா கையில் எடுக்கிறாள்.
ப்ரின்ஸிபால் உண்ணியின் முதுகை இலேசாகத் தட்டிக் கொடுத்தவாறு:
"விளையாடுறதுக்கு உனக்கு இங்கே நிறைய நண்பர்கள் இருக்காங்க!"
இந்திரா உண்ணியின் கையைப் பிடித்தவாறு மகிழ்ச்சியுடன் வெளியேறுகிறாள். அவளைத் தொடர்ந்து வர்மாவும்.
55
காலை நேரம்.
கிராமத்தின் வயல்களில் இருந்து பனிப்படலம் உயர்ந்து மேலே வருகிறது. வீட்டின் முன்பக்கம். தையல்காரன் உண்ணியின் சீருடைக்கான அளவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறான்.
இந்திராவும் கோபாலன் நாயரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோபாலன்நாயர்: (இந்திராவிடம்) முதல்ல ஒரு செட் துணி கொண்டு வரட்டும். (மெதுவான குரலில்) இருக்குற ஆள்கள்ல இவன் நல்லா தைக்கக் கூடியவன்.
இந்திரா: அப்படியா?
அப்போது சாத்தன் வாசலில் வந்து நிற்கிறான்.
கோபாலன் நாயர்: என்ன சாத்தா?
தையல்காரன் போகிறான்.
சாத்தன் அருகில் வந்து தயக்கத்துடன்:
"தம்புரான் இருக்காரா?"
கோபாலன் நாயர்: உள்ளே ஏதோ படிச்சிக்கிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்.
இந்திரா: என்ன விஷயம்?
சாத்தன் சொல்லத் தயங்குகிறான். பிறகு ஏதாவது சொல்லாமல் இரந்தால் தப்பாயிற்றே என்ற எண்ணத்துடன்.
"தேனாளூர்ல பெரிய ஒரு டாக்டர் இருக்காராம். அவரைக் கூட்டிட்டு வந்தா நிச்சயம் குணமாகும்னு எல்லாரும் சொல்றாங்க. நீலி தலையை அசைக்க முடியாம படுத்த படுக்கையா கெடக்கா!"
இந்திரா: (கடுமையான குரலில்- அதே சமயம் மெதுவாக) இந்த விஷயத்துக்கும் தம்புரானுக்கும் என்ன சம்பந்தம்?
சாத்தன்: அவ ஒண்ணுமே செய்ய வேண்டாம்னுதான் சொல்றா. (மடியில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவிழ்த்து ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியை திண்ணையில் வைத்தவாறு) இதை இங்கே வச்சிக்கிட்டு ஒரு ஐம்பது ரூபா தந்தா... மகளோட கழுத்துல கிடந்தது இது. இதை வச்சு டாக்டருக்குக் கொடுத்தோமேன்னு ஒரு மன திருப்தியாவது இருக்கும்.
அப்போது வர்மா வெளியே நடக்கும் உரையாடலைக் கேட்டு வருகிறான்.
இந்திரா: (கோபாலன் நாயரிடம்) இதுக்கு முன்னாடி பொருட்களை அடமானமா வாங்கிப் பணம் தர்ற பழக்கம் இங்கே இருந்துச்சா என்ன? (சாத்தனிடம்) இங்கே இதை வைக்க வேண்டாம். வேற எங்கேயாவது கொண்டு போய் வச்சுக்கோ. ஒரு தடவை கொடுக்க ஆரம்பிச்சா பிறகு வரிசையா ஆளுங்க வந்து நின்னுடுவாங்க.
உண்ணியின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகள். சாத்தன் திண்ணையில் வைத்த பொட்டலத்தை எடுத்துக் கொண்டு ஒன்றுமே பேசாமல் திரும்பி நடக்கிறான்.
இந்திரா உள்ளே போகிறாள். கோபாலன் நாயர் என்னவோ சொல்ல வாயெடுத்து, ஒன்றுமே கூறாமல் கிளம்புகிறார். உண்ணி ஒரு பிஞ்சு மாங்காயைத் தின்றவாறு தன் தந்தையைப் பார்த்தவாறு நின்றிருக்கிறான்.
வர்மா செருப்புகளை எடுத்து காலில் அணிந்தவாறு புறப்பட, உண்ணி:
"நானும் வர்றேன்பா"
வர்மா: வேண்டாம். நான் ஒரு நடை நடந்துட்டு சீக்கிரம் வந்திடுவேன்.