ஆரூடம் - Page 23
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6956
வர்மா: எல்லாத்தையும் சொல்றதுனால இன்னொரு உண்மையையும் சொல்றேன். ஆச்சரியப்படக்கூடாது.
இந்திரா: ஆச்சரியப்படல. நடுங்கல. சொல்லுங்க.
வர்மா: கன்னா பின்னான்னு கட்டுப்பாடு இல்லாம போய்க்கிட்டு இருந்த வாழ்க்கையை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர ஒருநாள் நான் நினைச்சேன். கல்யாணம் செஞ்சிக்கிறேன்னு அப்பாக்கிட்ட நான் சொன்னேன். வீ காட் மேரிட். பிறகு(யோசனை செய்து) மனதிற்குள்... உண்டான காதல்... (பிறகு நிறுத்துகிறார்) சரிதான்... அந்தக் காதல்ன்றது என் மனசுல பூத்தது ஒரேமுறைதான்...
இந்திரா அதிர்ந்து போய் நிற்கிறாள். கிண்டலான குரலில்:
"ஒருமுறை தான் காதல்ன்ற ஒண்ணு பூத்ததா?"
வர்மா: (சிரிக்க முயற்சி செய்து- பழைய ஞாபகம் ஒன்றை இறக்கி வைப்பதைப் போல) அவளுடைய சிரிப்பு. வார்த்தைகளில் இருக்கும் கிராம மணம் கொண்ட சங்கீதம், நூறு பேர் இருக்குற கூட்டத்துல இருந்தாலும் தனியா தெரியிற அவளோட அழகு...
விருப்பப்படி வர்மா வர்ணித்துக் கொண்டு போக இந்திராவின் முகத்தில் கோபமும் பொறுமையின்மையும் அதிகரிக்கிறது. அவளையே பார்த்தவாறு-
வர்மா: தாமதமா வந்த காதல். அவளை நான் இழந்துடக் கூடாதுன்ற எண்ணம் என் மனசுல எப்பவும் உண்டு. உனக்கு அவளை நல்லாவே தெரியும்.
இந்திரா: யார் அவ? ப்ளடி பி...
இந்திரா கோபத்தில் திட்ட ஆரம்பிக்க, அதைத் தடுத்து-
வர்மா: ம்... திட்டாதே. நீயே இப்போ அவளைப் பார்த்தேன்னு வச்சுக்கோ, உன்னாலயே அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அவ அந்த அளவுக்கு மாறிப் போயிட்டா. அவளோட தோற்றம் மாறிடுச்சு... வாழ்க்கையைப் பார்க்குற விதம் மாறிடுச்சு... அவளை உனக்குத் தெரியாதா? பதினாலு வருஷத்துக்கு முன்னாடி என் மணப்பெண்ணா என்னோட பெரிய அக்கா வீட்டுக்கு விருந்துக்கு வந்த நீதான் அவ. அந்த இந்திரா!
இந்திரா அதைக் கேட்டு நிலைகுலைந்து போகிறாள். தாங்க முடியாமல் வர்மாவின் உடல் மேல் சாய்ந்து தலையை அவன் மீது வைக்கிறாள். தேம்பித் தேம்பி அழுகிறாள்.
வர்மா அவளைத் தேற்றும் விதத்தில் முதுகில் தட்டி-
வர்மா: இட் ஈஸ் ஆல் ரைட். டேக் இட் ஈஸி. காதல் தவிர வேற சில உணர்வுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உண்டு. அபிமானம், மரியாதை, நட்பு, வெறும் பழக்கம்... அதை நீ மறந்துடக்கூடாது, கண்ணு.
இந்திரா முணுமுணுக்கிறாள்:
"ஐ ஆம் ஸாரி. ஐ ஆம் ஸாரி."
இந்திரா வர்மாவின் தலையைக் கோதுகிறாள். அவன் அவளின் தலையைத் தடவி தேற்றுகிறான்.
60
இரவு. நேரம் அதிகமாகி இருக்கிறது.
உறங்கிக் கொண்டிருந்த உண்ணி ஏதோ அரவம் கேட்டு கண்களைத் திறக்கிறான். அப்போது தன் கட்டிலின் அருகில் வந்து நிற்கும் தன் தந்தையை அவன் பார்க்கிறான். தூக்கக் கலக்கத்துடன் அவன் எழ முயல, வர்மா கட்டிலில் உட்காருகிறான்.
வர்மா: தூங்கு... தூங்கு...
பகலில் நடந்த சம்பவங்களின் நினைவுகள் அப்போதும் உண்ணியின் மனதில் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.
உண்ணி: நான் இனிமேல் அப்படி நடக்க மாட்டேன் அப்பா... நீலியோட வீட்டுக்குப் போகமாட்டேன்.
அவனை அன்புடன் தடவியவாறு-
வர்மா: தூங்கு...
உண்ணி: தாழ்ந்த ஜாதிக்காரங்களோட நாம பேசக்கூடாது. இல்லையா அப்பா?
வர்மா: அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. அந்தக் காலத்துல யாரோ சில முட்டாள்தனங்களைச் சொல்லி இருக்காங்க.
உண்ணி: (சந்தேகம் நீங்காமல்) நாம எப்படி தம்புரான்மாரா ஆனோம்?
வர்மா: (இலேசாக சிரித்தபடி) அந்தக் காலத்துல கடவுளுக்கு சில பைத்தியக்காரத்தனமான... கடவுளுக்கோ வேற சிலருக்கோ...
உண்ணி பிறகும் சிந்திப்பதைப் பார்த்து:
வர்மா: உறங்கு... நேரம் அதிகமாயிருச்சுல்ல?
உண்ணி கண்களை மூடுகிறான். அவனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. அவனின் முகத்தில் இலேசாக புன்னகை மலர்ந்திருக்கிறது.
அந்த முகத்தில் ஒரு உதயத்தின் பிரதிபலிப்பு.
61
அதிகாலை நேரம்.
தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் துடைத்தவாறு வீட்டின் முன் வந்து நிற்கும் உண்ணியின் கண்களில் அங்கு கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருக்கும் சாத்தன் படுகிறான்.
வாசலில் கோபாலன் நாயர், இந்திரா, வர்மா.
யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறார்கள். அவன் எல்லோரையும் பார்க்கிறான். ஒரு வித பரபரப்புடன் வராந்தாவில் நடக்கிறான்.
கொஞ்சம் தாண்டி நாணியம்மாவும் அமைதியாக நின்றிருக்கிறாள்.
உண்ணி: (அருகில் சென்று) என்ன நாணியம்மா?
நாணியம்மா: அவ இறந்துட்டா... பாவம்... நீலி...
உண்ணியால் நம்பவே முடியவில்லை.
அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது.
62
மீண்டும் வாசல் பகுதி.
உண்ணி மீண்டும் வாசல் பகுதிக்கு வந்து தன் தந்தையின் அருகில் நிற்கிறான்.
சாத்தன்: அவளோட அப்பா, அப்பாவோட அப்பா எல்லாரையும் இங்க உள்ள நிலத்துலதான் புதைச்சிருக்கு. அதே மாதிரி இவளையும் புதைக்க (சந்தேகத்துடன்)... நீங்க சம்மதிப்பீங்களா?
கோபாலன் நாயர்: (இந்திராவிடம்) என்ன செய்யலாம்?
இந்திரா பேசாமல் இருக்கிறாள்.
எல்லோரும் அமைதியாக இருக்கின்றனர்.
இந்திரா: எங்கே புதைச்சாலும் அதைப் பற்றி எனக்கு பிரச்னையில்லை.
அதுவரை அமைதியாக இருந்த வர்மா:
"சாத்தா... வேற நிலம் எதுலயாவது கொண்டு போய் புதை. இங்கே வேண்டாம்."
சொல்லிவிட்டு வர்மா உள்ளே போகிறான். உண்ணி தன் தாயின் அருகில் வந்து நிற்கிறான். சாத்தன் கிளம்புவதைப் பார்த்து-
இந்திரா: சாத்தா... கொஞ்சம் நில்லு.
பிறகு கோபாலன் நாயரிடம் மெதுவான குரலில்:
"செத்துப் போனா இவங்களுக்கு நாம ஏதாவது தர வேண்டியதிருக்குமே!"
கோபாலன் நாயர்: ரெண்டு கோடி முண்டு... ஒரு மரக்கால் நெல்லு... இதெல்லாம் ஒரு பழைய கணக்கு.
இந்திரா: என்ன வேணுமோ கொடுத்துட வேண்டியதுதான். இந்த விஷயத்துல நாம கஞ்சத்தனம் பார்க்க வேண்டாம்.
கோபாலன் நாயர் ஒரு நீண்ட பெருமூச்சு விடுகிறார். ஒரு இலேசான சிரிப்புடன், பழைய ஏதோ ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்த்து-
கோபாலன் நாயர்: சின்னப் பிள்ளையா இருக்குறப்போ அவளைப் பார்க்கணுமே! புலையப் பொண்ணுன்னு யாருமே சொல்ல முடியாது. கிரக நிலை அவளுக்கு எங்கேயோ தவறிடுச்சு. இல்லாட்டி அவ இப்போ இருக்க வேண்டிய இடம்...
அவர் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொள்கிறார். இந்திரா தலை குனிந்து நின்றிருக்கிறாள்.
கோபாலன்நாயர்: கொடுக்க வேண்டியதை நான் கொடுத்துர்றேன். தாசப்பனை தேவையில்லாம கஷ்டப்படுத்த வேண்டாம். அவர் வெளியே காட்டிக்கலைன்னாலும், மனசுக்குள்ள நிச்சயமா...
சொல்ல வந்ததைச் சொல்லாமல் நிறுத்துகிறார்.
கோபாலன் நாயர் வெளியே செல்வதைப் பார்த்த உண்ணி:
"யாரு இறந்துட்டதும்மா?"
இந்திரா பதில் பேசாமல் இருக்கிறாள்.