ஆரூடம் - Page 18
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6956
நீலி: (வருத்தம் கலந்த குரலில்) ஒரு கோழியை யாராவது கொன்னாங்கன்னா அதைப் பார்த்து நிக்கிறதுக்குக்கூட என் மனசுல தெம்பு கிடையாது. எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கும்... (யாரிடம் என்றில்லாமல்) யார்தான் இப்படியெல்லாம் சொல்லித் திரியிறாங்களோ தெரியல... அட கடவுளே!
நீலி வருத்தப்பட்டு பேசுவதைப் பார்த்து உண்ணியின் மனதில் உண்டாகும் மாற்றம்.
உண்ணி நீலியைப் பார்த்து புன்னகைக்கிறான்.
நீலி: என்னைப் பார்த்து பயமா?
உண்ணி புன்னகைத்தவாறு 'இல்லை' என்று தலையை ஆட்டுகிறான்.
நீலி உண்ணியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறான்.
ஆண்களும் பெண்களும் சேர்ந்து முடியை விரித்துப் போட்டு ஆடுகிறார்கள். அந்த இடமே பாட்டும், கொட்டும், நடனமுமாக இருக்கிறது. நீலியுடன் சேர்ந்து உண்ணியும் அதைப் பார்த்து ரசிக்கிறான்.
அந்த ஆட்டத்தின் முடிவில் உண்ணியின் தோள் மீது ஒருகை வந்து விழுகிறது. அந்தக் கைக்கு சொந்தக்காரர் கோபாலன் நாயர். உண்ணி கையைத் தட்டிவிட்டு பின்னால் திரும்பிப் பார்க்கும்போது, பின்னால் கோபாலன் நாயர் நின்றிருக்கிறார். சிறிது தூரத்தில் கோபத்துடன் நின்றிருக்கிறாள் இந்திரா.
47
சாப்பாட்டு மேஜை முன் இந்திரா அமர்ந்திருக்கிறாள். மேஜையில் சப்பாத்தியும், மற்ற உணவு அயிட்டங்களும் இருக்கின்றன. வர்மாவிற்காக வைத்த தட்டை எடுத்து வைக்கும்போது வர்மா வந்து அமர்கிறான். இரண்டு பேருக்கு மட்டுமே தட்டுகள் இருக்கின்றன. வர்மாவின் தட்டில் பரிமாறும்போது-
வர்மா: உண்ணியை எங்கே?
இந்திரா: அவனுக்கு சாப்பாடு வேண்டாமாம். இனி வேணும்னு வந்தாக்கூட தரக்கூடாதுன்னு நாணியம்மாக்கிட்டே நான் சொல்லி இருக்கேன். ஒருநாள் அவன் பட்டினி கிடக்கட்டும்.
வர்மா: பட்டினி போடுறதுதான் தண்டனையா?
இந்திரா: (கோபத்துடன்) அப்படின்னா விஞ்ஞான ரீதியா தண்டிக்கத் தெரிஞ்சவங்க தண்டிக்கலாம். எவ்வளவு சொன்னாலும் அவன் கேக்குறதா இல்ல. அடி, உதை கொடுத்தாலும் பிரயோஜனமில்ல. பிள்ளைங்கன்னா இப்படியா இருப்பாங்க? பட்டினி கிடந்தாத்தான் புத்தி வரும்.
வர்மா: (அமைதியான குரலில்) தேவையில்லாம விளையாடாதே. அவனைச் சாப்பிட கூப்பிடு.
இந்திரா: நோ!
வர்மா: (சமையலறைப் பக்கம் திரும்பி) நாணியம்மா... உண்ணி படுத்திருந்தா...
இந்திரா: (இடையில் புகுந்து) நோ... யூ டோண்ட் இன்ட்ர்ஃபியர்!வர்மா சாப்பிடுவதை நிறுத்துகிறான். பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சாப்பாட்டைத் தொடர்கிறான்.
ஒரே நிசப்தம்.
பெயருக்கு ஏதோ சாப்பிட்டோம் என்ற உணர்வுடன் வர்மா எழுந்து கையைக் கழுவுகிறான்.
48
கடிகாரம் அடிக்கும் சத்தம். படித்துக் கொண்டிருக்கும் வர்மா நேரத்தைப் பார்க்கிறான். மணி பதினொன்றாகிறது. அவன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து நிற்கிறான். பிறகு என்னவோ யோசனையுடன் வெளியே வருகிறான்.
சமையலறை இருட்டில் மூடிக் கிடக்கிறது.
ஒரு ஸ்விட்சைப் போட, இலேசான வெளிச்சம் பரவுகிறது- சமையலறைக்குள். வர்மாதான் ஸ்விட்சைப் போடுகிறான். அவன் சமையலறைக்குள் மூடி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களைத் திறந்து பார்க்கிறான். பிறகு ஒரு தட்டை எடுக்கிறான். உணவை அதில் பரிமாறுகிறான். பரிமாறப்பட்ட தட்டுடன் வெளியே வருகிறான்.
உறங்கிக் கொண்டிருக்கும் உண்ணி கண்களைத் திறக்கிறான்.
"உண்ணி!"
வர்மா தட்டுடன் மங்கலான வெளிச்சத்தில் கட்டிலுக்குப் பக்கத்தில் நின்றிருப்பதைப் பார்த்த உண்ணி எழுந்து உட்காருகிறான்.
வர்மா: பசிக்குதுல்ல?
உண்ணி: ம்...
அவனிடம் வர்மா தட்டை நீட்டுகிறான்.
வர்மா: சாப்பிடு...
உண்ணி: நீலி கழுத்தை ஒடிச்சி கொல்ல மாட்டாள்ல அப்பா?
வர்மா: முதல்ல நீ சாப்பிட்டுட்டு தூங்கு...
உண்ணி தன் தந்தை நீட்டும் தட்டை வாங்குகிறான்.
அவன் சாப்பிடத் தொடங்கும்போது, வர்மா அறையை விட்டு வெளியேறுகிறான்.
உண்ணியின் அறையை விட்டு வெளியே வந்த வர்மா குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் வேலைக்காரியைக் கடந்து வாசலுக்கு வருகிறபோது, படுக்கையறை வாசலில் இந்திரா நின்றிருக்கிறாள். அவள் ஏதாவது சொல்வாள் என்று எண்ணத்துடன் வர்மா நிற்கிறான்.
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
வர்மா: உண்ணிக்கு நான் சாப்பாடு கொடுத்தேன்.
பெரிய ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கிறான் வர்மா.
இந்திரா: தூங்குறதுக்கு முன்னாடியே அவனுக்கு சாப்பாடு கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, என்னை மறந்து தூங்கிட்டேன்...
எதுவுமே பேசாமல் அமைதியாக இருவரும் நின்றிருக்கின்றனர்.
இந்திரா: தூங்கலியா?
வர்மா: தூக்கம் வரல. இன்னும் கொஞ்ச நேரம் படிச்சிட்டு இருக்கேன்.
அவன் படிக்கும் அறைக்கு நேராக நடந்தபோது, இந்திரா என்னவோ சிந்தித்தவாறு நிற்கிறாள்.
சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்திராவின் முகம்.
49
பகல் நேரம்.
கேட்டுக்கு அருகில் ஒரு வேலைக்காரன்.
(அந்த ஆள் கோபாலன் நாயரின் உதவியாளர். ஸ்டேஷனில் இருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு வந்த ஆள்.)
செடிகளை நடும் வேலையில் அவன் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான். அவன் வேலை செய்வதையே பார்த்தவாறு நின்றிருந்த உண்ணி வெளியே செல்ல முயலும்போது-
வேலையாள் : வெளியே போகக்கூடாது. வெளியே போனா கூப்பிடணும்னு தம்புராட்டி சொல்லியிருக்காங்க. கூப்பிடட்டா?
அதைக்கேட்டு உண்ணிக்கு எரிச்சல் உண்டாகிறது. இருந்தாலும் கஷ்டப்பட்டு அதை அடக்கிக்கொண்டு, திரும்பவும் வீட்டை நோக்கி நடக்கிறான்.
சமையலறைப் பக்கம் போய் நிற்கிறான் உண்ணி. நாணியம்மா சமையலறையில் உரலில் எதையோ போட்டு இடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் தன்னை கவனிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு பின்னால் இருக்கும் சிறிய படியை நோக்கி உண்ணி நடக்கிறான்.
படியை அடைந்தபோது, நாணியம்மாவின் குரல்:
"எங்கே போறீங்க?"
உண்ணி நிற்கிறான்.
நாணியம்மா: வெளியே போகாம பார்க்கணும்னு என்கிட்ட அம்மா சொல்லியிருக்காங்க. தேவையில்லாம நான் திட்டு வாங்கணுமா? பேசாம உள்ளே போயி விளையாடுங்க.
உண்ணி சமையலறையை நோக்கி விரக்தியுடன் நடந்து வருகிறான்.
உண்ணி சமையலறை வாசலில் நிற்கிறான். ஒரு கல்லை எடுத்து தூரத்தில் இருக்கும் படியை நோக்கி எறிகிறான்.
அப்போது படியைக் கடந்து பாரு வருகிறாள். பாருவின் ஒரு கையில் முருங்கை இலை இருக்கிறது. இன்னொரு கையில் ஆயுர்வேத மருந்து அடங்கிய குப்பியொன்று இருக்கிறது. முருங்கை இலையைத் திண்ணையில் வைத்தவுடன் நாணியம்மாவுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.
நாணியம்மா: பெரிய உதவியாப் போச்சுடா, கண்ணு. ரெண்டு நேரமும் பூசணிக்காயையும் வெள்ளரிக்காயையும் வச்சு வச்சு எனக்கே என்னவோ மாதிரி ஆயிடுச்சு. சாத்தனுக்குத் தெரியும். முருங்கை இலைன்னா தம்புரானுக்கு ரொம்பவும் பிடிக்கும்னு.
முருங்கை இலையைக் கையில் எடுத்தவாறு பாருவிடம்:
"இதென்னடி குப்பியில?"
பாரு: மருந்து...
நாணியம்மா: யாருக்கு?
பாரு: நீலி அக்காவுக்கு காய்ச்சல்... வாந்தி வேற எடுக்குறாங்க. மூச்சுவிடவே கஷ்டப்படுறாங்க.