ஆரூடம் - Page 22
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6956
புன்னகைக்க முயற்சித்து, அவனின் ஒரு கையைப் பிடித்தவாறு:
"காய்ச்சல்னால என் தலைக்கு என்னமோ மாதிரி இருக்கு. நல்லது நடக்கட்டும்ன்ற எண்ணத்துலதான் நான் எல்லாத்தையும் சொன்னேன்.(அவனின் கையைவிட்டு, கண்களை மூடிக்கொண்டு) போங்க உண்ணி தம்புரான், சீக்கிரமா இங்கேயிருந்து போங்க..."
உண்ணி அவளை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்தவாறு வெளியே செல்கிறான். ஒரு கனவில் நடப்பதைப் போல அவன் நடக்கிறான்.
58
வீடு.
மாலை நேரம்.
முன்பக்கத்தில் ஒரு சண்டை நடந்து முடிந்திருப்பதைப் போல கனமான அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. வர்மாவும் இந்திராவும் அமர்ந்திருக்கிறார்கள்.
நீலியின் வீட்டை விட்டு புறப்பட்ட உண்ணி அதே பதைபதைப்பு கொண்ட மனதுடன் மெதுவாக நடந்து வந்து வெளி வாசலைக் கடந்து வருகிறான். பாருவுடன் கட்டிப் பிடித்து உருண்டபோது உடம்பில் ஒட்டிய மண் அப்படியே இருக்கிறது. நடந்ததில் அவன் வியர்வையில் நனைந்திருக்கிறான்.
வாசலில் நுழைந்த பிறகுதான் அவனுக்கு சுயசிந்தனையே உண்டாகிறது. தந்தையையும் தாயையும் பார்க்கிறான். அவர்களைப் பார்த்து அவன் நிற்கிறான்.
இந்திரா உண்ணியை கோபத்துடன் பார்த்தவாறு, தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கிறாள்.
உண்ணி தன் தந்தையைப் பார்த்தவாறு உள்ளே போக முயற்சிக்கும்போது-
வர்மா: உண்ணி, நில்லுடா...
உண்ணி தன் தந்தையின் குரலைக் கேட்டு நிற்கிறான்.
வர்மா: நீ எங்கே போயிருந்தே?
உண்ணி சொல்ல தயங்குகிறான்.
வர்மா: நான் கேக்குறேன்ல? எங்கே போயிருந்தே?
உண்ணி: (எச்சிலை விழுங்கியவாறு) நீலிக்கு உடம்பு சரியில்லை... நான்...
வர்மா திடீரென்று எழுந்து உண்ணியை அடிக்கிறான்:
"நீலிக்கு உடம்புக்கு சரியில்லைன்னா, அதை விசாரிக்கிறதுக்கு நீ யாருடா?"
தொடர்ந்து பைத்தியம் பிடித்தவனைப் போல உண்ணியை இப்படியும் அப்படியுமாய் அடிக்கிறான் வர்மா.
தன் கணவன் உண்ணியை ஆரம்பத்தில் அடிக்கும்போது கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்த இந்திரா, எல்லையை மீறி அவனுடைய கோபம் போவதைப் பார்த்ததும் இடையில் புகுந்து, உண்ணியைக் கைகளால் தள்ளி நிறுத்தி:
"விடுங்க... விடுங்க... விடுங்க அவனை!"
உண்ணியிடம் வர்மா: (மூச்சுவிட்டவாறு) நான் உனக்கு பாடம் சொல்லித் தர்றேன். உன்னை தொலைச்சி கட்டுறேன்.
இந்திரா வர்மாவின் கோபத்திலிருந்து உண்ணியைக் காப்பாற்றி உள்ளே கொண்டு போகிறாள்.
உண்ணியின் தேம்பல் சத்தம் வர்மாவின் முகத்தில்.
59
இரவு நேரம்.
உண்ணியின் அறை. வர்மா கொடுத்த அடிகள் உண்டாக்கிய வேதனையை விட கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அவன் காட்டிய கோபம் தான் உண்ணியை மிகவும் கவலைப்படச் செய்கிறது. கட்டிலில் கவிழ்ந்து படுத்தவாறு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான் அவன்.
அப்போது இந்திரா அங்கு வருகிறாள். கட்டிலில் அவனுக்கு அருகில் அமர்ந்து அவனை மெதுவாக அவள் தடவுகிறாள்.
இந்திரா: கால்களையும் முகத்தையும் முதல்ல கழுவிட்டு வா. ஏதாவது சாப்பிட வேண்டாமா? பசிக்கலியா?
உண்ணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான்.
இந்திரா: பரவாயில்ல... (தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைப் போல)... உனக்கு அடி விழுந்ததுக்கு நான் கூட காரணமா இருக்கலாம்.
உண்ணியை எப்படி சமாதானப்படுத்துவது என்றே இந்திராவுக்குத் தெரியவில்லை. மீண்டும் அவனின் தலையையும் உடம்பையும் அவள் தடவுகிறாள். உண்ணியின் தேம்பல் சத்தம் நிற்கிறது. அவன் மிகவும் களைத்துப் போய் அமைதியாக உறங்குகிறான்.
சாப்பாட்டு அறையில் மூன்று பேருக்கும் தட்டுகளும், மூடி வைக்கப்பட்ட பாத்திரங்களும் சாப்பாட்டு அயிட்டங்களும் இருக்கின்றன.
நாணியம்மா அவர்களுக்காகக் காத்திருக்க, வர்மா வருகிறான்.
நாணியம்மா சமையலறைக்குள் செல்கிறாள்.
வர்மா தன்னுடைய இடத்தில் வந்து அமர்கிறான். சிறிது நேரம் இந்திராவும் உண்ணியும் வருவார்கள் என்று காத்திருக்கிறான். தன்னுடைய தட்டை எடுத்து வைத்து தானே பரிமாறி சாப்பிட நினைக்கிறான். பிறகு என்ன நினைத்தானோ வேண்டாமென்று எண்ணி எழுந்து வெளியே போகிறான். அவன் மனம் நிலை இல்லாமல் தவிக்கிறது.
உண்ணியின் அறைக்கு வெளியே வர்மா நின்றிருக்கிறான். உண்ணி உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அருகில் உண்ணியின் உடம்பின் மீது கையை வைத்து படுத்திருக்கும் இந்திரா தலையை உயர்த்தி பார்க்கிறாள். ஒரு நிமிடம் அவர்களின் கண்கள் சந்திக்கின்றன.
வர்மா நடக்கிறான்.
வர்மா பால்கனியில் புத்தகங்கள் சிதறிக் கிடக்கும் டீப்பாயின் அருகில் அமர்கிறான்.
வெளியே எங்கோ தூரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் வர்மாவை நோக்கி வருகிறாள் இந்திரா.
சிறிது நேரம் ஒரே நிசப்தம்.
இந்திரா: சாப்பிடலையா?
வர்மா: ம்... வேண்டாம்.
இந்திரா: ம்...
வர்மா பேசாமல் இருக்கிறான். அமைதி அவர்கள் இருவருக்குமிடையே ஒரு சுவரைப் போல எழுந்து நிற்கிறது.
இந்திரா லேசாக தேம்ப ஆரம்பிக்கிறாள்.
வர்மா: (அதைக் கேட்டு)ம்... உனக்கு என்ன ஆச்சு?
ஒரு நிமிடத்திற்குப் பிறகு வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு-
இந்திரா: என்ன ஆச்சு? அதுதான் எனக்கே தெரியல...
வர்மா பேசாமல் இருக்கிறான்.
வர்மா: என்கிட்ட எந்த மாற்றமும் இல்ல. எப்பவும் நானாக இருக்கவே முயற்சிக்கிறேன். சில நேரங்கள்ல தோற்றும் போகிறேன்.
இந்திரா: நான் உங்களை விட்டு ஒழிஞ்சா போதும்னு நினைச்சுத்தான் நீங்க பார்த்துக்கிட்டு இருந்த வேலையையே வேண்டாம்னு சொல்லிட்டு இங்க ஓடி வந்ததே. சொல்லுங்க... நான் எங்கே போறது?
வர்மா: (சிரிக்க முயற்சித்து தோல்வியடைந்து) யாரும் எங்கேயும் ஓடி ஒளிஞ்சிக்க முடியாது. உண்மையாகவே தப்பிச்சுப் போறதுன்னா, மனிதன் ஓடி ஓடி தன்னோட தாயின் கர்ப்பப் பைக்குள்ளதான் போயி ஒளிஞ்சிக்கணும். ஆனா, அதுதான் யாராலயும் முடியாதே!
இந்திரா: எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்... இன்னொருத்தியைப் பற்றி நான் கேள்விப்படுறப்போ எனக்கு என்ன தோணும்?
வர்மா இந்திராவின் மனதிற்குள் என்ன ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அருகில் வருகிறான்.
வர்மா: சின்ன வயசுல ஒரு காதல் கதையாவது இல்லாத ஒரு ஆணோ பெண்ணோ இந்த உலகத்துல இருக்காங்களா? உண்மையைச் சொல்றதுக்கு தைரியமா இருக்குறவங்க மனம் திறந்து இல்லைன்னு சொல்லட்டும்.
இந்திரா: நான் அதைப் பற்றி ஒண்ணும் சொல்லலியே! பெங்களூர்ல இருக்குறப்போ உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டது என்ன? இங்கே வந்தப்புறம் நான் கேள்விப்படுறது என்ன?
வர்மா: நான் ஒண்ணும் யோக்கியன் இல்ல. உலகத்துக்கே சவால் விடுற மாதிரி ஒரு புரட்சிகரமான திருமணத்தைச் செய்றதுக்கு திட்டம் போட்டவன் நான்.
இந்திராவின் முக பாவனை.
வர்மா: அதையெல்லாம் எப்பவோ மறந்துட்டேன். இப்போ சில வருஷங்களாகவே தேவையில்லாம எந்தப் பிரச்னையும் என்மேல வந்து ஒட்டிக்காம நான் பார்த்துக்குறேன். இதுதான் உண்மை.
இந்திரா அமைதியாக இருக்கிறாள்.