ஆரூடம் - Page 15
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6956
அவள் அடுத்த நிமிடம் தலையைக் கவிழ்த்தவாறு நடக்கிறாள். கை வண்டியை நெருங்குகிறாள்.
கிராமத்துப் பாதையில் நகரத்தில் இருந்து கொண்டு வரப்படும் வீட்டுப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிக்கு, கைவண்டி இடம் ஒதுக்கித் தருகிறது. நீலியும் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறாள்.
உண்ணி லாரி சத்தத்தைக் கேட்கிறான்.
லாரி படியின் அருகில் வந்து நின்றபோது, உண்ணி அதற்கு அருகில் வந்து நிற்கிறான். சிரமப்பட்டு உள்ளே வந்து நிற்கும் லாரியின் அருகில் வந்து-
கோபாலன் நாயர்: அங்கேயே நிக்கட்டும். சாமான்களை ஒவ்வொண்ணா பார்த்து இறக்கணும். எல்லாம் விலைகூடிய சாமான்கள்.
அப்போது இந்திரா அங்கே வருகிறாள்.
லாரியில் இருந்து இந்திரா, கோபாலன் நாயர், வேலைக்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பொருட்களை இறக்குகிறார்கள். வீட்டின் மேல் நின்றவாறு வர்மா அதைப் பார்க்கிறான்.
கீழே நின்றவாறு உரத்த குரலில் உண்ணி கேட்கிறான்:
“அப்பா... லிஸ்ட் எங்கே இருக்குன்னு அம்மா கேக்குறாங்க...”
வர்மா அதற்கு பதில் எதுவும் கூறாமல் இருக்கிறான். என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் வர்மாவின் முகம்...
38
இரவு நேரம். வாசலில் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து படித்துக் கொண்டிருக்கிறான் வர்மா. இந்திரா அப்போது அருகில் வந்து நிற்பது தெரிகிறது. எனினும், அதைப் பார்க்காதது மாதிரி தான் படித்துக் கொண்டிருப்பதை அவன் தொடர்கிறான்.
இந்திரா: ஃப்ரிட்ஜ் வேலை செய்யல. லாரியில கொண்டு வர்றப்போ இங்கயும் அங்கயும் மோதி ஏதாவது ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். இல்லாட்டி இங்கே ஏதாவது கரன்ட்ல பிரச்னையோ என்னவோ?
வர்மா: ம்...
இந்திரா: (இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு நிமிடம் யோசித்து) ஊட்டியில இருக்குற ஸ்கூலுக்கு கடிதம் எழுதினீங்களா?
வர்மா: (வாசிப்பதை நிறுத்தாமலே) எழுதலாம்...
இந்திரா: இந்தக் காட்டுக்குள்ள அவன் நடந்து திரிஞ்சான்னா மொத்தத்துல அவனோட படிப்பு ஒண்ணும் இல்லாமப் போயிடும். அதுனாலதான் நான் திரும்பத் திரும்ப அதையே கேக்குறேன்.
வர்மா புத்தகம் படிப்பதை நிறுத்துகிறான். புத்தகத்தை மூடிவிட்டு என்னவோ சிந்தனையில் மூழ்குகிறான். வாசலுக்கு வெளியே உண்ணி வந்து நிற்பதைப் பார்த்து இந்திரா:
“வாட் யூ வாண்ட்? கோ அண்ட் ஸ்லீப்...”
உண்ணி உள்ளே செல்கிறான்.
தன்னுடைய படிப்பு விஷயமாகப் பேசுகிறார்களே என்று உண்ணி அறைக்குள் நின்றவாறு அவர்கள் பேசுவதைக் கேட்கிறான்.
வர்மா: வேணும்னா இங்க இருக்குற ஸ்கூல்ல சேர்த்திடுவோம்.
இந்திரா: (அதைக் கொஞ்சமும் விரும்பாமல்) இங்க இருக்குற ஸ்கூல்லயா? என்ன பேச்சு பேசுறீங்க?
வர்மா: நான் படிச்சது இங்கதான். இங்கிலீஷ்ல எக்ஸ்ட்ரா கோச்சிங் கொடுக்குறதுக்கு ரிட்டயர்ட் ஹெட்மாஸ்டர் சங்கரய்யர் இருக்கார். குட்டிராமன் மாஸ்டரை கூப்பிட்டு சமஸ்கிருதம் சொல்லித் தரச் சொல்லலாம்.
இந்திரா அதைக்கேட்டு பயங்கரமான கோபத்திற்கு ஆளாகிறாள். வர்மாவோ, அமைதியே வடிவமாக உட்கார்ந்திருக்கிறான்.
இந்திரா: சங்கரய்யர், குட்டிராமன்... டோண்ட் பி ஸில்லி!
வர்மா: (இலேசாக சிரித்தவாறு) ஐ ஆம் ஸீரியஸ்.
இந்திரா: பைத்தியக்காரத்தனமா ஏதாவது பேசாதீங்க. யாராவது இதைக் கேட்டாங்கன்னா என்ன நினைப்பாங்க? வேணும்னே எக்ஸென்ட்ரிக் மாதிரி பேசாதீங்க.
வர்மா: (எழுந்துகொண்டே சாந்தமான குரலில் – அதே நேரத்தில் சற்று கடுமையாக) கான்வென்ட் இங்கிலீஷ்ல நாலு வார்த்தைகள் பேசிட்டா விஞ்ஞானத்தைக் கரைச்சு குடிச்சிட்டதா அர்த்தமா? உண்ணி எழுத படிக்குற புத்தகத்தைப் பார்த்திருக்கியா? A for Apple புத்தகம். I for Igloo (இக்லு)ன்னு இருக்கும். Iglooன்னா அர்த்தம் என்னன்னு தெரியுமா? சொல்லு...
இந்திரா பேசாமல் இருக்கிறாள்.
வர்மா: தெரியாதா? பனிப்பிரதேசத்துல எக்ஸிமோ இனத்தைச் சேர்ந்தவங்க பனியில் உண்டாக்குற வீட்டுக்குப் பேருதான் Igloo. ஒரு அருமையான சொல்லை வெள்ளைக்காரனோட அழகான இங்கிலீஷ்ல நம்மால சொல்ல முடியல. சுத்தமான மலையாளத்திலயும் சொல்ல முடியல. ஸாரி. மலையாளமில்ல... மலையாளம்... வேர்களை இழந்த ஒரு இனம். (சிறிது நிறுத்தி) நாம எல்லாரும்தான். என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்.
இந்திரா: (கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இலேசான கிண்டலுடன்) கல்லூரியில படிக்கிறப்போ இருந்த புரட்சி சிந்தனை அப்பப்போ உங்களுக்கு வந்திடும் போலிருக்கு.
வர்மா: ஐ அட்மிட் ஐ ஆம் எ ஃபேல்யர். எப்பவோ தோற்றுப்போன புரட்சிக்காரன்.
பிடிவாதமும், கடுமையும் கலந்த குரலில் இந்திரா:
“அப்படிச் சொல்ல முடியாது. சில நேரங்கள்ல வெற்றியும் உங்களுக்குக் கிடைக்குதே! மூவாயிரம் ரூபாயும் வேற எத்தனையோ சலுகைகளும் கிடைக்கிற வேலையை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சதன் மூலம் உங்க அலுவலகத்துல நீங்க ஒரு புரட்சிக்காரன்ற மாதிரி ஒரு எண்ணத்தை மத்தவங்கக்கிட்ட உருவாக்கலியா? க்ரேட்! ரியலி க்ரேட்! பத்திரிகைகள்ல அது எவ்வளவு பெரிய செய்தியா வந்துச்சு!”
சொல்லியவாறு உள்ளே போகிறாள்.
படுக்கையறைக்குள் தாய் இந்திரா கால் பதிப்பது கேட்கிறது. உண்ணி படுத்தவாறு அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். உண்ணியின் முகம் வாடியிருக்கிறது.
39
கண்ணாடியில் உண்ணியின் உருவம். கிராமத்தில் பார்பர் ஷாப்பில் உண்ணி முடி வெட்டிக் கொண்டிருக்கிறான்.
உடன் வந்த கோபாலன் நாயர் அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறார். பெஞ்சில் சவரம் செய்த ஒரு ஆள் உட்கார்ந்திருக்கிறான்.
கிராமத்து ஆள்: இந்த வருஷம் மகர மாசம் கோவில்ல திருவிழான்னு சொன்னாங்க.
கோபாலன் நாயர்: ஊர்ல இருக்குற ஆளுங்க பையில இருந்து காசை வெளியே எடுத்தாங்கன்னா எப்பவுமே திருவிழாதான்... கொண்டாட்டம்தான். (பார்பரிடம்) கிருஷ்ணா... ஒட்ட வெட்டிரு. முடியைச் சரியா வெட்டலைன்னா நான் ஒழுங்கா கவனிக்கலைன்னு என் மேல குத்தம் சொல்லிடுவாங்க. அதுனால பார்த்து வெட்டு.
உண்ணி: இதுக்கு மேல குறைக்க வேண்டாம்.
கோபாலன் நாயர்: அம்மா சொன்னது ஞாபகத்துல இல்லியா?
உண்ணியின் தலை முடி வெட்டும் வேலை முடிகிறது. அவன் தன் மேல் போர்த்தியிருந்த துணியை நீக்கி எழும்போது-
கோபாலன் நாயர்: நான் கொஞ்சம் சவரம் பண்ணிக்கிறேன். தலைமுடியை வெட்டினாக்கூட சரிதான். தலையில வேர்த்தா, மூக்கடைப்பு வந்திடுது.
பார்பரின் நாற்காலியில் ஏறி உட்காரும்போது கோபாலன் நாயர்:
“கொஞ்ச நேரம் வெளியே நடந்துக்கிட்டு இரு. எங்கேயாவது தூரத்துல போயிடாதே. போஸ்ட்டாபீஸ் வரை போனா போதும்.”
உண்ணி வெளியே செல்ல ஆரம்பிக்கும்போது, பின்னால் கோபாலன் நாயரின் குரல்:
“குழந்தையே பிறக்கலைன்னு பல தடவை கடவுள்கிட்ட வேண்டிக்கிட்ட பிறகு பிறந்த மகன். சுட்டித்தனம் கொஞ்சம் அதிகம்...”
உண்ணி ஓடுகிறான்.