ஆரூடம் - Page 19
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6956
முருங்கை இலையை எடுத்துக் கொண்டு உள்ளே போகும்போது நாணியம்மா:
"கொஞ்சம் நில்லுடா கண்ணு. சாதம் வேகட்டும். உனக்க கொஞ்சம் கஞ்சி தர்றேன்."
நீலிக்கு உடம்பு சரியில்லை என்ற விஷயத்தை அறிந்து கொண்ட உண்ணி பாருவின் அருகில் வருகிறான்.
உண்ணி: காய்ச்சல் இருக்குல்ல... டாக்டரைக் கூப்பிட வேண்டியதுதானே?
பாரு: வைத்தியர் வருவாரு. நிறைய ரூபா கொடுத்தாத்தான் டாக்டர் வருவாரு.
கையிலிருந்த மருந்து குப்பியைத் திண்ணையில் வைத்துவிட்டு, பாரு கழுத்தில் கிடக்கும் புதிய சிப்பியால் ஆன மாலையைக் காட்டுகிறாள்.
"வேலப் பறம்புல இருந்து நீலி அக்கா வாங்கிட்டு வந்து தந்தாங்க. பிறகு... இழுத்தா நீளமா வர்ற முட்டாயி வாங்கிட்டு வந்து தந்தாங்க!"
அவள் ஒரு இலையை இடது கையைச் சுருட்டி, அதன் மேல் வைத்து அடித்து ஓசை உண்டாக்குகிறாள். உண்ணியும் அவள் செய்தது மாதிரி செய்ய முயற்சிக்கிறான். ஆனால், அவனால் முடியவில்லை.
பாரு: அப்படி இல்ல... இப்படி...
சொல்லிய அவள் இலையை உண்ணியின் சுருட்டப்பட்ட கையின் மீது வைத்து அடிக்கிறாள். அப்போது இந்திராவின் குரல்:
"ராஜேஷ்!"
உண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறான். பாருவின் மனதில் பயம் உண்டாகிறது.
இந்திரா: நீ ஏன்டி இங்கே வந்திருக்கே?
இந்திரா அருகில் நிற்பதைப் பார்த்து, பாரு பயப்படுகிறாள்.
இந்திரா: கொஞ்ச நேரம் ஆச்சுன்னா, வீட்டுக்குள்ளேயே நீ வந்திடுவே போலிருக்கே! ஒழுங்கா இங்கேயிருந்து ஓடிடு.
பாரு பயந்து போய் வெளியே ஓடுகிறாள்.
சமையலறையில் இருந்து பாத்திரத்தில் கஞ்சியுடன் வரும் நாணியம்மா ஓடிக் கொண்டிருக்கும் பாருவைத்தான் பார்க்கிறாள்.
இந்திரா: என்ன இது?
நாணியம்மா: கொஞ்சம் கஞ்சித் தண்ணியை எடுத்துட்டு வந்தேன். அழுக்குத் துணியை கஞ்சிலயும் நீலத்துலயும் முக்காலம்னு. உள்ளே நீலம் இருக்கா?
இந்திரா எதுவும் பேசாமல் உள்ளே போகிறாள். உண்ணி ரசித்தவாறு நாணியம்மாவைப் பார்க்கிறான். நாணியம்மாவின் முகத்தில் ஒரு திருட்டுத்தனமான சிரிப்பு.
அப்போது உண்ணியின் கவனம் மருந்துக் குப்பி மீது செல்கிறது. என்னவோ சிந்தித்தவாறு அவன் மருந்து குப்பியை எடுக்கிறான்.
50
மாலை நேரம்.
உண்ணி கார்ட்டூன் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான்.
தேவகியம்மா, இந்திரா- இருவரின் குரல்களும் பக்கத்தில் கேட்கின்றன.
தேவகி: சீக்கிரம் திரும்பிடலாம். போயி உடனே வர வேண்டியதுதான். போற வழியில கோயில்ல நுழைஞ்சிட்டுப் போவோம்.
வாசலில் தேவகியம்மாவும், இந்திராவும் நின்றிருக்கிறார்கள். உண்ணி அவர்கள் நின்றிருப்பதைத் தெரிந்து கொண்டாலும், தெரிந்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
தேவகியம்மா: நல்லா படிக்கிறாப்லதானே?
உண்ணி பார்க்கிறான்.
தேவகி: இவங்க அப்பாகூட அந்தக் காலத்துல இப்படித்தான். எப்போ பார்த்தாலும் படிக்கிறதும் எழுதுறதும்தான்...
இந்திரா: பீ ஹியர். டோண்ட் கோ எனிவேர்.
உண்ணி: யெஸ், மம்மி.
அவர்கள் வெளியே போகும் ஓசை அவன் காதில் விழுகிறது.
51
மேல்மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு ஓடிவந்து நீலியின் குடிசை முன்னால் வந்து நிற்கிறான் உண்ணி. அவன் கையில் மருந்து குப்பி இருக்கிறது.
குடிசைக்கு முன்னால் யாரையும் காணவில்லை.
நீலியின் குரல்:
"யார் அது?"
மூச்சிறைக்க உண்ணி:
"நான்... நான்தான்..."
நீலி வெளியே வருகிறாள். உண்ணியைக் கண்டு அவள் மனதில் ஒரு இனம் புரியாத பரபரப்பு.
நீலி: (அன்பு கலந்த குரலில்) ஏன் இங்கே வந்தீங்க உண்ணி தம்புரான்?
உண்ணி: மருந்து...(மருந்து குப்பியை நீட்டி) மருந்தை பாரு அங்கே மறந்து வச்சிட்டு வந்துட்டா.
நீலி: (அதை வாங்கியவாறு) இதுக்காகவா ஓடி வந்தீங்க? (யாரிடம் என்றில்லாமல்) மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடலைன்னாலும் எல்லாம் ஒண்ணுதான்.
உண்ணி: காய்ச்சல் இருக்கா?
நீலி: (இலேசாக சிரித்தவாறு) இப்போ பரவாயில்ல. நீங்க இங்க வந்தது அம்மாவுக்குத் தெரிஞ்சதுன்னா, அடியும் உதையும் கிடைக்கும்ல...?
உண்ணி: அம்மா எங்கேயோ போயிருக்காங்க.
நீலி: சரி... நீங்க கிளம்புங்க. (சிறிது நேர யோசனைக்குப் பிறகு) நான் படி வரை கூட வர்றேன். ஆடும் மாடும் திரும்பி வர்ற நேரம்.
நீலி உண்ணியின் கையைப் பிடித்தவாறு வெளியே இறங்குகிறாள்.
பின்பக்கம் வந்த நீலி நிற்கிறாள். அவளுடன் உண்ணியும்.
அவள் ஏற்கெனவே இருந்த வீடு இருந்த இடத்தில் இரண்டு மூன்று தென்னங்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. ஆமணக்கு செடிகள் வளர்ந்திருக்க, அதற்கு அருகில் கட்டாந்தரை தெரிகிறது. ஆங்காங்கே இரண்டு மூன்று கற்கள் கிடக்கின்றன. மறைந்துபோன சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களின் நினைவிடங்கள்.
நீலி நடக்கிறாள். அவளுடன் உண்ணியும் நடக்கிறான். சிறிய படியை அடைந்தவுடன், நீலி:
"நீங்க போங்க..."
அவன் படியைத் தாண்டி நடக்கிற போது, நீலி தான் இருந்த பழைய நிலத்தைப் பார்க்கிறாள்.
ஏதோ பழைய ஞாபகங்கள் அலைமோத அவள் அங்கே நின்றிருக்க, அவளின் கண்கள் அருகில் இருக்கும் பெரிய வீட்டை நோக்கி திரும்புகின்றன.
பெரிய வீட்டின் வாசலில் அவளையே பார்த்தவாறு நின்றிருந்த இந்திரா முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.
52
வீட்டின் உட்பகுதி.
சமையலறை வழியாக வரும் உண்ணியைப் பார்த்தவாறு நின்றிருக்கிறாள் இந்திரா.
உண்ணி அருகில் வந்தவுடன்:
இந்திரா: நீ எங்கே போயிருந்தே?
உண்ணி: எங்கேயும் போகல. பின்னாடி முற்றத்துலதான் இருந்தேன்.
இந்திரா: ஐ ஆஸ்க் டூ யூ. வேர் டிட் யூ கோ?
உண்ணி எங்கேயும் போகவில்லை என்பது மாதிரி தலையை ஆட்டுகிறான்.
இந்திரா: பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டே, இல்லே? செய்யக் கூடாது செய்யக்கூடாதுன்னு நான் எதைச் சொல்றேன்னோ, நீ அதைத் தொடர்ந்து செஞ்சிக்கிட்டு இருக்கே!
அடிக்க வருவதைப் போல் தன்னிடம் நெருங்கி வரும் இந்திராவைப் பார்த்து உண்ணி பயப்படுகிறான். அப்போது வர்மா வருகிறான்.
வர்மா: என்ன இங்கே?
இந்திரா: (அவன் பக்கம் திரும்பி) இங்கே இருந்தா இவன் உருப்படாமப் போயிடுவான்னு பல முறை சொல்லிட்டேன். இஃப் நாட் ஆல்ரெடி ஸ்பாயில்ட்.
வர்மா: நீ என்னடா பண்ணினே உண்ணி?
உண்ணி பேசாமல் இருக்கிறான்.
இந்திரா: கொஞ்சம் கண்ணை மூடினா, குடிசைப் பக்கம் இவன் ஓடிர்றான். நான் சின்னப் பிள்ளையா இருக்குறப்போ பாட்டி சொன்னது ஞாபகத்துல இருக்கு வித்து குணம் பத்து குணம்னு. உங்க பரம்பரையில என்னென்ன கெட்ட குணங்கள் இருக்கோ அது எல்லாமே மகன்கிட்ட நல்லாவே இருக்கு. ரொம்பவும் நீங்க சந்தோஷப்படலாம்.
அவள் கோபத்துடன் உள்ளே போகிறாள்.