
"தம்புராக்கன்மார்கள் முன்னாடி எப்படி எப்படியோ இருந்திருக்கலாம். அந்தக் காலத்துல அப்படி இருந்தாங்கன்றதுக்காக...? பழங்கதைகளைப் பேசிக்கிட்டு இப்பவும் படிக்கு வெளியே நாங்க நின்னுக்கிட்டு இருக்க தயாரா இல்ல..."
சாத்தன் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறான்.
ஒருவன் அந்தக் கூட்டத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவனைப் போல, இரண்டடி முன்னால் வந்து நின்று வர்மாவைச் சுட்டிக்காட்டி:
"நீங்க பெரிய உத்தியோகத்துல இருக்கலாம். பெரிய ஆளாக்கூட இருக்கலாம். அந்த பந்தாவை எல்லாம் அங்கே வச்சுக்கங்க. இங்கே அதுக்கெல்லாம் இடமே கிடையாது!"
கோபாலன் நாயர்: டேய் சங்கரன் குட்டி...
அந்த மனிதன்: இந்த வேலை எல்லாம் இங்கே வச்சுக்காம, ஒழுங்கா போடா. தம்புரான்னா பெரிய இதுவா...?
தனக்கு நேராக அம்பு பாய்வதைக் கண்டு, தலை குனிந்த வர்மா மெதுவாக திரும்பி வாசல் கதவைப் பார்க்கிறான். வாசல் கதவைத் தாண்டி வெளியே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை மனக்கிலேசத்துடன் பார்த்தவாறு நின்றிருக்கும் இந்திராவை வர்மாவின் கண்கள் சந்திக்கின்றன. இந்திரா அடுத்த நிமிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே செல்கிறாள்.
கோபாலன் நாயர்: பத்து சென்ட் நிலம். வீடு கட்டுறதுக்கான பணம். மானம் மரியாதையோட பிழைக்கிறதுக்கான ஏற்பாடுகளை நாங்க செஞ்சி தர்றோம். இதுக்கு மேல என்ன வேணும்? சாத்தா... நீயே சொல்லு.
ஒரு ஆள்: அதை இப்போத்தானே சொல்றீங்க? பயமுறுத்தின பிறகும் ஒண்ணுமே நடக்கலையேன்னு தெரிஞ்ச பிறகு...
சாத்தன்: அவ இதோ பக்கத்துலதானே இருக்கா? அவளுக்கு இந்த விஷயத்துல சம்மதமான்னு இங்கே கூப்பிட்டு கேட்க வேண்டியதுதானே?
இன்னொரு ஆள்: எல்லார் முன்னாடியும் நீங்க செய்யிறதா இருக்குற விஷயத்தைச் சொல்லணும். பிறகு... எந்தவித காரணத்தைக் கொண்டும் வாக்கு மாறக்கூடாது. நீங்க சர்வ சாதாரணமா வாக்கு மாறக்கூடிய ஆளுங்கதான்.
வர்மாவின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றம்.
உண்ணி கூட்டத்தில் நின்றிருக்கும் ஒவ்வொருவர் முகத்தையும் பார்க்கிறான். அப்போது தன்னுடைய தந்தையின் முகத்தையும் பார்க்கிறான்.
சாத்தன்: (இறுதியாக பேசிய ஆளிடம்) அதிகமா பேசாதே. (வர்மாவைப் பார்த்து) நான் இப்பவே நீலியை இங்கே கூட்டிட்டு வர்றேன்.
சாத்தன் போகிறான். வர்மா தளர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறான்.
கூட்டத்திலிருந்த இரண்டு மூன்று பேர் தனியாகச் சேர்ந்து தங்களுக்குள் மெதுவான குரலில் என்னவோ பேசிக் கொள்கிறார்கள். கோபாலன் நாயருக்குத் துணையாக இருந்தவர்களும், தங்களுக்குள் என்னவோ பேசிக் கொள்கிறார்கள்.
உண்ணியின் முகத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம். அவனின் பார்வையில்- நீலி கூட்டத்தை நோக்கி நடந்து வருகிறாள். சாத்தன் நீலியுடன் வருகிறான். இரண்டு கூட்டத்திலும் சேராமல் நீலி தனியாக நிற்கிறாள். அவளையே எல்லோரும் வைத்த கண் எடுக்காது பார்க்கிறார்கள்.
நீலி: (யாரிடம் என்றில்லாமல்) என்னை ஏன் அழைச்சீங்க?
கூட்டத்தில் இருந்த ஒரு ஆள்:
உன்னை இந்த இடத்தை விட்டு போக வைக்கிறதுன்ற முடிவுல இவங்க இருக்காங்க. போக விருப்பமில்லைன்னா மனசைத் திறந்து சொல்லு. அதுக்குப் பிறகு இவங்க எப்படி உன்னை இங்கேயிருந்து போக வைக்கிறாங்கன்னு பார்ப்போம்.
கோபாலன் நாயர்: நான் சில விஷயங்களை... நியாயமா படுற சில விஷயங்களை சாத்தன்கிட்ட சொல்லியிருக்கேன்.
கூட்டத்தில் தைரியமான ஒரு ஆள்:
வீடு கட்டணும்னா எவ்வளவு ரூபா தருவீங்க?
மற்றொரு ஆள்: நாலு ஓலையையும் கம்பையும் கொடுத்து விஷயத்தை முடிச்சிடலாம்னு நினைச்சா அவ்வளவுதான்.
நீலி: (அந்த மனிதனிடம்) டேய்... அந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன். (கோபம் கலந்த கிண்டலுடன்) எனக்கு உதவி செய்றதா நினைச்சா இதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க?
அந்த மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள்.
நீலி: (சாத்தனிடம்) தம்புரான் சொன்னபடி செஞ்சுக்கலாம். இந்த விஷயத்துல பஞ்சாயத்து பேசுறதுக்காக யாரும் இங்கே நிக்க வேண்டாம்.
தலைமை தாங்கிய ஆள்:
குடியிருக்குறதுக்கு இடம், அது போக தனிப்பட்ட முறையில பணம்... இப்படி பல விஷயங்களை உனக்கு அவங்க கொடுக்கணும்.
நீலி: இந்த மாதிரி பேச்செல்லாம் ஒண்ணுமே தெரியாதவங்ககிட்ட போயி பேசுங்க. எனக்கு என்ன வேணும்னு கேக்குறதுக்கு நான் யாருக்கும் உரிமை கொடுக்கல. என் நாக்கை நான் எங்கேயும் அடகு வைக்கல. (சாத்தனிடம்) தம்புரான் என்ன சொல்றாரோ, அதுல எனக்கு முழு சம்மதம்.
அவள் வந்த வழியே கம்பீரமாக திரும்பி நடந்து செல்கிறாள்.
வர்மா எழுந்து உள்ளே போகிறான்.
படிக்கும் அறைக்குள் வந்த வர்மா ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்தவாறு நிற்கிறான். அவனுக்குப் பின்னால் வரும் உண்ணி:
“அப்பா, நீலி எங்கே போறா?”
சிறிது வெறுப்பு கலந்த குரலில் வர்மா:
“நீ அதைத் தெரிஞ்சு என்ன செய்யப் போற?”
உண்ணி வெளியே செல்ல, இந்திராவும், கோபாலன் நாயரும் வாசலில் நின்றிருக்கிறார்கள்.
உண்ணி திரும்பி நடக்கிறான். உண்ணியின் பார்வையில்-
கோபாலன் நாயர்: பழைய வீட்டுல எல்லா சாமான்களும் பத்திரமா அப்படியே இருக்கு. அதுக்குமேல முன்னூறு ரூபா தர்றதா சொல்லுவோமா?
வர்மா எதுவும் பேசாமல் மவுனமாக நின்றிருக்கிறான்.
இந்திரா: இந்த விஷயத்துல கஞ்சத்தனம் பார்க்க வேண்டாம். பத்தோ நூறோ அதிகமா ஆனாக்கூடப் பரவாயில்ல. கொடுங்க. வீடு உண்டாக்குற விஷயமாச்சே! (வர்மாவைப் பார்த்து) என்ன, நான் சொல்றது சரிதானே?
வர்மா என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் தர்ம சங்கடமான நிலையில் இருக்கிறான். மனதில் உண்டாகும் கோபத்தை அடக்கிக் கொண்டு நீண்ட பெருமூச்சு விடுகிறான். மனதை அமைதியாக ஆக்கிக்கொண்டு, ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டி வைக்கிறான். குடிசையின் ஓலைகளும், கம்புகளும் பிரிக்கப்படும் சத்தம் கேட்கிறது.
நீலியின் குடிசை பிரிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் ஒரு கை வண்டியில் ஏற்றப்படுகின்றன.
நீலி, சாத்தன், இரண்டு மூன்று வேலைக்காரர்கள் நின்றிருக்கிறார்கள்.
சாத்தன்: (நீலியிடம்) நட... நான் பின்னாடி வர்றேன்.
சட்டி, அலுமினியப் பாத்திரங்கள், மற்ற வீட்டுப் பொருட்கள் ஆகியவை ஏற்றப்பட்ட கை வண்டி மெதுவாக புறப்படுகிறது.
பிரிக்கப்பட்ட வீட்டையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் மீண்டுமொரு முறை பார்த்த நீலி பெரிய வீட்டை நோக்கி தன் கண்களை உயர்த்துகிறாள்.
வேலியைத் தாண்டி நின்று கொண்டிருக்கும் உண்ணியைப் பார்த்து அவள் புன்னகைக்கிறாள்.
வீட்டின் காம்பவுண்ட்டை ஒட்டி இன்னொரு இடத்தில் வர்மா நின்றிருக்கிறான். சற்று தூரத்தில் அவன் நின்றிருந்தாலும், இருவரின் பார்வைகளும் சந்திக்கின்றன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook