Lekha Books

A+ A A-

ஆரூடம் - Page 11

aaruudam

26

திருஷ்டி பொம்மை.

நிலத்தில் காய்கறிகள் இருக்கின்றன. நீலி வெள்ளரிக்காய் பிஞ்சு ஒன்றைப் பறித்து உண்ணியின் கையில் தருகிறாள்.

நீலி: சாப்பிடுங்க. நல்லா இருக்கும்.

உண்ணி வெள்ளரிக்காயைத் தின்னும்போது பாருவும் நான்கைந்து சிறுவர்- சிறுமிகளும் அங்கு ஓடி வருகிறார்கள். கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஏதோ சில சாமான்களை நீலியிடம் தருகிறாள் பாரு. மீதியிருந்த காசை நீலியிடம் தருகிறாள். அதை வாங்கி மடியில் நீலி வைக்கிறாள்.

பாரு: (உண்ணியிடம்) நீ விளையாட வர்றியா?

நீலி: (கோபத்துடன் பாருவிடம்) அடியே... தம்புரானை நீ, வா, போ அப்படின்லாம் கூப்பிடக் கூடாது. தெரியுதா?

பாருவின் முக மாற்றம். நீலியின் கோபத்திலிருந்து தப்பும் எண்ணத்துடன் அவள் சிறுவர்- சிறுமிகளுடன் தன்னை இணைத்துக் கொள்கிறாள்.

நீலி சிறுவர்- சிறுமிகளைப் பார்த்து:

"காய்கறிகளைக் கண்டபடி மிதிச்சு நாசமாக்கினா ஒங்க ஒவ்வொருத்தர் காலையும் நான் ஒடிச்சிடுவேன்!"

உண்ணி இலேசான பயத்துடன் நீலியைப் பார்க்கிறான். அவனின் முகத்தில் தெரியும் பயத்தைப் பார்த்து சிரித்தவாறு-

நீலி: (மெதுவான குரலில்) சும்மா சொன்னேன். அப்படின்னாத்தான் அவங்க பயப்படுவாங்க.

உண்ணி:  (திருஷ்டி பொம்மையைக் காட்டி) இது என்ன?

நீலி: கண்ணு படாம இருக்குறதுக்காக இதை வச்சிருக்கு. சில கருங்கண்ணுக்காரங்க பார்த்தாங்கன்னா, பூவெல்லாம் வாடிப் போயிடும்.

உண்ணி:  அந்த கோபாலன் நாயருக்கு கருங்கண்ணு இருக்கா?

அதைக் கேட்டு நீலி சிரிக்கிறாள்.

உண்ணி:  (யாரிடம் என்று இல்லாமல், தனக்குத்தானே) சில நேரங்கள்ல அம்மா பார்க்குறப்போ பயமா இருக்கும். அவுங்களுக்கும் கருங்கண்ணு இருக்குமோ?

நீலி: (அறிவுரை கூறும் குரலில்) அப்படியெல்லாம் பேசக்கூடாது.

சிறுவர்- சிறுமிகள் தூரத்தில் கண்களைப் பொத்திக் கொண்டு விளையாடுகிறார்கள். உண்ணி அவர்கள் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு சிறுவனின் கண்ணைப் பொத்துகிறார்கள். மற்றவர்கள் ஒளிந்து கொண்ட பிறகு 'ஒளிஞ்சாச்சு' என்கிறார்கள். அவர்களைக் கண்டு பிடிப்பதற்குள் உண்டாகும் ஆர்ப்பாட்டம்.

உண்ணியின் ஆர்வத்தைப் பார்த்த நீலி:

"விளையாடணுமா?"

உண்ணி:  (சிரித்துக் கொண்டே) ம்...

நீலி: (உரத்த குரலில்) பாரு... இங்கே வா.

பாரு உள்ளே ஓடி வந்தபோது-

நீலி: உண்ணித் தம்புரானையும் அழைச்சிட்டுப் போ. (உண்ணியிடம்) கல்லும் முள்ளும் பார்த்து போகணும், தெரியுதா?(பாருவிடம்) விழாம பார்த்துக்கடி...

உண்ணி பாருவுடன் சேர்ந்து நடந்து போய் மற்ற சிறுவர்- சிறுமிகளுடன் கலக்கிறான்.

உண்ணி மற்ற சிறுவர்- சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடுவதை நீலி பார்த்தவாறு நின்றிருக்கிறாள்.

27

சிறுவர்- சிறுமிகள் விளையாடுகிறார்கள்.

உண்ணி பாருவின் கண்களைப் பொத்துகிறான்.

பாரு மற்ற சிறுவர்- சிறுமிகளை தேடிப் போகிறாள். தேடி கண்டுபிடிக்கிறாள்.

அடுத்து உண்ணியின் முறை.

அவன் சிறுவர்- சிறுமிகளைத் தேடும்போது, கீழே விழுந்து விடுகிறான். பாரு அவன் எழுந்திருக்க உதவுகிறாள்.

எழுந்து நின்ற உண்ணி ஒன்றுமே நடக்காதது மாதிரி தன் மீது படிந்திருக்கும் மண்ணைத் தட்டி விடுகிறான். அப்போது நீலி அங்கு வருகிறாள்.

நீலி: பரவாயில்லை... காயம் ஒண்ணும் இல்லியே!

அவள் உண்ணியின் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிடுகிறாள். முகத்தில் இருந்த மண்ணையும் துடைத்துவிட்டு, தலைமுடியைக் கையால் தள்ளி சரி செய்கிறாள். தூரத்தில் உண்ணியின் தாய் இந்திராவின் குரல்:

"ராஜேஷ்!"

அதைக் கேட்டு உண்ணி பயப்படுகிறான்.

நீலியின் பார்வையில் தூரத்தில் நின்று கொண்டிருக்கும் இந்திரா.

நீலி: நீங்க போங்க...

உண்ணி மெதுவாக தலையைக் குனிந்து நடந்தவாறு தூரத்தில் நின்றிருக்கும் தாயின் அருகில் வருகிறான்.

தூரத்தில் நின்றவாறு நீலியும் இந்திராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். நீலி புன்னகைக்கிறாள். இந்திரா திரும்பி நடக்கிறாள்.

28

சாப்பிடும் அறை. உண்ணி தலையைக் குனிந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். வர்மா, இந்திரா இருவரும் அருகில் இருக்கிறார்கள். இந்திரா இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை.

இந்திரா:   இங்கே வந்தபிறகு சொன்னா அது மாதிரி கொஞ்சம் கூட நடக்குறது இல்ல. ஸ்லேட்டையும் புத்தகத்தையும் கையிலயே எடுக்கல. கண்ட பிச்சைக்கார நாய்கள் கூட சேர்ந்து விளையாடுற. நான் என்ன சொன்னாலும் கேக்குறது இல்ல.

உண்ணி வேகமாக சாப்பிடுகிறான். வர்மா இந்திரா பேசுவதைக் கேட்டாலும், வாயைத் திறந்து ஒருவார்த்தை கூட பேசாமல் இருக்கிறான். சாப்பிட்டு முடித்து, எழுந்த உண்ணியிடம்-

"அறையை விட்டு வெளியே போனா... வேண்டாம்... தேவையில்லாம அடி வாங்காதே!"

உண்ணி கையைக் கழுவிவிட்டு வெளியே செல்கிறான்.

இந்திரா சாப்பிட ஆரம்பிக்கிறாள். அவளின் மனதிற்குள் என்னவோ பிசைந்து கொண்டிருக்கிறது.

இந்திரா:   புலையர்கள் கூடவும் பறையர்கள் கூடவும் சகவாசம்... உருப்பட்ட மாதிரிதான்.

வர்மா பதில் எதுவும் கூறாமல் இருக்கிறான்.

இந்திரா:   (முகத்தைத் தாழ்த்தியவாறு முணுமுணுக்கும் குரலில்) குடும்பப் பாரம்பரியம் அது தானே? அதைவிட்டு வேற மாதிரி நடந்தாத்தானே ஆச்சரியம்?

வர்மா ஒரு நிமிடம் அவளையே பார்க்கிறான். பிறகு சாப்பிடுவதைத் தொடர்கிறான்.

இந்திரா:   (தைரியமாக வர்மாவின் முகத்தைப் பார்த்து) அந்தக் குடிசையைக் காலி பண்ணினா என்ன?

வர்மா அவளைப் பார்க்காமல் இருக்கிறான்.

இந்திரா:   எனக்கும் சட்டம் என்னன்னு தெரியும். வேற எங்கேயாவது போகட்டும். அப்படின்னாத்தான் இஷ்டப்படியெல்லாம் இருக்க முடியும்.

வர்மாவின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகள். தன்னை வேண்டுமென்றே வேதனைப்படுத்துவதற்காகவே அவள் கூறுகிறாள் என்பதை அவன் நன்கு அறிவான். தான் மிகவும் மனவருத்தம் அடைய வேண்டும் என்பது கூட அவளின் விருப்பமாக இருக்கலாம். அவன் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டவாறு ஒரு இயந்திரத்தைப் போலத் தொடர்கிறான்.

இந்திரா:   (உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கையைத் தட்டில் குத்தியவாறு) என்ன, ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க?

வர்மா அதற்கும் பதில் பேசாமல் இருக்கிறான்.

இந்திரா:   (சற்று குரலை உயர்த்தி) வீட்டுக்கு வந்துட்டா புத்தகம் படிக்கிறது... தியானம்... தேவையான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே!

Cut To:

கை கழுவும் இடம்.

வெளியே வாசலில் நின்றிருக்கும் உண்ணி கேட்கிறான்.

இந்திராவின் குரல்:

"வேண்டாம்னா வேண்டாம்னு வாயைத் திறந்து சொல்லணும். இருபது வேலைக்காரங்க இருந்த இடத்துலதான் நானும் சின்னப் பிள்ளையா இருக்குறப்போ வளர்ந்திருக்கேன். கீழ்ஜாதிக்காரங்களை எப்படி எந்த இடத்துல வைக்கணும்னு எனக்குத் தெரியும்."

சாப்பாட்டு மேஜையை விட்டு நாற்காலியை நகர்த்தும் சத்தம். இந்திராவின் குரல் நெருங்கி வருவதைக் கேட்டு உண்ணி ஓடுகிறான்.

தன்னுடைய அறைக்கு வந்த உண்ணி ஸ்லேட்டையும், பென்சிலையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டு காதுகளைத் தீட்டி உட்கார்ந்திருக்கிறான்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel