ஆரூடம் - Page 7
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6954
“அவ பாவமா இருந்தா, ஒரு பொண்ணு இப்படி யாருமே இல்லாம தனியா இருப்பாளா? அப்போ... வேற ஏதாவது நடக்கும்...”
உண்ணி கவனமாகக் கேட்கிறான். நாணியம்மா அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. இந்திரா பேசியது நாணியம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
வெளியே இருந்து சாப்பாட்டு அறைக்குள் வரும் இந்திரா முணுமுணுக்கிறாள்:
“தம்புரான்மார்களை விட இங்கே வேலை செய்றவங்களுக்குத்தான் அக்கறை அதிகம். (சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உண்ணியைப் பார்த்து) இங்கே பார்... கண்ல படுறவங்கள்லாம் கூப்பிட்டாங்கன்னு நீ போனே அவ்வளவுதான்...”
சாப்பாட்டு அறைக்குள் நுழையும் வர்மாவிடம் என்னவோ சொல்ல நினைத்த இந்திரா, பின்னர் எதுவும் கூறாமல் அதை அடக்கிக் கொள்கிறாள்.
உண்ணி: (தன் தந்தையைப் பார்த்து) அப்பா, என்னோட புதிய பேரு என்ன தெரியுமா? உண்ணி தம்புரான்...
இந்திரா: பேசாம சாப்பிடுறியா இல்லையா?க்ஷ
வர்மா: உண்ணி, ஆத்துல குளிக்க வர்றியா?
இந்திரா: வேண்டாம். அவனுக்கு ஜலதோஷம் பிடிச்சிடும்.
உண்ணி: குளிக்க வேவ்டாம். நான் ஆத்தைப் பார்க்க போயிட்டு வர்றேன். மம்மீ... நான் போயிட்டு வரட்டுமா?
உண்ணி வேகமாக டம்ளரில் மீதியிருந்த ஹார்லிக்ஸைக் குடித்து முடித்து தன் தந்தையின் பின்னால் நடக்கிறான்.
16
ஆற்றுப் பகுதி.
ஆற்றை உண்ணி ஆர்வத்துடன் பார்க்கிறான். ஆற்றில் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆண்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் கோபாலன் நாயரும் இருக்கிறார். தலையை துவட்டிக் கொண்டிருக்கும் கோபாலன் நாயரைப் பார்த்த உண்ணி மெதுவான குரலில் தன் தந்தையிடம் கூறுகிறான்:
“ஷேம்... ஷேம்...”
வர்மா மெதுவான குரலில் சிரிக்கிறான்.
தலையைத் துவட்டிய கோபாலன் நாயர் மேலே நின்றிருக்கும் வர்மாவையும் உண்ணியையும் பார்த்து:
“தண்ணி கொஞ்சமாத்தான் இருக்கு. ஆனா... சேறு இல்ல...”
மேலே ஏறிவந்து துண்டைக் கட்டியவாறு நெற்றியில் திருநீறு பூசிய கோபாலன் நாயர்:
“ஆசாரி, எலெக்ட்ரிக்காரன்... இவங்க ரெண்டு பேரையும் சரி பண்ணிட்டுத்தான் ப்ளாக் ஆபீஸுக்குப் போகணும்.”
உண்ணி: (அதைக்கேட்டு ) அப்பா, எனக்கு பம்பரம் வேணும்.
கோபாலன் நாயர்: அம்மா சிரிச்சுக்கிட்டே சொன்னாலும், அதுல ஏதாவது குத்தல் வச்சுக்கிட்டு பேசுறாங்களோன்னு மனசுல சந்தேகம் வந்திடுது.
வர்மா: அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஆரம்பத்துல கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.
சிறுவர்களில் சிலர் உண்ணியின் கவனத்தைக் கவர்வதற்காக தங்களின் கசங்கிப் போன ட்ரவுசர்களை கழற்றி எறிந்துவிட்டு, நிர்வாணமாக ஆற்றுக்குள் குதித்து சேட்டைகள் பண்ணுவதைப் பார்த்து கோபாலன் நாயர்:
“பசங்களா... கொஞ்சம் தள்ளிப்போய் குளிங்க...”
சிறுவர்கள் சிறிது தள்ளிப் போய் குளிக்கிறார்கள்.
கோபாலன் நாயர்: பாம்பேல இருந்த வேலையை விட்டுட்டு இங்கே வந்ததைப் பத்தி ஆளுங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க. (குரலைச் சற்று தாழ்த்தி, உண்ணியைப் பார்த்தவாறு அருகில் சென்று) வேற ஒரு பிரச்னையும் இல்லையே...!
உண்ணி ஆர்வத்துடன் பார்க்கிறான்.
வர்மா: ஒண்ணுமில்ல. ஒரு நாளைக்கு எத்தனை பொய்கள்தான் சொல்றது! எவ்வளவு சதி வேலைகளுக்கு துணையா நிக்கிறது! கம்பெனி லாபகரமா நடக்கணும்னா ஒரு மேனேஜர் கட்டாயம் இப்படி நடந்துதான் ஆகணும். (உண்ணியைப் பார்த்தவாறு) பெரிய ஒரு கான்ட்ராக்ட் கிடைக்கணும்னா வர்ற பிச்சைக்கார நாய்களையெல்லாம் ராத்திரி குடிக்க வைக்கணும். அவங்களை சுகமா இருக்க வைக்கணும். வீட்டுக்கு வந்த ஒரே சண்டைவேற.
உண்ணி பார்க்கிறான்.
கோபாலன் நாயர்: சரி... போனது போகட்டும். இனி நடக்குறது நல்லதா நடக்கட்டும். (நடந்தவாறு) நான் புறப்படட்டா தாசப்பா?
தண்ணீரில் இறங்கும்போது வர்மா:
“சரி... கிளம்புங்க...”
கரைக்கு வந்த வர்மா உண்ணியிடம்:
“வா குளிக்கலாம்...”
உண்ணி சட்டையைக் கழற்றுகிறான். ட்ரவுசரைக் கழற்ற வெட்கப்பட்டு நிற்கிறான். வர்மா அவனின் தயக்கத்தைப் பொருட்படுத்தாமல், அவனின் ட்ரவுசரைக் கழற்றி அவனுடன் நீருக்குள் இறங்குகிறான்.
வர்மா: நான் உனக்கு நீந்தக் கற்றுத் தர்றேன்.
வர்மா அவனை கைமேல் படுக்க வைக்கிறான். அவன் கால்களால் நீரைத் துலாவுகிறான். தூரத்தில் குளித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களின் ஆரவாரம்.
உண்ணி சிரிக்கிறான். தொடர்ந்து கால்களை இப்படியும் அப்படியுமாய் ஆட்டுகிறான். நீர் வாய்க்குள் புகுந்து இருமல் வந்தாலும், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் சிரித்து அதை முழுமையாக மறைக்கிறான். தன்னை மறந்து அவன் நீச்சலில் ஈடுபடுகிறான்.
நீரின் மேற்பரப்பில் நீர் குமிழியும் நுரையும்.
17
குளத்தில் வந்து விழும் கல்லால் உண்டாகும் சிறிய அதிர்வலை. ஓலையால் ஆன ஒரு காற்றாடியுடன் உண்ணி ஒரு பாசி படிந்த குளத்தினருகில் நின்றிருக்கிறான்.
உண்ணி: மம்மீ... ஒரு தவளை.
சிறிது தூரத்தில் நின்றவாறு இந்திராவும் கோபாலன் நாயரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கோபாலன் நாயர்: அதோ தெரியுதே... (தூரத்தில் தெரியும் ஒரு வரப்பைக் காட்டி) அதுவரை நம்மளோட நிலமாத்தான் இருந்துச்சு. இப்பவும் நமக்கொண்ணும் குறைச்சல் இல்ல... - தாராளமா நம்மக்கிட்ட நிலம் இருக்கத்தான் செய்யுது.
இந்திரா: பாகம் பிரிக்கிறப்போ எர்ணாகுளத்துல இருக்குற வீடு வேணுமா இல்லாட்டி இந்த நிலம் வேணுமான்னு கேட்டாங்களாமே!
கோபாலன் நாயர்: உண்மைதான். ஆனா, அங்கே இருக்குறது வீடு மட்டும்தான். இந்த நிலத்தை எடுத்துக்கணும்னு தாசப்பன் நினைச்சது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். சொல்லப் போனா புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டதாகவே நான் நினைக்கிறேன். இந்த நிலத்துல நாம எது வேணும்னாலும் வைக்கலாம்.
உண்ணி: (ஓடி வந்து) மம்மீ... ஃபிஷ்... பிக்.ஃபிஷ்...
கோபாலன் நாயர்: (சிரித்தவாறு) நாம வலை போட்டு பிடிக்கலாம்.
உண்ணி: வலை எங்கே இருக்கு?
கோபாலன் நாயர்: கொண்டு வர்றேன்.
உண்ணி: (கையிலிருக்கும் காற்றாடியைப் பார்த்தவாறு) அய்யோ... இது கெட்டுப் போச்சே!
கீழே விழுந்து கிடந்த ஒரு ஓலையை எடுத்து இன்னொரு காற்றாடி செய்து கொடுத்த கோபாலன் நாயர்:
"கவலையே பட வேண்டாம். மூணு தலைமுறைக்கு தேவையானது நம்மக்கிட்ட இருக்கு. வேலை செய்தவங்களுக்கு கொடுத்தது, மத்தவங்களுக்குக் கொடுத்தது போக மீதி..."
அவர்கள் நடந்து சென்று, நீலியின் குடிசை இருக்கும் இடத்தை அடைந்தபோது நீலியின் குரல்:
"அப்போ உன் வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே! வாயைத் திறந்து சொல்ல வேண்டாமா?"
நீலி முற்றத்தில் இரண்டு ஆண்களிடம் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள்.
உண்ணி ஆர்வத்துடன் பார்க்கிறான்.
அந்த ஆண்கள் சிரிக்கிறார்கள்.
நீலியின் குரல்: "இப்போ ஒரு கால்லதானே நொண்டிக்கிட்டு இருக்கே! ரெண்டு கால்லயும் நொண்டுற மாதிரி ஆயிடும்னு அந்த ஆளுக்கிட்ட சொன்னா போதும்..."