ஆரூடம் - Page 16
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6956
40
தரிசாகக் கிடக்கும் நிலத்தில் ஓடி வந்து நிற்கிறான் உண்ணி. நீலியின் புதிய குடிசைக்கு மேலே அமர்ந்து இரண்டு அரிஜனங்கள் ஓலைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கீழே சாத்தன் நின்றிருக்கிறான். நீலியை எங்கேயும் காணவில்லையே என்ற எண்ணத்துடன் உண்ணி நின்று கொண்டிருக்கிறான். அப்போது நீலியின் குரல்:
“வீடு கட்டுறத பார்க்குறதுக்காக வந்தீங்களா உண்ணி தம்புரான்?”
உண்ணி குரல் வந்த திசையைப் பார்க்கிறான். பின்னால் நீலி நின்றிருக்கிறாள். அவளின் இடுப்பில் நீர் நிரப்பிய மண்குடம் இருக்கிறது.
நீலி: குடிக்குற தண்ணிக்காக கொஞ்ச தூரம் நடந்து போய்வர வேண்டியதிருக்கு. ஒரு பெண் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கு பார்த்தீங்களா? என் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. ஆமா... தனியாவா வந்தீங்க?
உண்ணி: முடி வெட்டுறதுக்காக வந்தேன்.
நீலி: (தலையைப் பார்த்தவாறு) இப்படியா ஒட்ட வெட்டுறது?
(ஏதோ பழைய ஞாபகம் வந்து) இனி இப்படி வெட்ட கூடாது. தோள் வரை முடி இருக்கணும். கழுத்துல புலிநகம் அணிஞ்சிருக்கணும்... அப்படின்னாதான் பார்க்க நல்லா இருக்கும்.
அதைக் கேட்டு உண்ணி சிரிக்கிறான்.
உண்ணி: புலி நகம் எங்கே கிடைக்கும்?
நீலி: அப்பாக்கிட்ட கேளுங்க. ஒருவேளை வீட்டுலயே இருக்கும்.
எதிர்திசையில் இருந்து வீட்டு வாசலை அடையும் பாருவிடம் தன் இடுப்பில் இருந்த குடத்தை எடுத்து நீலி தருகிறாள்.
நீலி: என்னால முடியலடி... இதை நீ வை!
பாரு குடத்தை வாங்கி தலையில் வைத்தவாறு போகிறாள்.
உண்ணி: லாரி வந்திருச்சு. என் சைக்கிள், ட்ரெயின் எதுவும் வந்து சேரல.
நீலி: புதுசா வாங்கிதரச் சொல்ல வேண்டியதுதானே?
உண்ணி: கிளிக்கூடு...
நீலி: (சிரித்தவாறு) அதை நான் மறக்கல. வீட்டு வேலை முடியட்டும். கிளியைக்கூட நான் பார்த்து வச்சிருக்கேன்.
உண்ணி: (ஆர்வத்துடன்) எங்கே? எங்கே?
நீலி: அது இருக்கு. போதுமா? (தூரத்தில் வந்து கொண்டிருக்கும் கோபாலன் நாயரைப் பார்த்து) அந்த ஆளு வர்றாரு. நீங்க புறப்படுங்க.
உண்ணி பார்க்கிறான். கோபாலன் நாயர் வந்து கொண்டிருக்கிறார்.
இனி ஓடி பிரயோஜனமில்லை என்று நினைத்த உண்ணி அங்கேயே நின்றிருக்கிறான்.
கோபாலன் நாயர்: நல்ல வேலை செஞ்சே நீ! அங்கே உன்னைக் காணோம்னதும் என் வயிறே கலங்கிடுச்சு!
வீடு வேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த கோபாலன் நாயர்:
“சுவரு கல்லுலயா மண்ணுலயா நீலி?”
அவர் கேட்டது காதில் விழாத மாதிரி இருக்கிறாள் நீலி. அப்போது கோபாலன் நாயர்:
“நீலி!”
நீலி திரும்பிப் பார்க்கிறாள்.
கோபாலன் நாயர்: என்னை நீ தப்பா நினைக்கக்கூடாது. அவங்க என்ன சொல்றாங்களோ, நான் அதைக் கேட்டாகணும். நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தான் ஆகணும். என்ன இருந்தாலும் இப்போ அவங்களோட கணக்குப் பிள்ளை நான் தானே? பிரயோஜனம் இருக்கா இல்லையான்றது வேற விஷயம்.
அவள் வெறுப்புடன் அவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு நடக்கிறாள்.
உண்ணி கோபாலன் நாயருடன் சேர்ந்து நடக்கிறான்.
கோபாலன் நாயர்: (மெதுவான குரலில் தனக்கு மட்டும் கேட்கிற மாதிரி) இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்.
உண்ணி: (விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல்) என்ன?
கோபாலன் நாயர்: எதுக்கு இவகிட்ட போய் பேசினீங்கன்னு கேட்டா...?
உண்ணி: (யோசனையுடன்) பேசினது தப்பா?
கோபாலன் நாயர்: தப்புன்னா... என்ன இருந்தாலும் ஒடிச்சு கொல்லுற ஜாதியைச் சேர்ந்தவதானே?
உண்ணி: (பதைபதைத்து) நீலி ஆளுங்களைக் கொல்வாளா?
கோபாலன் நாயர்: நீலின்னா... நீலியோட அப்பாவோட அப்பா...
ஒரே நிசப்தம். இருவரும் நடக்கிறார்கள். என்னவோ சிந்தித்தவாறு உண்ணி சில நிமிடங்களுக்குப் பிறகு-
“அவுங்க எப்படி கொல்வாங்க?”
கோபாலன் நாயர்: (ஏன்தான் இதைச் சொன்னோமோ என்ற எண்ணத்துடன்) ராத்திரி மறைஞ்சிருந்து காளையாகவும், எருமையாகவும், நாயாகவும், பூனையாகவும் வந்து கழுத்தை ஒடிச்சு கொல்றது...
அதைக் கேட்டு உண்ணியின் முகத்தில் பயத்தின் ரேகைகள் படர்கின்றன.
41
இரவு நேரம்:
ஜன்னலருகில் உட்கார்ந்திருக்கும் கருப்பு நிற பூனையின் முகம்.
பயத்தால் வெளிறிப்போன முகத்துடன் அமர்ந்திருக்கும் உண்ணி.
அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, சாப்பாட்டு அறையில் பயத்துடன் அமர்ந்திருக்கிறான். அருகில் வர்மா இருக்கிறான்.
உணவு அயிட்டங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் நாணியம்மா, ‘போ பூனை’ என்று கையை ஆட்டி கூறியவுடன் பூனை வெளியே ஓடி மறைகிறது.
வர்மா: (உண்ணி பயத்துடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து) சாப்பிடு. என்ன கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டு தூங்குறியா?
உண்ணி: (தட்டில் உணவு இருப்பதைப் பார்த்து) பூனை...
வர்மா: பூனை அது பாட்டுக்கு இருக்கு. உனக்கு என்ன?
உண்ணி: பூனை... கொலை செய்றவங்க பூனையா வருவாங்களாமே?
வர்மா: (அவன் ஏதோ கதையைக் கேட்டிருக்கிறான் என்பதை உணர்ந்து) உன்கிட்ட யார் அந்தக் கதையைச் சொன்னது?
உண்ணி: கொலை செய்றவங்க வண்டா பறப்பாங்களா?
வர்மா: பேசாம ஒழுங்கா சாப்பிடு.
உண்ணி மீண்டும் சாப்பிடத் தொடங்குகிறான்.
“ரொம்பவும் கோபம் உள்ளவங்களைப் பார்த்துத்தான் அவங்க வருவாங்க. இல்லையாப்பா?”
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,
வர்மா: உண்ணி, யார் உங்கிட்ட அந்தக் கதையைச் சொன்னது?
இந்திராவின் தட்டை வைத்தவாறு மேஜைக்கு அருகில் நாணியம்மா.
உண்ணி: நீலியும் அவளோட வீட்டு ஆளுங்களும் இந்த மாதிரி கொலை செய்ய வருவாங்கன்னு கோபாலன் நாயர் சொன்னாரு.
வர்மா அதைக் கேட்டு சிரிக்கிறான்.
வர்மா: அவரு சும்மா விளையாட்டுக்காகச் சொல்லியிருப்பாரு. நீ பேசாம சாப்பிடு.
நாணியம்மா: இப்படித்தான் அவரு சின்னப் பிள்ளைக்கிட்ட கதை சொல்லுறதா?
அங்கே வரும் இந்திரா அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அவளின் இடத்தில் அமர்கிறாள். சப்பாத்தியைத் தட்டில் வைக்கும் நாணியம்மாவிடம்:
“நான் எடுத்துக்குறேன். சமையலறையில் நீங்க இருந்தா போதும். தேவைப்பட்டா நான் கூப்பிடுறேன்.”
நாணியம்மா சமையலறையை நோக்கி செல்கிறாள்.
வெளியே எங்கோயிருந்து நாய் ஒன்று ஊளையிடுகிறது. அதைக் கேட்டு உண்ணியின் முகத்தில் பயத்தின் ரேகைகள்.
42
ஒரு எருமை பயங்கர ஆவேசத்துடன் ஓடி வருகிறது. உண்ணி அதற்கு முன்னால் ஓடுகிறான். எருமை விரட்டுகிறது. தப்பித்து விட்டோம் என்ற நிம்மதியுடன் அவன் நின்று கொண்டு மேல் மூச்சு கீழ்மூச்சு விடும்போது, ஒரு வெறி பிடித்த நாய் ஓடி வருகிறது.
உண்ணி ஓடுகிறான். அவனுக்குப் பின்னால் பல நாய்களின் குரல்கள்.
ஓடி ஓடி களைத்துப் போய் அவன் கீழே விழும்போது, சிவந்த நாக்கை நீட்டியவாறு நாய் அவனை நோக்கி வருகிறது. அது அடுத்த நிமிடம் புன்னகைத்தவாறு நின்றிருக்கும் நீலியாக மாறுகிறது.