வண்டியைத் தேடி...
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
கடல் மிகவும் அமைதியாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது, அலைகளுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் கடல் காகங்களையும் அவற்றின் சிறகுகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனின் கதிர்களையும் ஒரு கனவில் பார்ப்பதைப் போல நம்மால் காண முடியும்.
கடந்த சில நாட்களாகவே வானம் பயங்கரமாக மூடிக் கொண்டிருக்கிறது. காற்று பலமாக வீசுகிறது. இரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கும் பனி அந்தக் காற்றில் பட்டு ஒருவகை பயத்துடன் நாற்புறமும் பரவி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெயிலின் பலமிழந்த கீற்றுகள் அதில் சக்தியற்றுப் போய் விடுகின்றன. மதியம் வரை காற்றின் தாக்கம் பெரிதாகவே இருக்கிறது. மதிய நேரம் வருகிறபோது வெளிறிப் போன சூரியன் மேகங்களுக்குப் பின்னாலிருந்து போதை மாத்திரை சாப்பிட்ட ஒரு மனிதனைப் போல மெதுவாகத் தன்னுடைய முகத்தை வெளியே காட்டுகிறான். அதற்குப் பிறகு காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோக, மேற்கு திசையில் பலமிழந்த மஞ்சள் வெளிச்சம் எந்தவித இலக்கும் இல்லாமல் எல்லா இடங்களில் பரவி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அது சிறிது நேரத்திற்குத்தான். அதற்குள் மாலை நேரம் வந்து சேர்கிறது. இதுவரை கொஞ்ச நேரத்திற்கு விடை பெற்று மறைந்து போயிருந்த அந்தக் குளிர்க் காற்று, மீண்டும் பாய்ந்து வருகிறது. அது சூரியனை எங்கோ இழுத்துக்கொண்டு போகிறது. கடலுக்குக் கீழேயிருந்து பனியை அள்ளி எடுத்து எங்கள் மேல் வேகமாக அது எறிந்து விளையாடுகிறது. குளிர்ச்சியான முகத்தைக் கொண்ட சந்திரனை ஆகாயத்தின் ஒரு மூலையில் ஒரு காட்சி பொருளைப் போல வந்து நிறுத்துகிறது.
இப்படித்தான் கடந்த சில நாட்கள் இருந்தன. மக்கள் சூரியனைத் திட்டினார்கள். காற்றைக் கண்டபடி ஏசினார்கள். பகல் நேரத்தை வெறுத்தார்கள். மாலை நேரம் என்ற ஒன்றையே மறந்தார்கள். சந்திரனைப் பார்த்து கோபம் கொண்டார்கள். இரவுடன் சங்கமமாகி தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படி உறங்கும்போது மக்கள் தங்களைத் தாங்களே திட்டிக் கொள்வதும், சாபமிடுவதும், வெறுப்பதும், மறப்பதும், கோபம் கொள்வதுமாய் இருந்தார்கள். கடைசியில் இரவுடன் ஐக்கியமாகி உறங்கியும் போனார்கள்.
இன்று அப்படியில்லை. இன்று அந்தப் பாழாய்ப்போன காற்று இல்லை. உடம்பில் ஊசிமுனைகளைப் போல வேகமாக வந்து குத்திக் கொண்டிருக்கும் பனியின் தாக்கமில்லை.
மனம் விட்டு கூறுவதாக இருந்தால் இப்படியொரு முகம் இந்த நாளுக்கு இருக்கும் என்பதை கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கவே இல்லை. எப்போதும் போல மதியம் வரை இருக்கும் தூக்கத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு போர்வையை இழுத்து மூடி படுத்துக் கிடந்தான் அவன். வெளியே போகலாமென்றால் கடுமையான காற்றை நினைத்துப் பார்க்கும்போது ஒரே பயமாக இருந்தது. அப்படியே வெளியே போனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
அவனின் தந்தை அவனை அடித்து எழுப்பினான். “டேய் புருஷா, எந்திரி... எந்திரிடா...”
தன் தந்தையின் குரலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷத்தின் ரேகைகள் தெரிந்தன.
போர்வையில் இருந்த பல ஓட்டைகளில் ஒரு ஓட்டை வழியாக புருஷன், தந்தையின் முகத்தையே வெறித்துப் பார்த்தான்.
அந்த முகத்தில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு தெரிந்தது. வயதாகிப் போயிருந்த அந்த தேகத்தில் ஒருவகை வேகமும், ஆவேசமும் தெரிந்தன.
“இன்னைக்குக் காற்று, மழை எதுவும் இல்ல...”
அவன் தந்தை உரத்த குரலில் சொன்னான்.
“இன்னைக்கு வானம் ரொம்பவும் தெளிவா இருக்கு.”
“அதற்கென்ன?”
“நீ இப்படி இழுத்து மூடி தூங்கிக்கிட்டு இருக்கக்கூடாது.”
அதற்கு மேல் தன் தந்தையைப் பார்த்து அவன் ஒன்றும் கேட்கவில்லை. கடந்த சில நாட்களாக, ஏன் மாதக் கணக்கில் என்று கூடச் சொல்லலாம். அவர்கள் வீடு பட்டினியில்தான் கிடக்கிறது. அவன் வெளியே போய் வரவில்லையென்றால், இன்னும் இப்படியே பட்டினியில் கிடக்க வேண்டியதுதான்.
“நான் வெளியே போயிட்டு வர்றேன்...” - புருஷன் சொன்னான். “அப்பா... நீங்க படுத்து தூங்குங்க...”
“சரி... நீ எங்கே போற?”
“கடற்கரைக்கு.”
“பக்கத்து வீட்டுல இருக்குறவங்க காட்டுப்பக்கம் போறாங்க.”
“அவங்க காட்டுக்குப் போகட்டும். நான் கடலைத் தேடிப் போறேன்.”
வாசலில் வந்து நின்றபோது, மூன்று வீடுகளின் முற்றத்திலும் ஆட்கள் நின்றிருந்தார்கள். கடந்த சில நாட்களாகவே, இப்படியொரு காட்சியை அவனால் பார்க்கவே முடியவில்லை. இந்த நேரத்தில் மூன்று வீடுகளும் சொல்லி வைத்ததைப் போல பனிப்படலத்தால் மூடிக் கிடப்பதுதான் பொதுவாக நடந்து கொண்டிருக்க வேண்டிய ஒன்று. புகை இருக்காது. வெப்பம் இருக்காது. ஆட்களின் அடையாளமே இருக்காது.
அவன் வீட்டையொட்டி இருக்கும் ராமனின் வீட்டிலிருந்து ராமனும் அவன் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் சேர்ந்து காட்டை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவர்களுக்கு முன்னால் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் நாய்கள் சங்கு வெடிக்குமளவிற்கு குரைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தன. அவற்றின் பற்கள் வெயிலில் பிரகாசித்தன. பசியின் கொடுமையால் அவற்றின் வால்கள் கம்பிச் சுருளைப் போல் விறைத்துக் கொண்டு நின்றன.
கடந்த சில இரவுகளாகவே பசியால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நாய்களின் தொடர்ந்து ஒலிக்கும் குரைத்தல் ஒலியாக ஒழுங்காக யாரும் தூங்கவே முடியவில்லை என்பதை புருஷன் நினைத்துப் பார்த்தான். மாலை நேரம் வந்து விட்டால் அவை ஊளையிடத் தொடங்கி விடுகின்றன. நள்ளிரவு நேரத்திலும்... ஏன் அதிகாலை நேரத்திற்கு முன்பும் கூட... மூடிக்கிடக்கும் பனிப் படலத்தைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கும் அவற்றின் குரைத்தல் சத்தத்தையும் ஊளைச் சத்தத்தையும் இப்போது கூட மனதில் நினைத்துப் பார்த்தான் புருஷன்.
இன்று அந்த நாய்களுக்கும் உற்சாகம் பீறிட்டு கிளம்பியிருக்கிறது. அவற்றின் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பற்களிலும், காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கும் குரைப்புச் சத்தத்திலும் அந்த உற்சாகத்தின் வெளிப்பாடு தெளிவாகத் தெரிந்தது.
“ராமன், நீங்க காட்டுக்கா போறீங்க?”
எல்லோரும் அருகுல் வந்தபோது, புருஷன் அழைத்துக் கேட்டான்.
“ஆமா... நீங்க எங்க போறீங்க?”
புருஷன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. ஒரு வேளை தான் கடல் பக்கம் போவதாகச் சொன்னால், தன்னுடைய பேரப் பிள்ளைகளில் மூன்று பேரையோ நான்கு பேரையோ கடல் பக்கமாகப் போகும்படி கிழவன் கூறலாம்.
“நீங்க எங்கேயும் போகலியா?”
ராமன் மீண்டும் கேட்டான். அவனின் குரல் ஒரு பெரிய பறை ஒலிப்பதைப் போல் இருந்தது.
“போகப் போறேன்...”
புருஷன் கவலையுடன் ஒரு பொய்யைச் சொன்னான்.
“ஆனால், எங்கே போறதுன்றதை இன்னும் நான் தீர்மானிக்கல...”
“காட்டுக்குப் போறது மாதிரி இருக்கா?”