
நீரின்மேல் விழுந்த மலர்கள் படகுகளைப் போல நீரோடு சேர்ந்து தூரத்தை நோக்கி பயணம் சென்றன.
புருஷன் அவற்றைப் பார்த்தவாறு அசையாது படுத்துக் கிடந்தான். இதுவரை நடந்ததெல்லாம் ஒரு கனவு போல் அவனுக்குத் தோன்றியது. எங்கோயிருந்தோ பறந்து வந்த ஒரு கிளி மலர்கள் நிறைந்த ஒரு மரக்கிளையில் போய் அமர்ந்தது. ஒரு கிளையை விட்டு இன்னொரு கிளைக்குத் தாவுகிறபோது அது மகிழ்ச்சியான குரலில் என்னவோ ஒரு செய்தியை வெளிப்படுத்துவதுபோல் தோன்றியது.
புருஷனுக்கு அதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. பரந்து கிடக்கும் இந்தக் காட்டிற்குள் யாருக்காக இந்தக் கிளி தன்னுடைய இனிமையான குரல் மூலம் செய்தி சொல்ல விரும்புகிறது என்று அவன் மனதிற்குள் நினைத்துப் பார்த்தான். ஒரு வேளை தன்னுடைய முன்னோர்களில் யாராவது ஒருவரின் ஆத்மா அந்தக் கிளிக்குள் இருந்து தன்னுடன் பேச விரும்பியிருக்கலாம் என்று அவன் எண்ணினான்.
திடீரென்று தோன்றிய உற்சாகத்துடன், புருஷன் படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்தான். அவன் அசைவுசத்தம் கேட்டு, கிளி உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு ஓடியது. பறந்து போகும்போது, உரத்த குரலில் அது என்னவோ கூறியவாறு ஓடியது.
ஆற்றின் அக்கரையில் வெயிலுக்குள் அந்தக் கிளி முழுமையாக மறைந்து போகும் வரை அதையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருந்தான் புருஷன். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நிமிஷத்தில் இதற்கு முன்பு தோன்றியிராத ஒரு தன்னம்பிக்கை அவன் மனதின் அடித்தளத்தில் அரும்பி பல்வேறு பக்கங்களிலும் கிளை பரப்பியது. இந்தக் காட்டுக்குள்ளிருக்கும் ஓசைகளும், மணமும், காற்றும் தன்னுடன் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு விதத்தில் நெருங்கிய பந்தம் கொண்டிருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். தன்னுடைய முன்னோர்களும், தன்னுடைய காவல் தேவதைகளும் அவர்களுக்கென்று இருக்கிற மொழியில் தன்னுடன் பேச தொடர்ந்து முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதாக அவன் மனதிற்குத் தோன்றியது. அவர்களின் அந்த மொழியைப் புரிந்து கொள்ள மனப்பூர்வமாக புருஷன் ஆசைப்பட்டான். ஒரு வேளை அந்த மொழியைக் கற்றுக் கொள்ள அவனுக்குச் சில நாட்கள் வேண்டி வரலாம். இருந்தாலும், நாட்கள் சிறிது ஆனாலும் கூட, தான் நிச்சயம் அந்த மொழியைக் கற்றே ஆவது என்பதில் அவன் மிகவும் பிடிவாதமாக இருந்தான். இதன் மூலம் காட்டுக்குள் தனக்கென்று- முழுக்க முழுக்க தனக்கென்றே இருக்கும் ஒரு சுதந்திர வாழ்க்கையை அவன் அடைந்து வாழ முடியும்.
இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கையில் இத்தகைய ஒரு பாதுகாப்பு உணர்வு தன் மனதில் என்றுமே தோன்றியதில்லை என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். அங்கே இதுவரை யாரும் அவனிடம், அவனுக்கே தெரியாத மொழியில் எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் பேசியதில்லை. ஆனாலும், இனி அப்படியல்ல. எந்த நேரத்திலும் அவனைச் சுற்றிலும் அந்தச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும்.
மனதில் உண்டான ஒரு உற்சாக உணர்வுடன் அவன் மாயாவைத் தட்டியெழுப்பினான். அவள் திடுக்கிட்டு எழுந்து, கண்களைக் கசக்கியவாறு, சுற்றிலும் பதைபதைப்புடன் பார்த்தாள்.
நாம் எப்படி இங்கே வந்தோம்? - மாயா கேட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. நடந்த விஷயங்கள் அனைத்தும் ஒரு கனவைப்போல அவளுக்குத் தோன்றியிருக்கலாம். கனவின் வழியாகப் பயணம் செய்து திடீரென்று உண்மைக்கு நடுவில் மனிதன் நிற்க வேண்டிய சூழ்நிலையை நினைத்துப் பார்த்து உரத்த குரலில் புருஷன் சிரித்தான்.
அவன் சிரிப்பதைப் பார்த்து, அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் அவள் கேட்டாள்.
“ஆமா... நீங்க ஏன் சிரிக்கிறீங்க?”
அவன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. ஆனால், தான் சிரிப்பதை நிறுத்தினான்.
“நாம இங்கேயிருந்து போக வேண்டாமா?” - மாயா கேட்டாள்.
“எங்கே போகணும்ன்ற?”
“எங்கேயா? எங்கேயாவது...”
“எங்கே போகணும்னு நீயே சொல்லு...” - புருஷன் சொன்னான்.
அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள் மாயா. அவள் ஒரு நீண்ட நேர யோசனையில் மூழ்கி விட்டாள். அவளின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் விழுவதையும், கண்களில் சிந்தனைக்குரிய கருத்த நிழல்கள் தெரிவதையும், புருஷன் ஆர்வத்துடன் பார்த்தான். கடைசியில் தளர்ந்து போன குரலில் அவள் சொன்னாள்.
“எனக்குத் தெரியல. எங்கே போகணும்னு எனக்குத் தெரியல!”
புருஷன் அவளின் கையைப் பிடித்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளை மெதுவாக தடவியபடி சொன்னான்.
“நாம எங்கேயும் போக வேண்டியது இல்ல. இந்தக் காட்டுலயே இருந்துட வேண்டியதுதான்.”
அவள் அமைதியாக அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டு அவள் மனதில் கவலை உண்டானது.
“எனக்குப் பசிக்குது”- புருஷன் சொன்னான்.
“நேத்து பிடிச்ச மீன் இருக்கு”- அவள் திடீரென்று பொறுப்பான இல்லத்தரசியாக மாறினாள்.
“நான் அதைச் சரி பண்ணித் தர்றேன்.”
அப்போதுதான் அவனுக்கே தான் பிடித்து வந்த மீன்களைப் பற்றி ஞாபகம் வந்தது. மாயா மீன்களைப் பற்றி சொன்னதும், அவளின் ஞாபக சக்தியைப் பார்த்து அவனுக்கே பொறாமையாக இருந்தது. எழ முயன்ற அவள் கைகளைப் பிடித்து அவன் சொன்னான்.
“நாம இங்கேயே ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பிப்போம். நான் இந்தக் காட்டு மொழியைக் கற்க ஆரம்பிச்சிருக்கேன். நிச்சயமா கொஞ்ச நாட்கள்ல நான் இந்த மொழியை முழுமையா படிச்சிடுவேன். இங்கே கேக்குற வண்டுகளின் ரீங்காரத்திலும் கிளிகளின் சத்தத்திலும் அசைகிற இலைகள் உண்டாக்குகிற ஓசையிலும் நானும் நீயும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமா இருக்கு. நம்மோட முன்னோர்கள் நம்ம கூட பேச விரும்புற வார்த்தைகளைத் தான் நம்மைச் சுற்றிலும் நாம கேட்டுக்கிட்டு இருக்குறோம். இந்த மொழியை மட்டும் கத்துக்கிட்டோம்னா, பிறகு நாம பயப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல. இந்த மொழியைக் கத்துக்குறது வரை இருக்கக்கூடிய கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் நீ பொறுமையா சகிச்சிக்கிட்டுத்தான் இருக்கணும்...”
அவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினான். அவனைப் புரிந்து கொண்டு அவனைச் சமாதானப்படுத்துகிற குரலில் அவள் சொன்னாள்.
“நிச்சயமா நான் சகிச்சிக்குவேன்.”
பக்கத்தில் இருந்த மரத்தின் கையெட்டும் தூரத்தில் இருந்த ஒரு கிளையில் இருந்த கடைசி பூ கீழே விழுந்தது.
நிர்வாணமாகக் காட்சியளித்த மரக் கிளைகளில் இருந்தும், செடிகளில் இருந்தும் குளிர் கிளம்பி பரவியது. மரக் கிளைகளில் இப்போதுதான் தளிர்கள் தோன்ற ஆரம்பித்திருந்தன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook