வண்டியைத் தேடி... - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
யாரிடமும் எதுவும் பேசவேண்டும் என்ற எண்ணம் புருஷனுக்கு உண்டாகவில்லை. தான் உண்டாக்கிக் கொண்ட செயற்கையான ஒரு கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் எழவில்லை.
பசியும், தாகமும் அவனுக்குத் தோன்றின. இடையில் அவன் எழுந்து சமையலறைப் பக்கம் போய்ப் பார்த்தான். அங்கே ஒரு பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் பழைய தண்ணீர் இருந்தது. அந்தப் பாத்திரத்தை உயர்த்திப் பிடித்து, அந்த நீர் முழுவதையும் அவன் குடித்தான்.
உள்ளேயிருந்த அறையில் அவன் எப்போதும் படுக்கும் கட்டிலில் அப்போதும் விரிக்கப்பட்டிருந்த துணிகள் கசங்கிக் காணப்பட்டன. தான் வீட்டை விட்டு போன பிறகு அந்தத் துணிகளை யாரும் கையால் கூடத் தொடவில்லை என்பதை புருஷன் புரிந்து கொண்டான். அந்தத் துணிகளில் இருந்து ஒரு பழமையான வாசனை வீசியது.
அவன் அந்தக் கட்டிலில் போய் விழுந்தான். தளர்ந்து போன ஒரு மனிதனைப் போல சுருண்டு படுத்தான். அவன் கண்களை உறக்கம் வந்து சூழ்ந்தது.
7
புருஷன் ஒரு பெரிய கூக்குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். உலகமே பயங்கர ஆரவாரமாக இருப்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது. எங்கோ யாரோ உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டின் முற்றத்தில் ஏராளமான ஆட்கள் ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவர்கள் ஓடும் காலடி சத்தமும் அவர்கள் உண்டாக்கிய ஆரவாரமும் காற்றைக் கிழித்துக் கொண்டு எதிரொலித்தது.
புருஷனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நடுராத்திரி நேரம் ஆகியிருந்தது என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்தது. அவனைச் சுற்றிலும் பயங்கர இருட்டாக இருந்தது.
தட்டுத் தடுமாறி அவன் எழ முயற்சித்தான். அப்போது வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
“புருஷா எழுந்திரு. எழுந்திரிடா...” - அழைத்தது அவன் தந்தைதான். அவன் குரல் நடுங்கியது. பரபரப்பும், ஆர்வமும் நிறைந்த குரலில் அவன் கத்தினான். “வண்டி வருது.”
அடுத்த நிமிடம் புருஷன் வேகமாக எழுந்தான். இருட்டில் எங்கோ தூரத்திலிருந்து மணியோசை ஒலிப்பது அவன் காதுகளில் விழுந்தது.
அவுசேப்பின் கையில் ஒரு லாந்தர் விளக்கு இருந்தது. கிழவனின் நடுங்கிக் கொண்டிருந்த விரல்களில் லாந்தர் விளக்கு இப்படியும் அப்படியுமாய் ஆடிக் கொண்டிருந்தது.
புருஷன் தன் தந்தையின் பக்கத்தில் போய் நின்றார். லாந்தர் விளக்கை தன் கையில் தரும்படி அவன் கைகளை நீட்டினான். ஆனால், கிழவன் அவன் கையில் விளக்கைத் தரவில்லை.
“நீ ஓடு. என்ன இருந்தாலும் உனக்கு வயசு குறைவுதானே! என்னால் விளக்கு இல்லாம பாதையைக் கண்டுபிடிக்க முடியாது.”
“அப்பா, நீங்களும் வர்றீங்களா என்ன?” - புருஷன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“பிறகு, வராம...” - பல வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக கிழவன் லேசாகப் புன்னகை செய்ததை புருஷன் உணர்ந்தான்.
புருஷனுக்கு முன்பே கிழவன் முற்றத்திற்கு வந்திருந்தான். அவனின் ஒரு கையில் லாந்தர் விளக்கும் இன்னொரு கையில் ஊன்றுகோலும் இருந்தன. படுவேகமாக கிழவன் ஓட ஆரம்பித்தான். கிழவனின் ஓட்டத்தைப் பார்த்து புருஷனே ஆச்சரியப்பட்டான். அவன் ஓட்டத்திற்கு புருஷனால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
நான்கு பக்கமும் பயங்கர இருள் சூழ்ந்திருந்தது. இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண் உரத்த குரலில் அழுவது கேட்டது. நீண்ட நேரம் அந்த அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
புருஷன் ஒரு நிமிடம் அப்படியே செயலற்று சிலையென நின்றுவிட்டான். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை.
திடீரென்று இருட்டுக்கு மத்தியில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சம் வந்தது ராமனின் வீட்டிலிருந்து என்பதை புருஷன் புரிந்து கொண்டான். வெளிச்சத்திற்கு மத்தியில் மீண்டும் அந்தப் பெண் குரல் கேட்டது. தொடர்ந்து அந்த வெளிச்சம் அணைந்தது. ராமனின் வீடும் மூடியது.
இருட்டைக் கிழித்துக் கொண்டு மீண்டும் அந்தப் பெண்ணின் அழுகைச் சத்தம் கேட்டது. இந்த முறை அந்தச் சத்தம் மிகவும் சமீபத்தில் கேட்டது.
கிழவன் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவன் அப்போது முன்னோக்கி ஓடிக் கொண்டுதான் இருந்தான்.
இருட்டுக்கு மத்தியில் வேறொரு மூலையில் திடீரென்று ஒரு பிரகாசம் தெரிந்தது. அது சுப்ரனின் வீட்டிலிருந்து வரும் வெளிச்சம் என்பதை புருஷன் புரிந்து கொண்டான். அந்த வெளிச்சத்திற்கு நடுவில் அந்தப் பெண்ணின் குரலும் காற்றைக் கிழித்துக்கொண்டு கேட்டது.
பிறகு அந்தப் பெண் குரலும் நின்றது. வெளிச்சமும் இல்லாமல் போனது. சுற்றிலும் இருட்டு மட்டுமே இருந்தது.
இருட்டில் எங்கே தூரத்திலிருந்து குதிரைகளின் குளம்பொலிகளும் மணிகளின் சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருப்பதை புருஷனால் புரிந்து கொள்ள முடிந்தது.
புருஷன் அங்கேயே நின்றிருந்தான். இருட்டுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருந்த அவுசேப் திடீரென்று உரத்த குரலில் கத்தினான்.
என்னவென்று திடுக்கிட்டு பார்த்தபோது கிழவன் கீழே விழுந்து கிடந்தான். அவன் கையிலிருந்த லாந்தர் விளக்கின் திரி மண்ணில் பட்டு, கடைசி முறையாகப் பெரிதாக சுடர்விட்டு எரிந்தது. பிறகு அது நிரந்தரமாக அணைந்தது.
இருட்டில் கிழவனின் சத்தமும் நின்றது.
மணிச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது சுற்றிலும் சூழ்ந்திருந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒரு சிரிப்புச் சத்தம் கேட்பதை புருஷன் உணர்ந்தான். அந்தச் சிரிப்புச் சத்தம் எல்லாத் திசைகளிலும் மோதி எதிரொலித்தது.
அது சேஷனின் சிரிப்பு என்பதைக் கண்டுபிடிக்க புருஷனுக்கு அதிக நேரம் ஆகவில்லை.
புருஷன் இருட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தான். அவனிடம் நம்பிக்கை என்ற ஒன்று முற்றிலுமாக வற்றி விட்டிருந்தது.