வண்டியைத் தேடி... - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
“எங்க வீட்டுக்குப் போக முடியாது” - மாயா சொன்னாள்.
“தாத்தாவுக்குத் தெரியாமத்தான் இந்தக் கல்யாணம் நடந்திருக்குது. அவருக்கு விஷயம் தெரிஞ்சா என்னையும் உங்களையும் கொன்னுட்டுத்தான் மறு வேலை பார்ப்பாரு.”
காலையில் கடலை நோக்கிப் போகிறபோது, ராமனும் மற்றவர்களும் காட்டைத் தேடி போன விஷயத்தை புருஷன் நினைத்துப் பார்த்தான்.
“ஆமா... ராமன்கிட்ட ஏன் இந்த விஷயத்தைச் சொல்லல?” - அவன் கேட்டான்.
“அதற்கு நேரம் கிடைக்கல. அவங்க எல்லோரும் காட்டுக்குப் போயிருக்காங்க. இன்னும் திரும்பி வீட்டுக்கு வரல.”
நீண்ட நேரம் புருஷன் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தான். அவனையும் அறியாமல் அவனின் கால்கள் மெதுவாக நடக்க ஆரம்பித்தன. கோவிலைத் தாண்டி அவன் கடலை நோக்கி நடந்தான். அவனுடன் ஒரு நிழலைப் போல மாயாவும் பின் தொடர்ந்தாள். தன்னுடைய கணவனின் மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும், அப்படிப்பட்ட நேரத்தில் தான் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது என்று அவள் நினைத்தாள்.
கடலையொட்டி இருந்த மணலில் நிலவு வெளிச்சம் பரவி விட்டிருந்தது. பனி இழையோடிய காற்று அவர்கள் மேல் மோதி வீசிக் கொண்டிருந்தது.
அப்படியே எவ்வளவு நேரம் நடந்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. கடைசியில் என்ன நினைத்தானோ, புருஷன் நின்றான். உரத்த குரலில் அவன் சொன்னான்.
“நாம காட்டை நோக்கிப் போவோம்.”
மாயா எதுவும் பேசவில்லை. அவன் என்ன சொன்னாலும் அவளைப் பொறுத்தவரை சம்மதம்தான்.
காட்டுக்குப் போகும் ஒற்றையடிப் பாதை வழியே நடக்கிறபோதுதான் புருஷன் தன்னுடைய தூண்டில்களைப் பற்றியும், தனக்குக் கிடைத்த மீன்களையும் நினைத்துப் பார்த்தான். மாயாவின் கழுத்தில் மாலை சூடும் நேரத்தில் அவன் அவற்றைத் தரையில் வைத்திருந்தான்.
“நான் ஒரு விஷயத்தை மறந்துட்டேன்” - வெட்கத்துடன் அவன் சொன்னான்.
“நான் அதை மறக்கல...”- அவன் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறான் என்பதைப் புரிந்து கொண்டவள் மாதிரி மாயா சொன்னாள். அவள் தனக்குப் பின்னால் ஒளித்து வைத்திருந்த கைகளை உயர்த்திக் காட்டினாள். அவளின் கையில் மீன்கள் அடங்கிய கூடை இருந்தது.
அதைப் பார்த்ததும் புருஷனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. தன்னுடைய மனைவியின் திறமையையும், புத்திசாலித்தனத்தையும் மனதிற்குள் பெருமையாக நினைத்தான் அவன். அவளை அவன் தன்னோடு இறுகச் சேர்த்து அவள் கண்களின் மேல் ஆசையுடன் முத்தமிட்டான்.
நிலவொளியில் அவள் கண்கள் பிரகாசித்தன.
“வா... நாம நடக்கலாம்”- அவன் அவள் கையைப் பிடித்தவாறு காட்டை நோக்கி நடந்தான்.
அவர்களின் நிழல்கள் மணல் மேல் ஓவியம் போல் விழுந்தன. சில நேரங்களில் அந்த ஓவியங்கள் சேர்ந்தன. சில வேளைகளில் பிரிந்தன.
நள்ளிரவு நேரம் தாண்டிய வேளையில் அவர்கள் காட்டின் முகப்பை அடைந்தார்கள்.
ஒற்றையடிப்பாதையில் ஆங்காங்கே நிலவொளி தெரிந்தது. அவர்கள் வந்திருப்பது தெரிந்தோ என்னவோ காட்டுக்குள் இருந்த மூன்று நான்கு கிளிகள் ஒன்றாகச் சேர்ந்து பாடின.
அவர்களுக்கு எந்தவித பயமும் தோன்றவில்லை. மரங்களுக்குப் பின்னாலிருந்து ஆந்தைகள் அலறின.
ஒருவரையொருவர் கைகளைக் கோர்த்தவாறு, மனதிற்குள் அலையடிக்கும் இசையுடன் அவர்கள் ஒற்றையடிப்பாதை வழியே நடந்து போனார்கள்.
காட்டின் இருட்டு அவர்களை மூடிக் கொண்டது. காட்டின் நிலவு அவர்களை முழுமையாக மறைத்துவிட்டது.
4
இரவு வெகு நேரம் ஆனபிறகு, நிலவு முழுமையாக நீங்கிவிட்ட பிறகு, காட்டின் மத்தியில் இருந்த ஒற்றையடிப்பாதை ஒரு ஆற்றில் போய் முடிந்தபோது, புருஷனும் மாயாவும் தங்களின் பயணத்தை முடித்துக் கொண்டார்கள்.
வரும் வழியில் அவர்கள் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கைகளைப் பிணைத்துக் கொண்டு ஒரே மாதிரி கால்களை எடுத்து வைத்து, ஒரே மாதிரியான இதயத்துடிப்புடன் நடந்தபோது அவர்களுக்கு தூரம் என்பது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.
இரண்டு பேருமே மிகவும் அமைதியாக இருந்தார்கள். தாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்திருப்பதை நினைத்து அவர்கள் தங்களையே முழுமையாக மறந்துவிட்டிருந்தார்கள். இந்த உறவின் மூலம் தாங்கள் ஒருவரோடொருவர் கட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். கைகளைப் பிரித்துக் கொண்டு பாதையோரத்தில் இருக்கும் காட்டுக்குள் நுழைந்து ஓடி தப்பித்தாலென்ன என்று இரண்டு பேருக்குமே தோன்றாமல் இல்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி தங்களை இறுகப் பிணைத்திருப்பதாக அவர்கள் மனதிற்குள் உண்டான நினைப்பு மற்ற தேவையில்லாத எண்ணங்களை இருந்த இடம் தெரியாமல் விரட்டின.
ஆற்று நீரின் மேல் நிலவொளி தெரிந்தது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, நிலவு காட்டுக்கு மேலே போய் முழுமையாக மறைந்தது.
“பசிக்குதா?” - புருஷன் கேட்டான்.
“எனக்குத் தெரியல”- மாயா சொன்னாள். அவள் தன்னையே மறந்திருந்தாள்.
“அப்படின்னா, நாம உறங்குவோம்” -அவன் சொன்னான்.
அவள் அவன் சொன்னதை மறுத்து எதுவும் சொல்லவில்லை.
ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் இசையென அவர்களின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது. அதைக் கேட்டவாறு அவர்கள் படுத்துக் கிடந்தார்கள். தங்களுக்குள் அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. காற்றுக்கேற்றபடி ஆற்றில் ஓடிக் கொண்டிருக்கும் நீரின் ஓசையும் மாறி மாறி கேட்டது. புருஷன் ஒரு கையை எடுத்து மாயாவின் இடுப்பைச் சுற்றினான். அவள் எப்போது செய்தாள் என்று தெரியவில்லை. தன்னை முழு நிர்வாணமாக ஆக்கிக் கொண்டிருந்தாள். அவனின் முரட்டுத்தனமான கை விரல்களுக்கு அடியில் அவளின் நிர்வாண உடம்பு ஆயிரம் இதழ்களைக் கொண்ட மலரைப் போல மலர்ந்தது.
காற்றில் குளிர் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆறு லேசாக ஓசையெழுப்பியவாறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. நிலா வெளிச்சம் ஆற்று நீரின் மேற்பகுதியில் பட்டு ஜொலித்தது.
புருஷன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான். அவனின் மீன் வாடை அடிக்கும் உதடுகளுக்கு மிகவும் நெருக்கமாக அவளின் அதரங்கள் இருந்தன. அவன் இடுப்பை நோக்கி தன்னைத் தானே நகர்த்திக் கொண்டு போய் நெருக்கமாக்கிக் கொண்டாள் அவள்.
அவர்கள் மீண்டும் சுயநினைவுக்கு வந்தபோது, ஆகாயத்தில் நிறைய மேகங்கள் காணப்பட்டன. அவர்களைச் சுற்றிலும் வசந்தத்தின் மணம் பரவிக் கொண்டிருப்பது தெரிந்தது. காட்டிற்கு மேலே ஒரு மதிய நேரம் விரிந்து நிற்பதை உணர முடிந்தது. ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த நீரில் தெரிந்த வளையங்களில் சூரியனின் கதிர்கள் தெரிந்தன.
இலைகளனைத்தும் உதிர்ந்து போய் பூக்கள் மட்டுமே மீதமாக இருந்த ஒரு மரம் ஆற்றின் மேற்பரப்பில் சாய்ந்து கிடந்தது. காற்று வீசுகிறபோது இரத்தச் சிவப்பு வண்ணத்தில் இருந்த மலர்கள் அந்த மரத்திலிருந்து உதிர்ந்து ஆற்று நீரில் விழுந்தன.