மந்திரப் பூனை - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10074
பெட்டிக்குள் கண்ட கண்ட சாமான்கள் எல்லாம் நிறைய வைத்திருந்தேன். பத்துப் பன்னிரண்டு நேந்திர வாழைப்பழங்கள் உள்ளே இருந்தன. கொஞ்சம் ஆரஞ்சுப் பழங்கள், மிட்டாய், இரண்டு கிலோ சர்க்கரை. அப்போது சர்க்கரை கிடைப்பது என்பது ஊரில் மிகவும் கஷ்டமான ஒரு காரியமாக இருந்தது. சர்க்கரை மட்டுமல்ல; அரிசியும்தான். நான் போயிருந்த நானூறுக்கும் மேற்பட்ட மைல்கள் தூரத்தில் இருந்த நகரத்தில் அரிசி எளிதாகக் கிடைத்தது. அங்கேயிருந்து கொண்டு வந்தால் அரசாங்கம் என்னைப் பிடித்து சிறைக்குள் பூட்டிவிடும். எந்த முட்டாள்தனமான அரசாங்கத்திற்கும் நாம் பயப்படத்தானே வேண்டிருக்கிறது. போலீஸ், பட்டாளம், சிறை, தூக்குமரம்- எல்லாமே அரசாங்கத்தின் பிடியில் இருக்கின்றன. இந்த இரண்டு கிலோ சர்க்கரைக்கு வேண்டுமானால் அரசாங்கம் எனக்குத் தண்டனை தரலாம். நல்ல தரமான ஒரு கிலோ தேயிலைகூட இருக்கிறது. அதற்குக்கூட தண்டனை இருக்கிறதோ என்னவோ? என் உடம்பு முழுக்க வியர்க்கத் தொடங்கியது. களைப்பு ஒன்றும் தோன்றியதாகச் சொல்வதற்கில்லை. பேசாமல் ரெயில்வே ஸ்டேஷனிலேயே தங்கியிருக்கலாம். இல்லாவிட்டால் அதிகாலை ஐந்து மணிக்கு வந்து சேரும் புகை வண்டியில் வந்திருக்கலாம். இருட்டு நேரத்தில் நடக்கும்போதுதான் இந்த எண்ணமெல்லாம் வருகிறது. நான் நடந்து செல்லும் பாதை ஒரே அமைதியாக இருக்கிறது. திடீரென்று ஒரு ஞாபகம். இந்தப் பகுதியில் நடந்து வருபவர்கள் நிறைய பேரை திருடர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கொன்றிருக்கிறார்கள் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு. நடந்து வருபவர்களின் கழுத்தை வெட்டுவது... பிறகு அவர்களிடம் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடுவது... சில நாட்களுக்கு முன்பு வரை இந்தப் பகுதியில் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒருவேளை இப்போதுகூட நடக்கலாம். மிகமிக எச்சரிக்கை உணர்வுடன், தேவைப் பட்டால் மட்டும் டார்ச் விளக்கை அடித்தவாறு வேக வேகமாக நான் நடந்தேன். எப்படியும் பன்னிரண்டரை மணிக்கு முன்னால் வீடு போய்ச் சேர்ந்து விடலாம் என்று தோன்றியது. தார் போட்ட பாதையை விட்டு ஒற்றையடிப்பாதை வழியே மலை இடுக்குகளைத் தாண்டி நடந்து போக வேண்டும். கிட்டத்தட்ட ஆள் நடமாட்டமே கிடையாது. ஒரு காரோ பஸ்ஸோ இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனால்கூட அந்தச் சிறிய பாதையில் வரப்போவதில்லை. வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இதைக் குறித்து ஆராய்ச்சி பண்ண வேண்டும். அதே நேரத்தில்... நாறிப்போன பழமையான நகரங்களின் ஆர்ப்பாட்டங்கள்! அட்டகாசங்கள்! இதற்காக எத்தனை லட்சம் ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள்! அதே நகரங்களை சுத்தமான நகரங்களாக வைக்க முடியும். அழுக்கே இல்லாத நகரங்களாக மாற்ற முடியும். மக்களிடம் பொது இடங்களில் மலமும் மூத்திரமும் கழிக்கக்கூடாது என்று சொல்ல வேண்டும். வீட்டையும் சுற்றுப் புறத்தையும் சுகாதாரமாக வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். இதை யார் யாரிடம் செல்வது? ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பழகிப்போன நம்பிக்கைகள்... மனதின் பிரதிபலிப்புத்தானா வீடும், சுற்றுப்புறமும்? நான் தற்போது குடியிருக்கும் வீடு நான் கட்டியதல்ல. நான் இங்கு வருவதற்கு முன்பே கட்டி இருந்தது. நியாயமாகப் பார்த்தால் அதைக் கட்டி குடியிருந்தவர்களின் எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்புதானே இந்த வீடும் சுற்றுப்புறமும்! நாங்கள் வரும்போது அழுக்கடைந்து அசிங்கமான நிலையில் இருந்தது இந்த வீடு. நாங்கள் விரும்பக்கூடிய விதத்தில் இதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம். வீடு நன்றாக இருக்க வேண்டுமென்றால், முதலில் வீட்டிலுள்ள ஆண் அது பற்றி கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் சௌபாக்யவதிகளும் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இப்போது மகளும், மகளின் தாயும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அநேகமாக தூங்கிக் கொண்டிருப்பார்கள். மகள், மகளின் தாய், கைஸுக்குட்டி- மூன்று பேரும் தற்போது படுக்கையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அதாவது- கட்டிலில். கொசுவலைக்கு உள்ளே. மகளுக்கும் கைஸுக்குட்டிக்கும் கட்டாயம் மின்விசிறி வேண்டும். மகளின் தாய்க்கு மின்விசிறியின் சத்தம் ஒத்து வராது. நரியோ வேறு ஏதாவது மிருகமோ வந்து கோழிகளைப் பிடித்தால் மின்விசிறியின் சத்தத்தில் அது கேட்காமலேயே போய்விடுமே! நான் வீட்டில் இல்லாததால் மின் விசிறியை சத்தம் இல்லாமலே... நான் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால்... எல்லாரும் உடனே படுக்கையைவிட்டு எழுவார்கள். விளக்கைப் போட்டுவிட்டு எல்லாரும் பெட்டியைச் சுற்றி நிற்பார்கள். முதலில் எல்லாரும் ஏதாவது தின்ன வேண்டும். அதற்கு மிட்டாய் இருக்கிறது. பழமும் ஆரஞ்சுப் பழமும் இருக்கின்றன. ஆமாம்... கைஸுக்குட்டி மிட்டாய் தின்னுமா? திடீரென்று ஒரு மாற்றம் நதி! ரயில் பாலம்... பாலத்தில் ஏறியபோது... அப்போதுதான் ஞாபகத்தில் வந்தது, சந்நியாசி! அவர் பாலத்திற்கு அடியில் இருக்கிறாரா? சிறிது நேரம் தயங்கி நின்றேன். பிறகு என்ன நினைத்தேனோ... பெட்டியைத் திறந்து மெழுகுவர்த்தியை எடுத்து எரியவிட்டு... டார்ச் விளக்கை அடித்தவாறு பார்த்தேன். கீழே ஒரு பக்கம் முழுவதும் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. மறுபக்கம் இறங்கி பாலத்திற்கு அடியில் சென்றேன். கீழே முழுக்க முழுக்க வெள்ளை மணல்... அந்த இடம் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டிருந்தது. மழை நனைக்காமல் இருக்கும் ஒரு இடத்தில் ஒரு அடுப்பு இருந்தது. அதற்கு அருகில் எரிப்பதற்காகப் பயன்படும் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது- நான் பார்த்த செடிகள் முழுக்க முழுக்க அவரைக் கொடிகள் என்று. ஏகப்பட்ட அவரைக்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. நான் கையிலிருந்து மெழுகுவர்த்தியை சிமெண்ட் தூணில் வைத்து எரியவிட்டேன். பெட்டியையும் குடையையும் மேலே வைத்தேன். மழை விழாத இடமொன்றில் சந்நியாசி தூங்கிக்கொண்டிருந்தார்- சிறு குழந்தைகள் படுத்திருப் பதைப்போல ஒரு காலை மட்டும் நீட்டிச் சரிந்தவாறு. அவருக்கு நேராக மேலே ஒரு காவி நிறத் துண்டு தொங்கிக் கொண்டிருந்தது. சந்நியாசிக்கு அருகில் ஒரு துணி மூட்டை, சங்கு, சூலம் ஆகிய அவரின் பிரிக்க முடியாத சொத்துகள்...
இதோ கிடக்கிறார் ஒரு மனிதர்! மக்களைப் பற்றியோ சமூகத்தைப் பற்றியோ எந்தக் குற்றச்சாட்டும் இவரைப் பொறுத்தவரை இல்லை. அரசாங்கத்தைப் பற்றியும் இல்லை. கடவுளைப் பற்றியும் இல்லை. யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் இல்லை. லோக ஸமஸ்தா ஸுகினோ பவந்து!
“மகாத்மா.'' நான் அழைத்தேன்.
“சுவாமிஜி...''
அவர் கண்களைத் திறந்தார். நான் வெளிச்சத்தில் நின்றிருந்தேன். புன்சிரிப்பு தவழ நீண்ட நேரம் என்னையே பார்த்தார். “வாங்க சுவாமிஜி'' என்று அழைத்தவாறு அவர் எழுந்து உட்கார்ந்தார்.