மந்திரப் பூனை - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10075
அந்தக் கை தீக்குச்சிபோல விறைத்துப் போயிருக்கும். நகங்கள் வளர்ந்து மூன்றடி நீளத்தில் காய்ந்து கருகிப்போன குருத்து இலைபோல காற்றில் "கலபலா” சத்தம் உண்டாக்குகின்றன. கண்ணால் பார்த்த சந்நியாசிகள்... கண்ணால் பார்க்காத சந்நியாசிகள்...
கைஸுக்குட்டியும் மகளும் மகளின் தாயும் நன்கு உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். உறக்கம். என்ன உறக்கம்? என்ன இருந்தாலும், உறக்கம் என்பது ஒரு கொடுப்பினைதான்.
தெய்வமே! யாரப்புல் ஆலமின்!
காலை நேரம் மிகவும் அழகாக இருந்தது. செடிகளும், மரங்களும், பூக்களும், பறவைகளும்- எல்லாமே அழகானவைதாம். சிந்திக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சிரிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. நான் புதிதாக வைத்திருக்கும் என்னுடைய மீசையைப் பார்த்து நானே வாய்விட்டுச் சிரித்தேன். மீசை உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் டெக்னிக் கலரில் அது இருந்தது- வெள்ளை, சிவப்பு, கறுப்பு, சாம்பல், மஞ்சள்... இப்படியொரு மீசை யாருக்குத் தேவை?
நான் சாயம் பூசி, மீசை முழுவதையும் கறுப்பாக்கினேன்.
மீசை இப்போது நன்றாக வந்திருந்தது.
என் மீசையைப் பார்த்து எல்லாரும் சிரித்தார்கள். மகளை முத்தமிட்டபோது “டாட்டோ... ஊசிபோல குத்துது... வலிக்குது...'' என்றாள் மகள்.
என்ன இருந்தாலும், மகள் பெண் இனமாச்சே! கைஸுக்குட்டியின் நகங்கள் பட்டு மகளின் உடல், முகம் என்று எல்லா இடங்களிலும் ஏகப்பட்ட கீறல்கள். அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட புகார் சொல்லாமல், என் மீசை குத்தும்போது மட்டும் ஊசிபோல் இருக்கிறதாம்.
அறிவாளிகளாக இருக்கும் நான்கு பேரிடம் இந்த மீசையைக் காட்டலாம் என்று போனால், நான் தேவையில்லாமல் ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டேன். இலக்கியவாதிகள் பலரும் இருக்கும் ஒரு கூட்டத்தில் போய் நான் சிக்கிக்கொண்டேன். "குடையை எடுத்துக் கொண்டு ஓடிப்போ” என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் என்பதுதான் விஷயம். நான் ஒரு இலக்கியவாதி இல்லையென்றாலும், எழுத்தாளர்களையும் எழுத்தாளிகளையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் மேல் நான் நல்ல மதிப்பும், பிரியமும் வைத்திருப்பவன். இவர்கள் பொதுவாக எதையுமே மிகைப்படுத்திப் பேசக்கூடியவர்கள். பத்து சதவிகிதம் உள்ளதை நூறு சதவிகிதமாக உயர்த்திப் பேசுவது இந்த இலக்கியவாதிகளின் இயல்பு. கூட்டம் படு கலகலப்பாக இருந்தது. யாரும் யாரையும்விட கீழானவர்கள் இல்லை அல்லவா! வீரம் கொப்புளிக்கும் வாதங்களும், எதிர்வாதங்களும், சவால்களும்! நிலவில் இறங்கிய ஒயிட் லெகான் சேவலைப்போல நான் இருந்தேன். என்னைப் பார்த்ததும் எல்லாரும் அமைதியாகிவிட்டார்கள். மீசை சம்பந்தமாக ஏதாவது சொல்வார்கள் என்ற ஆர்வத்துடன் இருந்தேன். நான் உட்கார்ந்தவுடன் கெ.டி. முஹம்மது என்ற எழுத்தாளர் பி.ஸி. குட்டி கிருஷ்ணன் அண்ட் உரூப் என்ற இரட்டைப் பெயர் கொண்ட எழுத்தாளரிடம் சொன்னார்:
“தெரியுதா? யார் இது? வைக்கம் முஹம்மது பஷீர். எங்களோட ஔலியா. இவர் இறந்துபோன பின்னாடி சந்தனக்குடம், கொடியேற்றம், வெட்டு, குத்து... பிறகு பணம் வசூல்னு ஒரே கொண்டாட்டம்தான்.''
அவர் சொன்னது ஒருவிதத்தில் எனக்கு சந்தோஷத்தைத் தந்தது. நான் இறந்தால் என்னை ஒரு மனிதக் கடவுளாக ஆக்கிவிடுவார்கள். சில நிமிடங்கள் அதிர்ச்சியடைந்த நான் கேட்டேன்: “என்னோட பிணத்தைப் பக்கத்துல வச்சிக்கிட்டுத்தானே இதையெல்லாம் செய்யப் போறீங்க? பணப்பெட்டிக்குப் பக்கத்துல என்னோட மகளின் தாயையும், மகளையும் உட்கார வைக்கலாம் இல்லியா?''
“இந்துக்கள், கட்டாயம் இதை எதிர்ப்பார்கள்.'' உரூப் என்ற பி.ஸி. இதை ஆட்சேபித்தார்: “இந்துக்களின் செத்துப்போன பிணத்தின் மேல்தான் முஸ்லிம்கள் பஷீரை ஔலியாவா ஆக்க முடியும்!''
நல்ல வேளை, நான் தப்பித்தேன். ஆனால்-
“இந்துக்களுக்கு இதில் என்ன வேலை?'' கெ.டி. முஹம்மது கேட்டார்: “எங்க விருப்பப்படி நாங்க செய்வோம். இஸ்லாமோட ஆளு பஷீர்...''
அவர் சொன்னது நியாயம்தான். எந்த நீதிமன்றமும் ஒத்துக்கொள்கிற விஷயம் இது. அதே நேரத்தில் உரூப் அண்ட் பி.ஸி. என்ற டபுள் பெயர் கொண்ட எழுத்தாளர் நூறு பேரின் சத்தத்தில் கத்தினார்.
“இந்துக்களின் தெய்வம்- வைக்கம் முஹம்மது பஷீர்.''
அங்கு கூடியிருந்தவர்கள் இதைக் கேட்டதும் நிசப்தமாகி விட்டார்கள். ஒரு இந்து- முஸ்லிம் சண்டைக்கான சரியான சூழ்நிலை அங்கு உண்டாகிவிட்டிருந்தது. ஆனால், பொதுவாக அங்கு கூடியிருந்தவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு. தடியாக இருந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கோபத்தில் மீசையை முறுக்கினார்கள். கூட்டத்திலேயே கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒரே ஆள்- ஜோசப் முண்டசேரியின் மகன் கரண்ட் தோமா. அவன் என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தான். கெ.டி. முஹம்மது மெல்லிய குரலில் சொன்னார்: “பி.ஸி., இந்துக்களான உங்களுக்கு தெய்வங்கள் நிறைய இருக்குல்ல...''
“இந்துக்களான நாங்கள்...'' உரூப் அண்ட் பி.ஸி. என்ற இந்து மிகவும் மகிழ்ச்சியான குரலில் சொன்னார்: “தெய்வங்கள் விஷயத்தைப் பொறுத்தவரை செல்வந்தர்கள்தான்னு சொல்லணும்... இருந்தாலும்...''
“பி.ஸி...'' இடையில் புகுந்து நான் சொன்னேன்: “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. நம்ம கேசவதேவ், லலிதாம்பிக அந்தர்ஜனம், எஸ்.கெ. பொற்றெக்காட், தகழி சிவசங்கரப்பிள்ளை, குட்டி கிருஷ்ண மாரார், ஜி. சங்கரக்குருப்பு, ஜோசப் முண்டசேரி, பொன்குன்னம் வர்க்கி, குற்றிப்புழ கிருஷ்ணபிள்ளை, எம்.ஸி. ஜோசப், மன்னத்து பத்மநாபன்- இவங்கள்ல யாரையாவது தெய்வமாக்குறதுதான் சரின்னு எனக்குப் படுது...''
“இல்ல...'' பி.ஸி. அண்ட் உரூப் என்ற டபுள் சொன்னார்: “எங்களுக்கு முஸ்லிம் தெய்வம் இல்ல... வழுக்கைத் தலை தெய்வமும் இல்ல. அதனாலதான் சொல்றேன். வைலாலில் வீட்டோட தலைவர் பஷீர்தான் தெய்வம்...''
“என்னோட மீசையைப் பத்தி என்ன நினைக்கிறீங்க.''
எல்லாரும் மீசையைப் பார்த்தார்கள். ஆஹா ஓஹோ என்று யாரும் பாராட்டவில்லை.
“மீசை பத்திரம்... எங்களோட சிவன்ற தெய்வத்துக்குக்கூட மீசை இருக்கு!''
“பி.ஸி... நாம இந்த அமைப்பை நல்லா வளர்க்கணும்...'' எம்.டி. வாசுதேவன் நாயர் என்ற மீசைக்கார எழுத்தாளர் சொன்னார்: “பஷீர் தெய்வத்தைப் பற்றி ஒரு வரி சுலோகங்கள், கதைகள், நாவல்கள், நாடகங்கள், பெருங்காப்பியங்கள்- எல்லாம் இயற்றணும். கரண்ட் தோமா என்ற கிறிஸ்துவர் எல்லா புத்தகங்களையும் அச்சடிச்சு வித்து காசாக்கிக்கிடட்டும்.''
நான் கரண்ட் தோமாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். அவன் சொன்னான்: “குருவே, மன்னிக்கணும். இலக்கியவாதிகள்ல பெரும்பாலானவங்க இந்துக்கள்தான். நானும் கரண்ட் புக்ஸும் இவங்ககூட சேர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். பஷீர் தெய்வமே... வணக்கம்!''
“இப்படியொரு முடிவுல இருக்கியாடா நீ?'' நான் சொன்னேன்.
“பிறகு... பி.ஸி...'' எம்.டி.வாசுதேவன் நாயர் என்ற மீசைக்கார இலக்கியவாதி சொன்னார்: