மந்திரப் பூனை - Page 35
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10074
சௌபாக்யவதி ராஜலா கண்ட கனவு சற்று வித்தியாசமானது. வாசலைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்து பார்த்தால், சௌபாக்யவதி ராஜலா, நீலகண்டனின் வயிற்றுக்குள் இருக்கிறாள். அவ்வளவுதான்... "அய்யோ” என்று கத்திவிட்டாள் ராஜலா. ஒவ்வொரு நாளும் அவளுக்கு இதே கனவுதான். இப்போது அவள் என்ன செய்வது?
சௌபாக்யவதி சௌமினிதேவி கண்ட கனவு அழகானது. பெரிதாக பயப்படும்படி ஒன்றுமில்லை. அவள் கண்ட கனவில், உடல் முழுக்க நகைகள் அணிந்த கோலத்தில் கைஸுக்குட்டி. காதுகளில் இரண்டு தங்கத்தாலான வளையங்கள்!
சௌபாக்யவதி கதீஜா பீபி எந்தக் கனவும் காணவில்லை. கனவு எப்படி வராமலே போனது? எனக்கு இது ஒரு அவமானம்போலத் தோன்றியது.
அப்போது வருகிறது கனவுகளான கனவுகளின் சிங்கம்!
இரவு முழுக்க ஒரே கூக்குரலும், ஆர்ப்பாட்டமும்! ஒரு லட்சம் நகங்களைக் கொண்ட ஒரு மிருகம் சௌபாக்யவதி கதீஜா பீபியின் நெஞ்சின்மேல் பாய்கிறது. அதை "யாஸைக் முஹயாதீன்” என்று சொல்லியவாறு பிடிக்கிறாள் அவள். வெளிச்சம் வந்தபோது, வெள்ளை யான ஒரு சிறிய மிருகம் "ம்யாவோ' என்று கத்தியவாறு ஜன்னல் வழியே பாய்ந்தோடுகிறது. சில நொடிகளில் அது இருட்டில் மறைந்தும் போகிறது. கதீஜா பீபியின் கையில் செத்துப்போன ஒரு எலி!
சௌபாக்யவதி ராஜலாவிற்கு அப்படியொரு கனவு ஏன் வரவேண்டும்?
அதை வெறுமனே விட்டுவிடத் தோன்றவில்லை.
சௌபாக்யவதிகள் எல்லாரும் கூடி ஆலோசனை பண்ணினார்கள். ஒருவேளை அது நீலகண்டனின் ஆவியாக இருக்குமோ? அப்படியானால் மந்திரவாதத்தை வைத்துதான் அதை விரட்டியடிக்க வேண்டும். மந்திரம் ஓதப்பட்டது. தகடு எழுதவும் தீர்மானிக்கப்பட்டது. கோவில்களில் வழிபாடு நடத்தவும் திட்டமிட்டார்கள்.
“இப்போ எப்படி இருக்கு ராஜலா?''
“ரொம்பவும் களைப்பா இருக்கு. வாந்தி வருது. எதைச் சாப்பிட்டாலும் ருசியே இல்ல. உறக்கம் வரமாட்டேங்குது. கொஞ்சம் கண்களை மூடினாலும், நீலகண்டன் என்னை எடுத்துத் தூக்கி அடிக்கிறான்...''
“தூக்கி அடிக்கிறானா? அப்படின்னா, குழந்தைக்கு...?''
“என் தெய்வமே! நீலகண்டன் அந்த அளவுக்கு நடப்பானா என்ன?''
ராஜலா ரொம்பவும் பயந்து போயிருந்தாள். இதிலிருந்து சௌபாக்யவதி ராஜலாவை எப்படிக் காப்பாற்றுவது? சங்குண்ணி வைத்தியரை அழைத்து ஆலோசித்தால் என்ன? பெயருக்குத்தான் அவர் வைத்தியர். அவரின் முக்கிய தொழில்- மந்திரவாதம்தான். சௌபாக்யவதி ராஜலாவின் கதையைக் கேட்ட சங்குண்ணி வைத்தியர் சொன்னார்: “இது உண்மையான ஆவியோட வேலைதான். தங்கத்தால் ஆன தகட்டுல எழுதணும். அறுபது ரூபா அதுக்கு ஆகும்!''
கடவுளே! யாரிடம் அறுபது ரூபாய் கேட்பது?
எப்படியோ... ராஜலாவின் இடுப்பில் ஒரு தகடு கட்டப்பட்டு விட்டது. நீலகண்டன் என்ற ஆவியின் தொந்தரவு எதுவும் அதற்குமேல் இல்லை. இப்போது அதிகம் களைப்பு இல்லை. வாய்க்கு ருசி வந்துவிட்டது. உறக்கமும் வருகிறது. வேறென்ன வேண்டும்?
“சௌபாக்யவதி ராஜலா, கவனமா கேட்டுக்கோ. பிரசவம் நல்லபடியா முடிஞ்சப்புறம், நாற்பது குளியல்லாம் முடிஞ்சு, தாயும் குழந்தையும் சுகமா இருக்குறப்போ, இடுப்புல கட்டியிருக்கிற தகடைக் கழட்டு. அதைத் திறந்து பார். உள்ளே அப்போ என்ன பாக்குறியோ... அதுக்கு மிட்டாய் வாங்கிக்கொண்டு போய் பாலவாடியில இருக்குற குழந்தைகளுக்குக் கொடு. மங்களம்!''
(இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தகடை இடுப்பில் கட்டுவதற்கு முன்பே, அதற்குள் ரகசியமாக பத்து அரை ரூபா நாணயங்களை நான் வைத்திருக்கிறேன்.)
சௌபாக்யவதிகளுக்கெல்லாம் ஏகப்பட்ட சந்தோஷம். ஒரு விபத்திலிருந்து தப்பி விட்டோம் என்ற மகிழ்ச்சிதான். இதன் மூலம் இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டு விட்டனவே! எல்லாரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கும்போது, இதோ உயிருடன் வந்து நின்று கொண்டிருக்கிறான் தோழன் நீலகண்டன்! அவன் முகத்தைப் பார்த்தபோது, வாழ்க்கை அனுபவங்கள் கொஞ்சம் கிடைத்திருப்பது தெரிந்தது. அவ்வளவுதான் - சௌபாக்யவதிகள் யாரும் அவனைப் பார்த்தது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. ஒளிந்து கொண்டாவது பார்க்காமலா இருப்பார்கள்?
வயிறு நிறைய நீலகண்டனுக்கு உணவு கொடுத்தேன். அப்போது தெற்குக் கடல் பகுதியிலிருந்து ஒரு சத்தம். என்ன நடந்தது? எல்லாம் தகர்ந்து கீழே விழும் ஓசை! கடல் பேரிரைச்சலோடு இங்கு வருகிறதா என்ன? ஒருவேளை இறுதிக் கட்டம் வந்துவிட்டதோ?
என்னவென்று பார்த்தேன். பயங்கரமான சத்தத்துடன் கடல் ஒவ்வொன்றையும் கீழே மோதித் தள்ளிக்கொண்டிருந்தது. அடித்துத் தகர்த்த கோலத்தில் கரை. கடலைப் பார்த்தாலே மனதில் பயம் வரத்தான் செய்கிறது. மனதில் அதை நினைத்தாலே நடுக்கம் உண்டாகிறது. சிறிய மனது. பெரிய கடல். நிர்மலமான ஆகாயம்.
பயம் தரும், அகன்ற, அழகான கடலே, சலாம்!
திரும்பி வந்தேன். பறவைகள் "க்ரீச்' சிட்டுக் கொண்டிருக்கின்றன. வண்டுகள் ஓசை எழுப்புகின்றன. மலர்கள் பல வண்ணங்களில் பூத்து அழகு காட்டிக்கொண்டிருக்கின்றன. மரங்கள் கம்பீரமாக தலையை உயர்த்தி நின்றுகொண்டிருக்கின்றன. வீடுகள்... மனிதர்கள்... பனிப் பிரதேசங்களில் பனி உருகினால் கரை முழுவதும் கடலுக்கு அடியில் போய்விடுமா?
கட்டாயம் அதுதான் நடக்கும்.
எல்லாமே ஒரு அற்புதத்தில்தான் நின்றுகொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் சங்கநாதம்! தொடர்ந்து மகளின் உரத்த குரல்:
“டாட்டோ... பீப்பி ஊதுற மிஸ்கீன்...''
நான் சென்று தெற்குப்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந் தேன். ஒரு கவருக்குள் ஒரு சிறு தொகையை வைத்து சந்நியாசியிடம் வழியில் ஏதாவது செலவுக்கு வைத்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டும் என்று அதை மகளின் கையில் தந்தேன். பிறகு... சட்டையைக் கழற்றிவிட்டு சென்றேன். ஒயிட் லெகான் சேவல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். சந்நியாசி, நீலகண்டனை மடியில் வைத்தவாறு சிமெண்ட் திண்ணையில் உட்கார்ந்திருத்தார். போர்வையையும், ஜமுக்காளத்தையும் மடித்து தோளில் இட்டிருந்தார். மகள் தந்த கவரை மாராப்பில் வைத்துக் கொண்டார். ஃப்ளாஸ்க்கையும், கண்ணாடி டம்ளர்களையும் எடுத்துக்கொண்டு வந்து சந்நியாசிக்கு அருகில் அமர்ந்தேன். தேநீர் குடித்து இருவரும் தலா ஒரு பீடி புகைத்தோம்.
அந்தப் பாலத்தின் அடிப்பக்கம் காலியாகக் கிடக்கிறது!
நாங்கள் இனி பார்க்கப்போவதில்லை. கடைசி பிரிவு. அவர் போகிறார். நானோ? நாங்கள் எழுந்து நின்றோம். சூலம் சப்தித்தது. சங்கு மாராப்புக்குள்!
நீலகண்டன் எங்களுக்கு மத்தியில் நின்றான். பக்கத்தில் மகள். மகளின் தாய் வாசல் படியில். சௌமினிதேவி, கதீஜா பீபி, ராஜலா, நாய், ஒயிட் லெகான் சேவல்- எல்லாரும் முற்றத்தில் நின்றிருக்கிறார்கள்.
சிறிதுநேரம் தியானத்தில் நின்ற சந்நியாசி கண்களைத் திறந்தார்:
“தனிமையான மலை உச்சியில் நான் இறந்து கிடக்குறதா நினைச்சுங்கோங்க. விடை கொடுங்க... ஆசீர்வதிங்க...''.
“நீங்க எங்களை ஆசீர்வதிங்க...''
ஆகாயத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு கண்கள்!
“எல்லா உலகங்களையும் எல்லா உயிரினங்களையும்...''
“கடல்களையும், மலைகளையும், உங்களையும், என்னையும், எல்லாவற்றையும் படைத்த-''
“முதலும் முடிவுமற்ற கடவுளே, உலகங்களை எல்லாம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வழி நடத்தும் உங்களின் ஆசீர்வாதம் எங்கள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்!''
“ஓம் சாந்தி! சாந்தி! லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து!''
மங்களம்.
சுபம்.