மந்திரப் பூனை
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10073
ஒரு மந்திரப் பூனையின் அவதாரத்தைப் பற்றி இப்போது நான் கூறப்போகிறேன். ஆரம்ப காலம் தொட்டே அற்புத நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கில் இந்த உலகத்தில் நடைபெற்று வந்திருக்கின்றன. அந்த மாதிரியான மிகப் பெரிய விஷயமில்லை இது. ஒரு சாதாரண பூனை எப்படி மந்திரப் பூனையாக மாறியது என்பதைத்தான் நான் இப்போது சொல்லப் போகிறேன். இந்த விஷயத்திற்குள் நுழைந்து போனால் தமாஷான சம்பவங்கள் பலவும் இருக்கின்றன.
உலகத்திலேயே இதுதான் முதல் மந்திரப் பூனையா? சந்தேகம்தான். பிரபஞ்சத்தின் வரலாறைப் பொறுமையாகப் புரட்டிப் பார்த்தால் இத்தகைய சம்பவங்கள் ஏராளமாக இருக்க வாய்ப்புண்டு. ஒருவேளை பலரும் இந்த மாதிரி விஷயங்களை அதிகம் கவனிக்காமல் விட்டிருக்கலாம். இப்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முழுமையான கவனத்தை வையுங்கள். சிவந்த கண்கள், சிரிக்கின்ற முக அமைப்பு, காதுகளிலும் முதுகிலும் வாலிலும் இலேசான சிவப்புக் கோடுகள். மீதி முழுக்க தூய வெள்ளை நிறம். வெறித்துப் பார்த்து "மியாவ்” என்று கத்துவதைக் கேட்டால் அப்படியே அன்புடன் தூக்கி வருடிக் கொடுக்கத் தோன்றும்.
இந்தப் பூனை இந்த வீட்டுக்குள் நுழைந்தது சங்கநாதத்தோடு என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனதிற்கு சுகமாகவே இருக்கிறது. அப்படியென்றால் பெரிய காரியம் ஏதாவது அப்போது நடந்ததா என்ன? அப்படிச் சொல்வதற்கில்லை. தாடி, மீசை, சடை எல்லாம் கொண்ட ஒரு இந்து சந்நியாசி இந்த வீட்டுக்கு வந்து சங்கநாதம் எழுப்பினார்.
அந்த சந்நியாசியைப் பற்றிக் கூறும்போதெல்லாம் "பீப்பி ஊதுற மிஸ்கீன்...” என்று என் ஐந்தரை வயது மகள் ஷாஹினா சொல்லுவாள். சந்நியாசிக்கு அப்போது எழுபது வயது இருக்கும். அதற்காக அவருக்கு நரை எல்லாம் விழுந்து விடவில்லை. பிரகாசமான கண்கள்... நீளமாக இருக்கும் சடையை இழுத்து உயரமாகக் கட்டி வைத்திருப்பார்... உடல் முழுக்க விபூதி... நிலத்தில் ஊன்றினால் ஒலி எழுப்பும் சூலம்... தோளில் ஒரு துணி... ஒரு கையில் வெள்ளை வெளேர் என மின்னிக் கொண்டிருக்கும் சங்கு... எத்தனையோ வருடங்களாக... யுகங்கள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது கடலுக்கு அடியில் கிடந்ததாக இருக்கலாம். எங்களின் வீட்டிற்குப் பின்னால் சிறிது தூரத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் இருக்கிறது. அதன் ஆர்ப்பாட்டத்தை அடக்கும் வண்ணம் கரை உயரமாகவே இருக்கிறது. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை! இருந்தாலும், கடலின் பேரிரைச்சலைக் கேட்கும் ஒவ்வொரு நிமிடமும்... பல விஷயங்களும் மனதில் அலை மோதுவதென்னவோ உண்மை. சந்நியாசிக்கு நாங்கள் இருபத்தைந்து பைசா கொடுப்போம். மீதி பிச்சைக்காரர்களுக்கு தலா பத்து பைசா தருவோம். இந்த இந்து சந்நியாசிக்கு மற்றவர்களைவிட அதிகமாகக் காசு கொடுப்பதற்கு ஒரு சிறிய காரணம் இருக்கிறது. முன்பு நானும் இதேபோன்ற ஒரு சந்நியாசியாக இருந்திருக்கிறேன். இந்து... பிறகு ஸுஃபி... ஆரம்பத்தில் தலையிலும் முகத்திலும் இருந்த ரோமங் களைச் சவரம் செய்து நீக்கினேன். கோவணம் மட்டும் அணிந்திருப் பேன். கறுப்புப் போர்வையையும் ஒரு கம்பையும் கையில் வைத்துக் கொண்டு... முடியும் தாடியும் நீளமாக வளர்கின்றன. எனக்கு அன்னியமாக உலகத்தில் ஒன்றுமில்லை. புல்லும், புழுவும், மரங்களும், ஜந்துக்களும், மிருகங்களும், கடலும், மலையும், பறவைகளும், சூரியனும், சந்திரனும், கோடானுகோடி நட்சத்திரங்களும், பூச்சிகளும், அண்டவெளியும், பிரபஞ்சங்களான சர்வ பிரபஞ்சங்களும்... எல்லாம், எல்லாம் நான்தான்! அனல்ஹக்!
அஹம் ப்ரஹ்மாஸ்மி!
காடும், மேடும், குகைகளும், பாலைவனங்களும் அடிக்கடி ஞாபகத்தில் வரும். கடலின் இரைச்சலைக் கேட்டவாறு நான் வராந்தாவில் உட்கார்ந்திருக்கிறேன். சாய்வு நாற்காலியில் வெறுமனே உட்கார்ந்திருக்கவில்லை. உலக இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிறேன். இது போதாதா? என்ன... தமாஷாக இருக்கிறதா? சொல்லப் போனால்- நான் இலக்கியவாதியே அல்ல. இதுவரை எழுதியவையும் இலக்கியமே இல்லை. ஏதோ மனதில் தோன்றுவதை எழுதி வைக்கிறேன். உலகத்தின் ஒரு மூலையில் நான் இருக்கிறேன். அதனால் நான் எழுதுவதை உலக இலக்கியம் என்று குறிப்பிடுகிறேன். அவ்வளவு தான். நான் இப்போது உட்கார்ந்து எழுதும் நாற்காலிக்கு நாற்பது, நாற்பத்தைந்து வயது இருக்கும். இது முன்பு அழகான மரமாக ஏதோ ஒரு அடர்ந்த காட்டில் இருக்கும்போது இதற்கு வயது என்னவாக இருந்திருக்கும்? தெரியவில்லை. ஈட்டி- அதாவது ரோஸ் வுட். ஸ்டூலும் ரோஸ் வுட்டால் ஆனதுதான். மேஜையில் எழுத பயன்படுத்தும் பொருட்கள் இருக்கின்றன. பக்கத்தில் கண்ணாடி டம்ளர்களும், ஃப்ளாஸ்க்கும். ஃப்ளாஸ்க்கில் பால் கலக்காத தேநீர். பிறகு... பீடி, சிகரெட், தீப்பெட்டி அருகில் ஒன்றிரண்டு நாற்காலிகள். ஆரம்ப நாட்களில் சந்நியாசி அந்த நாற்காலியில் உட்கார முடியாது என்று சொல்லிவிடுவார். காசு வாங்கியவுடன் புறப்பட்டுவிடுவார். வாரத்தில் ஒரு நாள் வருவார். அதற்குப் பிறகு அடிக்கடி வருவார். காசு வாங்குவதற்காக அல்ல. அவரைப் பொறுத்தவரை அவருக்கு காசு ஒன்றும் தேவையான விஷயமல்ல. முன்பு கஞ்சா குடித்துக் கொண்டிருந்தார். நானும்கூட அப்போது குடிப்பேன். இப்போது எப்போதாவது பீடி பிடிப்பார். சிகரெட் பிடிப்பதும் உண்டு. பால் போடாத தேநீர் குடிப்பார். சாப்பாடு ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை. இலைகள், பயறு ஆகியவற்றைச் சாப்பிடுவார். அரிசி கிடைத்தால், கிழங்கோ, பருப்போ, பயறோ- ஏதோ ஒன்றுடன் உப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வேக வைத்துச் சாப்பிடுவார். அதற்கும் தேநீருக்கும் உள்ள ஒரே பாத்திரம் அவர் தோளில் இருக்கும் துண்டில் எப்போதும் இருக்கும்.
சில நேரங்களில் எங்களின் இந்த தோட்டத்திலுள்ள ஏதாவதொரு மரத்தினடியில் அடுப்பை மூட்டி சமையல் செய்வார். எங்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து எல்லா வேலைகளையும் அவரே செய்வார். கடந்த ஒரு வருட காலமாக இந்த சந்நியாசி வசிப்பது சிறிது தூரத்தில் உள்ள ரெயில்வே பாலத்தின் அடியில்தான். நதியின் கரையோடு சேர்ந்துள்ள பாலத்தின் தூண்களுக்கு இடையில் உள்ள உயர்ந்த சிமெண்ட் திண்ணைதான் அவரின் இருப்பிடம். அவரின் உடலுக்கு மேலே மூன்றடி உயரத்தில் இரவு நேரங்களில் ஓசை எழுப்பிய வாறு பயங்கர சத்தத்துடன் புகை வண்டிகள் போய்க்கொண்டிருக்கும்.
"நீள வண்டி” என்றுதான் புகைவண்டியை என்னுடைய மகள் ஷாஹினா குறிப்பிடுவாள். சந்நியாசியும் நானும் வேதாந்தம், தத்துவம் என்று பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருப்போம்.