மந்திரப் பூனை - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10074
“மாளு, சௌம்யா, மிருணாளினி, திலோத்தமா, சரஸ்வதி, இந்திரா, பார்வதி, மாயா, பிரேமலதா, ஸ்ரீகுமாரி, தமயந்தி, பார்கவி, சீதா, ருக்மிணி, லட்சுமி, ஷோபனா, சாந்தா, தாட்சாயணி- இதுல எந்தப்பேரு உங்களுக்குப் பிடிச்சிருக்கு?''
சௌமினிதேவி என்ற சௌபாக்யவதி சொன்னாள்:
“ராஜலான்னு பேர் வச்சா எப்படி இருக்கும்?''
அவர்கள் யாரும் பேசவில்லை. மாமரத்தில் படர்ந்திருக்கின்ற மிளகுக்கொடிக்குக் கீழே இருந்த குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்த ஒயிட் லெகான் சேவல் "கொ... கொ... கொ...” என்று மெதுவாக அழைத் தான். அவன் அப்படி அழைத்ததும் அடுத்த நிமிடம் அவனுக்குக் கீழ்ப்படியும் குணத்தைக் கொண்ட அவன் மனைவிகள் அவன்முன் ஆஜர் ஆனார்கள். எல்லாரும் குப்பைகளைக் கொத்தித்தின்றார்கள். ம்... பொறாமைப்பட்டு என்ன பிரயோஜனம்?
“இந்துக்களோட பேரை வைக்க நான் சம்மதிக்கமாட்டேன்.'' பதறிப்போன குரலில் சொன்னாள் சௌபாக்யவதி கதீஜா பிபி. சிறிது நேர அமைதிக்குப் பிறகு உரத்த குரலில் அவள் சொன்னாள்: “இது என் வீட்ல பிறந்த பூனைக்குட்டி. மொத்தம் நாலு குட்டிகள் இருந்துச்சு. மூணு குட்டிகளை நரி கொண்டு போயிடுச்சு. நான் பொத்திப் பொத்தி பாதுகாத்து வளர்த்த குட்டி இது. இந்தப் பூனைக்குட்டிக்கு இஸ்லாம் பேர்தான் வைக்கணும்.''
அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது. இஸ்லாம் பூனைக்கு இஸ்லாம் பெயர்! இந்து பூனைக்கு இந்து பெயர்! சட்டம் இப்படியிருக்க, இஸ்லாம் பூனைக்கு எப்படி இந்து பெயரை வைக்க முடியும்? அவள் சொல்வது சரிதானே! அவள் கூறுவதை மறுக்க முடியுமா? இன்னொரு விஷயமும் இருக்கிறது. இப்போது சௌபாக்யவதி கதீஜா பீபி தேர்தலில் போட்டியிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய், சூரிய மண்டலம், சந்திர மண்டலம், பூமி- இந்த இடங்களுக்கு மகாராணியாக இருப்பதற்குத்தான். அவளுக்கு மூன்று வாக்குகள் நிச்சயம் கிடைக்கும். நான்காவது வாக்கும் கட்டாயம் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். தலையணை மந்திரம், கண்ணீர், முணுமுணுப்பு ஆகிய தொந்தரவுகளில் இருந்து நான் முற்றிலும் விடுபட வேண்டும் என்பதற்காகவாவது சௌபாக்யவதி கதீஜா பீபிக்கு கட்டாயம் வாக்களித்துவிடுவேன். என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சௌபாக்யவதி கதீஜா பீபி எங்கள் அனைவருக்கும் மிகவும் வேண்டியவள். சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு ஈருளியை மகளின் தாய்க்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்போவதாக போன வாரமே அவள் சொல்லியிருக்கிறாள். நூறு தென்னைமடல்- அதற்கு எப்போது வேண்டுமானாலும் காசு கொடுக்கலாம் என்ற வாக்குறுதியுடன் சௌபாக்யவதி ராஜலாவுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறாள் சௌபாக்யவதி கதீஜா பீபி. அதைக் கிழித்து காய வைத்து, அதற்குப் பிறகு வீட்டின் மேற்கூரையாக அதை வைத்து அவள் வேய வேண்டும். அரிசி கிடைப்பதே மிகமிக கஷ்டமாக இருக்கும் காலம் இது. சொல்லப்பேனால் உணவுப் பிரச்சினை என்பது இங்கு ஒரு மிகப்பெரிய விஷயமாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் சௌபாக்யவதி கதீஜா பீபியிடம், சௌபாக்யவதி சௌமினிதேவி நான்கு படி கோதுமை கடனாக வாங்கி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை வாங்கிய அந்த கோதுமையை ஏன் திருப்பித்தரவில்லை என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பாளா சௌபாக்கியவதி கதீஜா பீபி?
அவள் பக்கம் நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது.
“பிறகு...'' சௌபாக்யவதி கதீஜா பீபி சொன்னாள்: “அல்லா எந்தக் குறையும் வராம பார்த்துக்கணும். இப்போ இந்தப் பூனை செத்துப் போகுதுன்னு வச்சுக்கோங்க, ரூஹ் எங்கே போகும்?''
அவள் ஆன்மிக விஷயத்திற்குள் நுழைந்துவிட்டாள். மரணத்திற்குப் பிறகு இந்தப் பூனையின் ஆத்மா எங்கே போகும் என்று கேட்கிறாள். இதில் என்ன சந்தேகம்- கட்டாயம் நரகத்திற்குத்தான் போகும்.
“அதனால...'' சௌபாக்யவதி கதீஜா பீபி சொன்னாள்: “அது சொர்க்கத்திற்குப் போகணும். அப்படின்னா இஸ்லாம் பேருதான் அதுக்கு வைக்கணும்.'' சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்: “கைஸு, கைஸும்மா, கைஸுமோள்- இதுதான் இந்தப் பூனைக்குட்டியோட பேரு...''
மகிழ்ச்சி. யாரும் ஒரு வார்த்தைகூட மறுத்துப் பேசவில்லை. அதற்கான தைரியம் யாருக்கும் இல்லை என்பதே உண்மை. அதற்காக நான் சும்மா இருக்க முடியுமா? மீசை வைக்கப்போகிற நான்... தைரியமாக என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள்... இலேசாக முணுமுணுத்தேன்.
“ம்க்கும்... இந்த வீட்ல பெண்களோட எண்ணிக்கை பெருகிப்போச்சு. பதினேழு பெண் கோழிகள், நாலு பெண் பசுக்கள், ஒரு பெண் நாய், மகள், மகளோட தாய்... இப்போ ஒரு பெண் பூனை... ம்க்கும்... பெண்களோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு!''
திடீரென்று மனதில் தோன்றியது- பெண் பசு, ஆண் பசு! சொல்வதற்கு நன்றாகவே இருக்கின்றனவே! சந்தர்ப்பம் அமைந்தால் உலக இலக்கியம் படைக்கிறபோது இந்த வார்த்தைகளைப் பொருத்தமான இடங்களில் உள்ளே நுழைத்துவிட வேண்டும். இப்படிப் பல விஷயங்களையும் நினைத்துக் கொண்டிருக்கும்போது சௌபாக்ய வதிகள் கதீஜா பீபி, ராஜலா, சௌமினிதேவி மூவரும் எந்தவித காரணமும் இல்லாமல் என்னை முறைத்துப் பார்த்தவாறு அவர்களின் புடவைகள் "பரபர” என்று சத்தம் கேட்கிற மாதிரி பந்தாவாக என்னைத் தாண்டி வேகமாக நடந்து போனார்கள்.
எதற்கு இந்த முறைப்பு?
மகள் கைஸுக்குட்டியுடன் வந்தாள்.
கைஸுக்குட்டியின் கழுத்தில் இரண்டு பாசி மாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. சிவப்பு ரிப்பனால் ஆன ஒரு கழுத்துப்பட்டை வேறு.
மகள் பூனைக்குட்டியிடம் சொன்னாள். அதன் அர்த்தம் என்னவென்றால், தன் தந்தையைப் பூனைக்குட்டிக்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள்.
“கைஸுக்குட்டி... இங்க பாரு- இதுதான்... என்னோட டாட்டோ...''
நானும் பூனைக்குட்டியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். நான் சின்ன குரலில் ஒரு அல்சேஷன் நாய் மாதிரி குரைத்தேன்:
“பௌ... பௌ...''
பூனைக்குட்டி கேட்டது:
“ம்யாவ்...?''
மகள் சொன்னாள்:
“கைஸுக்குட்டி... பயப்படாதே. டாட்டோ சும்மா குரைச்சாங்க...''
இந்த நேரத்தில் மகளின் தாய் அங்கு வந்தாள். எந்தவித காரணமும் இல்லாமல் என்னைப் பொசுக்கி விடுவது மாதிரி ஒரு பார்வை பார்த்தாள். இந்த நெருப்பு போன்ற முறைப்பு கொண்ட பார்வையை இங்கு நான் குறிப்பிடுவதற்குக் காரணம்- பெண்மணிகளான சௌபாக்யவதிகள் எப்படி ஆண்களின் இதயத்திற்குள் இந்தக் கூரிய பார்வையை அம்பு மாதிரி பயன்படுத்துகிறார்கள் என்பதை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இப்படி முறைத்துப் பார்க்கிற அளவிற்கு நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன். எனக்கே ஒன்றும் புரியவில்லை. இதுவரை சௌபாக்யவதிகளான இந்தப் பெண்மணிகளின் நெருப்பு போன்ற இந்தக் கூரிய பார்வை என்மேல் பல முறை அம்புபோல பட்டிருக்கிறது. இதன் காரணம் என்னவாக இருக்கும்?