மந்திரப் பூனை - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10074
கண்களும் என்னையே உற்றுப் பார்த்தன. எனக்கே கூச்சம் வரும்போல் இருந்தது. அதனால் மெல்ல அவர்களைவிட்டு அகன்றேன். மனம் என்னவோபோல் இருக்கும்போது அதற்கு சரியான மருந்து சங்கீதம் என்று சொல்வார்கள். மனிதனுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அற்புதமான விஷயம் சங்கீதம். நான் ரேடியோகிராமின் பொத்தானை அழுத்தி, மேதையான பண்டிட் ரவிசங்கரின் ஒரு இசைத்தட்டை முழங்க வைத்தேன். ராகங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்றாலும் அவரின் சிதார் இசையில் என்னையே மறந்து, முழுக்க முழுக்க என்னை இழந்து கண்களை மூடி அப்படியே உட்கார்ந்து விட்டேன். அதற்காக என்னைச் சுற்றியுள்ள உலகம் அமைதியாக இல்லை. நான் கண்களைத் திறந்து பார்த்தபோது மகளின் தாயும், மற்றவர்களும் பலாமரத்திற்குக் கீழே நின்று கொண்டிருந்தார்கள்.
“ஒரு புதுமையான விஷயத்தைச் சொல்றேன் கேளுங்க.'' ஏதோ ஒரு விஷயத்திற்குப் பீடிகை போடுகிற மாதிரி மகளின் தாய் பேசினாள்: “நாங்க இந்த இடத்தையும் வீட்டையும் வாங்கியவுடனே, இந்தப் பலாமரம் காய்க்க ஆரம்பிச்சிடுச்சு.''
எப்போதுமே அசாதாரண விஷயங்களை நம்புவதில் மனிதர்களுக்கு ஒரு ஆர்வம் உண்டு. குறிப்பாக பெண்மணிகளான சௌபாக்யவதி களுக்கு. மனித இனம் தோன்றியது முதல் இந்த நிமிடம் வரை உள்ள சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் இந்த உண்மை தெரியவரும். சொல்லப்போனால் சௌபாக்யவதியான மகளின் தாய்க்கு கொஞ்சம் மிகைப்படுத்தாமல் எதையும் பேசத் தெரியாது. நாங்கள் வீட்டுக்கு வந்தவுடன், இந்தப் பலா மரத்தில் ஒரு காய் காய்த்தது. அது கொஞ்ச நாட்களில் பழுத்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் யாருக்கும் கொடுக்காமல் நாங்கள் மட்டும் அதைச் சாப்பிட்டோம். நல்ல தேன் பலா. எல்லாம் முடிந்தபிறகு, எதுவும் நடக்காதது மாதிரி நாங்கள் முற்றத்தில் நடந்து திரிந்தோம். மகள், மகளின் தாய், நான்- எல்லாருமே பலா மரத்தை மகிழ்ச்சியுடன் பார்த்தோம். நான் அந்த மரத்தின் அருகில் சென்று மரத்தை அப்படியே இறுகத் தழுவி முத்தமிட்டேன். பிறகு மெல்ல சொன்னேன்:
“மகிழ்ச்சி... அற்புதமான பலா மரமே! உனக்கு நன்றி. உன் மரத்துல இருந்த பலாப் பழத்துக்குத்தான் என்ன சுவை! யாருக்கும் தராமல் நாங்கள் மட்டும் சாப்பிட்டோம். வர்ற வருஷம் நீ நாலு பழங்கள் தரணும். ஒண்ணு- மகளுக்கு, ஒண்ணு- மகளோட தாய்க்கு, ஒண்ணு- எனக்கு, ஒண்ணு- பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு. மறந்துடக் கூடாது!''
பலா மரத்திற்கு ஆத்மா இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் அப்போது நான் யோசிக்கவில்லை. இந்த சந்நியாசி அந்தச் சமயத்தில் இந்த ஊருக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். பலா மரத்திற்கு ஆத்மா இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி... பலா மரம் படைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? பழம் தருவது! அது தருகிறது. தந்தது. சொன்னது மாதிரியே நான்கு பழங்களைத் தந்தது. பழம் பழுத்த பிறகு, பெரிய பழமாகப் பார்த்து அதை மூன்றாக அறுத்து சௌபாக்யவதிகளான சௌமினிதேவி, கதீஜா பீபி, ராஜலா ஆகியோருக்குக் கொடுத்தோம். அவர்களும் அவர்களின் கணவர்களும் அதை விரும்பிச் சாப்பிட்டார்கள்.
மகளின் தாய் சௌபாக்யவதிகளிடம் கேட்டாள்:
“பலாப்பழம் எப்படி இருந்துச்சு?''
மூன்று பேர்களும் மூன்று வெவ்வேறு விதமாக பதில் கூறினார்கள்.
“தேன்போல இருந்துச்சு!''
“நெய் அல்வாபோல இருந்துச்சு!''
“பேரீச்சம்பழம்போல இருந்துச்சு!''
“இன்னொரு விஷயம் சொல்றேன். கேட்டுக்கோங்க.'' மகளின் தாய் கொஞ்சம் கவலை தோய்ந்த குரலில் சொன்னாள்: “மகளும் நானும் இன்னைக்கு வீட்ல இருக்க மாட்டோம்!''
விஷயம் என்ன தெரியுமா? மகளின் தாய் பஸ்ஸில் பயணம் செய்யும்போது, வீட்டில் சாதாரணமாக கட்டிலில் உட்கார்ந்திருக்கிற மாதிரி உட்கார்ந்திருப்பாள். எதையும் அவள் பிடிப்பதில்லை. பஸ் வளைவில் திரும்புகிறபோது இந்த சௌபாக்யவதி தடுமாறிக் கீழே விழப் பார்ப்பாள். இது என்றைக்குமே நடக்கிற ஒரு காட்சி. ஒவ்வொரு நிமிடமும் "கம்பியை ஒழுங்கா பிடிச்சுக்கடி” என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நான் சொல்லவில்லையென்றால், நிச்சயம் அவள் கீழே விழப்போவது உறுதி. இதோ, மகளின் தாய் என்ற சௌபாக்யவதி... நாங்கள் பஸ்ஸில் ஒரு இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களின் இரண்டு நண்பர்கள், மகள், மகளின் தாய், நான்... வெளியே நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. நதியில் நீர் கலங்கலாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நதியில் வரும் வெள்ளப்பெருக்கைப் பார்க்கிறபோதே பயங்கரமாக இருந்தது. மகளின் தாய்க்கு நீச்சல் தெரியாது. இவ்வளவும் சொல்வதற்குக் காரணம்- பஸ் மிதவை மூலம் நதியைக் கடந்து செல்ல வேண்டும். எந்தவித பிரச்சினை யும் இல்லாமல் பஸ்ஸும் நாங்களும் நதிவரை வந்துவிட்டோம். மிதவை சாலை ஓரத்தில் உள்ள பெரிய செடிகளில் கட்டப்பட்டிருந்தது. சாலைக்கு மேலே நீரில் அது மிதந்து கொண்டிருந்தது. இரண்டு பெரிய படகுகளை ஒன்றாக இணைத்துக்கட்டி அதோடு சேர்த்து மிதவையைக் கட்டியிருந்தார்கள்.
எல்லாரும் பஸ்ஸை விட்டு இறங்க ஆரம்பித்தபோது எனக்கு நன்கு அறிமுகமான பஸ் டிரைவர் சொன்னார்:
“அம்மாவும் பாப்பாவும் பஸ்லயே இருக்கட்டும்!''
பெண்மணிகளான சௌபாக்யவதிகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு சலுகை இது!
நானும், மற்ற பயணிகளும் குடையை விரித்துப் பிடித்தவாறு கீழே இறங்கினோம். சாலையில் இருந்து இரண்டு பலகைகள் வழியே பஸ் "குர்ர்ர்...” என்று மிதவையில் ஏறப்போகிறது. இதற்கு முன்புகூட பலமுறை பஸ் இந்த மாதிரி ஏறியிருக்கிறது. இப்போது அதே மாதிரி ஏற வேண்டியதுதான். ஆனால், மகளின் தாயும், மகளும் பஸ்ஸின் முன்னிருக்கையில் சிலைபோல உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் எதையும் பிடிக்கவில்லை. எதையாவது பிடித்துக்கொள்ளச் சொல்ல பக்கத்தில் நான் இல்லையே! ஆனால், விஷயம் அதுவல்ல. என் மனதில் இலேசாக ஏதோ தோன்றியது. விபத்து முன்னெச்சரிக்கை... என்று சொல்வதற்கில்லை. சாதாரணமாக எந்த முட்டாள் கணவனுக்கும், தந்தைக்கும் தோன்றக்கூடிய ஒரு எண்ணம்தான் எனக்கும் தோன்றியது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் உரத்த குரலில் அழைத்துச் சொன்னேன்:
“அடியே... மகளையும் தூக்கிக்கிட்டு கீழே இறங்கு. குடையைக் கையில எடுத்துக்கோ...''
எங்களின் சிறிய பேக் அப்போது என் கையில் இருந்தது. அதை ஏன் என் கையில் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்தேன்? அது பற்றி எல்லாம் இப்போது ஒன்றும் கூறுவதற்கில்லை. அதில் கொஞ்சம் பணம் இருந்தது. இருந்தாலும், அதை பஸ்ஸிலேயே வைத்துவிட்டு இறங்கியிருக்கலாமே! மற்ற பயணிகளின் உடைமைகள் எல்லாம் பஸ்ஸுக்குள் தான் இருந்தன.
மகளைக் கையில் தூக்கியவாறு மகளின் தாய் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கினாள்.