மந்திரப் பூனை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10074
சில நேரங்களில் தவறுதலாக ஏதாவது செய்து விடுவேன். காலால் தொடக்கூடாத இடத்தில் என் கால் பட்டுவிடும். இப்படி எத்தனையோ தவறுகள்! இப்போது இந்த மாதிரி விளையாட்டுகளில் என்னால் முழுமையாக ஒன்ற முடியவில்லை. நான் வேண்டுமானால் சமையலறைக்குப் போகிறேன். மகளின் தாய் வந்து நொண்டி விளையாட்டு விளையாடினால் என்ன?
“மகளே, அம்மா எங்கே?''
மகள் சொன்னாள்:
“அம்மா பேசிக்கிட்டு இருக்காங்க.''
மகள் சொன்னது சரிதான். ராஜலா, கதீஜா பீபி, சௌமினிதேவி ஆகிய மூன்று சௌபாக்யவதிகளுடன் வேலிக்கு அருகில் நின்றவாறு என் மனைவி பேசிக்கொண்டிருக்கிறாள். அவர்கள் எல்லாருக்குமே ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். இருந்தாலும் இந்த சௌபாக்யவதிகள் பெண்கள் ஆயிற்றே! அவர்கள் என்னென்ன விஷயங்களைப் பற்றியெல்லாம் பேச வேண்டியதிருக்கும்!
நான் சொன்னேன்:
“மகளே... டாட்டோவுக்கு கொஞ்சம் எழுத வேண்டிய வேலை இருக்கு. நீ போயி அம்மாவைக் கூப்பிட்டு வந்து விளையாடு... என்ன?''
மாமரத்திற்குக் கீழே நான் ஒரு ஊஞ்சல் கட்டித் தொங்க விட்டிருக்கிறேன். அதைச் செய்திருப்பதே மகளுக்காகத்தான். ஆனால், அதில் உட்கார்ந்து ஆடுவது பெரும்பாலும் யார் தெரியுமா? மகளின் தாய், சௌமினி தேவி, ராஜலா, கதீஜா பீபி ஆகிய சௌபாக்யவதிகள் தாம். சில நேரங்களில் ஊஞ்சலில் ஆட அவர்கள் மகளையும் அனுமதிப்பது உண்டு.
மகள் சொன்னாள்:
“டாட்டோ... டாட்டோ... சொன்னீங்கள்ல... பூச்சி ஒண்ணு... தேளு... தோட்டத்துல போய்க்கிட்டு இருக்கு...!''
என்ன இருந்தாலும் பெண் இனமாச்சே! சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.
நான் பேனாவை மூடி வைத்துவிட்டு, ஒரு பீடியைப் புகைத்தவாறு முற்றத்தில் இறங்கினேன். அப்போது ஒயிட் லெகான் சேவல் என்னுடைய நாற்காலியில் வந்து உட்காருவதற்காக நாலடி முன்னால் நடந்து வந்தான். நான் கோபத்துடன் சத்தம் போட்டேன்:
“டேய்... உன்னையும் உன்னோட மனைவிமார்களையும் நான்...'' பாதிதான் சொல்லி இருப்பேன். அதற்குள் மகள் என்னை பயமுறுத்தினாள்.
“இருங்க... இருங்க... அம்மாக்கிட்ட சொல்றேன்.''
“அம்மாக்கிட்ட சொல்லுவியா? சொல்லு... எல்லாத்தையும் நான் அடிச்சு மிதிக்கப் போறேன்... கோழி, பசு, நாய், அம்மா, மகள் எல்லாரையும்...''
அவ்வளவுதான்-
மகளின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. மகள் சொன்னாள்:
“எல்லா வீட்லயும் நிறைய குழந்தைங்க இருப்பாங்க. இந்த வீட்ல ஒரு அம்மாவும் ஒரு டாட்டோவும் மட்டும்தான். கேட்டா, டாட்டோ சொல்றீங்க அடிச்சு மிதிப்பேன்னு...''
மகள் இப்படிச் சொன்னதும் அவளை அப்படியே வாரி எடுத்து, நாற்காலியில் வந்து அமர்ந்தேன்.
“மகளே... டாட்டோ சும்மா சொன்னேன்டா கண்ணு...'' என்று சொல்லியவாறு, வேண்டுமென்றே கோபக் குரலை வரவழைத்துக் கொண்டு மகளின் தாயை அழைத்தேன்.
“அடியே...!''
ஒரே நிசப்தம். நான் அழைத்தது அவள் காதில் விழுந்திருக்கும். இருந்தாலும், பதிலைக் காணோம். வீட்டில் உள்ள யாருக்கும் என்னைப் பார்த்து பயம் கிடையாது. ஒயிட் லெகான் சேவல் என்னை நான்கைந்து முறை கொத்தியிருக்கிறான். எங்களின் பசுக்களில் பெரிய பசுவான கறுப்பி இரண்டு முறை என்னை முட்டியிருக்கிறாள்- அதுவும் பயங்கர பலத்துடன்.
“அடியே...!''
அவள் இப்போதும் நான் அழைத்ததைக் கேட்டது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. கணவர்கள் மனைவிகளின் கூந்தலை இழுத்துப் பிடித்து கன்னத்தில் இரண்டு இடி இடித்தால்தான் அவர்கள் சரியாக வருவார்கள்! இந்தத் தத்துவத்தை நான் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டேன். ஆனால் நான் ஒரு ஹென்பெக்ட் ஹஸ்பெண்ட் ஆச்சே! ஹென்பெக்ட் என்பதுடன், காக்பெக்ட் என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பசு என்னைக் குத்திவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.
“அடியே!''
“என்ன?'' தூரத்தில் இருந்து அவள் குரல் கேட்டது. நாதப்ரம்மம் மாதிரி ஒன்பதாவது முறை அழைத்தபோதுதான் அவளிடமிருந்து பதிலே வருகிறது. பதில் கூறியவாறே மெதுவாக நடந்து வந்த அவளைப் பார்த்து நான் சொன்னேன்:
“மகளோட விளையாட்டுத் தோழிகள் விஷயத்துல நீ கொஞ்சம் கவனம் செலுத்தணும். சொல்லப்போனா, இது சத்தியாகிரகங்களோட காலம். மரணத்தைத் தழுவினவங்களும், இப்போ வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவங்களுமான நம்மோட மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் தலைவர்கள் நமக்குத் தந்திருக்கிற ஒரே ஆயுதம் இதுதான். எப்போ எதுக்குன்னு இல்லாம எப்ப வேணும்னாலும் இஷ்டம்போல இதை எடுத்துப் பயன்படுத்தலாம். ஜாக்கிரதை! மரணம் வரை உண்ணாவிரதம்! புரியுதா? அப்பாவையும் அம்மாவையும் மாத்தணும்னு மக்கள் வீட்டுப் படியில உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்காங்க. என்ன செய்யிறது? இப்போ நம்மளோட அருமை மகள் மரணம் வரை உண்ணாவிரதம் இருக்கான்னு வச்சுக்கோ. எங்கே? வீட்டுப்படியில... டாட்டோவையும் அம்மாவையும் மாத்தணும்! அஞ்சாறு குழந்தைங்க உள்ள அப்பாவும் அம்மாவும்தான் மகளுக்கு வேணுமாம். அரசாங்கம் என்ன செய்யிறது? நீதான் என்ன செய்வே?''
மகளின் தாய் சொன்னாள்:
“இவளோட தொடையில அடிச்சு ஒரு வழி பண்ணுறேன். இப்படித் தான் இவ சில நேரங்கள்ல சம்பந்தமில்லாம ஏதாவது சொல்லுவா...''
இந்த அணுகுண்டு யுகத்தில் சொல்ல வேண்டிய வசனம்தான். மனிதன் சந்திர மண்டலத்தில் இறங்கி செவ்வாய் கிரகத்தில் இறங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அமைதியாக இருப்பது தப்பான செயல்தான்!
மகள் சொன்னாள்:
“அம்மா, என்னை அடிச்சிடுவேன்னு சொல்லுது டாட்டோ...''
நான் மகளைத் தட்டிக்கொடுத்து விட்டுச் சொன்னேன்:
“அடியே... உனக்கு அரசியல் புரிய மாட்டேங்குது. ஒரு குடிசைத் தொழில் மாதிரிதான் இங்க நடக்குற அரசியல். அதே நேரத்துல நாடு முழுவதும் வேலை இல்லாத தலைவருங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க. எங்கே கொடி பறக்க விடுறதுக்கு இடம் இருக்குன்னு தெருத்தெருவா அவங்க அலைஞ்சிக்கிட்டு இருப்பாங்க. நம்ம மகளோட புகாரைக் கேட்டாங்கன்னா அவங்க சும்மாவா இருப்பாங்க? கொடிகளும் கோஷங்களும் உடனே தயாராகிவிடும். அவங்க வருவாங்க. கொடியைப் பறக்க விடுவாங்க. படியில உட்கார்ந்து சத்தியாகிரகம் பண்ற நம்மோட மகளுக்கு அவங்க உதவி செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. மனம் போனபடி கோஷம் போடுவாங்க... அப்ப நீ என்ன செய்வே?”
"மத்தவங்க என்ன செய்வாங்க?'
"மத்தவங்க” என்று அவள் குறிப்பிட்டது என்னைத்தான். நான் சொன்னேன்:
“எனக்குத் தெரியாது. முற்போக்கான விஷயங்களையும், புரட்சி சம்பந்தப்பட்ட காரியங்கள்லயும் நம்பிக்கைகொண்ட மனிதன்ற முறையில- அரசியல் தலைவர்களோட சேர்ந்து கோஷங்கள் நிறைய தடவை போட்டவன்ற வகையில- மகளோட கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்டு அதற்கு ஆதரவா நிற்பேன்.''
“அப்படின்னா?'' மகளின் அம்மா ஒரு மாதிரி என்னைப் பார்த்தாள். அவளின் குரலில் இலேசாக வித்தியாசம் இருந்தது.