மந்திரப் பூனை - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10074
என்ன இருந்தாலும் ஆண்தானே! நம் பக்கமும் சில தவறுகள் இருக்கலாம். ஒப்புக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் மீசை வைக்கப்போவதை நினைத்தவாறு நான் கேட்டேன்:
“என்னடி... என்னையே முறைச்சுப் பாக்குறே?''
“பெண்கள் இங்கு எண்ணிக்கையில அதிகமானா...'' மகளின் தாய், நான் பூனைக்குட்டியைப் பற்றிச் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். எப்படியோ கைஸுக்குட்டி என்னுடைய அமைதியான வாழ்க்கையில் ஒரு பிரச்சினையை உண்டாக்கிவிட்டது. மகளின் தாய் தொடர்ந்தாள்: “இதனால ஆண்களுக்கென்ன பிரச்சினை? இதுக்கு மேலே பேசினா, அவ்வளவு நல்லா இருக்காது...''
இதனால் ஆண்களுக்கு என்ன பிரச்சினை வந்தது என்று கேட்கிறாள். இப்போதுள்ள கணக்குப்படி ஒரு ஆணுக்கு மூன்று பெண்கள் என்ற விதத்தில் இருக்கிறது. அதிகமாக இருக்கின்ற இரண்டு சௌபாக்யவதிகளை நாம் என்ன செய்வது? மனைவியுடன் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைவிட எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதே சிறந்தது என்பதால் வாயே திறக்காமல் இருந்தேன்.
அடுத்த நிமிடம்- நான் நாற்காலியைவிட்டு எழுந்து முற்றத்தில் கால் வைத்தேன். வீட்டைச் சுற்றியிருந்த நிலத்தைக் கடந்து மரங்களுக்கு மத்தியில் நடந்தேன். அழகான, தனிமையான, அமைதியான சூழ்நிலை. மரங்களைப் பார்த்த நான் சொன்னேன்:
“கடவுளோட அருமையான படைப்புகளே... உங்களைப் பார்த்து வணங்குகிறேன். உங்களுக்கு ஆத்மா இருக்குன்னு சொல்றாங்க. சரிதானா?''
“யார்கிட்ட நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க?'' பின்னால் நின்றவாறு மகளின் தாய் கேட்டாள்.
“பெண் ஏன்டி ஆணுக்குப் பின்னாடியே வரணும்?''
“மனசுல தோணுச்சு. வந்தேன். இல்லாட்டினாக்கூட வருவேன்!''
திடீரென்று ஆதி வரலாறு ஞாபகத்தில் வந்தது.
“ஆணோட முதுகெலும்பு இருக்கு பாரு. நான் சொல்றதை நீ கவனமா கேட்கணும். மனித இனத்தோட படைப்பைப் பற்றிய ஆரம்பத்தைப் பத்தி இப்போ சொல்லப்போறேன். ஆரம்பத்துல தெய்வம் ஒரு ஆணைப் படைக்குது...''
“பெண்ணைத்தான் தெய்வம் முதல்ல படைச்சதுன்னு ஒரு நாள் நீங்க சொன்னீங்களே?''
“அப்படி நான் சொல்லியிருந்தா, அது சரியான விஷயம்னு இப்போ தோணல. இன்னும் சொல்லப்போனா... இப்போ நான் மேலும் வளர்ந்திருக்கேன்ல? அதுக்கேத்த மாதிரி சிந்தனைகளுக்கும் வளர்ச்சி உண்டாகி இருக்குமா இல்லியா? நான் பேசிக்கிட்டு இருக்குறப்போ இடையில புகுந்து எதையாவது பேசாம நான் சொல்றதை கவனமா கேளு, புரியுதா?''
“பெண்களுக்கு எதிரா எதையாவது சொல்றதா இருந்தா, நான் அதைக் கேட்கணும்னு அவசியமே இல்ல!''
“சரி... நீ கேட்கவே வேண்டாம். மாமரங்களே, பறவைகளே, கடலே, வானமே... கேளுங்க... ஆதிகாலத்துல ஏதன் தோட்டத்துல ஆதாம் மட்டும்தான் இருந்தான். அவனுக்கு எந்தவித கவலையும் கிடையாது. சுதந்திரமான ஒரு மனிதனா மகிழ்ச்சியோட அந்தத் தோட்டம் முழுக்க அவன் உலாவிக்கிட்டு இருந்தான். தலையணை மந்திரங்கள், கண்ணீர், முணுமுணுப்பு, குறை சொல்றது, அட்டகாசங்கள், இடையில் புகுந்து பேசுதல்- எதுவும் அவனைப் பொறுத்தவரை கிடையாது. நான்தான் சொல்றேனே- ஆனந்தமான ஒரு வாழ்வை அவன் வாழ்ந்துக்கிட்டு இருந்தான்னு. இருந்தாலும் ஒரு சின்ன பிரச்சினை. ஆதாமுக்கு முதுகெலும்பு முடிஞ்சப்புறம், அதைத் தொடர்ந்து ஒரு வால் இருந்துச்சு. வால்னா நீளமான வால். அதையும் இழுத்துக்கிட்டுத்தான் அவன் நடந்துபோகணும். சில நேரங்கள்ல அந்த வாலை எடுத்து ஆதாம் தன்னோட தோள்ல போட்டுக்குவான். பொதுவா அந்த வாலை வச்சுக்கிட்டு அவனால் ஓட முடியல. ஒரு நாள் ஒரு யானை அந்த வாலோட நுனியை மிதிச்சிடுச்சு. ஆதாம் எப்படியோ அந்த வாலை இழுத்து காப்பாத்திட்டான். ஆதாமுக்குப் பின்னாடி இந்த வால் எப்பவும் இருக்குன்றதை ஞாபகத்துல வச்சிக்கணும். ஆதாம் ஒரு நாள் சொன்னான்: "தெய்வமே... எனக்கு இந்த வால் எதுக்கு?' ஆதாம் இப்படிச் சொன்னதும், தெய்வம் ஆதாமோட வாலை முழுசா அறுத்திடுச்சு...''
“பிறகு?''
“அருமை மாமரங்களே! அந்த வால் ஏதன் தோட்டத்துல ரொம்ப நாட்கள் கிடந்துச்சு. சிங்கம், கரடி, மலைப்பாம்பு, திமிங்கிலம் எல்லாமே அந்த வாலை மோந்து பார்த்தன. அதை விழுங்கணும்ன்ற எண்ணம் யாருக்கும் வரல. அது அப்படியே இருந்துச்சு. அந்த வால் என்ன செய்யும்? தெய்வம் அந்த வாலை எடுத்து சுத்தமான தண்ணீரில கழுவுச்சு. பிறகு கடல்ல இருக்கிற உப்புத் தண்ணீர்ல முக்கி எடுத்துச்சு. அதுக்குப்பிறகு சங்கீதத்துல முக்கி எடுத்துச்சு... பிறகு... தேன்ல. அதுக்குப் பிறகு விஷத்தைத் தெளிச்சது... அதுக்குப் பிறகு நல்ல ஒண்ணாம் நம்பர் அத்தர்ல முக்கி எடுத்து காய வைச்சது. இப்படி படிப்படியா தெய்வம் அந்த வாலை ஒரு அழகான பெண்ணா மாத்தி எடுத்துச்சு. அவதான் உலகத்துலயே உண்டான முதல் சௌபாக்யவதி!''
“மிகப் பெரிய பொய் இது!'' இப்படிச் சொல்லியவாறு ஒரு முறைப்பு!
“அதுனாலதான் பொம்பளைங்க எப்பவும் ஆம்பளைங்க பின்னாடியே நடந்து திரியிறாங்க...''
குடும்பத்தில் சண்டை நடக்க இதற்குமேல் ஒரு விஷயம் வேண்டுமா என்ன? ஆண் இனத்திற்கு எதிராக என்னென்னவோ கூறினாள் அவள். தர்க்கங்கள், சவால்கள்... அவள் சொன்ன எதையும் நான் காதிலேயே வாங்கவில்லை. சௌபாக்யவதிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பு தராமல் நடந்துகொள்வதுதான் உண்மையிலேயே புத்திசாலித்தனம்!
மவுனமாக இருந்ததால், அந்தப் பிரச்சினை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தமாதிரி இருந்தது. நாங்கள் கொஞ்ச தூரம் நிலத்தின் வழியே நடந்து சென்றோம். வேலிகளில் படர்ந்திருந்த கரையான் புற்றுகளைத் தட்டிவிட்டு அழித்து, திரும்பிவரும்போது பார்த்தால்... மாமரத்தின் கிளையில் ஊஞ்சல் வெறுமனே தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஊஞ்சலில் உட்கார்ந்து சிறிது நேரம் ஜாலியாக ஆடினால் என்ன என்று நான் நினைத்தேன். நான் ஊஞ்சலில் அமர்ந்து குதித்து ஸ்டைலாக ஆடிக்கொண்டிருந்தபோது, எப்படி நடந்தது என்று எனக்கே தெரியவில்லை... ஊஞ்சலை விட்டு நான் கீழே விழுந்து கிடந்தேன். ஊஞ்சல் அறுந்து போய்விட்டதா என்று பார்த்தால்... அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு எப்படி நான் விழுந்தேன்? தொடர்ந்து பிரபஞ்சத்தில் உள்ள சர்வ சௌபாக்யவதி களின் சிரிப்பு!
“பெண்களை எதிர்த்துப் பேசினா இப்படித்தான் நடக்கும்!''
நான் எழுந்து ஆடைகளில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, ஆணுக்குரிய கம்பீரத்தை வரவழைத்தேன். அந்த நேரத்தில் மனதில் ஒரு தத்துவம் அரும்பி தன் முகத்தைக் காட்டியது. வைராக்கியம் என்ற ஒன்றை மனதில் எப்போதும் வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருப் பவர்கள் பெண்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். என்ன இருந்தாலும் ஊஞ்சலில் இருந்து நான் கீழே விழுந்தது ஆண் இனத்திற்கு ஒரு அவமானமான செயல்தான். என்ன செய்வது?
“என்ன... வலிக்குதா?''