மந்திரப் பூனை - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10075
“வைலாலில் வீட்டுக்குப் போற ஒத்தையடிப் பாதையை வெட்டி பெரிய குகைகளும் சுரங்கங்களும் உண்டாக்கணும். பக்தர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் தெய்வ சந்நிதியைப் போய் அடையணும்.''
“கட்டாயமா...''
“பி.ஸி...'' எம்டி. வாசுதேவன் நாயர் ஏதோ ஞாபகம் வந்த மாதிரி சொன்னார்: “கிணத்தை இன்னும் ஆழமாக்கணும்.''
“எந்த கிணறு?''
“பஷீர் தெய்வத்தோட வீட்ல ஒரு பெரிய கிணறு இருக்குது. தெய்வத்தோட மனைவி ஒரு நல்ல பசுமாட்டை வச்சிருக்காங்க. அவங்க நூறு வீட்டுக்கு பால் தர்றாங்க. கிணத்துத் தண்ணி முழுவதும் பாலாக மாறிக்கிட்டு இருக்கு!''
“குடிச்ச பால் போட்ட தேநீருக்கு நன்றியோட இருக்க வேண்டாமா?'' நான் சொன்னேன்: “பி.ஸி., எங்களுக்கு நாலு பசு மாடு இருக்கு. வாசு சொன்னது சுத்தப் பொய்...''
“தெய்வம் சொல்றதை முழுசா நம்புறோம்.'' பி.ஸி. என்ற உரூப் சொன்னார்: “தெய்வத்தோட மாட்டுத் தொழுவத்துல நாலு என்ன... நாப்பதாயிரம் பசுக்கள்கூட உண்டாகட்டும். வாசு தாடியையும் முடியையும் நீளமாக வளர்த்துக்கிட்டு, ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக்கிட்டு அந்தக் கிணற்றுப் பக்கத்துல ஒரு பர்ணசாலை அமைச்சு, அங்கேயே இருக்கணும். உண்மையான கங்கை நதியோட தொடர்புடையது அந்தக் கிணறுன்னு பிரச்சாரம் செய்யணும். ஒரு குப்பி தண்ணீர்- சின்ன குப்பிதான்... தெரியுதா? ஒரு ரூபா விலை வச்சு பக்தர்களுக்கு விற்பனை செய்யணும். சர்வ வியாதிகளும் அந்தத் தண்ணீரைக் குடிச்சா சரியாகும்னு சொல்லணும். பிறகு... காவடியாட்டம், துள்ளல், சூலம் குத்துதல், பஜைனை- எல்லாம் முறைப்படி நடக்குற மாதிரி பண்ணனும். அற்புதச் செயல்கள் சிலவற்றையும் காண்பிக்கணும். பஷீர் தெய்வம் நடக்குறப்போ காலுக்கு அடியில் இருந்து விபூதி... நூறு ரூபாய் நோட்டுகள்... இந்த மாதிரி...''
நான் சொன்னேன்: “நான் கொஞ்சம் பாத்ரூம் வரை போயிட்டு வர்றேன்.''
குடையை அவர்களுக்கருகிலேயே வைத்துவிட்டு பாத்ரூம் வழியாக யாருக்கும் தெரியாமல் ஒளிந்து இங்கு ஓடிவந்துவிட்டேன். கொஞ்சம் விலை உயர்ந்த அந்தப் புதிய குடை அங்கே இருக்கிறது. என்ன செய்வது? சாதாரண மனிதனைப் போய் தெய்வமாக்கப் பார்க்கிறார்கள். ஔலியாவாக்கப் பார்க்கிறார்கள். எந்தப் பெருமையுமே இல்லாத ஒரு ஆளை இப்படியெல்லாம் ஆக்குவதற்கு எல்லாருக்கும் எப்படி எண்ணம் உண்டாகிறது? ஒரு அதிசயத்தைக் காட்டினால் என்ன? முற்றத்தைப் பார்த்தபோது ஒரு எண்ணம் மனதில் உதித்தது. நான் மகளின் தாயை அழைத்துக் கேட்டேன்:
“அடியே... நம்மோட அந்த சிமெண்ட் சாக்குகளெல்லாம் எங்கே? கரையான் எதுவும் அரிச்சு நாசமாப் போச்சா என்ன?''
“எல்லாத்தையும் நல்லா கழுவி காய வச்சு, ஸ்டோர் ரூம்ல கட்டி வச்சிருக்கேன்.'' மகளின் தாய் எங்கோ நின்று கேட்டாள்: “எதுக்கு அதைக் கேக்குறீங்க?''
“மொத்தம் எத்தனை சாக்குகள் இருக்கும்?''
“இருபது...''
நான் எழுந்து சென்று வெளிவாசலைப் பூட்டினேன். தப்பித்தவறி யாரும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது இல்லையா? முற்றத்தில் நின்றிருந்த ஒயிட் லெகான் சேவலையும், அவனின் ஒன்றிரண்டு மனைவிமார்களையும் பின்பக்கம் போய் நிலத்தில் ஏதாவது பொறுக்கித் தின்னும்படி விரட்டி விட்டேன். நாற்காலியில் வந்து உட்கார்ந்தேன். முற்றத்தையே பார்த்தவாறு மவுனமாக அமர்ந்திருந்தேன். எல்லா ஆன்மிக சக்திகளையும் மனதில் நினைத்தவாறு மெதுவான குரலில் கட்டளையிட்டேன்:
“முற்றத்தில் இருக்குற மணலெல்லாம் தங்கமா மாறணும்... பத்தரை மாற்றுத் தங்கமா...''
எதிர்பார்ப்புடன் நான் பார்த்தேன். அதிசயம் என்று கூறுவதுமாதிரி ஒன்றுமே நடக்கவில்லை. மணல் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே மணலாகவே கிடந்தது. நான் சென்று வெளிவாசலை மறுபடி திறந்துவிட்டேன். மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்து மகளின் தாயை அழைத்துச் சொன்னேன்:
“அடியே! அந்தச் சாக்குகளையெல்லாம் விக்காம எதுக்கு வச்சிருக்கே! வர்ற காசுக்கு வித்திடு...''
நான் நினைத்தபடி மணல் தங்கமாக மாறவில்லை. அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன். இருக்கக்கூடிய ஒரு பொருளை இன்னொன் றாக மாற்றுவதைவிட, இல்லாத ஒன்றை உருவாக்குவதற்குப் பெயர் தானே அதிசயம்! அதுதானே உண்மையும்கூட! இப்படி ஒரு எண்ணத் தில் நான் இருந்தபோது ஒயிட் லெகான் சேவல் என் முன்னால் வந்து நின்று கொண்டிருந்தான். அவனை இன்னொன்றாக மாற்றுவதென்பது முடியாத விஷயம். அதனால் நான் சிறிது நேரம் கண்களை மூடி தியானத்தில் இருப்பதுமாதிரி இருந்தேன். பிறகு... ஒயிட் லெகான் சேவலையே உற்றுப் பார்த்தவாறு கட்டளையிட்டேன்:
“ஒயிட் லெகான் சேவல் சிவப்பு நிறத்துல முட்டை போடணும்- சீக்கிரமா!''
அதிசயம்! ஒயிட் லெகான் சேவல் சிவப்பு நிறத்தில் முட்டை போடவில்லை. சரி போகட்டும். அது முட்டை போட்டால் என்ன போடாவிட்டால் என்ன? எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு என் குடை வேண்டுமே! அது ஆறு மைல் தூரத்தில் அல்லவா இருக்கிறது! அதை மனதில் நினைத்தவாறு "குடை என் கைக்கு உடனே வரணும்” என்று கட்டளையிட்டேன். அதிசயம்! குடை வரவில்லை.
கோபத்துடன் நான் உட்கார்ந்திருந்தபோது கைஸுக்குட்டி வந்து என் மடிமேல் ஏறி உட்கார்ந்தது. என் மடியில் பூனை, கோழி போன்றவை ஏறி உட்கார்வது என்பதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை. நான் பூனையின் காதைப் பிடித்து, கீழே விட்டேன். இதைப் பார்த்தவாறு சௌபாக்யவதி ராஜலா வெளிவாசலைக் கடந்து உள்ளே வந்தாள். நெஞ்சே வெடித்து விடுகிற மாதிரி "ம்மூவே!' என்று அழைத்தவாறு பூனைக்குட்டியை எடுத்து மார்போடு சேர்த்து அணைத்தவாறு சௌபாக்யவதி ராஜலா என்னை ஒருமுறை முறைத்துப் பார்த்தாள். சரிதான்... எல்லா சௌபாக்யவதிகளும் தங்கள் விருப்பப்படி என்னை நெருப்புப் பார்வை பார்க்க வேண்டியதுதான்.
“என்ன? என்ன?'' என்று கேட்டவாறு அடுத்த நிமிடம் அங்கு வந்து நின்றாள் மகளின் தாய். மகளும் இருந்தாள். சௌபாக்யவதி ராஜலா கண்ணீர் விட்டவாறு வருத்தம் கலந்த குரலில் சொன்னாள்:
“கைஸுக்குட்டியைத் தூக்கி எறிஞ்சிட்டாரு...''
மகளின் தாயும் மகளும் என்னை முறைத்துப் பார்த்தார்கள். எங்கே நான் உட்கார்ந்திருந்த இடம், கைஸுக்குட்டி கீழே போய் விழுந்த இடம்... எல்லாவற்றையும் டேப் வைத்து அளந்துவிடுவார்களோ என்று நினைத்தேன். அவர்கள் கைஸுக்குட்டியைக் கையில் எடுத்தவாறு கொஞ்சம் தள்ளிப் போனார்கள். சிறிது நேரத்தில் சௌபாக்யவதி ராஜலா தன் புடவை "பரபர” என்று ஓசை உண்டாக்க, நடந்து வந்தாள். நடந்து வரும்போதே என்மீது ஒரு நெருப்புப் பார்வை பார்த்தாள்! ஐந்து நிமிடங்கள் கழித்து, சௌபாக்யவதி கதீஜா பீபியும், சௌபாக்யவதி சௌமினிதேவியும் தூரத்திலிருந்து இரண்டு நெருப்புப் பார்வைகளை என்மீது பாய்ச்சப் போவதென்னவோ நிச்சயம்.