மந்திரப் பூனை - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10075
இந்த பூமியில் வாழ்வது என்பது பயணத்தின் மத்தியில் இரவு நேரத்தில் ஏதாவதொரு சத்திரத்தில் தங்குவது மாதிரி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயணத்தில் எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கலாம். இருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நிரந்தரமாக வாழக்கூடிய இடம் இருக்கிறது சொர்க்கம்! நரகமும் இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் இருக்கிறது பிரார்த்தனையும், அதோடு சம்பந்தப்பட்ட இன்னும் சில விஷயங்களும். பிரார்த்தனையும், உணவும், குடியும், குழந்தைகள் பிரசவிப்பதும்- இதுதான் வாழ்க்கை. பத்து... பதினைந்தாயிரம் வருடங்களாக உலகில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து சந்ததி உருவாகி, இதே கதைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் விதி!
இந்த ஹால் இப்போது பெண் விருந்தாளிகளுக்கென்று ஆகிவிட்டது. எப்போதாவது நான் அதில் உட்கார்ந்து சாப்பிடு வதுண்டு. சாப்பிடுவதற்கென்று தனியாக ஒரு அறை நம்முடைய தச்சு சாஸ்திரத்தில் (எனக்கு இதைப் பற்றிய அறிவு குறைவு) இல்லை என்றுதான் நினைக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் பெரிய இந்த ஹால் இப்போது பூனை அறை ஆகிவிட்டது. பகல் நேரத்தில் பெரும்பாலும் இந்த அறையில்தான் மகளும் கைஸுக்குட்டியும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இரவில் கைஸுக்குட்டி எங்களுடன்தான் படுக்கிறது. கொசு வலைக்கு உள்ளே. என்னுடைய கட்டிலுக்கு கொசு வலை இல்லை. கொசு வலைக்குள்ளே படுத்தால் எனக்கு மூச்சு விடவே மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் கொசு தன் விருப்பப்படி சுற்றிக் கொண்டிருக்கும். அங்கிருந்த கொசு முட்டை களை எல்லாம் மகளின் தாய் மண்ணெண்ணெய்யில் சோப்பைக் கலந்து முழுமையாக அழித்துவிட்டதாகச் சொன்னாள். மனிதர்களைப் போலத்தானே முட்டைகளும்! அவற்றுக்கும் ஆத்மா என்று ஒன்று இருக்கிறதே! அப்படியானால் முட்டைகளை அழிப்பது என்பது பாவமான செயல்தானே! ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் வாயையும் மூக்கையும் துணியால் மூடிக்கொண்டுதான் நடப்பார்கள். காரணம் காற்றில் கலந்திருக்கும் அணுக்களைக் கொன்றுவிடக்கூடாது என்பதுதான். கொசு என் பக்கம் வரக்கூடாது என்பதற்காக மின்விசிறியை வேகமாக ஓடவிடுகிறேன்- மழை பெய்தாலும், குளிர் இருந்தாலும்.
“இந்த ஃபேனை நிறுத்தினா என்ன? நாங்க உறங்க வேண்டாமா?''
தேவையில்லாத பிரச்சினை! நான் மின்விசிறியை நிறுத்துகிறேன். அடுத்த நிமிடம் கொசுக்கள் படு உற்சாகத்துடன் படையெடுத்து வருகின்றன. தெய்வத்தை நினைத்துக்கொண்டே கொஞ்சம் ரத்ததானம் செய்கிறேன். கொசக்களே இல்லையென்றாலும் எனக்கு எப்போதும் காற்று இருக்க வேண்டும். தண்ணீரில் வாழும் மீனைப்போல நான். மீண்டும் மின்விசிறியை ஓடவிடுவேன். அவ்வளவுதான்- தூக்கத்திலிருந்து எழுந்த சௌபாக்யவதி "காச்மூச்” என்று கத்துவாள். உண்மையாகச் சொல்லப்போனால் பத்ரகாளி என்ற சௌபாக்யவதியின் வர்க்கத்தைச் சேர்ந்தவன் இவள் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். பயப்படாமல் இருக்க முடியுமா? திருமணம் ஆவதற்கு முன்பு, என்னுடைய விருப்பங்களுக்கு முன்னுரிமை தருவதாகவும், எது சொன்னாலும் நான் சொல்லும் எல்லா விஷயங்களையும் கேட்டு அதன்படி நடப்பதாகவும் கூறி என்னிடம் இந்த சௌபாக்யவதி சத்தியம் செய்திருந்தாள். திருமணம் செய்து கொண்டு சுகமாக வாழலாம் என்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண் சிங்கங்கள் இந்த விஷயத்தை இப்போதே மனதில் வைத்துக்கொள்வது நல்லது. இருந்தாலும் சௌபாக்யவதி தான் எந்த காளியாக இருந்தாலும், நேரம் செல்லச்செல்ல தூங்கித்தானே ஆக வேண்டும்! கோழியைப் பிடிப்பதற்காக நரியோ செந்நாயோ மலைப்பாம்போ வந்தால், எழுந்து ஓடி அவற்றோடு போராட வேண்டியது நான்தான். அது என் கடமையாகிப் போகிறது. அதையும் கவனித்துக்கொண்டு, மீண்டும் மின்விசிறியை ஓட விடுகிறேன். மகளுக்கு ஒரு வேளை வியர்க்கிறதோ என்று கொசு வலையை இலேசாக உயர்த்தி அவள் பக்கம் கொஞ்சம் காற்றைப் போக விடுகிறேன். கைஸுக்குட்டி கண்களை அகல விரித்து என்னைப் பார்க்கிறது. "என்னடா... காத்தா? என் பக்கம் கொஞ்சம் வர்றது மாதிரி போட்டு விடு' என்பது மாதிரி இருந்தது அதன் பார்வை. கைஸுக்குட்டி மீது கொஞ்சம் மின்விசிறி காற்றைப் படச் செய்வேன். பாதி இரவு தாண்டியிருக்கும். எனக்கு இலேசாக பசி எடுப்பதுபோல் இருந்தது. அதற்குத்தான் பிஸ்கட், முந்திரிப்பருப்பு, பழம் என்று ஏதாவது இருக்கின்றனவே! கைஸுக்குட்டி இந்த வீட்டுக்கு வந்தபிறகு, பெரும்பாலும் பிஸ்கட்தான். நான் ஏதாவது தின்று கொண்டிருந்தால், "என்ன, தனியா உட்கார்ந்து தின்னுக்கிட்டு இருக்கீங்க!” என்பது மாதிரி "ம்யாவோ” என்று கத்தியவாறு கைஸுக்குட்டி எழுந்து நடந்து வரும். எப்படி என்று தெரியாது... “டாட்டோ... என்ன தின்றீங்க?'' என்ற கேள்வியுடன் அடுத்த நிமிடம் மகளும் எழுந்து வருவாள். கைஸுக்குட்டியும் மகளும் நானும் எந்தவித ஓசையும் உண்டாக்காமல் பிஸ்கட்டுகளை காலி செய்து கொண்டிருக்கும்போது ஒரு சத்தம்-
“ராத்திரி நேரத்துல பிஸ்கட் தின்னுக்கிட்டு... காற்றாடியைப் போட்டுக்கிட்டு... கைஸுக்குட்டியும் மகளும் நீங்களும் சேர்ந்து என்னை உறங்க விடுறீங்களா?''
சத்தம் போட்டது யார்? என்னுடைய பத்ரகாளி என்ற சௌபாக்யவதிதான். அவளுக்கும் கொஞ்சும் பிஸ்கட்களைத் தருவேன். அதைத் தின்று, கொஞ்சம் தண்ணீர் குடித்து முடித்தால், அவளின் கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது மாதிரி இருக்கும். அதற்குப் பிறகும்... அதிகாரம்தான்!
“நரியோட சத்தம் ஏதாவது கேட்குதா?''
மின்விசிறியை நிறுத்துகிறேன். நரி முதல் திருடன்வரை... யாருடைய நடக்கும் சப்தமாவது கேட்கிறதா என்று காதுகளைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். அப்போது தூரத்தில் ஏகப்பட்ட மக்களை ஏற்றிக்கொண்டு பயங்கரமான சத்தத்துடன் புகைவண்டி வந்துகொண்டிருக்கும் ஓசை காதில் விழுந்தது.
“டாட்டோ... நீள வண்டி...''
மகள் சொல்கிறாள். புகைவண்டி இப்போது ரெயில்வே பாவத்தின் மேலே போய்க்கொண்டிருக்கிறது. அதன் "குடு குடு குடு குடு” சத்தத்தை வைத்து என்னால் அதை உணர முடிகிறது.
அந்த மனிதர் அங்கே கிடக்கிறார். வேலையையும், வீட்டையும், நிலங்களையும், எல்லா சுகங்களையும் உதறி எறிந்துவிட்டு... எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாலத்திற்குக் கீழே கிடக்கிறார்...!
எல்லா உலகங்களையும் படைத்த தெய்வமே! எல்லா உயிர்களையும் உருவாக்கிய கடவுளே!
கோவில்கள், பள்ளிகள், வழிபாட்டு இடங்கள், மனித தெய்வங்கள், காளைகள், கற்கள், மரங்கள், உருவகங்கள், அவதாரங்கள்... ஸம்பவாமி யுகே யுகே!
பனி விழுந்து கொண்டிருக்கும் கடும் குளிரில், உடலில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக- கழுத்து வரை தண்ணீரில் நின்று தவம் செய்யும் மனிதர். பலகையில் அறையப்பட்ட கூர்மையான ஆணிகள் மேல் படுத்துக் கிடக்கிறார். வலது கையை மேல் நோக்கி உயர்த்தி, பின் அதை இறக்குவதே இல்லை.