மணப்பெண் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 12177
நபின்ராய் அவருக்குப் பின்னால் இடியென முழங்கினார்: “என்ன அருமையான முடிவு! நீங்கள் தற்கொலை பண்ணிக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக உங்களுடைய மதத்தை தற்கொலை பண்ணிக் கொள்ளும்படி செய்து விட்டீர்கள். வெளியே போங்க. மீண்டும் உங்களுடைய முகத்தை எந்தச் சமயத்திலும் எங்களுக்குக் காட்டாதீங்க! உங்களைப் போன்று இருப்பவர்களை நண்பர்களாக தேடிக் கொள்ளுங்கள். உங்களுடைய மகள்களுக்கு ஏதாவது பேய் பிடித்த வீட்டில் திருமணம் செய்து கொடுங்கள்.'' அவர் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.
கடுமையான கோபத்தில், தன்னுடைய கௌரவம் பாதிக்கப்பட்ட உணர்வுடன், நபின்ராய் குருச்சரண் மீது ஏதோ ஒரு வகையில் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிதான் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. குருச்சரண் தன்னுடைய பிடிகளில் இருந்து முழுமையாகத் தப்பித்துவிட்டார் என்ற நினைப்பும், அவரை சமீப எதிர்காலத்திற்குள் மீண்டும் மாட்டச் செய்வது என்பது நடக்காத விஷயம் என்ற எண்ணமும் அவரை மிகவும் கோபம் கொள்ளச் செய்தன. இறுதியாக, வேறு எந்த முடிவுக்கும் வர முடியாததால், சில பணியாட்களை அழைத்து அடுத்தடுத்த இரண்டு வீடுகளுக்கும் நடுவில் ஒரு பெரிய சுவரை எழுப்பும்படி சொன்னார். அதே நேரத்தில் மொட்டை மாடியிலிருந்து பார்க்க முடியாத அளவிற்கு அது இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
இதற்கிடையில் இப்போதும் கல்கத்தாவை விட்டு தூரத்தில் இருந்த புவனேஸ்வரிக்கு குருச்சரண் மதம் மாறிவிட்ட செய்தி சேகர் மூலம் தெரிய வந்து, அவள் கண்ணீர்விட்டு அழுதாள். “சேகர், இந்த எண்ணத்தை அவரிடம் யார் உருவாக்கி விட்டிருப்பார்கள்?'' என்று கேட்டாள் அவள்.
இந்த எண்ணங்களுக்குப் பின்னால் யார் இருந்திருப்பார்கள் என்பதைப் பற்றி சேகருக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. எனினும், அதற்குள் போகாமல் அவன் சொன்னான்: “ஆனால்... அம்மா, நீங்கள் எல்லாரும் வெகு சீக்கிரமே அவரை சமூகத்தில் எப்படியிருந்தாலும் ஒதுக்கி வைக்கத்தான் செய்வீர்கள். எல்லா பெண்களுக்கும் அவர் எப்படித் திருமணம் செய்து வைப்பார்? பிரம்மோவாக ஆனால், அதிகபட்சம் அவர் அவர்களுக்கான வரதட்சணையைத் தர வேண்டியது இருக்காது!''
தலையை ஆட்டிக் கொண்டே, புவனேஸ்வரி கறாரான குரலில் சொன்னாள்: “எல்லாம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது சேகர். மகள்களுக்கு வரதட்சணை கொடுக்கும் விஷயம் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதற்காக ஒருவர் தன்னுடைய மதத்தையே விட்டுக் கொடுக்கிறார் என்றால், மேலும் எத்தனையோ பேர் அதே காரியத்தைச் செய்திருப்பார்கள். கடவுள் பூமிக்கு தான் அனுப்பி வைத்திருக்கும் எல்லாரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.''
சேகர் அமைதியாக இருந்தான். தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே புவனேஸ்வரி தொடர்ந்து சொன்னாள்: “ நான் என் மகள் லலிதாவை என்னுடன் அழைத்து வந்திருந்தால், இந்த விஷயத்தில் வேறு ஏதாவது முடிவை எடுத்திருப்பேன். நிச்சயமாக ஏதாவது செய்தாக வேண்டும். இப்படியொரு காரியத்தைச் செய்யப் போவதை மனதில் வைத்துக் கொண்டிருந்ததால்தான், குருச்சரண் அவளை நம்முடன் வருவதற்கு அனுமதிக்கவில்லை என்ற விஷயம் அப்போது எனக்கு தெரியாமல் போய்விட்டது. அவர் உண்மையாகவே அவளுக்குப் பொருத்தமான ஒரு மணமகனைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.''
தன் அன்னையைப் பார்த்துக் கொண்டே, சேகர் ஆவேசமான குரலில் சொன்னான்: “அது சரி, அம்மா. நீங்கள் திரும்பிப் போன பிறகுகூட நீங்கள் ஏதாவது செய்ய முடியும். சொல்லப் போனால் - பிரம்மோயிசத்திற்கு மாறியிருப்பது லலிதா அல்ல. அவளுடைய மாமாதான் மாறியிருக்கிறார். உண்மையாகச் சொல்வதாக இருந்தால் அவள் அந்தக் குடும்பத்தில் ஒருத்திகூட இல்லை. லலிதா அனாதையாக இருந்த ஒரே காரணத்தால்தான் அந்தக் குடும்பத்திலேயே அவள் வளர்ந்தாள்.''
சிந்தனையில் மூழ்கிய புவனேஸ்வரி சொன்னாள் : “ஆமாம், உண்மைதான். ஆனால், உன் அப்பா அதையெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார். இன்னும் சொல்லப் போனால் - இனிமேல் அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்வதையே அவர் அனுமதிக்கமாட்டார்.''
சேகர் தனிப்பட்ட முறையில் அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஆனால், அவன் அந்த உரையாடலைத் தொடர விரும்பாததால் அறையை விட்டு வெளியேறினான்.
அதற்குமேல் ஒரு நிமிடம்கூட கல்கத்தாவை விட்டு விலகி இருப்பதில் அவனுக்கு சிறிதளவும் விருப்பம் இல்லாமலிருந்தது. அதற்கடுத்த இரண்டு நாட்களும் மனச்சுமையுடன் இருண்டுபோன முகத்துடனும் அமைதியற்ற தன்மையுடனும் அலைந்து திரிந்த அவன், இறுதியாக ஒரு மாலை நேரத்தில் தன் தாயிடம் வந்து சொன்னான் : “அம்மா, இந்தப் பயணம் சந்தோஷம் நிறைந்ததாகவே இல்லை. நாம திரும்பி விடுவோம்.''
புவனேஸ்வரி இதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டாள். “நானும் இங்கு இருக்க விரும்பவில்லை, சேகர்!''
அவர்கள் திரும்பி வந்தபோது, தாயும் மகனும் இரண்டு வீடுகளுக்கும் நடுவில் இருந்த பொதுப் பாதையை மறித்து ஒரு சுவர் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒரு வார்த்தைகூட கூறாமலே, ராய் குடும்பத்தின் தலைவர் குருச்சரணின் குடும்பத்துடன் பெயரளவிற்குகூட தொடர்பு வைத்திருப்பதையோ அவர்களுடன் எந்தவிதமான உறவையும் கொண்டிருப்பதையோ சிறிதும் விரும்பவில்லை என்பதை அவர்கள் இருவரும் புரிந்து கொண்டார்கள்.
அன்று இரவு சேகர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அவனுடைய தாய் சொன்னாள்: “லலிதாவை கிரினுக்கு திருமணம் செய்து கொடுப்பதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கெனவே இதை எதிர்பார்த்தேன்.''
தலையை உயர்த்தாமலேயே சேகர் கேட்டான்: “அப்படி யார் சொன்னார்கள்?''
“அவளுடைய அத்தை! உன் அப்பா பிற்பகல் வேளையில் கண் அயர்ந்து கொண்டிருக்கும்போது, நான் அவளைப் பார்ப்பதற்காக போனேன். லலிதாவின் மாமா வேறு மதத்திற்கு மாறியதிலிருந்து அவள் அழுது கொண்டே இருந்திருக்கிறாள். அவளுடைய கண்கள் மிகவும் வீங்கிப் போய் சிவந்திருந்தன.'' சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, தன் கண்களில் வழிந்த கண்ணீரை தன்னுடைய புடவைத் தலைப்பைக் கொண்டு துடைத்த புவனேஸ்வரி சொன்னாள்: “இது எல்லாமே விதி, சேகர்... விதி... விதியின் விளையாட்டை யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் யாரைக் குற்றம் சொல்வது? சொல்லப் போனால்... கிரின் ஒரு நல்ல பையன்... நல்ல வசதி படைத்தவன். லலிதா கஷ்டப்பட மாட்டாள்.''
சேகர் எந்த பதிலும் கூறவில்லை. ஆனால், தட்டில் இருந்த உணவுடன் அவன் விளையாடிக் கொண்டிருந்தான். தன் தாய் அங்கிருந்து கிளம்பியவுடன், அவன் சாப்பிடாமல் உணவை அப்படியே வைத்துவிட்டு, கைகளைக் கழுவிவிட்டு, இரவைக் கழிப்பதற்காகத் திரும்பினான்.