மணப்பெண் - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 12177
லலிதா உரத்த குரலில் சொன்னாள்: “இதோ வர்றேன்.'' தொடர்ந்து தன்னுடைய குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்: “மாமா எந்த மதத்தில் இருக்கிறார் என்பது பிரச்சினையே இல்லை. நீங்க என்ன மதமோ, நான் அந்த மதம்தான். உங்களை அம்மாவால் தூக்கி எறிய முடியலைன்னா, அவங்களால என்னையும் விட்டெறிய முடியாது. கிரின் பாபுவிடமிருந்து கடனாக வாங்கிய பணத்தைப் பற்றியா நீங்கள் குறிப்பிடுறீங்க? நான் அந்தப் பணம் முழுவதையும் திருப்பிக் கொடுத்துவிடுவேன். அவருக்கு திரும்ப கொடுக்கப்பட வேண்டிய பணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்கியாகணும்!''
சேகர் கேட்டான் : “அவ்வளவு பணத்தை நீ எங்கேயிருந்து வாங்குவாய்?''
சேகரை ஒருமுறை தலையை உயர்த்தி பார்த்துவிட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு லலிதா சொன்னாள்: “ஒரு பெண் எங்கேயிருந்து பணம் வாங்குவாள் என்று உங்களுக்குத் தெரியாதா? நான் அங்கேயிருந்துதான் அந்தப் பணத்தை வாங்குவேன்!''
இதுவரை தன்னை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருத்திக் கொண்டு சேகர் பேசிக் கொண்டிருந்தாலும், அவனுக்குள் ஒரு தாங்க முடியாத வெப்பம் சுட்டெரித்துக் கொண்டிருந்ததென்னவோ உண்மை. அவன் கவலை நிறைந்த குரலில் சொன்னாள் : “ஆனால் உன் மாமா உன்னை விற்றுவிட்டார் போலிருக்கிறதே!''
அந்த இருட்டில் லலிதாவால் சேகரின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அவனுடைய குரலில் உண்டான மாறுதலை அவளால் உணர முடிந்தது. உறுதியான குரலில் அவள் சொன்னாள்: “அது எல்லாமே பொய். என் மாமாவைப் போன்ற ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. அவரைக் கிண்டல் பண்ணாதீங்க. அவருடைய கஷ்டங்களும் பிரச்சினைகளும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த முழு உலகத்திற்கும் தெரியும்.'' பிறகு வார்த்தைகளை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டே தயக்கத்துடன் அவள் தொடர்ந்து சொன்னாள்: “சொல்லப்போனால், எனக்குத் திருமணம் ஆனபிறகுதான் அவர் பணத்தை வாங்கியிருக்கிறார். அதனால், என்னை விற்பதற்கு அவருக்கு உரிமையே இல்லை. அவரால் விற்கவும் முடியாது. உங்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. இன்னும் சொல்வதாக இருந்தால், எனக்கு பணம் தர வேண்டும் என்பதிலிருந்து தப்பிப்பதற்காக, என்னை நீங்கள் விற்றுவிடுவதில் மிகவும் திறமை கொண்டவராகக்கூட இருப்பீர்கள் - அப்படிச் செய்ய நீங்கள் விருப்பப்பட்டால்!''
சேகரின் பதிலுக்காக காத்திருக்காமல், லலிதா வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
10
லலிதாவைத் தான் திருமணம் செய்வது என்பது நடக்காத ஒரு விஷயம் என்ற முடிவுக்கு வந்த சேகர் அவளைப் பற்றிய எல்லா கனவுகளையும் காற்றில் பறக்க விட்டான். அவன் முதல் இரண்டு நாட்களையும் மிகவும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்க கடத்தினான். அவள் திடீரென்று தோன்றுவாள், எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறுவாள், அப்போது எழுப்பப்படும் எல்லா கேள்விகளுக்கும் தான் பதில் கூறியாக வேண்டும் என்றெல்லாம் அவனின் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், யாரும் எந்தக் கேள்விகளையும் எழுப்பவில்லை. விஷயங்கள் ஏதாவது சொல்லப்பட்டு விட்டனவா என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை. ஆனால், குருச்சரணின் வீட்டிலிருந்து அவனுடைய வீட்டிற்கு யாரும் வரவில்லை. சேகரின் அறைக்கு வெளியே இருந்த மொட்டை மாடியிலிருந்து பார்க்கும்போது குருச்சரணின் இல்லத்து மொட்டை மாடி முழுவதும் தெரிந்தது. எங்கே யாராவது கண்களில் பட்டுவிடுவார்களோ என்று பயந்து, சேகர் மொட்டை மாடிக்குச் செல்வதையே முற்றிலும் விட்டுவிட்டான்.
எனினும், ஒரு மாதம் ஓடியபிறகு எந்தவித பிரச்சினைகளையும் சந்திக்காமல், அவன் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டுக் கொண்டே தனக்குத்தானே கூறிக்கொண்டான். "என்ன இருந்தாலும், எந்தப் பெண்ணும் அப்படிப்பட்ட விஷயங்களை வெளியே கூறும்போது, இயற்கையாகவே தர்மசங்கடமாக உணரத்தான் செய்வாள்! அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுவதைவிட பெண்கள் இறந்துவிடுவதுமேல் என்று நினைப்பார்கள் என்று அவன் கேள்விப்பட்டிக்கிறான். அவன் அதை நம்பினான். தன் இதயத்திற்குள் அவர்களின் இந்த பலவீனத்திற்காக அவன் அவர்களுக்குப் பெரிய அளவில் நன்றி கூறிக் கொள்ளவும் செய்தான்.
ஆனால், அமைதியின்மை அவனை ஏன் விரட்டிக் கொண்டே இருக்கவேண்டும்? ரகசியம் தொடர்ந்து ரகசியமாகவே காப்பாற்றப்பட்டு வருகிறது என்பது உறுதியாகத் தெரிந்திருந்தும், அவனுடைய மனம் ஏன் வார்த்தைகளால் கூறமுடியாத அளவிற்கு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்? இனம்புரியாத பயத்திற்கும் குழப்பத்திற்கும் அவன் ஏன் எப்போதும் ஆளாகிக் கொண்டிருக்க வேண்டும்? ஒருவேளை லலிதா எப்போதாவது எதையாவது கூறுவாளா என்றுகூட அவன் சில நேரங்களில் ஆச்சரியத்துடன் நினைக்க ஆரம்பித்தான். சொல்லப்போனால் அவள் வேறொரு நபரின் பாதுகாப்பின் கீழ் ஒப்படைக்கப்படும்போது, அவள் அமைதியாகவேகூட இருந்து விடலாம். அவளுக்குத் திருமணம் நடக்கப்போகிறது என்ற சிந்தனையும், அவள் தன் கணவனின் வீட்டிற்கு புறப்பட்டுச் செல்லப் போகிறாள் என்பதும் அவனை உள்ளுக்குள் ஏன் கோபமடையச் செய்ய வேண்டும்? அதே நேரத்தில் வெளியே ஏன் பதைபதைப்பு கொள்ளச் செய்ய வேண்டும்?
முன்பு, சாயங்கால நேரங்களில் வெளியே செல்வதற்கு பதிலாக, சேகர் தன்னுடைய அறைக்கு வெளியே இருக்கும் மொட்டை மாடியில் இருந்து கொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருப்பான். அவன் இப்போது தன்னுடைய வழக்கமான செயலைத் திரும்பவும் ஆரம்பித்தான். ஆனால், ஒருநாள்கூட அந்த இன்னொரு மொட்டை மாடியில் அவன் யாரையும் பார்க்கவில்லை. ஒரே ஒருமுறை ஏதோ ஒரு விஷயத்திற்காக அங்கே வந்த அன்னக்காளியை மட்டும் அவன் பார்த்தான். அவனுடைய கண்கள் அவள் மீது விழுந்ததுதான் தாமதம், அவள் கீழே பார்க்கத் தொடங்கிவிட்டாள். அவளை அழைக்கலாமா வேண்டாமா என்று சேகர் மனதில் தீர்மானிப்பதற்குள், அவள் அங்கிருந்து மறைந்துவிட்டாள். அந்தச் சிறு குழந்தையான காளிக்குக்கூட அந்த இரண்டு மொட்டைமாடிகளுக்கு நடுவில் எழுந்த சுவருக்கான அர்த்தம் தெரிந்திருக்கிறது என்பதை அதற்குப் பிறகுதான் சேகரே உணர்ந்தான்.
மேலும் ஒரு மாதம் ஓடியது.
ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில், புவனேஸ்வரி கேட்டாள் : “நீ சமீப நாட்களில் லலிதாவைப் பார்த்தாயா?''
தலையை ஆட்டியவாறு சேகர் கேட்டான் : “இல்லை. ஏன்?''
அவனுடைய அன்னை சொன்னாள்: “இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் அவளை மொட்டை மாடியில் பார்த்தேன். நான் அவளை அழைத்தேன். என் மகள் மொத்தத்தில் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தாள். மிகவும் மெலிந்துபோய் வெளிறி, தன் வயதைவிட அதிக வயதை அடைந்துவிட்டவளைப் போல இருந்தாள். அந்த அளவிற்கு மாற்றம். அந்தக் குழந்தைக்கு பதினான்கு வயதுதான் என்பதை யாருமே நம்ம மாட்டார்கள். “புவனேஸ்வரியின் கண்கள் கண்ணீரால் நிறைந்து விட்டன. அவற்றைத் துடைத்துக் கொண்டு அவள் சொன்னாள்: “அவள் அணிந்திருந்த ஆடைகள் அழுக்கடைந்து, கிழிந்து போய் காணப்பட்டன. நான் அவளிடம், "உன்னிடம் வேறு ஆடைகள் இல்லையாடா கண்ணு?' என்று கேட்டேன். தன்னிடம் இருப்பதாக அவள் சொன்னாள். ஆனால், நான் அவளை நம்பவில்லை. அவள் எந்தச் சமயத்திலும் அவளுடைய மாமா தந்த ஆடைகளை அணிந்ததே இல்லை. அவளுக்கு நான்தான் ஆடைகள் வாங்குவேன். கடந்த ஆறேழு மாதங்களில் நான் அவளுக்கு எதுவும் வாங்கித் தரவில்லை.'' அதற்குமேல் புவனேஸ்வரியால் தொடர்ந்து பேச முடியவில்லை. தன் புடவைத் தலைப்பால் தன்னுடைய கண்களைத் துடைத்துக் கொண்ட அவள் லலிதாவை உண்மையாகவே தன் மகளைப் போலவே நினைத்து அன்பு செலுத்தினாள்.
சேகர் வேறு பக்கம் வெறித்துப் பார்த்தவாறு அமைதியாக நின்றிருந்தான்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு புவனேஸ்வரி தொடர்ந்து சொன்னாள்: “என்னைவிட்டால் அவள் எதற்காகவும் யாரிடமும் கேட்கக்கூடாது. இக்கட்டான நேரத்தில் பசியுடன் இருந்தால், திரும்பவும் அவள் என்னைத்தான் தேடி வருவாள். அவள் என்னையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பாள். அவளைப் பார்த்த நிமிடத்திலேயே, அவளுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரிந்துவிடும். என் தலைக்குள் அந்த சிந்தனைதான் ஓடிக்கொண்டே இருக்கிறது, சேகர். லலிதா என்ன செய்வது என்றே தெரியாமல் எல்லா நேரங்களிலும் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். அவளை யாருமே புரிந்து கொள்ளவில்லை. யாரும் அவளைப் பற்றி கவலைப்படவும் இல்லை. அவளுடைய தேவைகளைப் பற்றி அக்கறை செலுத்துவதற்கு நான் மட்டுமே இருக்கிறேன். அவள் என்னை "அம்மா' என்று அழைக்க மட்டும் இல்லை... என்னை அப்படியேதான் அவள் பார்க்கவும் செய்கிறாள்.''
சேகருக்கு தன்னுடைய கண்களைக் கொண்டு தன் தாயைப் பார்ப்பதற்கான தைரியம் இல்லாமலிருந்தது. அவன் ஏற்கெனவே தான் பார்த்துக் கொண்டிருந்த திசையிலேயே தொடர்ந்து பார்த்துக் கொண்டவாறு சொன்னான்: “அதுசரி அம்மா... நீங்கள் ஏன் அவளை அழைத்து வரும்படி கூறக்கூடாது?