லில்லி - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
‘‘என்ன விசேஷம்?’’
‘‘எனக்கே தெரியல...’’
அவள் கவலை மேலோங்க புன்னகைத்தாள். பேராசிரியரின் மனைவியும் பதிலுக்கு புன்னகைத்தாள். லில்லி சொன்ன விஷயங்கள் அனைத்தையும் கேட்ட அவள் சொன்னாள்.
‘‘வெல்... லெட் அஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்.’’
வேலைக்காரன் குட்டி கொண்டு வந்து கொடுத்த குளிர்பானத்தில் கொஞ்சம் மட்டும் அருந்திய லில்லி மெடிக்கல் சூப்பிரெண்டின் அலுவலகத்தை நோக்கி போனாள். அங்கேயிருந்து திரும்பவும் ஹாஸ்டலுக்கு வந்தாள்.
மாலையில் புறப்படத் தீர்மானித்தாள்.
அவளின் கோட்டின் பாக்கெட்டில் இருந்து படுக்கையில் விழுந்து கிடந்த ஸ்டெதாஸ்கோப்பையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார் அச்சுதன் நாயர்.
லில்லி சூட்கேஸை எடுத்துத் திறந்து இரண்டு மூன்று புடவைகளையும், ப்ளவுஸ்களையும் எடுத்து வைத்தாள். நேரம் கிடைத்தால் தேர்வுக்காகப் படிப்பதற்காக சில புத்தகக்களையும் அதோடு சேர்த்து எடுத்து வைத்தாள். பிறகு... அவளுக்கு மிகவும் விருப்பமான போர்ட்டபிள் கேஸட் ப்ளேயரையும்.
எதற்காக இந்தப் பயணம் என்பதுகறித்து அவளால் எந்த ஒரு முடிவுக்குமே வர முடியவில்லை. நல்லதற்காக இருந்தால் சரி என்ற முடிவுக்கு கடைசியில் வந்தாள். அதே நேரத்தில் அவள் மனதில் பயத்தின் தீ ஜுவாலைகளும் எழும்பாமல் இல்லை. மலையின் அடிவாரத்தில் அந்த நேரத்திலும் பனிப்படலம் இருக்கவே செய்தது.
அச்சுதன் நாயர் சிவப்பு வர்ண சூட்கேஸுடன் நடந்தார். கேஸட் ப்ளேயரை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் நடந்தாள். ப்ளேயரை ஆன் செய்திருந்தாள். அவளுக்கு மட்டும் கேட்கக் கூடிய மாதிரி அவளின் சொந்த இதயத் துடிப்பைப் போல பாப் மார்லேயின் ‘‘தி வெயிலேர்ஸ்’’ என்ற கேஸட்டை மெதுவான குரலில் கேட்டாள். ‘‘வெய்லிங்கின் வெயின்... வெய்லிங்கின் வெயின்...’’
ஆன் செய்த கேஸட் ப்ளேயரை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டபோது பாட்டும், பாட்டு பாடுபவர்களும் அவளின் இதயத்திற்குள்ளேயே நுழைந்து விட்டதைப் போல் அவளுக்கு இருந்தது.
‘‘நீயும் உன்னோட பாட்டும்...’’
தூரத்தில் இருக்கும் சி.கெ. என்றோ ஒரு நாள் அவளைப் பார்த்துச் சொன்னார்.
‘‘தேர்வுல மட்டும் உனக்கு முதல் வகுப்பு கிடைக்கலைன்னா உன்னோட கேஸட்டுகள்ல ஒன்னைக் கூட இங்கே வைக்க விட மாட்டேன். எல்லாத்தையும் நானே நெருப்புல போட்டு எரிச்சிடுவேன்.’’
அந்த லட்சாதிபதிக்கென்று இருக்கிற ஒரே ஒரு மகள். அவளை எப்படியும் டாக்டராக்கி விட வேண்டும் என்பது அவரின் விருப்பம்.
கேட்டைக் கடக்கும்போது அவள் வெறுமனே திரும்பிப் பார்த்தாள். இனி ஒருவேளை தான் திரும்பி வரவே முடியாத ஒரு சூழ்நிலை உண்டானால்...?
மலையின் அடிவாரத்தில் இருந்த பனிப்படலம் சிவப்பு வண்ணத்தில் இருந்தது. யூக்கலிப்டஸ் மரங்கள் மீது மாலை நேர வெயில் பட்டு ஜொலிப்பதை அவள் பார்த்தவாறு நின்றிருந்தாள்.
‘‘போகலாமா மகளே’’
அச்சுதன் நாயர் ஸ்டியரிங்கில் கையை வைத்தவாறு அவளிடம் கேட்டார். அவள் ‘‘சரி’’ என்று சொன்னாள். கார் கிளம்பி முன்னோக்கி ஓட ஆரம்பித்தது.
‘‘நான் திரும்பி வருவேனா அச்சுதன் நாயர்?’’
‘‘ரெண்டு நாட்கள்ல திரும்பி வந்திடலாம்.’’
‘‘நிச்சயமா?’’
‘‘நிச்சயமா?’’
எதைப் பற்றியும் சிந்திக்காமல் அச்சுதன் நாயர் சொன்னார்.
லில்லி தன் தந்தையைப் போல் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவளின் குடும்பத்திலுள்ள யாரைப் போலவும் அவள் இல்லை. மனம் முழுக்க கனிவையும், கருணையையும் கொண்டிருக்கும் ஒரு நல்ல பெண் அவள். அவள் விருப்பப்படுவதைப் போல வாழ்க்கையில் எல்லாமே நடக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசைப்பட்டார் அச்சுதன் நாயர்.
மாலை நேரம் முடிந்து இரவு வர ஆரம்பித்தது. மலையும், பனிப்படலமும் கண்ணை விட்டு மறைந்தன. காட்டுக்குள் இருந்தவாறு கறுப்பு ஆறு போல நீளமாகத் தெரிந்த ரோட்டையே பார்த்தாள் லில்லி. சாலையோர விளக்குகளில் பெரும்பாலானவை எரியவேயில்லை. பாதையில் பல இடங்கள் நன்றாக நனைந்திருந்தன. இதற்கு முன்னால் மழை பெய்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் லில்லி.
இரவு வெகு நேரம் ஆகும் வரை அவளின் கேஸட் ப்ளேயர் இயங்கிக் கொண்டே இருந்தது.
வழியில் இரண்டு மூன்று விளக்குகள் எரிந்த கடைகளைப் பார்த்ததும் அவள் காரை நிறுத்தச் சொன்னாள். அங்கு இரண்டு பேரும் சூடான தேநீர் வாங்கிக் குடித்தார்கள்.
‘‘இனி நான் காரை ஓட்டுறேன். அச்சுதன் நாயர், உங்களுக்கு தூக்கம் வரும்ல?
மணி மூன்றானது. இரு பக்கங்களிலும் இருந்த வயல்களில் மழை நீர் நிரம்பியிருந்தது. அதோடு நிலவொளியும், குளிரில் கார் அமைதியாக நின்று கொண்டிருந்தது.
பின்னிருக்கையில் சாய்ந்து உட்கார்ந்த லில்லி மெதுவாக உறக்கத்தில் ஆழ்ந்தாள். அவளின் மனதில் அடித்தளத்தில் எங்கோயிருந்து டயானா ரோஸ் பாடிக் கொண்டிருந்தாள். ‘‘ஐ ஆம் கமிங் அவுட்... ஐ ஆம் கமிங் அவுட்... ஐ ஆம் கமிங் அவுட்...’’ தொடர்ந்து கோரஸ் ஒலித்தது. ‘‘ஐ ஆம் ஸ்ப்ரெடிங் லவ்... தேரீஸ் நோ நீட் டூ ஃபியர்.’’
அவளின் கண்கள் முழுமையாக மூடின.
‘‘மகளுக்கு நல்ல உறக்கம்...’’ அச்சுதன் நாயர் சொன்னார்.
அவள் கண்களைத் திறந்து பார்க்கும்போது, வண்டி பெரிய கேட்டைக் கடந்து போர்ட்டிக்கோவின் முன்னால் மெதுவாக வந்து நின்றது. பூக்களும், மரங்களும், வீடும் ஒன்றாக எல்லாம் ஒன்றாக வெளுத்திருந்தன. அவளின் மனமும் வெளுத்துக் கொண்டிருந்தது.
புடவையின் ஓரத்தை தோளில் இட்டவாறு, அவள் கார் கதவைத் திறந்து கீழே இறங்கினாள்.
அதே நேரத்தில் ட்ரஸ்ஸிங் கவுனின் நாடாவைக் கட்டியவாறு சி.கெ. வாசலில் வந்து நின்றார்.
4
ஜன்னல் வழியாக பார்க்கும்போது வெளியே இளம் வெயில் தன்னுடைய பொன் கிரணங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. குளித்து முடித்து ஈரமான கூந்தலை உலர வைத்தவாறு வாயில் புடவையொன்றைக் கட்டியிருந்த லில்லி கீழே இறங்கி வந்தாள். காலைச் சிற்றுண்டி உண்பதற்காக ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் அவளின் தந்தையும் தாயும் அவளை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். வெள்ளியினால் ஆன கரண்டியால் ரொட்டி மீது வெண்ணெயை அவளின் தாய் புரட்டிக் கொண்டிருந்தாள். அவளின் தந்தையின் கையில் காலையில் வந்திருந்த ஆங்கில பத்திரிகை இருந்தது.
லில்லி எதிர்பார்த்திருந்த நிமிடம் இப்போது எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். எல்லா விஷயங்களையும்...
அவள் எதிரில் மேஜைக்கருகில் வந்து அமர்ந்தபோது அவளையே, அவளின் தாய் உற்றுப் பார்த்தாள்.
‘‘நீ ஏன் ஒரு மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு இருக்கே நாளைக்கே நீ திரும்பிப் போகலாம்.’’