லில்லி - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
‘‘ஹலோ டியர்?’’
மாடியில் இருந்து மேஜரின் மனைவி இறங்கி வந்தாள். அவள் லில்லியின் முகத்தைக் கைகளால் பற்றியவாறு அவளின் இரு கன்னங்களிலும் தலா ஒரு முத்தம் தந்தாள்.
இரண்டு நிமிடங்கள் கழிந்திருக்கும். மேலே இருந்து யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. டாக்டர் கிருஷ்ணசந்திரன் நடந்து வரும் ஓசை கேட்டது. டாக்டர் கிருஷ்ணசந்திரன் கீழே வந்து கொண்டிருந்தான்.
அவள் அவனை தலையை உயர்த்திப் பார்த்தாள். கண்களே கூசியது. வெள்ளைக்காரனின் நிறம். நல்ல உயரம். அழகாக வாரி விடப்பட்டிருந்த கறுகறுப்பான தலைமுடி. இளம் வண்ணத்தில் இருக்கும் ஸஃபாரி ஸுட் ஒரே பார்வையில் பார்த்தவுடன் கூறி விடலாம். இங்லாண்டில் இருந்தோ அமெரிக்காவில் இருந்தோ வந்திருக்கும் ஆள் என்று மொத்தத்தில் - ஒரு துரை மாதிரி இருந்தான்.
மேஜர் நம்பியார் அறிமுகப்படுத்தி வைத்தார்.
‘‘மீட் அவர் பட்டிங் டாக்டர் லில்லி.’’
‘‘ஹாய் பேபி...’’
டாக்டர் கிருஷ்ணசந்திரன் அவருக்கு நேர் எதிரில் இருந்த ஸோஃபாவில் வந்து அமர்ந்தான். அவன் சிரித்தபோது வெண்மையாக பிரகாசித்த பற்களை அவள் பார்த்தாள். பற்கள் மிகவும் அழகாக இருந்தன. ஒரு பற்பசை விளம்பரத்திற்கு மாடலாக இருப்பதற்கு மிகவும் பொருத்தமாக அவன் இருப்பான் என்று அப்போது அவள் நினைத்தாள். அவனின் வெளுத்து உருண்ட கை விரல்களுக்கு இடையில் கறுப்பான சிறு ரோமங்கள் இருந்தன.
மேஜர் நம்பியார் மனைவியிடம் சொன்னார்.
‘‘பிள்ளைங்க உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கட்டும். நாம போகலாம்.’’
அவர்கள் இரண்டு பேரும் எழுந்து தங்களுக்குள் என்னவோ மெதுவாக பேசியவாறு சிரித்துக்கொண்டே உள்ளே போனார்கள்.
கிருஷ்ண சந்திரன் எழுந்து அவள் அருகில் வந்து நின்றான்.
‘‘மே ஐ...?’’
அவள் தலையை அசைத்து சம்மதம் தந்தவுடன், அவன் தொட்டும் தொடாமலும் அவள் அருகில் அமர்ந்தான். கொலோனின் நறுமணம் எல்லா இடங்களிலும் பரவியது.
ஆள் பயங்கரமான ஆள்தான். அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். பெண்களை வசீகரிக்கக் கூடிய எல்லாமே அவனிடமிருந்தது.
‘‘நீ எவ்வளவு எளிமையா இருக்கே! இந்த மாதிரி எளிமையா ட்ரெஸ் பண்ணுற பெண்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.’’
அவள் ஒரு கைத்தறி புடவையை அணிந்திருந்தாள். நகைகள் எதுவும் உடம்பில் அணியவில்லை. கை நகங்களுக்கு சாயம் கூட பூசவில்லை. நெற்றியில் பொட்டு கூட வைக்கவில்லை.
‘‘நீ எப்போ அமெரிக்காவுக்கு வரப்போற?’’
அவன் அவளின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தான். அவனின் மூச்சு அவளின் தலைமுடியின் மேல் விழுந்தது.
‘‘உன்னோட கன்னங்கள் எவ்வளவு அழகா இருக்கு! நான் அதைத் தொட்டுப் பார்க்கட்டுமா?’
அவளையுமறியாமல் அவள் தலையைக் குனிந்து விட்டாள். அவன் தொடவில்லை. சொல்லப்போகிற ஏதோ ஒரு தமாஷான விஷயத்தை மனதிற்குள் நினைத்துப் பார்த்து அவன் அமைதியாகச் சிரித்தான்.
‘‘நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே! அமெரிக்காவுக்கு நீ வர்றயில்ல? அமெரிக்கா மேல விருப்பமிருக்குல்ல?’’
‘‘எனக்கு விருப்பம் இந்த ஊருதான்.’’
‘‘சரி... அப்படின்னா நான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு இங்க வந்துடட்டுமா?’’
அவன் உரத்த குரலில் சிரித்தான். அப்போது அவனின் முகம் சிவந்தது. அவனின் உதடுகள் சிவந்து காணப்பட்டன. அதனால் அவனுக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
எப்போதும் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்ட சத்யனை அவள் நினைத்துப் பார்த்தாள். அவன் பக்கத்தில் வரும்போது சார்மினார் சிகரெட்டின் வாடை குப்பென்று அடிக்கும்.
சிரித்து முடித்து விட்டு கிருஷ்ணசந்திரன் சொன்னான்.
‘‘எனக்கும் அமெரிக்கா பிடிக்காது. தெரியுதா? எல்லாரையும் போல நானும் பணம் சம்பாதிக்குறதுக்குத்தான் அமெரிக்காவுல போய் வேலை பார்க்கறேன். இங்கே தலை நரைக்குற வரைக்கும் வேலை பார்த்தால் கூட நம்பால என்ன சம்பாதிக்க முடியும்?’’
‘‘எதற்கு சம்பாதிக்கணும்?’’ திடீரென்று அவள் கேட்டாள். அப்படியொரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவேயில்லை.
‘‘வெல்...’’ - அவன் சிறிது தயங்கியபடி சொன்னான்.
‘‘எல்லோருடைய இலட்சியமுமே பணம்தானே!’’
‘‘பணத்தை விரும்பாதவர்களும் இந்த உலகத்துல இருக்காங்களே!’’
‘‘இல்ல. நிச்சயமா இல்ல. என்னால நூறு சதவிகிதம் உறுதியா சொல்ல முடியும்’’
‘‘கொஞ்சம் கூட பணத்தை விரும்பாத ஒரு ஆளை எனக்குத் தெரியும்!’’
‘‘ஹு ஈஸ் தட் ஃபூல்?’’
‘‘நான் தான்...’’
‘‘நீயா?’’
அவன் மீண்டும் உரத்த குரலில் சிரித்தான். அடுத்த நிமிடம் சிரிப்பை நிறுத்தி விட்டு அவன் சொன்னான்.
‘‘நீ ஒரு லட்சாதிபதியோட மகள். அதுனாலதான் உனக்கு பணத்து மேல விருப்பமில்ல...’’
‘‘இங்க பாரு, கிருஷ்ணசந்திரன். என் அப்பாவோட இலட்சக்கணக்கான பணத்தையும் வேவ்டாம்னு உதறிட்டு வர்றதுக்கு எனக்கு எந்தவொரு பிரச்சனை யுமில்ல. சொத்தோ பணமோ எனக்கு எதுவும் தேவை யில்ல. திரும்பத் திரும்ப ஒரு நிறம் போன காட்டன் புடவை யைக் கட்டிக்கிட்டு ஒரு சின்னக் குடிசையில் ஆயுள் காலம் முழுவதும் வாழறதுக்கு நான் தயாரா இருக்கேன்.’’
அப்போது கதவை யாரோ தட்டினார்கள். கதவு திரைச் சீலையின் இடைவெளி வழியாக மேஜர் நம்பியாரின் பைப்பில் இருந்த புகை உள்ளே நுழைந்து வந்தது.
‘‘மே ஐ கம் இன்?’’
மேஜர் உள்ளே வந்தார். அவர் இரண்டு பேரின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தார்.
‘‘கொஞ்சம் தேநீர். அதற்குப் பிறகு நீங்கள் தொடர்ந்து பேசலாம்...’’
அவர் அவர்களை சாப்பிடும் அறைக்கு அழைத்துக் கொண்டு போனார். நம்பியாரின் மனைவி வெள்ளி பூசப் பட்ட கூஜாவில் இருந்து தேநீரை கப்புகளில் ஊற்றினாள்.
தேநீர் குடிப்பதற்கிடையில் லில்லியைத் தவிர, மற்ற எல்லோரும் உரத்த குரலில் சிரித்த வண்ணம் இருந்தனர். ஏதாவது தமாஷாகப் பேசி தன்னுடைய விருந்தினர்களைச் சிரிக்க செய்ய ஓய்வு பெற்ற மேஜர் கனோத்நாராயணன் நம்பியாருக்கு நன்றாகவே தெரியும்.
‘‘சியர் அப், பேபி...’’
எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்த லில்லியைப் பார்த்து நம்பியாரின் மனைவி சொன்னாள்.
லில்லி ஒரு நாற்பது வால்ட் ஸ்டீரியோ கனவில் மூழ்கிப் போயிருந்தாள்.
தேதீர் பருகி முடித்த பிறகு, அவர்கள் மீண்டும் வரவேற்பறைக்குப் போகவில்லை.
கிருஷ்ண சந்திரன் சொன்னான்.
‘‘நாங்கள் ஒரு ட்ரைவிங் போயிட்டு வர்றோம். லில்லியை நான் திரும்ப வீட்ல கொண்டு போய் விட்டுர்றேன்.’’
‘‘ஷ்யூர்?’’ - மேஜர் கேட்டார். ‘‘அமெரிக்காவுக்கே கொண்டு போயிட மாட்டேல்ல? சி.கெ.யோட ஒரே மகளாச்சே!’’