லில்லி - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
‘‘மகளே, உன்னைஅழைச்சிட்டுப் போகத்தான் நான் வந்தேன்.’’
அவள் வியப்புடன் அச்சுதன் நாயரின் முகத்தைப் பார்த்தாள்.
‘‘உடனே உன்னை கூப்பிட்டு வரச்சொன்னாரு முதலாளி.’’
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘‘என்ன விசேஷம்? அப்பாவுக்கு ஏதாவது...’’
அதற்குப் பதில் சொல்லும் விதமாக அவர் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை வெளியில் எடுத்தார்.
அவள் அந்தக் கடிதத்தை வாங்கி பிரித்து வாசித்தபோது அவளின் முகத்தின் பலவித உணர்வுகளும் தோன்றின.
முதல் நாள் மாலை நேரத்தில் சி.கெ. அவரை அழைத்துச் சொன்னார்.
‘‘அச்சுதன் நாயர்... நீங்க போயி லில்லியைக் கூப்பிட்டு வரணும். உடனே கிளம்புங்க. இதைக் கையில் வச்சுக்கங்க...’’
பெட்ரோல் போடுவதற்கான பணத்தைத் தந்தார். எண்ணாமலே நூறு ரூபாய் நோட்டுகளை அவர் கையில் தந்தார். சி.கெ.விற்கு அச்சுதன் நாயர் மேல் ரொம்பவும் நம்பிக்கை உண்டு. அவர் வெறும் டிரைவர் மட்டுமல்ல. அந்தக் குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி.
‘‘வீட்ல போய் விஷயத்தைச் சொல்லிட்டு சாயங்காலத்துக்கு முன்னாடியே புறப்பட்டுடணும் என்ன?’’
அதற்கு மேல் ஏதோ கேட்க நினைத்தார் அச்சுதன் நாயர். அதற்குள் சி.கெ. தொலைபேசிக்குப் பக்கத்தில் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு யாரிடமோ பேசுவதற்காக டயல் பண்ண ஆரம்பித்துவிட்டார். அவர் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை இப்படி தொலைபேசியிலேயே செலவழித்துக் கொண்டிருப்பார்.
சி.கெ. அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. அச்சுதன் நாயர் பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார்.
எதற்காக தன் மகளை சி.கெ. இவ்வளவு அவசரமாக அழைத்துக் கொண்டு வரச் சொல்ல வேண்டும்?
பல்புகளின் மங்கலான வெளிச்சம் விழுந்து கொண்டிருந்த மெயின் ரோட்டில் காரை ஓட்டிச் செல்லும்போது அச்சுதன் நாயர் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். வீட்டில் அப்படியொன்றும் விசேஷம் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அச்சுதன் நாயர் காரணம் தெரியாமல் தவித்தார்.
சி.கெ.வின் வீட்டிலுள்ள யாருடைய முகமாவது சற்று வாடிப் போயிருந்தால், அச்சுதன் நாயரின் மனமும் வாடத் தொடங்கிவிடும். அந்த வீட்டின் துக்கங்களும், சந்தோஷங்களும் அவர் தன்னுடைய துக்கங்களும், சந்தோஷங்களும் என ஆக்கிக் கொண்டிருந்தார்.
‘‘அச்சுதன் நாயர், உங்களுக்கு தாகமா இருக்கா? வாங்க... ஏதாவது குடிக்கலாம்.’’
அவள் அவரை அருகில் இருந்த கேன்டீனுக்கு அழைத்துச் சென்றாள்.
‘‘வேண்டாம் மகளே, ஒண்ணும் வேண்டாம். மகளே, வேகமா புறப்படு. இன்னைக்கே நாம தலச்சேரியில் இருக்கணும்’’- அவர் சொன்னார்.
கேன்டீன் முற்றத்தில் இருந்த வண்ண குடைக்குக் கீழே உட்கார்ந்திருந்தபோது, அவள் மீண்டும் தன் தந்தையின் கடிதத்தைப் படித்துப் பார்த்தாள். ஆங்கிலத்தில் அவசர அவசரமாக இரண்டே இரண்டு வரிகள் எழுதியிருந்தார். ‘‘உடனே புறப்படவும். நாளையே திரும்பிப் போகலாம். உன்னுடைய தேர்வுக்கு இடைஞ்சல் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். மற்றவை நேரில்.’’
லில்லி மீண்டும் அந்தக் கடிதத்தைப் படிப்பதை அச்சுதன் நாயர் பார்த்தார். அவரின் ஆர்வம் அதிகரித்தது.
‘‘வீட்டுல ஏதாவது விசேஷமா அச்சுதன் நாயர்?’’
‘‘அப்பாவும் அம்மாவும் சுகமாக இருக்காங்க.’’
‘‘அங்கே யாராவது வந்திருக்காங்களா?’’
‘‘இல்ல...’’
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கடிதத்தில் எதுவும் தெளிவாக எழுதப்படவில்லை. அச்சுதன் நாயருக்கோ ஒன்றுமே தெரியவில்லை.
அவள் எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள். மருத்துவக் கல்லூரி கட்டிடத்தைத் தாண்டி தூரத்தில் மலையின் மேல் இப்போதும் பனிப்படலத்தைப் பார்க்கலாம். சூரியன் மேலே வர வர பனி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருந்தது. மலை மேல் இருந்த மூடு பனி அவளின் இதயத்திற்குள் இறங்கி வந்தது. அவளுக்கு குளிர்வதை போல் இருந்தது. அவள் தான் அணிந்திருந்த வெள்ளைக் கோட்டின் மேல் பொத்தானை இட்டாள்.
எல்லோரும் பீட்டர் ஸெல்லர்ஸ் என்றழைக்கும் பீட்டர் ஆவி பறக்கும் இரண்டு கப் காப்பியுடன் வந்தான்.
‘‘டாக்டர்... நீங்க உள்ளே இருக்கலாமே! இங்கே குளிர் அதிகமாச்சே!’’
கேன்டீனுக்கு முன்னால் இருந்த வண்ணக்குடைகளுக்குக் கீழே போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன.
லில்லி பதில் எதுவும் சொல்லாமல் ஒரு கப்பை கையில் எடுத்தாள். காப்பியைப் பருகுவதற்கு முன்பு அச்சுதன் நாயர் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்தார். அது அவரின் பழக்கம்.
‘‘மகளே, காப்பி குடிக்கலியா?’’
அவள் பாதி காபியைக் குடித்து விட்டு கப்பைக் கீழே வைத்து விட்டு எழுந்தாள். அச்சுதன் நாயரும் எழுந்தார். அவர்கள் ஹாஸ்டலை நோக்கி நடந்தார்கள்.
மூன்றாவது மாடியில் அவளின் அறை இருந்தது. அவள் கதவைத் திறந்தபோது, சுவரில் ஒட்டப்பட்டிரந்த ஃப்ராங்க் ஸாப்பாவின் ஒரு பெரிய வண்ண போஸ்டர் அச்சுதன் நாயரை வரவேற்றது.
‘‘அச்சுதன் நாயர், இங்கே இருங்க. நான் இதோ வந்திர்றேன்.’’
அவள் கோட்டைக் கழற்றி படுக்கையில் போட்டு விட்டு கீழே இறங்கிப் போனாள்.
அந்தக் கேம்பஸுக்குள்ளேயேதான் மெடிசின் பேராசிரியர் ஜார்ஜ் தாமஸின் ஃப்ளாட் இருக்கிறது. பேராசிரியரின் மகன் ஷைனி தாமஸும் லில்லியும் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். பேராசிரியர் அதிகமாக பேச மாட்டார். ஆனால், மகள் அப்படி அல்ல. எப்போதும் ‘‘கலகல’’ வென பேசக் கூடியவள்.
பேராசிரியரும் அவரின் மனைவியும் இன்னும் படுக்கையறையை விட்டு வெளியே வரவில்லை. வேலைக்காரன் குட்டியிடம் சொல்லிவிட்டு அவள் தன்னுடைய வீட்டிற்கு ஒரு ட்ரங்கால் புக் செய்தாள்.
பேராசிரியர் தெலைபேசி எண் என்பதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லாமல் போய்விட்டது.
‘‘வாட் ஈஸ் தி மேட்டர் லில்லி?’’
சி.கெ. கம்பீரமான குரலில் கேட்டார்.
‘‘அச்சுதன் நாயர் கடிதத்தைக் கொடுத்தார்ல?’’
‘‘அப்பா.... அதுல நீங்க விவரம் ஒண்ணும் எழுதலையே?’’
‘‘தற்போதைக்கு நீ அவ்வளவு தெரிஞ்சுக்கிட்டா போதும். உடனே புறப்படு. வீ.ஆர். வெயிட்டிங் ஃபார் யூ...’’
‘‘எனக்கு தேர்வு இருக்கே அப்பா’’
‘‘அதெல்லாம் சொல்லக் கூடாது. அச்சுதன் நாயர்கூட உடனடியா புறப்படு. ஸி யூ ஸுன்...’’
அவளின் தந்தை ரிஸீவரைக் கீழே வைக்கும் சத்தம் கேட்டது. அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
அவளின் தந்தை இருப்பதோ எத்தனையோ கிலோ மீட்டர்களுக்கு அப்பால். நாளை அவள் தந்தையின் அருகில் நிற்கும் நிமிடத்திலும் அவர்களுக்கிடையே இந்த இடைவெளி இருக்கவே செய்யும். அவளுக்கு இது நன்றாகவே தெரியும்.
தொலைபேசியைக் கீழே வைத்து விட்டு வாடிய முகத்துடன் வெளியே வரும்போது, எதிரில் பேராசிரியரின் மனைவிவந்து கொண்டிருந்தாள்.
‘‘என்ன லில்லி?’’
‘‘நான் வீட்டுக்குப் போறேன். திரும்பி வர்றதுக்கு ரெண்டு நாட்கள் ஆகும்.’’