லில்லி
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
மாமன்னூர் நகரத்தைத் தாண்டியதும் கார் பிரதான சாலையை விட்டு மண்ணால் ஆன கரடு முரடான பாதையில் திரும்பியது. அதோடு காரில் வேகம் குறைந்தது. ஒரு மாட்டு வண்டியைப் போல அது குலுங்குவதும் திணறுவதுமாய் இருந்தது. காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த லில்லி சிரித்த முகத்துடன் இருந்தாள்.
கசப்பான கஷாயத்தைக் குடித்த முகத்துடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார் அச்சுதன் நாயர். புதிய மார்க் ஃபோர்கார். இரண்டாயிரம் கிலோ மீட்டர் கூட இன்னும் சரியாக ஓடவில்லை. பால்குடி மறக்காத ஒரு பச்சைக் குழந்தையைப் பிரம்பால் அடித்துக் கீழே தள்ளினால் எப்படி இருக்கும், அப்படியொரு அனுபவத்தைத்தான் அப்போது பெற்றார் அச்சுதன் நாயர்.
முன் இடது பக்க சக்கரம் ஒரு மேட்டின் மேல் ஏற வண்டியே குலுங்கியது. வளைவு திரும்பிய போது வண்டி மேலும் குலுங்கியது. வளைவு திரும்பியபோது வண்டி மேலும் குலுங்கியது. இந்தத் தடவை முன் சக்கரங்களில் ஒன்று பாதையின் நடுவில் இருந்த ஒரு கருங்கல் மேல் தட்டியதால் வந்த விளைவு இது.
‘‘மகளே, நீ சொல்லித்தான் நான் இந்த வழியிலேயே வந்தேன். நூறு கிலோ மீட்டர் வேகத்துல பறக்கக்கூடிய ஹைவேயை விட்டுட்டு, இந்தக் காட்டுப் பாதை தேவையா மகளே?’’
அச்சுதன் நாயருக்கு உண்மையிலேயே மனதில் மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த காட்டுப் பாதையில் இன்னும் சில கிலோ மீட்டர்கள் வண்டியை ஓட்டினால் வண்டியின் நிலை அவ்வளவுதான். திரும்பவும் தலச்சேரிக்கு வரும்போது புத்தம் புது மார்க் ஃபோர், ஜட்கா வண்டியாக மாறியிருக்கும். அதற்குப் பிறகு பானட்டிற்கு முன்னால் ஒரு குதிரையை பூட்டி ஒட்ட வேண்டியதுதான்.
சி.கெ.யைப் பொறுத்தவரை கார் என்பது ஒரு பெரிய விஷயமில்லை. அணியும் வேட்டியை அவ்வப்போது மாற்றுவது மாதிரி அவருக்கு கார்கள் விஷயம். இருந்தாலும்... அச்சுதன் நாயருக்கு கார்கள் என்பது சொந்தக் குழந்தைகளைப் போல. அவர் ஸ்டியரிங்கை கையில் பிடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. மாமன்னூரைத் தாண்டி ஒரு பொடிப்பயல் எறிந்த கல் டிக்கியின் மேல் பட்டபோது, தன்னுடைய சொந்த நெஞ்சில் கல் வந்து மோதியதைப் போல் துடித்துப் போனார் அச்சுதன் நாயர். தான் ஓட்டும் வண்டி மேல் அப்படியொரு பிரியம் அவருக்கு.
பாதையில் மணல் இருந்தால் பரவாயில்லை. குண்டும் குழியும் மட்டுமே இருந்தன. வேட்டைக்காரர்களின் ஜீப்புகளைத் தவிர பொதுவாக இந்தப் பாதையில் வேறு எந்த வாகனமும் போவதில்லை. சில கிலோ மீட்டர்கள் தாண்டிய உடனே, அச்சுதன் நாயருக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. பேசாமல் வண்டியை நிறுத்தி விடலாமா என்று அவர் நினைத்தார்.
‘‘மகளே, பிடிவாதம், பிடிக்காதே. நாம திரும்பி நல்ல ரோடு வழியா போவோம்.’’
‘‘மெதுவா ஓட்டுங்க. ஒரு பிரச்சினையும் இருக்காது.’’
‘‘மகளே, இப்படி பிடிவாதமா இருந்தா எப்படி? இந்த வழியில போணோம்னா நாம இன்னைக்குப் போய் சேர முடியாது.
இரவு பத்து மணிக்கு முன்பே லில்லியை ஹாஸ்டலில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று கறாராகச் சொல்லியிருந்தார் சி.கெ.
அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
‘‘முதலாளிக்கு இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா, என்னைக் கொன்னு போட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். மகளே, உனக்கு பரீட்சை நடக்குற நேரம்தானே?’’
‘‘அப்பாக்கிட்ட நான் ஃபோன்ல சொல்லிக்கிறேன். அச்சுதன் நாயர், நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.’’
அதற்குப் பிறகும் அச்சுதன் நாயருக்கு மனம் சமாதானமாகவில்லை. வண்டியின் அச்சு முறிந்தால், ஒரு வேளை சி.கெ. ஒரு வார்த்தை கூட கூற மாட்டார். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு லில்லியை ஹாஸ்டலில் கொண்டு போய்விடவில்லை என்பது தெரிய வந்தால்...
சி.கெ.விற்கு கை நிறைய செல்வத்தை மட்டும் கடவுள் தரவில்லை; கை நிறைய முன் கோபத்தையும் அது தந்திருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அச்சுதன் நாயர் சி.கெ.விடம் பணி செய்கிறார் அல்லவா? முதலாளியின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
கடந்து வந்த வழியில் மாமன்னூரை அடைந்தபோது, லில்லி அவரைப் பார்த்துக் கேட்டாள்.
‘‘மாமன்னூரைத் தாண்டிட்டா, காட்டுக்கு மத்தியிலேயே ஒரு வழி இருக்குல்ல?’’
‘‘அது வேட்டைக்குப் போறவங்க போற பாதை.’’
‘‘அது வழியா கார் போகும்ல?’’
‘‘வேட்டைக்காரங்க ஜீப்புலதான் அந்த வழியா போவாங்க...’’
‘‘இன்னைக்கு நாம அந்த வழியாகத்தான் போகப் போறோம்.’’
அவர் தலையைத் திருப்பி பின்னிருக்கையில் அமர்ந்திருந்த லில்லியைப் பார்த்தார். கன்னத்திலும் தாடியிலும் இருந்த ரோமக்காடு நன்றாக நரைத்து விட்டிருந்தது. இலேசாக சிரிப்பை வரவழைத்தவாறு அவர் சொன்னார்.
‘‘இனி வர்றப்போ நாம ஜீப்ல வருவோம்.’’
அச்சுதன் நாயர் சிரித்தார். அவள் பிடிவாதம் பிடித்தாள்.
‘‘நாம இன்னைக்கு காட்டு வழியேதான் போகணும்.’’
‘‘அவ்வளவுதான்- வண்டியைப் பார்க்கவே முடியாது. பாதை முழுவதும் குண்டும் குழியுமா இருக்கு.’’
‘‘புது கார்தானே? ஒண்ணும் ஆகாது.’’
அவள் பிடிவாதத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை.
‘‘மகளே, தேவையில்லாம என்னை பிரச்சனையில் மாட்டி விட்டுராதே...’’
அச்சுதன் நாயரின் முகத்தில் இருந்த கிழட்டுச் சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்தது.
சின்னப் பிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே லில்லி ஒரு பிடிவாதக்காரிதான். வளர்ந்து பெரிய பெரிய தேர்வுகளில் எல்லாம் தேர்ச்சி பெற்றாள். (நேற்றுக்கு முந்தின நாள் காலையில் ஹாஸ்டலில் பார்க்கும்போது புடவைக்கு மேலே வெள்ளை வண்ணத்தில் கோட்டும் கையில் சுருட்டிப் பிடித்திருந்த ஸ்டெதஸ்கோப்பும் இருந்தன). இருந்தாலும், அந்தப் பழைய பிடிவாத குணம் அவளை விட்டு நீங்கவே இல்லை.
மாமன்னூர் தாண்டியதும், அவள் நினைவுப்படுத்தினாள்.
‘‘அச்சுதன்நாயர், காட்டுப் பாதை...’’
அவள் சொன்னபடி, அவர் காட்டுப் பாதை வழியே வண்டியைத் திருப்பினார்.
இதுவரையில் தார் போட்டு மினுமினுப்பான சாலையின் இரு பக்கங்களிலும் உயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள் கம்பீரமாக நின்றிருந்தன. அவ்வப்போது பனை மரங்களுக்கு மத்தியில் தலையில் பித்தளைக் குடத்தை வைத்தவாறு செட்டிச்சிப் பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். சாலையின் ஓரத்தில் கோவணம் மட்டுமே அணிந்திருக்கும் செட்டிக்குழந்தைகள் வேறு.
இப்போது அது எதுவுமே இல்லை. பாதையின் இரு பக்கங்களிலும் ஒரே பச்சை மயம். காடு மிகவும் பக்கத்தில் இருக்கிறது என்பது அவளுக்குத் தெரிகிறது. வாட்டிக் கொண்டிருக்கும் உச்சிப் பொழுது வெயில்.