லில்லி - Page 31
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
அவன் அவள் என்ன சொல்கிறாள் என்று அறிந்து கொள்வதற்காக அவளின் முகத்தையே பார்த்தான். அவள் அவன் பேசுவதையே உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘‘கம்பி வளைச்சா நாளொண்ணுக்கு முப்பது ரூபா கிடைக்கும். உண்ணவும் உடுக்கவும் அது போதும். கொஞ்ச நாள் போனா, ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணலாம். குழந்தைகளைப் பெறலாம். ஆனா, இதுனால மட்டும் வாழ்க்கையில் நான் திருப்தியடைஞ்சு மனிதனா ஆயிடுவேன்ற நம்பிக்கை எனக்கு இல்ல. என்னோட இலக்கு இவை அல்லன்னு எனக்கு தோணத் தொடங்கியிருக்கு...’’
தூரத்தில் மின்னல் தெரிவதைப் போல லில்லியின் முகம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
‘‘பட்டினியும் நோயுமா காட்டுப் பிரதேசங்கள்ல வாழ்ந்துக்கிட்டு இருக்குற ஆதவாசிகளைப் பற்றி நான் சொன்னது உன் ஞாபகத்துல இருக்கா?’’
அவள் அதை மறக்கவில்லை. அந்தக் காட்டுப் பிரதேசங்களில் வாழும் பறவைகளுக்குக் கூட பசி இருக்கிறது.
‘‘நாம அங்கே போகலாம்’’ - அவன் அவளின் முகத்தைப் பார்த்தவாறு சொன்னான்.
‘‘நீ அவர்களோட நோய்க்கு சிகிக்சை பண்ணி குணப்படுத்து. நான் அவுங்களுக்கு எழுத, படிக்கச் சொல்லித் தர்றேன்.’’
அவள் புடவைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்தாள். நீர் வழிந்த அவளின் கண்கள் இப்போது சூரிய வெளிச்சம் பட்டு பிரகாசித்தன.
‘‘நாம எப்படி வேணும்னாலும் வாழலாம். இப்போ இருக்கிற மாதிரி நல்ல ரெணடு நண்பர்களாகவோ, மனைவியும் கணவனுமாகவோ எப்படி வேணும்னாலும்... இல்லாட்டி அண்ணன், தங்கச்சியா... நம்ம உறவுக்கு ஒரு பேர் வேணுமா என்ன?’’
எத்தனையோ வருடங்களாக மனதில் கனத்துக் கிடந்த மேகங்கள் பெய்து தீர்த்ததைப் போல் இருந்தது. தான் ஒரு குருவியாக மாறியதைப்போல் உணர்ந்தாள் அவள். மரங்களுக்கும், செடிகளுக்கும் மத்தியில் பறந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறு கிளி...
சிறிது தூரத்தில் ஒரு மரத்தடியில் கிடந்த அவளின் சிவப்பு வண்ண சூட்கேஸை அவன் கையிலெடுத்தான். கேசட் ப்ளேயர் எங்கே போனதென்று அவளுக்குத் தெரியவில்லை. பேட்டரி தீர்ந்து போனதுடன், அதன் ஸ்டீரியோ சத்தத்தை அது முழுமையாக இழந்து விட்டிருந்தது. முன்பு அந்த கேசட் ப்ளேயருக்கு மேலே மழை பெய்து கொண்டிருப்பதை எந்தவித உணர்வுமில்லாமல் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்று வரை அவள் தன்னுடைய சொந்த இதயத்தைப் போல நினைத்த விலை மதிப்பு கொண்ட அந்த கேசட் ப்ளேயரை முழுமையாக மழை நீர் சூழ்ந்துவிட்டிருந்தது.
காலியான பீடி கட்டில் இருந்த கடைசி பீடியை எடுத்து பற்ற வைத்து புகை விட்ட சத்யன் சிவப்பு சூட்கேஸைக் கையில் எடுத்தவாறு காட்டுப் பாதை வழியே நடந்தான். அவனுடன் பறந்து தளர்ந்து போன ஒரு சிறு கிளியைப் போல லில்லியும்.
அதே நேரத்தில் மாமன்னூரைச் சேர்ந்த சுமார் நூறு பேர் கூட்டமாக வந்து அந்தக் காட்டை வளைத்தார்கள். அவர்கள் கையில் ஆயுதங்களும் பந்தங்களும் இருந்தன. செடிகளையும், கொடிகளையும் கண்டபடி வெட்டியெறிந்து அவர்கள் பயங்கர ஆரவாரங்களை எழுப்பிக் கொண்டு காட்டில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல மரங்கள் சிவப்பு வண்ணத்திற்கு மாறின. காட்டில் இருள் வந்து ஆக்கிரமித்தது. எரியும் தீப்பந்தங்களுடன் அவர்கள் தேடுதலைத் தொடர்ந்தார்கள். காட்டின் ஒரு மூலை முடுக்கைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பொழுது புலரும் வரை அவர்களின் தேடல் தொடர்ந்தது. ஆனால், மழைநீர் புகுந்து சர்க்யூட்டுகள் பாதிக்கப்பட்டு ஒன்றுக்குமே உதவாமற்போன ஒரு கேசட் ப்ளேயரைத் தவிர, காட்டில் அவர்களால் வேறெதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.