லில்லி - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
முதல் நாள் இரவு மழை பெய்யத் தொடங்கியது. ‘சலசல’ வென்று சத்தம் உண்டாக்கியவாறு அது காடு முழுக்கப் பெய்து கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருக்கும் கிளிகள் எதுவும் காலை முதல் கூடுகளை விட்டு வெளியே வரவேயில்லை. பெரிய ஓசையுடன் மர இலைகளில் மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. காடு முழுக்க மழையின் ஆரவாரம் சிறிது கூட நிற்காமல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. காற்றில் பழுத்த இலைகள் தொடர்ந்து கீழே விழுந்து கொண்டிருந்தன. அருவியில் தண்ணீர் அதிகமாகி கொட்டிக் கொண்டிருந்தது.
எல்லா இடங்களிலும் இருந்து வந்த நீர் கலங்கிப் போய் அதில் வேகமாகக் கீழ் நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.
நண்பகலுக்குப் பிறகு மழை கொஞ்சம் நின்றது. சூரிய வெளிச்சம் இலைகளினூடே லேசாக எட்டிப் பார்த்தது. மழையில் நனைந்திருந்த பச்சிலைகள் வெயில் பட்டு பிரகாசித்தன. மரக்கிளைகளில் இருந்து மழை நீர் கீழே கிடக்கும் காய்ந்த இலைகள் மேல் ‘சொட் சொட்’டென்று சத்தம் உண்டாக்கியவாறு விழுந்து கொண்டிருந்தது.
அப்போது மழையில் நனைந்திருந்த காட்டுக்குள் ஒரு இளைஞன் தோன்றினான். அவன் சிறு சிறு புள்ளிகள் போட்ட சட்டை பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து ஒரு நனைந்த பீடியை எடுத்து நெருப்புப் பற்ற வைத்து இரண்டு முறை ஊதி புகையை விட்டான். அவன் காட்டின் நாலா பக்கங்களிலும் கண்களை ஓட்டினான். மழை நீர் புகுந்த கூடுகளை விட்டு கிளிகள் ஓசை எழுப்பியவாறு வெளியே பறந்து வந்தன. மழையில் கீழே விழுந்து குவிந்து கிடந்த பழுத்த இலைகளைத் தாண்டி கீற பாய்ந்தோடியது. முதுகை வளைத்துக் கொண்டு நனைந்து போன உடலைக் குடைந்து கொண்டிருந்த ஒரு முள்ளம்பன்றியையும் அவன் பார்த்தான்.
அவன் எங்கு போக வேண்டும் என்று தெரியாமல் தயங்கி நின்றான்.
மாமன்னூரில் இருந்து பதினாறாம் மைல் வரை அவன் கால் நடையாக நடந்தே வந்திருக்கிறான். இந்தக் காட்டுப் பாதையில்தான் பஸ்கள் ஓடவில்லையே! நான்கு மணி நேரம் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு அவன் படு வேகமாக காட்டுப் பாதையில் நடந்து வந்தான். அவ்வப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. பதினாறாம் மைலை அவன் அடைந்தபோது ஒரு கட்டு பீடி முழுமையாக தீர்ந்திருந்தது. இருந்தாலும், அவன் களைப்படையவில்லை. கம்பியை வளைத்து வளைத்து கைகளுக்கு மட்டுமல்ல கால்களுக்கும் நல்ல பலம் கூடியிருந்தது.
இடுப்பளவு வளர்ந்திருந்த காட்டு புற்களுக்கு மத்தியில் மழை நீர் தெப்பம் போல நிறைந்திருந்தது. சில இடங்களில் புல்லின் நுனி மட்டுமே தெரிந்தது. அதற்கு மத்தியில் நடந்து போவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாகவே இருந்தது. மழை நின்றது ஒரு விதத்தில் நல்லதாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் மாமன்னூருக்கே திரும்பிப் போவதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போயிருக்கும்.
இடுப்பு வரை அவன் முழுமையாக நனைந்துதான் ஒற்றையடிப் பாதைக்கே வந்தான். அப்போது வானம் மேலும் தெளிவாக இருந்தது. வெப்பமான சூரிய வெளிச்சம் அவன் மேல் விழுந்தது. நனைந்து போயிருந்த காடு ஒரு பச்சை மரகத்தைப் போல ஒளிர்ந்து, தன்னம்பிக்கை மேலோங்க அவன் முன்னோக்கி நடந்தான்.
மாமன்னூரில் கிடைத்த தகவல்களை வைத்துத்தான் அவன் பதினாறாம் மைலில் இருந்து காட்டை நோக்கித் திரும்பினான். பஸ்சிலும் வண்டியிலுமாக பயணம் செய்து அவன் மாமன்னூரை அடைந்தபோது, அங்கு காணாமல் போன இளம்பெண்ணைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சாதாரணமாக எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய நகரம் ஒரு தேனீக்களின் கூட்டத்தைப் போல பயங்கர ஆரவாரமாக இருந்தது. விவரம் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்திருந்த சி.கெ.யின் எண்ணம் வெற்றி பெறவில்லை. சென்னையைச் சேர்ந்த ஒரு நாளிதழின் ரிப்போர்ட்டர் சி.கெ.யையே விடாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். தளர்ந்து படுத்துக் கிடந்த அச்சுதன் நாயரை அவன் கேள்விகள் கேட்டு துளைத்துக் கொண்டிருந்தான்.
இவ்வளவு விஷயங்கள் நடந்த பிறகும், சி.கெ. இதை போலீஸில் ரிப்போர்ட் செய்யவில்லை.
‘‘இங்க பாருங்க சி.கெ., இனி போலீஸ்காரங்க உதவி இல்லாம நம்மால ஒண்ணுமே செய்ய முடியாது. வி.சிம்ப்ளி கான்ட் லொக்கேட் ஹெர்.’’
காளு வெறும் கையுடன் திரும்பி வந்தபோது, மேஜர் நம்பியார் சொன்னார்.
‘‘என் மகளை போலீஸ் ஸ்டேஷன்ல ஏற வைக்கிறதா ? நோ... நெவர்...’’
சி.கெ. அதற்குச் சம்மதிக்கவில்லை.
முத்துவண்ணனின் உதவியுடன் காட்டைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும் மாமன்னூரைச் சேர்ந்த பல ஆட்களையும் ஒன்று சேர்க்க நினைத்தார் அவர். மாமன்னூரைச் சேர்ந்த இருபது ஆட்கள் அதற்காக முத்துவண்ணனின் பங்களாவிற்கு முன்னால் வந்து கூடி நின்ற போதுதான், சத்யன் காட்டுக்குள் நுழைந்திருந்தான். அவன் மாமன்னூரில் இறங்கிய விஷயம் சி.கெ.விற்குத் தெரியாது. அதுமட்டும் தெரிந்திருந்தால்...
பீட்டர் லில்லியின் மெடிக்கல் புத்தகங்கள் கண்டெடுத்த பாறையின் அருகில் நின்று கொண்டு சத்யன் காட்டை ஒரு முறை பார்த்தான். மழை போய் வெயில் வந்தவுடன் காடு பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. ஏராளமான காட்டுப் பறவைகள் ஓசை எழுப்பியவாறு இங்குமங்குமாய் பறந்து கொண்டிருந்தன. வெயில் பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்த பாறையின் மேல் ஏறி நின்று ஒரு ஓணான் அவனை வரவேற்றது. சிறிது தூரத்தில் மரக்கிளையில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு காட்டுக் குரங்குகளை அவன் பார்த்தான்.
காட்டின் விரிந்து கிடக்கும் பரப்பளவையும், ஆழ்ந்த அமைதியையும் பார்த்த அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவ்வளவு பெரிய காட்டில் காணாமல் போன ஒரு இளம் பெண்ணை அவனைப் போன்ற ஒரு ஆளால் தனியாக எப்படி கண்டுபிடிக்க முடியும்? தான் இப்படியொரு முயற்சியில் இறங்கியது வீணாகப் போய் விடுமோ? - இப்படி எல்லாம் அவன் மனம் நினைத்தது.
ஆனால், எப்போதும் அவன் மனதில் ஒளிர்ந்து நிற்கும் தன்னம்பிக்கை என்னும் சுடர் அவன் கால்களை முன்னோக்கி நகர்த்தியது. தன்னுடைய கை கால்கள் சோர்வடையும் வரை இந்தத் தேடலைத் தொடர்ந்தே ஆவது என்று அவன் தீர்மானித்தான். இன்று மட்டுமல்ல... என்றும்... அவளைக் கண்டுபிடிக்கும்வரை...
ஒரு பீடியை எடுத்து புகைத்த அவன் ஒற்றையடிப்பாதை வழியாக நடையைத் தொடர்ந்தான். மழையில் நனைந்திருந்த காட்டின் மணமும், காட்டுக் குருவிகளின் பாட்டும் பிரகாசித்துக் கொண்டிருந்த பச்சை வெயிலும் அவன் மனதில் இனம் புரியாத ஆனந்தத்தை உண்டாக்கின.