லில்லி - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
ஆயிரம் பாய் என்ன லட்ச ரூபாய் கூட அவருக்குச் சர்வ சாதாரணம் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன!
மாலை ஆவதற்கு முன்பே எப்படியும் லில்லியைக் கண்டுபிடித்தாக வேண்டும். நாளை ஆனால் என்ன நடக்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. காட்டின் மேல் வெறுப்புண்டாகி, அந்தப் பெண் அவளாகவே திரும்பி வந்து விட்டால் பரவாயில்லை. இல்லாவிட்டால் ஏதாவது விஷப்பாம்பு அவளைக் கொத்திவிட்டால்? இல்லாவிட்டால் காட்டு பன்றி வந்து அவளைக் கடித்து விட்டால்? என்ன இருந்தாலும் காடு பயங்கர காடாயிற்றே!
இப்படி ஏதாவது நடக்கக் கூடாது நடந்து விட்டால், அவளை கண்டுபிடித்துக் கூட பிரயோஜனமில்லை என்றாகிவிடும். அப்படியொரு நிலைமை உண்டானால் சி.கெ. தன்னை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார் என்பதையும் அவன் அறியாமல் இல்லை. ஆயிரம் என்ன நூறு ரூபாய் கூட அவர் அவனுக்குத் தர மாட்டார். அதனால் பெண்ணுக்கு அசம்பாவிதமாக எதுவும் நடக்கக் கூடாது. உயிருடன் கண்டுபிடித்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவளை சி.கெ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான் காளு.
அதற்குப் பிறகு கரியன் மகன் காளுவின் தலைவிதியே வேறு மாதிரி எழுதப்பட்டு விடும். ஆயிரம் ரூபாய் பரிசு... ஓட்டு கம்பெனியில் வேலை... முப்பது வருடங்கள் வாழ்ந்தும் இதுவரை காளு ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கூட பார்த்ததில்லை. இனியும் பத்து பிறவிகள் எடுத்தாலும், இந்தக் காளுவால் ஆயிரம் ரூபாயைக் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது.
அவன் மாமன்னூரில் இருக்கும் மாரியம்மனிடம் நேர்த்திக் கடன்கள் செய்வதாகச் சொன்னான். அந்தப் பெண் கிடைத்துவிட்டால், காவடி ஆடுவதாகச் சொன்னான். கன்னத்திலும், நாக்கிலும் சூலங்கள் குத்துவதாகச் சொன்னான்.
அவன் படு வேகமாக நடந்தான். காட்டு மரங்களுக்கு மத்தியில் அவனின் சிவப்பு வண்ண ட்ரவுசர் ஒரு தீப்பந்தத்தைப் போல நீந்திச் சென்றது.
சிறிது தள்ளி கிழக்குப் பக்கம் போனால் ஒரு காட்டருவி தென்படும். அங்கிருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்தில் காட்டு வாழ் மக்களின் குடிசைகள் இருக்கின்றன. அங்கு எங்காவது அந்தப் பெண் இருக்கிறாளா என்று பார்க்க வேண்டும். அதையும் தாண்டி போனால் பயங்கரமாக அடர்ந்திருக்கும் காடு, பெரிய பெரிய பாம்புகளும், புலிகளும் நடமாடிக் கொண்டிருக்கும் இருண்டு போன காடு, காட்டு வாழ் மனிதர்கள் கூட அந்தப் பக்கம் பொதுவாக போவதில்லை. அந்தப் பெண் ஒரு வேளை அந்தப் பக்கம் போயிருந்தால், ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு கூட ஒரு பிரயோஜனமும் இல்லை.
இரண்டு பக்கங்களிலும் பார்த்தவாறு கையிலிருந்த கம்பை நிலத்தில் ஊன்றி ஓசை எழுப்பிக் கொண்டு காட்டுப் பாதையின் வழியாக காளு கிழக்குப் பக்கம் ஓடினான். ஒரு பெரிய மரத்தின் கிளையில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த பின் பக்கம் சிவந்த ஒரு குரங்கு காளுவிற்கு வாழ்த்துச் சொல்லியது. கீழே விழுந்து கிடந்த பழுத்துப் போன இலைகளுக்கு மத்தியில் ஒரு குருட்டுப் பாம்பு ஊர்ந்து போனது.
அருவியை நெருங்கியபோது நனைந்து சிவந்து காணப்பட்ட மண்ணில் செருப்பணிந்த இரண்டு சிறிய பாதச்சுவடுகளைப் பார்த்தான். காளு மனதிற்குள் மாரியம்மனை நினைத்துக் கொண்டான். இது ஒரு இளம் பெண்ணின் காலடிச் சுவடைத் தவிர வேறென்ன என்று அவன் நினைத்தான். நான்கு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வாழும் காட்டு வாழ் மனிதர்கள் செருப்புகள் அணிவதில்லை. அவர்களை விட்டால் காட்டிற்குள் வருபவர்கள் வேட்டைக்காரர்கள்தாம். அவர்களின் பூட்ஸ் அணிந்த காலடிச் சுவடுகள் இவ்வளவு சிறியதாக இருக்க வாய்ப்பில்லை.
ஆயிரம் ரூபாயில் ஐந்நூறு ரூபாய் தன் கைக்கு வந்து விட்டதாகவே முடிவு செய்துவிட்டான் காளு. அவனின் கால்களுக்கு இப்போது வேகம் கூடியது. கையில் இருந்த கம்பை உயர்த்திப் பிடித்தவாறு அருவியை இலக்காக வைத்து அவன் ஓடினான்.
அப்படி ஓடும்போது காற்றில் மிதந்துவரும் சத்தத்தைக் கேட்டு அவன் தலையைத் தூக்கிப் பார்த்தான். மரங்களின் இளம் இலைகள் கூட அசையாமல் அப்படியே நின்றிருந்தன. காளுவிற்கே வியப்பாக இருந்தது. மர இலைகளுக்கு மத்தியின் அவனின் கண்கள் காற்றைத் தேடின. காட்டு மரங்களிலும் கொடிகளிலும் நிரந்தர அமைதியைத் தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.
சற்று முன்னோக்கி நடக்கவே, காட்டின் ஒரு சிறு மூச்சைக் கூட நன்கு தெரிந வைத்திருக்கும் காளுவிற்கு தான் கேட்ட சத்தம் காற்று உண்டாக்கியதல்ல என்பது புரிந்தது. பயங்கரமான அமைதியில் இருந்த அந்தப் பழைமையான மரங்களில் அவனுக்கு இதற்கு முன்பு அறிமுகமாயிராத அந்த சத்தம் துடித்துக் கொண்டிருந்தது. செடிகளிலும், கொடிகளிலும் அந்த நாதம் முழுமையாக நிறைந்திருந்தது.
மரக்கூட்டங்களினூடே அவன் தூரத்தில் தெரிந்த அருவியைப் பார்த்தான். மழைக்காலம் இப்போதுதான் முடிந்திருந்ததால், அருவியில் நிறைய நீர் வந்து கொண்டிருந்தது. தெளிந்த நீரில் ஆகாயத்தின் நீல நிறம் முழுமையாகத் தெரிந்தது.
காளுவின் கால்கள் முன்னோக்கி நடக்காமல் நின்று விட்டன. இப்போது காடு ஸ்டீரியோ இசையில் முழுமையாக மூழ்கிப் போய் விட்டிருந்தது. மரங்களையும் செடிகளையும் தாண்டி இசை அவனின் காதுகளை வந்தடைந்தது. அவன் ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று கொண்டு அருவியையே பார்த்தான்.
அருவியின் அருகில் இருந்த சிவப்பு மண்ணில் நல்ல ஈரம இருந்தது. அங்கே மினுமினுப்பான பெரிய வெள்ளை நிற கற்கள் சிதறிக் கிடந்தன. அந்த இடத்தில் லில்லியின் கேசட் ப்ளேயர் பாடிக் கொண்டிருந்தது. ஸ்டீரியோ சங்கீதத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்த அந்த கேசட் ப்ளேயருக்கு மேலே உயரத்தில் காட்டுக் குருவிகள் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. அந்தச் சின்னஞ்சிறு குருவிகள்தாம் காட்டின் கனவுகள்!
‘பிக்மி ட்விலிட்’ - காட்டின் எல்லா இடங்களிலும் பரவி ஒலித்தது. பணத்தையும், சுகத்தையும், அதிகாரத்தையும் வேண்டாமென்று மறுக்கும் ஃப்ராங்க் ஸாப்பாவின் இசையை அவளுக்கு மிகவும் பிடிக்கும். காட்டுக் கொடிகளைப் போல நீளமான தலைமுடியைக் கொண்ட ஃப்ராங்க் ஸாப்பாவின் ஒரு பெரிய கலர் போஸ்ட¬¬ அவளின் படுக்கையறைச் சுவரில் பார்க்கலாம். அமைதியான அருவி அருகில் இருந்து புறப்பட்டு வந்த ஸாப்பாவின் மின்சார கித்தாரின் ஓசை காட்டுக் கொடிகள மேல் பாய்ந்து பரவியது. கேசட் ப்ளேயருக்கு மேலே பறந்து விளையாடிக் கெகண்டிருந்த குருவிகள் அங்கிருந்த வெள்ளை நிற கற்களில் போய் அமர்ந்தன. தொடர்ந்து ‘விஸல்’ஸில் இருந்து வந்த பாட்டுகள்.