லில்லி - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
ஏதாவதொரு அரக்கன் கொண்டு வந்து இதை வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
பாறையையொட்டி ஓடிக்கொண்டிருந்த ஒற்றையடிப் பாதை அதற்குப் பிறகு வளைந்து திரும்பி போய்க் கொண்டிருந்தது. அதை வைத்து இந்தப் பாதையில் ஆட்கள் நடந்து போவார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டார். இந்தக் காட்டுப் பாதையில் ஆட்கள் நடந்து போகக்கூடியவர்கள் யாராக இருப்பார்கள்? வேட்டைக்குப் போகிறவர்கள் ஒரு வேளை இதில் நடந்து போவார்களோ? இந்த அடர்ந்த காட்டுக்குள் தூரத்தில் ஆதிவாசிகளோ? இந்த அடர்ந்த காட்டுக்குள் தூரத்தில் ஆதிவாசிகளோ இல்லாவிட்டால் காட்டு வாழ் மக்களோ வசித்துக் கொண்டிருப்பார்களோ?- இப்படி பல்வேறு வகைகளில் தன் சிந்தனையை ஓட்டிக் கொண்டிருந்தார் மேஜர் நம்பியார்.
‘‘இப்படியே எவ்வளவு நேரம் நாம நடப்பது மேஜர்?’’
‘‘யாரையாவது பார்க்குறது வரை நடக்க வேண்டியதுதான். டோண்ட் லூஸ் யுவர் ஸ்ப்ரிட், மை ஃபிரண்ட்.’’
‘‘இந்த காட்டுல நாம யாரைப் பார்க்குறது?’’
‘‘இங்க எங்கேயாவது காட்டு வாழ் மக்கள் இருப்பாங்க. யுவர் டாட்டர் வில் பி தேர்...’’
நம்பியார் தோளில் துப்பாக்கியுடன் கம்பூட்ஸின் சத்தம் கேட்க முன்னோக்கி நடந்தார். அடிக்கொருதரம் அவர் சத்தமாக விசிலடித்தார். அப்போது அவருக்கு கடந்த கால நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் வந்தன. அவர் ஒரு அருமையான வேட்டைக்காரர். தொழில் விஷயமாக பல்வேறு இடங்களுக்கும் கேம்ப் அடிக்கிறபோது அவர் வேட்டைக்குப் போவதை மறப்பதேயில்லை. அந்தக் காலத்தில் அவர் வேட்டையாடி கிடைத்த மிருகங்களின் தோல்களும், கொம்புகளும் இப்போது அவர் பங்களாவின் வரவேற்பறையில் அலங்காரப் பொருட்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.
வேட்டை நினைவுகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த மேஜர் நம்பியாரின் கால்கள் படுவேகமாக இயங்கின. தோளில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் கையில் வைத்துக் கொண்டார்.
சி.கெ.யால் ஒன்றுமே முடியவில்லை. இனி ஒரு அடி கூட அவரால் எடுத்து வைக்க முடியாது என்ற நிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டார். இருந்தாலும் லில்லியைப் பற்றிய நினைவால் தன்னுடைய பருமனான உடலைத் தூக்கிக் கொண்டு அவர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடந்தார்.
பதினைந்து நிமிடங்கள் கடந்த பிறகு ஒற்றையடிப்பாதை திடீரென்று காணாமல் போனது. காடு பயங்கரமாக அடர்ந்து காணப்பட்டது. சுற்றிலும் நெருக்கத்துடன் காணப்படும் மரங்களும், கொடிகளும் முன்னால் போன வழியை முழுமையாக மறைத்து விட்டிருந்தன. நம்பியாருக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.
‘‘ஹால்ட்...’’
திடீரென்று அவர் உரத்த குரலில் சொன்னார். பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த சி.கெ.யும் பீட்டரும் சடன் பிரேக் போட்டது மாதிரி நின்றார்கள்.
நம்பியார் துப்பாக்கியுடன் முன்னோக்கி போனார். வளைந்து நெளிந்து ஒரு புதருக்குப் பின்னால் போய் மறைந்தார். சி.கெ.யும். பீட்டரும் திகைத்துப் போய் நின்றார்கள்.
தொடர்ந்து வெடி வெடிக்கும் சத்தம். புதருக்குள் இருந்து வெளியே ஓடி வந்த ஒரு கீறி அவர்களுக்கு முன்பு பாய்ந்தோடி படர்ந்து கிடந்த கொடிகளுக்கு மத்தியில் மறைந்து போனது.
புகைந்து கொண்டிருக்கும் துப்பாக்கியுடன் நம்பியார் புதரை விட்டு வெளியே வந்தார்.
‘‘ஐ மிஸ்ட் ஹிம், டாமிட்...’’
‘‘மேஜர்... நாம திரும்பிப் போகலாம்’’ - சி.கெ. ஒரு பெரிய மரத்திற்குக் கீழே தளர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். ‘‘லெட் அஸ் இன்ஃபார்ம் தி போலீஸ்.’’
‘‘நான் இருக்குறப்போ போலீஸ் எதுக்கு?’’
கீஜீயைத் தவற விட்ட ஆக்ரோஷத்துடன் மேஜர் சொன்னார்.
‘‘லில்லியை நான் கண்டுபிடிப்பேன். யு டேக் மை வேர்ட். ஷீ கான்ட் ஹைட் ஹியர் ஃபார் எவர்...’’
ஆனால், சி.கெ.யால் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. மேஜர் நம்பியாருக்கு சி.கெ. கூறுவதைக் கேட்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்றாகிவிட்டது. கொஞ்சம் கூட மனம் வராமலே அவர் துப்பாக்கியை மீண்டும் தோளில் வைத்து திரும்ப நடந்தார்.
‘‘சார்... காட்டைப் பற்றி நல்லா தெரிஞ்சிருக்குற யாரையாவது வைத்து தேடுறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன்.’’
இதுவரை எதுவுமே பேசாமல் இருந்த பீட்டர் சொன்னான்.
‘‘மாமன்னூரில் அதுக்கு ஆள் கிடைப்பான்.’’
சி.கெ.விற்கு கடும் இருட்டில் லேசாக வெளிச்சம் கிடைத்தது போல் இருந்தது. போலீஸுக்கு விஷயத்தைத் தெரிவிப்பது என்பதில் இந்த நிமிடம் வரை அவருக்கு உடன்பாடில்லை. பத்திரிகைக்காரர்கள், தொடர்ந்து ஒலிக்கும் தொலைபேசி, ஆறுதல் கூறுவதற்காக வந்து நிற்கும் ஆட்கள்... மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் சி.கெ.யின் மகள் லில்லியைக் காணவில்லை. இதற்கு மேல் மானக்கோன காரியம் வேறு என்ன இருக்கப் போகிறது?
லில்லி காணாமல் போன விஷயம் மேஜர் நம்பியாரைத் தவிர, வேறு யாருக்குமே தெரிய வேண்டிய அவசியமில்லை.
மாமன்னூருக்குப் போய் காட்டுக்குள் நுழைந்து பழக்கமுள்ள ஆட்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை வைத்து தேட வேண்டும். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவழிக்கலாம். முடிந்தால் லட்சம் கூட என்று முடிவெடுத்தார் சி.கெ.
திரும்பி நடந்தபோது, கால்களுக்கு கனம் குறைந்திருப்பது போல் அவருக்குத் தோன்றியது.
மேட்டைக் கடந்து ஒற்றையடிப் பாதை வழியாக அவர்கள் நடையைத் தொடர்ந்தார்கள். தனியாக இருந்த அந்தப் பாறைக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தபோது மகிழ்ச்சி மிகுதியால் பீட்டர் கத்தினான். சி.கெ.யும். நம்பியாரும் என்னவென்று பார்த்து நின்றிருக்க, அவன் கையில் லில்லியின் மெடிசின் புத்தகங்களுடன் ஓடி வந்தான்.
சி.கெ. புத்தகங்களை வாங்கிப் பார்த்தார். லில்லியின் பாட புத்தகங்கள்தாம். அதை வாங்கிப் பார்த்த அவரின் கைகள் நடுங்கின. புத்தகங்களை மட்டுமல்ல - தன்னுடைய எதிர்காலத்தையும் சேர்த்து அல்லவா அவள் அந்தப் பாறை மேல் வைத்து விட்டுப் போயிருக்கிறாள்!
எதற்காக அவள் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்? அந்த உருப்படாத சத்யன்தானே இதற்கெல்லாம் காரணம்? அவனுக்குச் சரியான ஒரு பாடம் கற்பித்துத் தர வேண்டும். இனி ஒரு நாள் கூட தலச்சேரியில் அவன் மன நிம்மதியுடன் வாழ முடியாது. பாம்பின் வஞ்சத்தை விட பயங்கரமானது சி.கெ.யுடன் கெகண்டிருக்கும் பகை என்பது தலச்சேரிக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும்.
புத்தகங்கள் கைக்கு வந்துவிட்டதைத் தொடர்ந்து லில்லி காட்டில் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறாள் என்ற எண்ணத்திற்கு வந்தார் மேஜர். அதனால் காட்டுக்குள் உடனடியாக அவளைத் தேடுவதுதான் சரியான செயலாக இருக்கும் என்றார் அவர். சி.கெ. அதற்குத் தயாராக இல்லை.