லில்லி - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
ஆகாயத்தில் மழை பெய்து கொண்டிருந்த ஒரு காலை நேரமது. கடல் காலை நேர வெயிலில் பளபளத்தது. பாறைகள் நனைந்திருந்தன.
பாதையில் காரை நிறுத்தி விட்டு, ப்ளேயரைக் கையில் வைத்துக்கொண்டு மணலில் அவள் நடக்கும்போது, மீனவக் குழந்தைகள் அவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஐந்தாரு பேர் இருப்பார்கள்.
கடல் நீர் நுரையுடன் மோதிக் கொண்டிருந்த பாறைக்கு மத்தியில் புடவையை உயர்த்தி பிடித்தவாறு நடந்த அவள் ஒரு பாறையின் ஓரமாக போய் அமர்ந்தாள். பாறையின் மறுபக்கத்தில் அலைகள் வந்து மோதிக் கொண்டிருந்தன. அவ்வப்போது பாறையின் மேல் பகுதி வழியாக நுரையும் நீரும் அவளின் தலை முடியிலும் புடவையிலும் வந்து விழுந்தன. அவள் கேசட் ப்ளேயரை மடியில் வைத்து, அதை ‘ஆன்’ செய்தாள். இயர் ப்ளக்குகளை காதுகளில் வைத்தபோது கடலின் ஓசை முழுமையாக நின்றது. அதற்கு பதிலாக ஜாஸ் இசை முழங்கியது.
சற்று தூரத்தில் கண்களை அகல விரித்துக்கொண்டு நின்றிருந்த மீனவச் சிறுவர்கள் அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தனர். நேரம் செல்லச் செல்ல அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுடன் இரண்டு வாலிபர்களும் இருந்தார்கள்.
‘‘கடற்கரைக்கு வந்து இந்த பந்தா தேவையா? வீட்ல இடம் இல்லையா என்ன?’’
அவர்களின் ஒருவன் உரத்த குரலில் அழைத்து கேட்டான். காதுகளில் ப்ளக்குகள் இருந்ததால், அவன் அழைத்தது அவளுக்குக் கேட்கவில்லை. ஆனால், அவர்கள் முகத்தில் தெரிந்த கேலியையும், கிண்டலையும் அவளால் உணர முடிந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் எண்ணிக்கை மேலும் கூடியது. அவளுக்கு நீண்ட நேரம் இசையைக் கேட்டதால், ஒருவித அலுப்பு பிறந்தது. இயர் ப்ளக்குகளை காதுகளில் இருந்து அவள் எடுத்தபோது, காதுகளில் கடலின் ஓசை கேட்டது. ப்ளக்குகளைப் பாக்கெட்டில் போட்ட அவள் ப்ளேயரை ‘ஆஃப்’ செய்து விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து நின்றாள். நனைந்து போயிருந்த சாம்பல் நிற பாறைகளைக் கடந்து அவள் நடந்தபோது, சிவப்பு வண்ணத்தில் பூக்கள் வரையப்பட்டிருந்த அவளின் புடவை காற்றுபட்டு உயர்ந்தது. அவளுக்குப் பின்னால் பாறையில் மோதி சிதறிய ஒரு பெரிய அலையிலிருந்து வெளிப்பட்ட நுரைகள் வெண்மை நிற மலர்களைப் போல அவளின் விரிந்து கிடந்த கூந்தல் மேல் வந்து விழுந்தன.
பாறைகளுக்கு நடுவில் கடல் நீரைக் கடந்து அவள் நடந்து மணலில் ஏறினாள்.
‘‘இது என்ன இறக்குமதி சரக்கா? விற்பனை செய்யப் போறீங்களா என்ன?’’
கேசட் ப்ளேயரைப் பார்த்து ஒரு இளைஞன் கேட்டான். மற்றொரு இளைஞன் தொடர்ந்து சொன்னான்.
‘‘கள்ளக் கடத்தல் பொருளாக இருக்கணும். அப்படித்தானே! என்ன விலை?’’
அவள் அவர்களை கவனிக்காமல் காரை நோக்கி நடந்தாள். நனைந்து போயிருந்த பாதங்களில் மணல் ஒட்டிக் கொண்டிருந்தது.
‘‘டேய்... இது சி.கெ.யோட மகள். பேசாம இரு...’’
அவள் காருக்குள் ஏறி அதை ஓட்ட ஆரம்பித்தாள். பூமியில் மனிதர்கள் யாருமே இல்லாதிருந்தால்-
இப்போது... இதோ... யாருமே இல்லாத காட்டில் ஒரு பாறைக் கூட்டம்...
மேட்டின் ஓரமாக கீழே இறங்கி, அவள் பாறைக் கூட்டத்தை நோக்கி நடந்தாள். பல்வேறு மாதிரி கிடக்கும் பெரிய பெரிய உருண்டையான பாறைகள். மூன்று பாறைகளுக்கு நடுவில் இருந்த ஒரு இடைவெளியில் அவள் போய் நின்றாள். அந்தப் பாறைகளுக்கு நடுவில் இருந்த மவுனம் அவள் மனதில் ஆனந்த உணர்வை அள்ளித் தெளித்தது.
மாலை நேர வெயிலில் மூழ்கிப் போய் மவுனமாக காட்சியளித்த காட்டில் திடீரென்று ஜாஸ் இசை முழங்கத் தொடங்கியது. அந்த இசையால் காடே ஒரு புத்துணர்ச்சி பெற்றுத் திகழ்ந்தது. ஒரு வகை உயிர்ப்பு எல்லா திசைகளிலும் பரவியது.
நேரம் போய்க் கொண்டிருந்ததை அவள் உணரவேயில்லை. வெயில் முழுமையாக மறைய ஆரம்பித்தது. காட்டில் நிழல் பரவத் தொடங்கியது. இரவு மெதுவாக தன் முகத்தைக் காட்டியது. காட்டின் பாதுகாப்பில் பாறைகளுக்கு மத்தியில் ஒலித்துக் கொண்டிருந்த ஸ்டீரியோ இசையில் தன்னை முழுமையாக இழந்து லில்லி கண்களை மூடிக் கிடந்தாள்...
ஒரு குள்ள நரி அப்போது வந்து கடித்தால்...?
ஒரு விஷப் பாம்பு அப்போது வந்து கொத்தினால்...?
அந்த நேரத்தில் அப்படிப்பட்ட சிந்தனைகள் எதற்கும் அவளின் மனதில் இடமே இல்லை என்றாகி விட்டிருந்தது.
மாமன்னூர் நகரத்தின் தெரு விளக்குகள் அணைந்து கிடந்தன. பாதி இரவின் அமைதி அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்தது. மலைச்சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் அவ்வப்போது முக்கி முனகிக் கொண்டு கடந்து போய்க் கொண்டிருந்தன. சுவாமியின் பெட்ரோல் பங்க்கில் மட்டும் வெளிச்சம் இருந்தது.
காரில் செயலற்று படுத்துக் கிடந்தார் அச்சுதன் நாயர். அவர் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். இந்த அரை இரவு நேரத்திலும் அவர் உடம்பு பயங்கரமாக வியர்த்துக் கொண்டிருந்தது. கண்கள் திறந்திருந்தாலும், பார்வை தெளிவாக இல்லை. ஒரு புகையைப் பார்ப்பது போல கண்கள் மங்கலாகத் தெரிந்தன.
‘‘கவலைப் படாதீங்கண்ணே...’’- சுவாமி அடிக்கொரு தரம் வந்து சொல்லிக் கொண்டிருந்தார். ‘‘காப்பி வேணுமா? தண்ணி வேணுமா?’’
அச்சுதன் நாயர் எந்தவித பதிலும் கூறாமல், அசையாது கிடந்தார்.
அச்சுதன் நாயர் சொன்ன கதையைக் கேட்டபோது சுவாமிக்கு கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. நன்கு படிக்கக் கூடிய ஒரு இளம் பெண் எதற்கு காட்டிற்குள் ஓட வேண்டும்? அவள் ஒரு டாக்டரென்பதையும், ஒரு கோடீஸ்வரனின் ஒரே மகள் என்பதையும் அவன் அறிய வந்தபோது, அந்தச் சம்பவத்தை அவனால் மனதளவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
தலையில் மஃப்ளரைச் சுற்றிக்கொண்டு பெட்ரோல் பங்க்கிற்குள் போடப்பட்டிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் சுவாமி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். மலைச் சரக்குகளுடன் கடந்து போகும் லாரிகளின் சத்தம் கேட்கும் நேரங்களில் மட்டும் அவனின் குறட்டை ஒலி கொஞ்ச நேரத்திற்கு நிற்கும். பிறகு மீண்டும் அது தொடர ஆரம்பிக்கும்.
பொழுது புலர்வதற்கு முன்னால்- இருட்டு நன்றாக இருக்கும்போது ஒரு கார் வேகமாக பெட்ரோல் பங்க்கிற்கு முன்னால் வந்து நின்றது. அதன் ஹெட்லைட் வெளிச்சம் சுற்றிலும் பரவியது.
காரில் இருந்து சி.கெ.யும் வேறு இரண்டு ஆட்களும் இறங்கினார்கள். அவற்றில் ஒருவர் மேஜர் நம்பியார். இன்னொரு ஆள் சி.கெ.யின் பாடி கார்ட் பீட்டர்.
‘‘அச்சுதன் நாயர்!’’