லில்லி - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
அவன் தாய் வாசலில் முகத்தைக் காட்டியவாறு சொன்னாள். ‘‘கஞ்சி வேண்டாமா? ரெண்டு பேரும் வாங்க.’’
இப்போ வேண்டாம்மா. நானும் சத்யனும் கொஞ்சம் நடந்துட்டு வர்றோம்.
அவள் அருகில் வைத்திருந்த காரின் சாவியைக் கையில் எடுத்தாள். அவன் மீண்டும் உள்ளே போய் ஒரு சட்டையை எடுத்துப்போட்டுக் கொண்டு வெளியே வந்தான். அது இஸ்திரி போடாமல் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போதும் அவன் பொதுவாக ஆடைகளுக்கு இஸ்திரி போடுவதில்லை.
‘‘அம்மா, நாங்க போயிட்டு வர்றோம்.’’
‘‘இது நல்ல கதைதான். லில்லி இதுவரை வந்திட்டு ஒரு டம்ளர் சாயா கூட குடிக்காம போறதா?’’
‘‘அடுத்த முறை வர்றப்போ ரெண்டு டம்ளர் சாயாவை ஒண்ணா வாங்கிக் குடிச்சிட்டாப்போகுது. சரியா?’’
அவள் சொன்னதைக் கேட்டு, சத்யனின் தாய்க்கு சிரிப்பு வந்தது.
சத்யன் ஜன்னலின் அருகில் நின்றவாறு பீடியையும், துப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு லில்லியுடன் சேர்ந்து வெளியே புறப்பட்டான். அவன் சார்மினார் புகைப்பதை நிறுத்திவிட்டிருந்தான்.
‘‘நான் இப்போ ஒரு வேலை பார்க்கிறேன்.’’
‘‘அதை ஏன் என்கிட்ட சொல்லல?’’
அவன் சொன்னதைக் கேட்டு, அவள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தாள்.
சத்யன் எம்.எம்.ஸி. கணக்கு படித்தவன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதோடு நிற்காமல், நல்ல ரேங்க்கையும் கைவசம் வைத்திருந்தான். ஐ.ஐ.டி.யில் சேர வேண்டும் என்பது அவன் விருப்பம். ஆனால், அட்மிஷன் முழுமையாக முடிவடைந்து விட்டது. பொருளாதார வசதி இல்லாததால்,அவன் மனதில் ஆசைப்பட்டபடி அதில் சேர முடியாமற்போய்விட்டது.
அதற்குப் பிறகு கல்லூரியில் விரிவுரையாளர் வேலைக்கு அவன் முயற்சி செய்துபார்த்தான். அதுவும் கிடைக்காமற் போனபோது, பள்ளியில் முயற்சி செய்தான். எல்லாவற்றுக்குமே பணம் தேவைப்பட்டது. அது அவன் கையில் இல்லாததால், அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.
‘‘பணம் வேணும்னா கொஞ்சமும் தயங்காம என்கிட்ட சொல்லணும்’’ - சென்ன் முறை பார்க்கும்போது வேலை எதுவும் இல்லாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்த அவனைப் பார்த்த அவள் சொன்னாள். ‘‘நான் தர்றேன்...’’
‘‘பணத்தைக் கொடுத்து வாங்குற வேலை எனக்கு வேண்டாம். கஷ்டப்பட்டு படிச்சு ரேங்க் வாங்கியது போதாதா? பணமும் கொடுக்கணுமா என்ன?’’
பிறகு எப்படி அவனுக்கு இப்போது வேலை கிடைத்தது?
‘‘எந்தக் காலேஜ்ல?’’
அவள் மகிழ்ச்சியுடன் கேட்டாள்.
அதைக்கேட்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.
‘‘காலேஜ்ல வேலைன்னு யார் சொன்னது?’’
‘‘அப்ப எந்த பள்ளிக்கூடத்துல?’’
‘‘சொல்றேன்...’’
சத்யனும் லில்லியும் ஆற்றங்கரையோரமாக நடந்தார்கள். வீடுகளில் இருந்தவாறு பலரும் அவர்களைப் பார்த்தார்கள். நார் உரித்துக் கொண்டிருந்த இளம் பெண்கள் வியப்புடன் அவர்கள் நோட்டமிட்டார்கள்.
‘‘சீக்கிரம் போகணுமா?’’
காரின் அருகே போனபோது அவன் கேட்டான்.
‘‘இல்ல...’’
‘‘சரி... அப்படின்னா நாம ஒண்ணா உட்கார்ந்து சாயா குடிக்கலாம். பிறகு... நான் வேலை செய்ற இடத்தை உனக்கு காட்டுறேன்.’’
‘‘கார்ல போவோம்.’’
அவன் நேராக நடந்து செல்வதைப் பார்த்து அவள் சொன்னான்.
‘‘அச்சுதன் நாயர் அனேகமாக காத்திருப்பார்.’’
அவன் கார் கதவைத் திறந்து அவள் அருகில் அமர்ந்தான். ஆற்றங்கரையில் கார் ஓடிக்கொண்டிருந்தது. நார் உரித்துக் கொண்டிருந்த பெண்கள் அவர்களை மறைந்திருந்து பார்த்தார்கள். அவர்கள் தங்களுக்குள் என்னவோ சொல்லி சிரித்தார்கள். அதைப் பார்த்த சத்யன் சொன்னான்.
சி.கெ.யோட மகள். டாக்டர். இருந்தாலும் பெண்ணுக்கு தைரியம் அதிகம்தான். நாலு ஆளுங்க பார்ப்பாங்களேன்னு எண்ணம் கொஞ்சமும் இல்ல.’’
ஓடிக் கொண்டிருந்த காரில் இருந்தவாறு அவர்கள் இருவரும் சிரித்தார்கள்.
ஆற்றங்கரை வழியே கார் முன்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது. சத்யன் பாதையைக் காட்டிக் கொண்டிருந்தான். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் மண் பானைகள் விற்கும் ஒரு கடையை அடைந்ததும், அவள் காரை நிறுத்தினாள். அதற்குப் பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை இருந்தது.
‘‘எனக்கு புட்டும் கடலையும் உனக்கு?’’
‘‘எனக்கும்தான்.’’
அவன் காரை விட்டு இறங்கி தேநீர் கடையை நோக்கி நடந்தான். வெறுமையாய் கிடந்த பாதையில் தூசியைக் கிளப்பியவாறு ஒரு பஸ் கடந்து போனது.
அவர்கள் காரில் இருந்தவாறு புட்டும் கடலையும் சாப்பிட்டார்கள். நகரத்திற்கு பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த சிறுமிகளுக்கு அவர்களைப் பார்த்து, வெட்கம் வந்தது.
லேசாக ஓரம் சிதைந்திருந்த கிண்ணத்தில் காரமான கடலையுடன் ஆவி பறந்து கொண்டிருந்த புட்டை கலந்து அவள் ஆர்வத்துடன் சாப்பிட்டாள். இடையில் பால் கலக்காத தேநீரைக் குடித்தாள்.
‘‘இந்த ஊர்லயே நல்ல சுவையான சாயா கிடைக்குறது அனந்தனோட இந்தக் கடையிலதான்.’’
அனந்தன் கேட்கும் வண்ணம் அவன் உரத்த குரலில் சொன்னான்.
‘‘அனந்தனோட சாயாவைக் குடிச்சாத்தான் என் மனசுக்கு திருப்தி.’’
சத்யன் அடுப்பில் இருந்த நெருப்புக் கட்டையை எடுத்து பீடியைப் பற்ற வைத்தான்.
‘‘இது யாரோடகார்?’’
‘‘அந்தப் பெண்ணோடது.’’
‘‘சி.கே.யோட மகள்தானே? எனக்குத் தெரியும்.’’
அனந்தன் கண்களைச் சுருக்கிக்கொண்டு சிரித்தான்.
சத்யான் காசு கொடுத்து விட்டு, மீண்டும் காருக்குள் வந்தான். கார் புறப்பட்டது. அவன் காட்டிய வழியில் அவள் காரை ஓட்டினாள். அவளுக்குத் தெரிந்தவரையில் அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடமோ கல்லூரியோ நிச்சயமாக இல்லை.
ஒரு மேட்டின் மேல் ஏறி இறங்கிய கார் இலேசாக குலுங்கி, வயலையொட்டி இருந்த கரைப் பக்கம் திரும்பியது. அவன் வண்டியை நிறுத்தச் சொன்னான். வயலில் இருந்த நீரில் கார் தெரிந்தது.
‘‘அதோ தெரியுதே... அதுதான் நான் வேலை பார்க்குற இடம்.’’
அவன் இடது பக்கம் கையைக் காட்டினான். அங்கே ஒரு பெரிய பங்களாவின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கல்லும் சிமெண்ட்டும் கம்பிகளும் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.
அவன் கார் கதவைத் திறந்து வெளியே இறங்கினான்.
‘‘எனக்கு கம்பி வேலை. கம்பிகளை வளைச்சா நாளொன்ணுக்கு முப்பது ரூபா கிடைக்கும். ராத்திரியும் வேலை செய்றதா இருந்தா ஐம்பதோ அறுபதோ கிடைக்கும். காலேஜ்ல படிச்சா இவ்வளவு ரூபா கிடைக்குமா, லில்லி?’’
அவளால் நம்ப முடியவில்லை.
அவன் சட்டையைக் கழற்றி பக்கத்திலிருந்த மாமரத்தின் கிளையில் தொங்கவிட்டான். வேட்டியை மடித்துக் கட்டியவாறு ஒரு பெரிய கம்பியை எடுத்து தேவையான அளவுக்கு அதை வளைத்தான். அவனின் கைகளிலும், தோளிலும் இருந்த சதைப் பகுதியில் சூரிய வெளிச்சம் பிரகாசித்தது.
‘‘எப்படி?’’
திரும்பவும் காரின் அருகில் வந்த அவன் கேட்டான்.
‘‘ரெண்டு கம்பிகளை வளைச்சு காட்டவா?’’